செபம் செய்வோமா?

03 ஆண்டவர் உம்முடனே


 • குழந்தைகளே! அன்றாட திருப்பலியில் அருட்பணியாளர், ஆண்டவர் உங்களோடு இருப்பாராக" என்று வாழ்த்தும்போது பதில் மொழியாக நாமும், 'உம்மோடும் இருப்பாராக" என்கிறோம். காரணம் இது ஒரு ஆசீர் வார்த்தை, நம்பிக்கையின் வார்த்தை,

ஆசீர்வார்த்தை

 • மீட்பு வரலாற்றின் தொடக்கத்தில் இறைவன் மட்டுமே பொருத்தமான ஆசீரை தம் மக்களுக்கு வழங்குபவராகச் செயல்பட்டார் (யோசு 1:9). பின்னர் கடவுள் மட்டுமன்றி, அவருடைய இடத்தில் பதிலாளியாக இருந்த அரசர்கள், குருக்கள், இறைவாக்கினர்கள், குடும்பத் தலைவர்கள் ஆசீரின் கருவியாகச் செயல்பட்டனர்.
 • தொடர்ந்து வந்த காலங்களில் தனிப்பட்ட விதத்தில் கடவுளிடமிருந்து யாரெலலாம் ஆசீர் பெற்று உயர்வடைந்தார்களோ அவர்களும் ஆசீரின் கருவிகளாகும் தகுதி பெற்றதையும் விவிலியத்தில் நாம் வாசிக்கின்றோம்.

பழைய ஏற்பாட்டிலே

 • நோவா தன் மக்களுக்கும் (தொநூ 9:26-27),
 • ஈசாக்கு யாக்கோபுக்கும் (தொநூ 27:28-29),
 • யாக்கோபு யோசேப்பின் மக்களுக்கும் (தொநூ 39:5),
 • மோசே தான் பெற்ற அதிகாரத்தினால் இஸ்ரயேல் மக்களுக்கும் (இச 28:1-14) ஆசி வழங்குவதை நாம் காண்கிறோம்.

நம்பிக்கையின்வார்த்தை

 • அசாதாரண செயல்பாடுகளைச் செய்து முடிக்க அழைப்பு விடுக்கும் நம்பிக்கை வார்த்தையிது.
 • பழைய ஏற்பாட்டில் இறைவன் மனிதச் சக்திக்கு மேலான கடினமான செயல்களை செய்து முடிக்க, மனிதர்களைத் தேர்ந்தெடுக்கும் போது, நான் (கடவுள்) உம்மோடு இருக்கிறேன்' என்ற வாக்குறுதியைக் கொடுக்கிறார்.
 • உதாரணமாக, மோசே எகிப்தின் அடிமைத்தளையிலிருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டும் (விப 3:12), யோசுவா யோர்தான் நதியைக் கடக்க வேண்டும் (யோசு 1:9), கிதியோன் மிதியானியர்களின் கையிலிருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டும் (நீதி 612), இச்சூழ்நிலைகளில் அழைக்கப்பட்டவர்கள் எப்படி முடியும்? என்று திகைக்கின்றனர். அப்பொழுது தங்களது இயலாமையில் கடவுள் உடனிருப்பதாக உறுதித் தருகிறார்.
 • விப 3:12 - நான் உன்னோடு இருப்பேன். நானே உன்னை அனுப்புவேன் என்று குழந்தைகளாகிய நம்மையும் இறைவன் இன்று அழைக்கிறார்.

மரியாவோடு ஆண்டவரின் உடனிருப்பு - ஏன்?

 • ஆண் துணையில்லாமல் கன்னி என்ற நிலையில் கடவுளின் மகனைப் பெற்றெடுக்க வேண்டும் (லூக் 134).
 • இது இயற்கை நியதிக்கு மாறானது, மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்டது. எனவே மரியாவுக்கு உடன் வாழும் சமூகம் ஏற்றுக் கொள்ளுமோ என்ற அச்சம் மேலிடுகிறது.
 • இந்த அச்சத்தைப் போக்கி உன்னதரின் வல்லமை மரியாவை தம் பொறுப்பில் ஏற்றுக் கொள்கிறது.
 • கடவுளின் தாயாய், கன்னியாய் இயேசுவைப் பெற்றெடுக்கும் வாய்ப்பு பெற்றார் அன்னை மரியாள்.

குழந்தைகளே கற்க நிற்க

ஆண்டவர் உம்மோடு என்று ஒருவரை வாழ்த்தும்போது நாம் மறைமுகமாக எதைச் சொல்கிறோம்?

 • ஆசீரைப் பெறுகின்ற நபர் எந்தச் சூழலில் இருக்க நேர்ந்தாலும் அந்தச் சூழல் நலமாக அமைய ஆண்டவரின் அருட்துணை அவரோடு இருக்கிறது என்ற நம்பிக்கையை ஊட்டுகிறோம்.
 • கடவுளின் அருள் துணையால் அவர் மேற்கொள்ளும் திட்டங்களும், செயல்பாடுகளும் நலமாக அமைய வேண்டும் என வாழ்த்துகிறோம்.
 • எடுக்கின்ற முயற்சி பலனைக் கொணரும் என்ற திடமான உறுதிப்பாட்டைக் கொடுக்கின்றோம்.
 • அனைத்திற்கும் மேலாய், செபத்தின் வழியாய் என்றும் அவர்கள் முயற்சியில் உடனிருக்கிறோம் என்பதைச் சொல்லாமல் சொல்கிறோம்.
 • நம் பெற்றோர்கள், பெரியோர்கள், ஆசிரியர்கள், உடன்பிறப்புகள், நண்பர்கள் மற்றும் நம் வளர்ச்சியில் அக்கறை கொண்ட நல்மனத்தோர் அனைவருக்காகவும் நாளும் குறைந்தது 5 நிமிடங்களாவது இறைவேண்டல் செய்வோம்.