செபம் செய்வோமா?

08 இறைவனின் தாய்


 • அன்னை ஒரு மானிடப் பிறவி. கடவுளின் படைப்பு.
 • அவர் எப்படிப் படைத்தவருக்கு தாயாக முடியும்?
 • அன்னை மரியா கடவுளைப் பெற்றெடுத்தவரா?
 • தொடக்கமும் முடிவும் இல்லாதக் கடவுளை எப்படிப் பெற்றெடுக்க முடியும்?
 • கடவுளின் தாய் என்று அழைப்பது பொருத்தமாக இருக்க முடியுமா?
 • இவை காலங்காலமாய் கேட்கப்படும் கேள்விகள்.

இறைவனின் தாய்

 • கடவுளோடு கடவுளாக இருந்தவர்.வார்த்தை, மண்ணில் அன்னையின் கருவறையில் குழந்தையாக உதயமானது. இதையே நற்செய்தி நூல் "தொடக்கத்தில் வாக்கு இருந்தது; அவ்வாக்கு கடவுளோடு இருந்தது: அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது" (யோவா 1:1). "வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார்" (யோவா 1:14) என்கிறது.
 • தூய ஆவியின் ஏவுதலால் இதனை நன்கு உணர்ந்த எலிசபெத்து, "என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?" (லூக் 143) என்று அறிக்கையிட்டு, வியந்து அன்னையைப் போற்றுகிறார்.
 • இயேசு இறைமகன் என்றால் அவரைப் பெற்றெடுத்துப் பேணி வளர்த்த அன்னை மரியாவை இறைவனின் தாய் (லூக் 11:27) என்று பறைசாற்றுவது தகுந்ததே!

எப்படி இறைவனின் தாய்?

இறைவனின் தாயாகும் பேறு அன்னை மரியாவுக்குத் திடீரென்று கொடுக்கப்பட்ட ஒன்றல்ல. கடவுளின் திட்டத்திற்கேற்ப தாய்மையின் கடமையை நிறைவேற்றியதால் வந்ததே. இதற்குப் பல உதாரணங்களைச் சுட்டிக்காட்ட முடியும்.

 • யோசேப்பும் மரியாவும் பெத்லகேம் ஊருக்குச் சென்றனர். அவர்கள் அங்கிருக்கும்போது மரியாவுக்குப் பேறுகாலம் வந்தது. அவர் தலைப்பேறான மகனைப் பெற்றெடுத்துத் துணிகளால் பொதிந்து தீவனத்தொட்டியில் கிடத்தினார். அவரே ஆண்டவராகிய மெசியா (லூக் 2:5-13) என லூக்கா நற்செய்தியாளர் அறிவிக்கின்றார்.
 • இரண்டு வயதில் குழந்தை இயேசுவைக் காப்பாற்ற எகிப்துக்கு ஒடிப்போகிறார் (மத் 2:14).
 • பாஸ்கா விழாவிற்கு எருசலேம் சென்றபோது சிறுவன் இயேசுவைக் காணவில்லை. மூன்று நாட்களுக்குப் பின் அவரைக் கோவிலில் கண்டு, மகனே, ஏன் இப்படிச் செய்தாய்? என ஏக்கத்தோடு கேட்கிறார் (லூக் 2:48).

இவ்வாறு தன் மகனின் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் உடனிருந்த அன்னையின் தியாகம் தன் மகனின் சாவிலும் தொடர்கிறது. உடனிருந்த சீடர்களெல்லாம் சிதறிப்போக சிலுவையின் அடியில் நின்று தன் மகனுக்கு ஆறுதல் கொடுக்கிறார்.

எனவே தான் இறைமகன் இயேசுவே தன் தாயை அன்புச்சீடர் யோவான் மூலம், "இதோ உன் தாய்' என்று அன்னை மரியை மனுக்குலம் முழுமைக்கும் தாயாகக் கொடுக்கிறார்.

இன்றும் என்றும் எல்லாருக்கும் தாய்

 • அன்னை இன்றும் இறைவனின் தாயாகவும், மனிதரின் தாயாகவும் செயல்பட்டு மாபெரும் அற்புதங்களைச் செய்து வருகிறார்.
 • இதை அறிந்திருக்கும் திருச்சபையும் செபமாலையில் மாமரியை இறைவனின் அன்னை என்றழைப்பதில் பெருமை கொள்கிறது.

குழந்தைகளே! கற்க! நிற்க!

 • நாமும் அன்னையை இறைவனின் தாயே என்று அழைக்கிறோமென்றால் அன்னையின் பண்புகளில் வளர வேண்டும்.
 • அன்னை தன் மகனை வளர்த்து அவர் இலட்சியம் நிறைவேறும் மட்டும் உடனிருந்தார். குழந்தைகளே! நம் இலட்சியம் நிறைவேற எத்தகைய தியாகங்களை நம் பெற்றோர் முன்னெடுக்கிறார்கள் என்பதை பட்டியலிடலாமே!
 • பெற்றோர்களே! தன் மகனுக்காகத் தன்னையே இழக்கத் துணிந்தவர் நம் அன்னை, ஆனால் இன்று நம் பிள்ளைகளின் வளர்ச்சிக்காக நாம் எதை இழக்கத் தயாராக இருக்கிறோம்?
 • பிள்ளைகளின் வளர்ச்சிக்காக சற்று நேரத் தொலைக்காட்சித் தொடர்களைக்கூட தியாகம் செய்யத் தயாராக இல்லாதிருக்கும் குடும்பங்களும் இருக்கத்தான் செய்கின்றன. இந்நிலை தொடர வேண்டுமா?