11 எங்கள் இறப்பின் வேளையிலும் வேண்டிக் கொள்ளும்
நான்கு முறை இறக்கிறோம்
குழந்தைகளே கிறிஸ்தவர்களாகிய நாம் ஒவ்வொருவரும் மரணத்தில் நான்கு முறை பங்கேற்கின்றோம்.
- முதலில், இயேசுவின் சிலுவை மரணத்தில் பங்கேற்கிறோம். ஆதாம் முதல் உலக முடிவில் பிறக்கப்போகும் கடைசிக்குழந்தை வரை அனைவரும் கிறித்துவின் சிலுவையில் மரணமாகின்றனர் பொய்மையில்லா புது உறவால் பெருக்கெடுக்க இறைஇயேசுவின் மரணத்தில் நாம் பங்கேற்கும்போது நம் குற்றங்குறைகள், கறைகள் ஒன்றுமில்லாமல் அழிக்கப்பட்டு, நம்பிக்கையின் மக்களாக வாழ ஆசைப்படுகிறோம். இது நம் இறை நம்பிக்கையினை ஆழமிகு விசுவாச இலட்சியத்தில் உறுதிப்படுத்துகிறது.
- இரண்டாவது, நாம் பெறும் திருமுழுக்கில் மரணம் அடைகிறோம். நமது தொடக்கக் காலப் பாவத்திற்கு இறந்து கிறித்துவோடு புதுவாழ்விற்கு உயிர் பெறுகிறோம். இதற்காகவே நாம் குழந்தைப் பருவத்தில் திருமுழுக்குப் பெறுகிறோம்.
- மூன்றாவது,ஒவ்வொரு நாளும் நாம் மரணமடைகிறோம். திருமுழுக்குப் பெற்ற ஒவ்வொருவரும் மறைபொருளின் பங்காளிகள், கிறித்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்புகளைத் தன்னகத்தே கொண்டவர்கள். பாஸ்கா மறைபொருள் நம் வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்திலும் நடந்தேறும் நிகழ்வு. இந்த நிமிடத்தில் நாம் பாவத்துக்கு மரிக்கிறோம். தூய வாழ்விற்கு உயிர்க்கிறோம். இதையே "நான் நாள்தோறும் சாவை எதிர்கொள்கிறேன்" (1 கொரி 15:31) என்கிறார் தூய பவுல்.
இவ்வாறு ஒவ்வொரு நாளும் "கிறித்து தம் உடலாகிய திருச்சபைக்காக வேதனையுற்றதுப்போல" (கொலோ 124) நாமும் ஒவ்வொரு நாளும் கிறித்துவோடு மரித்து அவர் தரும் முடிவுறா மரணத்தைத் தொடர்ந்து நிறைவு செய்ய வேண்டும்.
- நான்காவது, வயல்வெளிகளாக, மரங்களாக கனிகொடுத்து நாம் பெறும் இயற்கை மரணமே இறுதி மரணம். எப்படியோ அல்ல, இப்படித்தான் வாழ்வேன் என்ற கொள்கையை அடிப்படையாக்கி வாழ்வுப்பாதையில் தொடர்ந்தவர்கள், தொடர்ந்து கொண்டிருப்பவர்கள் சந்திக்கும் சாகாக் கருவறையே இந்த மரணம். இதையே இறைமகன் இறுதிப் பரிசாக்கிக் கொள்கிறார்.
குழந்தைகளே! கற்க! நிற்க!
- ஒரு மனிதன் வளமையாக இருப்பதற்கு வாழ்வை விட சாவு மிக அவசியமானது என்கிறார் மகாத்மா காந்தி. இறப்பைப் பற்றி அடிக்கடி சிந்திப்பது நமது வாழ்வுக்கு வளமை சேர்க்கின்ற ஒன்றாக இருக்கிறது.
- மனித வாழ்வின் சிறப்பு பிறர் மைய வாழ்வில்தான் அடங்கியுள்ளது. இதை இறப்பு நமக்கு நினைவூட்டுகிறது. இறப்பு என்னை எப்போதும் எட்டிப்பார்க்கலாம் என்று ஒரு நிமிடத்தைக்கூட வீணடிக்காது, இன்றைய நாளை நாளைப் பார்க்கலாம் என்று யோசிக்காது, இன்றைய நாளில் அறிவின் பல்கலைக்கழகமாக, அறிவுக்களஞ்சியங்களாக வாழ, கற்றுக்கொள்ள முடிவெடுப்போம். வாழ்வின் இறுதி மூச்சுவரை மென்மையான பயிராக, மகிழ்ச்சிக் கணிகளாக பிறருக்குப் பலன் கொடுக்கக் கற்றுக்கொள்வோம்.
- எங்கெல்லாம் திறமைகள் வீணாக்கப்படுகிறதோ, நீதி மறுக்கப்படுகிறதோ, உண்மை மறக்கப்படுகிறதோ, அமைதி காயப்படுத்தப்படுகிறதோ அங்கு கிறித்து சிலுவையில் குத்தி கிழிக்கப்படுகிறார். இறப்பை ஏற்றுக்கொள்கிறார். அங்கே அன்னை மரி இரத்தக்கண்ணிரால் துடிக்கிறார்.
- அன்பு, உண்மை, நன்மை, நீதி, எளிமையை நிலைநாட்ட நாம் எடுக்கும் முயற்சிகளில் அன்னை மரியாள் கரிசனைமிகு அக்கறையால் தேனாக அருள் பொழிகிறாள். இறைஇயேசுவிடம் நமக்காக உருகி இறைஞ்சுவதால் நாம் உண்மை இயேசுவில் உயிர்க்கின்றோம்.