செபம் செய்வோமா?

04 பெண்களுக்குள் பெற்றவர் நீரே


யூதச் சமூகத்திலே இரண்டாம் தரக் குடிமக்களாக, ஒதுக்கப்பட்டவர்களாக கருதப்பட்டவர்கள் பெண்கள். இச்சூழலில் எப்படி சாதாரணப் பெண்மணியால் அருள் மிகப்பெற்றவள் என்ற புகழினைப் பெற முடிந்தது? எதற்காக இப்பேறு இவருக்குக் கிடைத்தது? இதுபோன்ற கேள்விகளுக்குத் தகுந்த விடைதனை விவிலியத்தில் நாம் காண்கிறோம்.

விவிலியத்தில் ஆசி பெற்ற பெண்கள்

 • பழையனற்பாட்டில் யாவேல் மற்றும் யூதித் ஆகிய இரு பெண்மணிகளும் ஆசி பெற்றவரென அழைக்கப் படுகின்றனர். நீ பெண்களுள் பேறு பெற்றவள் கூடாரம் வாழ் பெண்களுள் நீ பேறு பெற்றவள்" (நீத 5:24) என யாவேல் புகழப்படுகின்றார்.
 • "மகளே! உலகில் உள்ள எல்லாப் பெண்களையும் விட நீ உன்னதக் கடவுளின் ஆசி பெற்றவள். அவரே நம் பகைவர்களின் தலைவனது தலையை வெட்டி வீழ்த்த உன்னை வழிநடத்தியிருக்கிறார்" (யூதி 13:18) என யூதித் போற்றப்படுகின்றார்.

இவர்கள் இருவரும் பகைவர்களிடமிருந்து இஸ்ராயேலை விடுவித்ததால் ஆசீர் பெற்றவர் என அழைக்கப்படுகின்றனர்.

 • புதிய ஏற்பாட்டில் அன்னைமரி ஆசி பெற்றவர் என அழைக்கப்படுகிறார்.
 • மானுட குலத்தின் விடுதலைக்காகத் தன் மகனைக் கையளித்ததாலும், இறைவார்த்தையைக் கேட்டு தியானித்து, வாழ்வில் நடைமுறைப்படுத்திய காரணங்களுக்காகவும் ஆசீர்வதிக்கப்பட்டவரென அழைக்கப்படுகின்றார்.

இறைவனால் வழங்கப்படும் ஆசியானது

 • பொதுநன்மைக்காக
 • வளர்ச்சிக்காக
 • தீமையை நன்மையால் வென்றெடுப்பதற்காக
 • இறை பராமரிப்பை நாளும் உணர்ந்து கொள்வதற்காக
 • இறைநம்பிக்கையிலே நாளுக்கு நாள் வளர்வதற்காக
 • இறைவனைப் புகழ்வதற்காக

குழந்தைகளே கற்க நிற்க

பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவரே என்று மரியன்னையைப் புகழுகின்றபோது நாம் பின்வருவனவற்றை நினைவில் கொள்ள வேண்டும்.

 • நாம் முன்னெடுக்கும் ஆசீரின் செயல்பாடுகள் என்னென்ன? நம் செயல்பாடுகள் பிறருக்கு ஆசீரை வழங்குவதாக உள்ளனவா?
 • வாழ்வில் நம் செயல்பாடுகளான கீழ்ப்படிதல், உதவுதல், கற்றல், விளையாட்டு மற்றும் ஏனைய நிகழ்வுகளை இறைவனின் வார்த்தைக்கு ஏற்ப மேற்கொள்கிறோமா?
 • நமது செயல்பாடுகள் பொதுநல நோக்கில், ஒரு குழுமம் அல்லது சமூகத்தின் வளர்ச்சிக்கு உதவுகின்றதா? நாம் வாழும் இல்லத்திற்கு, பங்கு சமூகத்திற்கு நம் செயல்பாடுகள் பங்களிப்பு செய்கிறதா?
 • இறைவனின் கருவியாய் செயல்பட இலட்சியத் தெளிவு உள்ளதா?
 • இறைவனின் திட்டம் நம் வழியாய் நிறைவேற நாம் ஒரு கருவியாகச் செயல்படத் தயாரா?