செபம் செய்வோமா?

10 இப்பொழுதும்


நிகழ்காலத்தை நாம் முழுமையாக வாழ வேண்டும். காரணம் அது கடவுளின் காலம். "ஆண்டவரின் பார்வையில் ஒரு நாள் ஆயிரம் ஆண்டுகள் போலவும், ஆயிரம் ஆண்டுகள் ஒரு நாள் போலவும் இருக்கின்றன" (2 பேது 3.8). இதற்கு விளக்கமளிக்கும் புனித அகுஸ்தீன் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

"கடவுளிடம் எல்லாப் பொழுதும் இப்பொழுது, அவரிடம் நேற்றும் நாளையும் கிடையாது. எங்கு அசைவுகள் உள்ளதோ அங்கு காலங்கள் உண்டு. கடவுள் அசைவுக்கு உட்பட்டவரல்லர். ஆகையால் அவரிடம் காலம் கிடையாது. காலத்தைக் கடந்த கடவுளின் இப்பொழுதினிலே அவர் தரும் வாழ்வை வாழ வேண்டும். அவரது வாழ்வை வாழ அவரது குரலுக்குச் செவிமடுக்க வேண்டும்".

 • காலம் பொன் போன்றது! நம்மில் பலர் நிகழ்காலத்தில் வாழ இயலாததற்கு ஒரு காரணம் வாய்ப்புக்காகக் காத்திருக்கும் தன்மையே! காத்திருப்பவன் கோழை. நான் வாய்ப்புகளுக்காகக் காத்திருப்பதில்லை. அவற்றை உருவாக்கிக் கொண்டு விடுகிறேன்" என்கிறார் நெப்போலியன்.
 • நமக்கான நல்ல நேரமும், தருணமும் கனியட்டும் என்று காத்துக் கொண்டிருந்தால், ஒருபோதும் அவை கனியப் போவதில்லை, நாம் அவற்றை உருவாக்க முயல வேண்டும்.
 • சாதனை புரிவதற்கும், சமுதாயத்தில் நாலு பேருக்கு நல்லது செய்வதற்கும் காலமும், நேரமும் நம்மைத் தேடி வராது. மாறாக நாம்தான் சூழ்நிலைகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும். இதற்கு திட்டமிடல் மிக மிக அவசியம்.
 • மனிதனின் மனம் எதைச் சிந்தித்து, திடமாக நம்புகிறதோ, அதை உறுதியாக அடைந்தே தீரும்.
 • "நேற்று என்பது ரத்து செய்த காசோலை, நாளை என்பது வாக்குறுதிச் சீட்டு, இன்று என்பது உடனடி ரொக்கம்"

இன்றே நன்றே!

 • இன்றைய நாள் நன்னாள் தான் - நாம் நல்ல முறையில் பயன்படுத்தி விட்டால், காலத்தின் அருமையைப் பற்றி கவியரசு கண்ணதாசன், "காலங்கள் கடவுள் பாடும் இராகங்கள், அவை வீணடிக்கப்பட்டு விட்டால் திரும்பக் கிடைப்பதில்லை; எத்தனை வயதுவரை ஒருவன் வாழ்ந்தான் என்பது கேள்வியல்ல. ஒவ்வொரு வயதிலும் அவன் என்ன செய்தான்? என்பதே கேள்வி" என்கிறார்.
 • நம் கையில் கொடுக்கப்படுகின்ற நிகழ்காலத்தை முறையாகப் பயன்படுத்துகின்றோமா? அல்லது வெற்றுப் பேச்சுக்களைப் பேசிக்கொண்டு காலத்தையும் நேரத்தையும் விரயமாக்குகிறோமா? என சற்று அலசி ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
 • காலம் அனைவருக்கும் சரியாகவே வழங்கப்பட்டிருக்கிறது. நமது வாழ்க்கையில் 70 சதவீதம் தூக்கத்திலும், உண்பதிலும், மற்ற பொழுது போக்குகளிலும் செலவாகி விடுகின்றது. மீதமிருக்கும் 30 சதவீதத்தையாவது நமது பணிகள், கடமைகள், சாதனைகள், வீரதீர செயல்களை நிகழ்த்திட செலவிட முயல வேண்டும்.
 • நம் வாழ்நாளில் பெரும்பகுதியை நமக்காகவே செலவிடுகிறோம். சிறிது நேரமாவது பிறருக்காகச் செலவிட முயலும்போது புதுப்புது யோசனைகள் தோன்றுகின்றன.அவற்றின் வழியாக சாதனைகள் சாத்தியமாகின்றன.
 • இப்போது கையில் நம்மிடம் வழங்கப்பட்டிருக்கும் கொடைதான் நிகழ்காலம்'. இந்த மேலான கொடையை நாம் எவ்வாறு செலவிடுகின்றோமோ அதைப் பொறுத்துதான் நமது எதிர்காலம் நம்மை எதிர்நோக்குகிறது.

குழந்தைகளே! கற்க! நிற்க!

"காலத்தின் மதிப்பு உனக்கு தெரிந்தால், வாழ்வின் மதிப்பும் உனக்குத் தெரியும்" என்கிறார் நெல்சன். வாருங்கள் இப்பொழுதே வாழ்வை வளமுள்ளதாக்குவோம்.

 • சகுனம் பார்த்து, நல்ல நேரத்தையும் திசையையும் கேட்டறிந்த பிறகு, தங்கள் வேலையைத் துவங்கும் ஆசாமிகள் நம்மில் பலர் இருக்கிறார்கள். காலங்கள் கடவுளால் படைக்கப்பட்டன. அப்படியெனில் ஏன் நாம் இராகு காலம், எமகண்டம் பார்த்துச் செயல்பாடுகளைத் தொடங்குகிறோம்?
 • இறைவனோடு இன்றைய பொழுதில் ஒன்றித்து வாழ நாம் கற்றுக்கொள்ள வேண்டும். இறைவனோடு ஒன்றிக்க நமக்காக இப்பொழுதில் செபிப்பவர்தான் அன்னை மரியாள். இப்பொழுதில் நம் செயல்பாடுகளைத் தொடர்ந்தால் மூடநம்பிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். வெற்றி வாய்ப்புகளைத் தட்டிச் செல்லலாம்.
 • நாள் திட்டம் - வாரத் திட்டம் - மாதத் திட்டம் - ஆண்டுத் திட்டம் என காலங்களை பகுத்துச் செயல்பட்டுப் பாருங்களேன்! அதுவே நேர நிர்வாகத்திற்குச் சிறந்தது.
 • கால அடிப்படையில் அமைத்தத் திட்டங்களின் செயல்பாட்டு விதங்களில் அவ்வப்போதுத் தொகுத்துத் திறனாய்வு செய்து பாருங்களேன்! அதுவே தொடர் வளர்ச்சிக்கு ஏற்ற பயிற்சி.
 • நாளை நாளை என்று தள்ளிப்போடுவதையும், அப்புறம் அப்புறம் என்று ஒதுக்கிப்போடுவதையும் தவிருங்கள்! அது ஒன்றே நாம் நிகழ்காலத்தில் வாழ ஏற்ற வழி.