செபம் செய்வோமா?

விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே

  • விண்ணகம் என்பது ஆண்டவரின் தூய உறைவிடம் (இச26:15/தொநூ 28:17 /2குறி6:21).
  • ஆண்டவரின் அரியணை (திபா 114 /1 அர 22:19/எசாயா 66:1).
  • ஆண்டவர் மானுடத்தைப் பாதுகாத்து, பராமரிக்கப் பயன்படுத்தும் கண்காணிப்புத் தளம் (திபா 3313:53:2; 102:19-20).

“விண்ணகத்தில்” என்ற சொல் கடவுளின் வல்லமையை நமக்குச் சுட்டிக் காட்டுகிறது. “விண்ணுலகிலிருக்கிற எங்கள் தந்தையே” என நாம் அழைக்கும்போது ஆண்டவரின் அளவற்ற வல்லமையும் , மானுடத்திற்காக அவர் மேற்கொண்டிருக்கும் பணிகளும் நம் நினைவிற்கு வர வேண்டும்.

விண்ணகத் தந்தை இந்த மண்ணகத்தை விண்ணகமாக மாற்ற தன் மைந்தனை அனுப்பிய செயலினையும் நினைவுகூர்ந்தாக வேண்டும். அதன் வழி நாமும் விண்ணகத்திலுள்ள தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றி (மத் 12:50) இயேசுவின் பங்காளிகளாக மாற முயற்சி - செய்ய வேண்டும்.

“விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே”

  • இப்படி அழைக்கும்போது நாம் இறைவனின் தொடர் உடனிருப்பை உணர்கிறோம்.
  • பெற்றோரை இழந்து, பெற்றோர் இருந்தும் கவனிப்பாரற்று வீடுகளிலும் வீதிகளிலும் அநாதைகளாக அலைகின்ற சிறுவர் சிறுமிகளுக்கு இறைவனின் தந்தை உடனிருப்புப் பராமரிப்பைக் கொடுக்கின்றது.
  • இந்தியாவில் ஏறத்தாழ 50 இலட்சம் குழந்தைகள் உழைப்புச் சந்தையில் மிகக் கடுமையாக வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். உணவகங்கள், பண்ணைகள், தொழிற்சாலைகள் என பலக் கடினமான பணிகளில் ஈடுபட்டுள்ள குழந்தைகளுக்கு இறை தந்தையின் பாதுகாப்பு அவர்களை மீட்கும் சக்தியாக வருகிறது.
  • கணவரை இழந்து, மனைவியை இழந்து, பிள்ளைகளை இழந்து யாரும் கவனிப்பாரற்று முதிர்வயதில் நோயினாலும், வறுமையினாலும், அவதியுறுவோர் அனைவருக்கும் இறைவனின் இந்த உடனிருப்பு ஆறுதலையும், திடத்தையும், நம்பிக்கையையும் ஊட்டுகின்றது.
  • வாழ்வின் பல்வேறு துயரத்தில் வாடுகின்றவர்கள், பசி, பிணி ஆகியவற்றால் வேதனைப்படுகின்றவர்கள் ஏழ்மை, வறுமையில் தவிர்க்கின்றவர்கள் அனைவரும் நம்பிக்கைப் பெறுகின்றனர்.

தந்தை என்று அழைப்போம்!

குழந்தைகளே!

  • அப்பா தந்தையே என இறைவனை அழைக்கும்போது இறைவன் நம்மோடு இருக்கின்றார். வாழும் இறைவன் நமக்கு வாழ்வளிப்பார் என நம்புகிறோம்.
  • வல்லமைமிக்க இறைவன் நம்மை என்றும் பாதுகாத்து பராமரிக்கிறார் வீண் கவலைக்கும் விரக்திக்கும் நாம் ஆளாகத் தேவையில்லை; கண்ணின் இமைபோல் அவர் நம்மைப் பாதுகாப்பார் என்ற உறுதியைப் பெறுகிறோம்.
  • இது என் விதியென்று முடங்கிக் கிடப்பவர்களுக்கு தந்தையாம் இறைவன் நம்பிக்கையூட்டி எழுந்து நடக்கச் செய்கிறார்.
  • உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற வேற்றுமைக் களைந்து ஒரே தந்தையின் பிள்ளைகளாக வாழும் பேற்றினைத் தருகிறார்.

குழந்தாய் உரசிப்பார்!

  • கடவுளைத் தந்தையே என்று அழைத்து விட்டு உடன் வாழும் சகோதர சகோதரிகளை வெறுத்து அல்லது விலக்கி வாழ முடியாது.
  • கடவுளைத் தந்தை என்று அழைக்கும் நம்மிடம் உயர்வுதாழ்வு, ஏழை-பணக்காரன் என்ற பாகுபாடு நிலவக் கூடாது.
  • மண்ணக வாழ்வின் பரிசே விண்ணகம்! இன்றும் மண்ணக வாழ்வில் சாதி, மதம், இனம், மொழி என்ற பேதமைகளோடு வாழ்கிறோமெனில், கடவுளை விண்ணகத்தில் இருக்கிற எங்கள் தந்தையே என நாம் இணைந்து சொல்வதில் அர்த்தமில்லை.