09 பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக
நாம் எல்லோரும் பாவிகள்
நாம் ஒவ்வொருவரும் இருவிதங்களில் பாவிகள்.
குழந்தைகளே!
நம் வார்த்தைகளால் செயல்களால் செய்யும் தவறுகளை நினைத்துப் பார்ப்போம்.
- பெற்றோர் பெரியோர்களை மதிக்காமை, அவர்களுக்கு கீழ்ப்படியாமை...
- வகுப்புத் தோழர்களைத் தேவையற்ற விதத்தில் விமர்சித்தல், கேலி செய்தல்...
- கெட்ட வார்த்தைகளால் திட்டுதல், பொய் பேசுதல், திருடுதல்...
- கடமைகளை சரிவர நிறைவேற்றாமல் சோம்பேறியாக இருத்தல்...
- பள்ளிக் கூட பாடங்களை ஒழுங்காகக் கற்றுக் கொள்ளாதிருத்தல்...
- தேர்வுகளில் காப்பியடித்தல்...
- நேரத்தை நன்கு பயன்படுத்தாமை...
இதுபோன்ற பிற தவறுகளையும் பட்டியலிட்டுத் திருத்திக் கொள்வது அவசியம்.
நல்லது செய்யத் தவறுவதும் பாவமே!
- பார்வையற்ற முதியவர் பாதையைக் கடக்க முடியாமல் திணறும் வேளையில் கண்டும் காணாமல் சென்று விடாது.
- வகுப்புத் தோழன் அல்லது தோழிக்கு குறிப்பிட்ட பாடம் நன்கு புரியாத போது அவற்றை விளக்கிச் சொல்லிக் கொடுக்க நேரம் ஒதுக்காதது.
- வீட்டில், அண்டை வீட்டிலுள்ள முதியவர்களுக்கு இயன்ற உதவிகளை செய்து கொடுக்கத் தவறுவது.
- ஆலயத்திற்கு வருவதற்கு ஏற்ற சூழல்கள் இருப்பினும் வழிபாடுகளில் பங்கெடுக்காமல் இருப்பது.
- வீட்டில் தனி செபம், குடும்ப செபம் செய்யத் தவறுவது.
குழந்தைகளே! கற்க! நிற்க!
பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக என்று வேண்டுகிறபோது பின்வருவனவற்றை நாம் நினைவில் கொண்டு மாற்றம் பெறுவோம்.
- நாம் எல்லாருமே பாவிகள், பாவிகள் மனம் மாற வேண்டும் என்பதே கடவுளின் விருப்பம், கடவுளின் இந்த விருப்பத்தைச் செயல்படுத்த நமக்குத் தேவை இறையருள். இறையருளைப் பெற்றுத் தருகின்ற ஊடகமாகச் செயல்படுபவர் நம் அன்னை.
- நாம் செய்த தவறுகளையும், செய்யத் தவறிய நல்ல செயல்பாடுகளையும் நினைத்து மனம் வருந்த வேண்டும். மனம் வருந்துதலின் அடையாளமாக ஒப்புரவு அருட்சாதனத்திலே தக்க தயாரிப்போடு பங்கெடுக்க வேண்டும்.
- இறைவனின் மன்னிப்பைப் பெற்ற அனுபவத்தோடு புதுவாழ்வைத் தொடர வேண்டும். நல்ல பழக்கவழக்கங்களை நாளும் பின்பற்ற வேண்டும்.