செபம் செய்வோமா?

07 தூய மரியே


  • அன்னையை நாம் தூயவர், புனிதர் எனப் பல அடைமொழிகளில் அழைக்கின்றோம். இதற்குப் பல காரணங்கள் உண்டு. முதன்மையானக் காரணமாக எனக்குத் தோன்றுவது அன்னை தன்னகத்தே கொண்டிருந்த 'ஏழ்மை' என்னும் நற்பண்பு.
  • ஏழ்மையைப் பிடித்து தம்மை வெறுமையாக்கினால் தான் அருள் பெற்று புனிதமடைய முடியுமென்பதை முதலில் தன் வாழ்வால் பிரகடனப்படுத்தியவர் இயேசு.
  • தன் வாழ்வின் தொடக்கம் முதல் இறுதிவரை ஏழ்மையின் பாதையில் நடந்து புனிதமே உருவானார்.
  • இதே எளிய வாழ்வைப் பின்பற்றி அன்னை மரியாவும் அருள் நிறையப் பெற்று புனிதமடைந்துள்ளார்.

எதனால் தூய்மை?

  • மரியா உள்ளத்தில் எளியவராக இருந்தார்.
  • கிறித்து என்னும் விலை மதிப்பற்ற செல்வத்தைத் தன் உதிரத்தில் தாங்கினாலும் செருக்கற்றவராய் இருந்தார்.
  • எல்லா செல்வத்தையும் தன்னிடம் வைத்திருக்கிறோம் என்று வீண்பெருமை கொள்ளவில்லை.
  • ஆண்டவர் இயேசுவைப் போல, தன்னை முழுவதும் இறைத்திருவுளத்திற்காக அர்ப்பணித்தார். இந்த அர்ப்பணத்தில் இறுதிவரை நிலைத்திருந்தார்.
  • அதன் விளைவு, அவரது பார்வையும் பயணமும் ஆண்டவர் பக்கம் முழுமையாய் திரும்பியது. ஆண்டவரும் பதில் மொழியாய் தன் பார்வையை அன்னையின் பக்கம் திருப்பினார். இந்தத் தெய்வீகச் சந்திப்பில் தூயவராக கடவுளால் திருநிலைப்படுத்தப்பட்டார் அன்னை.

குழந்தைகளே கற்க நிற்க

  • “தூய மரியே" எனப் புகழ்ச்சிப் பாடலைத் தொடரும் நாமும் தூயவராக மாற வேண்டும்.
  • அன்னை மரியாவின் உள்ளார்ந்த ஏழ்மை அவருடைய மனதை முழுவதும் இறைவன்பால் திருப்புவதற்குப் பயன்பட்டது. நமது ஏழ்மைத் தன்மைகள் எப்படியுள்ளன?
  • நம்மை நாம் வெறுமையாக்கும் போது எண்ணில்லா அருளைப் பெறுகின்றோம். நாமும் அன்னையுடன் புனித நிலைக்கு நாள்தோறும் உயர்கின்றோம். இதை உணர்ந்து செயல்படுகின்றோமா?
  • நம்மை வெறுமையாக்கத் தடையாக இருப்பவை எவை எவை? என்பதை கண்டறிவோம்.
  • நான் எனது என்ற அகங்காரம், ஆணவம் போன்றவற்றைக் களைய முயல்வோம்.