செபம் செய்வோமா?

எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல, எங்கள் குற்றங்களையும் மன்னியும்


 • மனிதர்கள் பலவீனமானவர்கள் பலவீனத்தால் தவறக்கூடியவர்கள், தவறிழைப்பவர்கள் "பாவம் நம்மிடம் இல்லை என்போமென்றால் நம்மையே நாம் ஏமாற்றிக் கொள்வோம்" (1யோவா 18)
 • நம் மீட்பர் பாவம் தவிர மற்றனைத்திலும் நம்மைப்போல வாழ்ந்தார். பாவமற்ற அவர் ஒருபோதும் பாவிகளை வெறுத்து ஒதுக்கியது கிடையாது.
 • பாவமற்ற தெய்வமே பாவிகளை மன்னித்து ஏற்றுக் கொள்கின்ற போது பாவக்கறைகளோடு இருக்கின்ற நாம் நமக்கு எதிராகக் குற்றம் செய்தவரை மன்னிக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.
 • பிறர் குற்றங்களை நாம் மன்னிக்கின்றபோது நம் குற்றங்களையும் கடவுள் நிச்சயம் மன்னிப்பார் மன்னிப்பதில் மன்னிப்பு அடைகிறோம்' என்கிறார் தூய பிரான்சிஸ் அசிசியார்.

மன்னிக்கும் இறைவன்

மீக்கா இறைவாக்கினர் மன்னிக்கும் இறைவனிடம் தனக்குள்ள அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கின்ற பொழுது, "அவர் நம்மீது இரக்கம் காட்டுவார் நம் தீச்செயல்களை மிதித்துப் போடுவார். நம் பாவங்கள் அனைத்தையும் ஆழ்கடலில் எறிந்து விடுவார்" (மீக் 7:19) என்கிறார்.

குழந்தாய்! உரசிப்பார்!

 • இறைவன் நம்மை நம் பாவங்களோடும் பலவீனங்களோடும் மன்னித்து ஏற்றுக்கொள்கின்றார் என்ற நம்பிக்கை நம்மிடம் உள்ளதா?
 • பல நேரங்களில் படைத்துப் பாதுகாத்து வரும் இறைவன் நம்மை மன்னித்தாலும் நாம் நம்மை மன்னித்து ஏற்றுக்கொள்ளத் தயங்குகிறோம். இதனால், குற்றப்பழியுணர்வுகளும், தாழ்வு மனப்பான்மை எண்ணங்களும் பல நேரங்களில் நம்மை ஆட்கொள்கின்றன.
 • முதலில் இறைவன் நம்மை மன்னித்து ஏற்றுக்கொள்கின்றார் என்ற நம்பிக்கையை ஆழப்படுத்துவோம்.
 • இறைவன் நம்மை மன்னித்து ஏற்றுக்கொள்கின்றார் என்றால் நம் பாவங்களையும் அங்கீகரிப்பதாகப் பொருள் கொள்ளக்கூடாது. மாறாக, அவர் நம்மை ஏற்றுக்கொள்கிறார். அதே வேளையில் நம் குற்றங்களை அருவருக்கிறார்.

தீர்ப்பிடாதீர்

 • "பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்காதீர்கள். அப்பொழுதுதான் நீங்களும் தீர்ப்புக்குள்ளாக மாட்டீர்கள். மன்னியுங்கள் மன்னிப்புப் பெறுவீர்கள்" (லூக் 6.37)
 • "உங்களுள் ஒவ்வொருவரும் தம் சகோதர சகோதரிகளை மனமார மன்னிக்காவிட்டால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தையும் உங்களை மன்னிக்கமாட்டார்" (மத் 18:35).
 • நமக்கு அடுத்திருப்பவரை நாம் மன்னிக்க மனமில்லாமல் இருந்து விட்டு, கடவுளுக்கு வழிபாடு செலுத்துவது ஏற்புடையது ஆகாது (மத் 5:23-24) என்ற படிப்பினையை இயேசு நமக்குச் சுட்டிக்காட்டுகிறார்.
 • எத்தனை முறை மன்னித்த பிறகும் ஒருவர் திரும்பத் திரும்ப அதே தவறைத்தானே செய்கிறார் என நாம் அலுத்துக் கொள்வது உண்டு. பேதுரு இயேசுவிடம்,"எத்தனை முறை மன்னிக்க வேண்டும்? ஏழுமுறை மட்டுமா?" என்று கேட்டதற்கு 'ஏழு முறை மட்டுமல்ல; எழுபது தடவை ஏழுமுறை' என இயேசு மொழிந்த வார்த்தைகளும் (மத் 18:21) நற்செய்தியில் நாம் காணும் மன்னிக்க மறுத்த பணியாளர் உவமையும் தொடர் மன்னிப்பின் அவசியத்தை உணர்த்துகின்றன.
 • மன்னிப்பு அளிப்பதால் மகிழ்ச்சி பிறக்கின்றது, உறவு மலர்கின்றது.

குழந்தாய் உரசிப்பார்!

"எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல எங்கள் குற்றங்களையும் மன்னியும்' என இனி நாம் இறைவேண்டல் செய்யும்போது நினைவில் கொள்ள வேண்டியவை:

 • இறைமகன் இயேசு காட்டும் சகோதரத்துவ வாழ்வுக்கு அடிபணிந்து நம் உறவுகளில் உள்ள குறைகளை அகற்ற விழைகிறோம் என்று பறைசாற்றுகிறோம்.
 • மன்னிப்பதில் மனிதம் மாண்பைப் பெறுகிறது. எனவே நமக்கெதிராக அடுத்தவர் செய்த தவறுகளை மன்னித்து வாழ ஆயுத்தமாகிறோம்.
 • கடவுள் நமக்குத் தரும் மன்னிப்பு நம்மை அவரோடு இணைக்கிறது. நாம் ஒருவருக்கொருவர் காட்டும் மன்னிப்பு சகமனிதரோடு நமக்குள்ள உறவைப் புனிதமாக்குகிறது. இதனால் புதிய உலகம் சாத்தியமாகிறது என்பதை உலகிற்கு எடுத்துரைக்கிறோம்.
 • சின்னச் சின்னச் பலவீனங்களிலிருந்து நம்மையே நாம் முதலில் மன்னிப்போம். குற்றப்பழியுணர்வு, தாழ்வுமனப்பான்மை போன்றவற்றை முற்றிலும் அகற்றுவோம்.