செபம் செய்வோமா?

02 வாழ்க


வாழ்க

  • வாழ்க என்று பிறரை வாழ்த்தும் மந்திரச்சொல் வாழ்க்கையையே புரட்டிப்போடும் நல்ல வல்லமைமிகு மரியாதைச் சொல்.
  • வாழ்க என்பதை அராபிய மொழியில் 'சலாம் என முகமதிய நண்பர்கள் சொல்வர்.
  • வாழ்க என்பதற்கு இணையான எபிரேயச் சொல் "சலோம்'
  • ஆகவேதான் இல்லத்திலும், பணித் தளங்களிலும் ,வழிபாட்டுத் தளங்களிலும், தெருவிலும் யாரை சந்தித்தாலும் சலோம் என்று வாழ்த்தி வரவேற்று வழியனுப்பி வைப்பது எபிரேயரின் பழக்கம்.
  • எண்ணிக்கை நூல் இஸ்ராயேல் மக்களுக்கு ஆசிக் கூற வேண்டிய முறையைப் பற்றி குறிப்பிடுகின்றபோது, "ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச் செய்து உன்மீது அருள் பொழிவாராக ஆண்டவர் தம் திருமுகத்தை உன் பக்கம் திருப்பி உனக்கு அமைதி (சலோம்) அருள்வாராக" (எண் 6:23-26) என்கிறது.
  • இப்படி வாழ்த்துவதிலே ஆசீரும், ஆசீரிலே வாழ்த்துதலும் அடங்கியுள்ளது. எனவே "சலோம் சொல்லும்பொழுது வாழ்த்துகின்றோம் அல்லது ஆசி கூறுகின்றோம்.

அன்னை மரி ஏன் வாழ்க என வாழ்த்தப்பட்டார்?

  • வாழ்க என மரியாள் வாழ்த்தப்படுவதற்கு சரியான காரணம் இல்லாமலில்லை.
  • குழந்தைகளே நமக்கு ஏதாவது காரியம் சாதிக்க வேண்டு மென்றால் அம்மா அப்பாவை ஐஸ் வைப்போம். செல்ல அப்பா, செல்ல அம்மா என்று ஐஸ் வைத்து காரியம் நடத்துவோம்.
  • ஒருவரிடம் உதவி கேட்டுச் செல்லும் பொழுது அவரிடம் பிரியமுடன் நடந்து கொள்வதுதான் மரபு முதன்முதலில் செலுத்த வேண்டிய வணக்கம் அவருக்கு விருப்பமான முறையில் அமைந்திருக்க வேண்டும்.
  • இறைவன் நம் மீட்புக்காக சுதந்திரப் படைப்பான மரியாவிடம் சலுகைப் பெற வருகின்றார்.
  • அன்னை மரியாளிடம் "ஆம்" என்ற பதிலை எதிர்நோக்கி அதற்கு உகந்த வாழ்த்துரையைத் தேர்ந்தெடுத்து வானதூதர் வாழ்த்துகிறார். மகத்துவமிக்க இந்த வாழ்த்துதலுக்குப் பின் நன்மைகள் பல தொடர்கின்றன.

விவிலியத்தில் வாழ்த்து

  • இதுபோன்ற வாழ்த்துதலைப் பழைய ஏற்பாட்டில் ஆபிரகாம் பெற்றார். எனவே வாரிசே இல்லை என்றிருந்த அவருக்கு வாக்குறுதியின் மகன் பிறந்தார் (தொநூ 17:1).
  • மோசேக்குக் கடவுள் முட்புதரில் தோன்றி அழைப்பு விடுத்தார். அவர் இஸ்ராயேலின் மீட்புப் பணிக்குத் தலைமைத் தாங்கும் பேறு பெற்றார் (விப 3:2).
  • புதிய ஏற்பாட்டில் செக்கரியாவுக்கு இந்த வாழ்த்து கூறப்பட்டது. இயேசுவின் முன்னோடியான திருமுழுக்கு யோவான் தோன்றினார்.
  • உறுதியோடும் நெஞ்சில் உரத்தோடும் தெரிவிக்கும் ஒவ்வொரு வாழ்த்தும் பல மகிழ்ச்சியின் நற்செய்தியைக் கொண்டு வருகிறது. அரும்புகளே நம் வாழ்வினில் வாழ்க எனும் வார்த்தை தரும் பதில்தான் என்ன?

சுய ஆய்வு செய்வோம்!

  • வாழ்க என்று பிறரைக் கடமைக்காக வாழ்த்துகிறோமா? அல்லது உள்ளூர மகிழ்ந்து வியந்து வாயார வாழ்த்துகிறோமா?
  • நம்முடைய வாழ்த்துரை எத்தனை பேருக்கு மகிழ்ச்சியூட்டும் செய்தியாக மாறி இருக்கிறது?
  • நாம் கேட்காமலே வெற்றி மலர்களால் பிறரால் நாம் வாழ்த்தப்படும்போது மகிழ்ச்சி மனதால் வாழ்த்துக்களை பெற்றுக்கொள்ளும்போதும் நமது மனப்பாங்கு, பழக்கங்கள், செயல்முறைகள் எப்படி உள்ளன?
  • இறவா நம்பிக்கையோடு ஒருவர் நம்மை வாயார வாழ்த்தும்போது நமது எண்ணங்கள் நன்மையின் வாசல் பக்கமாக ஒடிக்கொண்டிருக்கின்றதா?
  • மற்றவர்க்கு வாழ்த்து தெரிவிப்பதில் நீங்கள் முதல் மனிதரா?
  • முடிவு தெரியாத வாழ்வில் புகழின் உச்சத்தை எட்டி விட்டோம் என மயக்கம் கொள்கிறீர்களா? சின்னச் சிட்டுகளே.
  • இப்படி எல்லோர் முன்னும் புகழ் பெற முடியாது என அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுகிறோமா? ஆராய்ச்சி செய்யுங்க இளம் குருத்துக்களே.
  • இல்லை தடைகள் மலையளவு வந்தாலும் நிறைகுடம் போல் அன்பாக, பணிவாக, இரக்கத்தோடு செயல்களைத் தொடர்கின்றோமா? தேடுங்க குழந்தைகளே.

குழந்தைகளே கற்க நிற்க!

  • ஒருவரை வாழ்த்துவது நற்பண்புகளின் வெளிப்பாடு. நாலுபேரை தன்பால் ஈர்க்கும் ஆற்றல் வாழ்த்தொலிக்கு உண்டு.
  • நம்மை ஒருவர் வாழ்த்தும்போது நமது மனம் பூரிப்படைகிறது. நமது நல்ல காரியங்களை பிறர் நினைத்து பார்ப்பதை கண்டு மகிழ்ச்சி கொள்கிறோம்.
  • குழந்தைகளை அன்பு செய்த இயேசுவின் தாய் அன்னை மரியா நமக்கெல்லாம் நிரந்தர தாய். நாம் வளமாக வாழவும், நலமான பண்புகளில் வளரவும் தன் மகனிடம் ஒவ்வொரு நாளும் பரிந்து பேசிக்கொண்டிருக்கிறார்.
  • எனவே அன்னையை வாழ்க என்று வாழ்த்தும் யாவரும் வரங்களைப் பெற்றுச் செல்கின்றனர். ஏனெனில் அன்னையைப் புகழ்கின்றவர் ஆண்டவர் இயேசுவையும் புகழ்கின்றனர்.
  • தினமும் ஒருமுறையாவது பிறர் செய்யும் நல்ல செயல்களை கண்டுணர்ந்து வாழ்த்துவோம்.
  • உண்மையான வாழ்த்து வாழ்த்துபவரை உயர் பண்பு அடையச் செய்யும். வாழ்த்துப் பெறுபவரை வாழ்வில் உயர்வடையச் செய்யும்.