செபம் செய்வோமா?

எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும்

 • மனிதன் உயிர் வாழ அடிப்படைத் தேவைகளில் ஒன்று உணவு.
 • கிறித்தவர்கள் 'எங்கள் அன்றாட உணவை எங்களுக்கு இன்று தாரும்" என்று பரமத் தந்தையிடம் வேண்டும் போது சாதாரண உணவிற்காக மட்டும் வேண்டுவது கிடையாது.
 • மாறாக, கிறித்தவ வாழ்வானது உடல் உணவு, இறைவார்த்தை உணவு மற்றும் நற்கருனை உணவு என்னும்மூன்றுவகை உணவுகளால் (யோவா 6:1-71) வழிநடத்தப்படுகிறது.

உடல் உணவு

 • பசி வந்தால் பத்தும் பறந்து போகும் ' 'வயிற்றை நிரப்பிய பின் வார்த்தையைப் போதி' என்கிறது முன்னோர் வாக்கு.
 • சுறுசுறுப்போடும் ஊக்கத்தோடும் செயல்பட மனித வாழ்வின் அடிப்படைத் தேவை உடல் உணவே. இந்த உணவானது நமக்கு சரிவிகிதத்தில் கிடைக்காதபோது எந்த நல்ல செயலும் நடைபெற முடியாது. எனவேதான் தம் பணிவாழ்வின் மிக முக்கிய திருப்பமாக உடல் உணவினை இனாமாக வழங்குகிறார். பசியினை மறக்க வைத்து வாழ்வு கொடுக்கின்றார்.
 • கடவுளும் மனிதரைப் படைத்தவுடன் முதல் செயலாக அவர்களுக்கு உணவு அளிக்கிறார் (தொநூ 129).
 • நாமும் உடல் வாடிச்சுருங்கிப் போகும்போது அன்றாட உணவைத் தாரும் என்று துடிக்கிறோம். உலகிற்காய் நாளும் மடிந்து போகும் மானிடர் வாழ்வுக்காய் நாளும் செபிக்கிறோம். அனைவரும் பசியும் தாகமும் இல்லாமல் நலமாக வாழ நம் சின்னச் சின்ன முயற்சிகளை மேற்கொள்ள இனிமேல் சிறாரே முடிவெடுப்பீர்களா?

குழந்தாய்! உரசிப்பார்!

 • உலகம் முழுவதும் 100 கோடி மக்கள் பசி பட்டினியால் தவித்துக் கொண்டிருக்கின்றனர் என்கிறது ஐ.நா.வின் உலக உணவு நிறுவனம். இச்சூழ்நிலையில் அன்றாடம் நாம் வீணடிக்கும் உணவுவகைகள் என்னென்ன?
 • பசியோடு போராடி தினமும் செத்து செத்து அடுத்தவேளை ஆகாரத்திற்காக அல்லல்படும் அவலம் இந்திய மண்ணில் எப்போது மாறும்? அன்புப்பசி அகிலத்தை நிரப்புவது எப்போது?
 • வீசுகின்ற காற்றைப்போல பொழிகின்ற வான்மழைபோல நல்ல உடல்நலத்தோடு சின்னஞ்சிறார்கள் வாழ வேண்டும் என்று சொல்லிவிட்டு சிறாருக்கு நல்ல சத்துள்ள உணவைப் பெற்றோர் தருகிறார்களா?
 • அறிந்தும் அறி புரிந்தும் புரியாமலும் அவரச உணவு (Fast Food) வகைகளை நம்பி உங்கள் ஆரோக்கியத்தை ஏன் கெடுக்கிறீர்கள்? இது உங்களுக்கு நல்லதுதானா? என சிறாரே சிந்திப்பீர்

இறைவார்த்தை உணவு

 • உடல் உணவால் மட்டும் மனிதர் மனிதராக வாழ்ந்துவிட முடியாது. உள்ளத்திற்கும் உணவு தேவை.
 • நல்ல ஆறுதலான ஊக்கமூட்டும், வாழ வைக்கும் வார்த்தை உணவு தேவை. "மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல,மாறாகக் கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர்" (மத் 4:4) என்பது இயேசுவின் வாக்கு.
 • வாழ வைக்கும் இறைவார்த்தை மக்களுக்கு உணவாக அமைந்தது. இறைவார்த்தை என்னும் இவ்வுணவைப் பெற மக்கள் பெருந்திரளாய் இயேசுவிடம் வந்தனர்.
 • இறைவார்த்தை என்னும் உணவைத் தரும் இயேசு தாமே இறைவார்த்தையாக இருக்கிறார்.
 • "திருவிவிலியத்தில் நாம் வாசிக்கும் இறைவார்த்தை உண்மையான உணவும் பானமும் ஆகும்" என்கிறார் புனித ஏரோணிமுஸ்.

குழந்தாய்! உரசிப்பார்!

 • தினமும் திருவிவிலியம் வாசிக்கும் பழக்கம் என்னிடம் உண்டா?
 • வாசிக்கின்ற இறை வார்த்தையில் என்னைப் பாதிக்கின்ற அல்லது தொடுகின்ற இறைவார்த்தைகளை மனதில் பொறித்து தியானிக்கின்றேனா?
 • இறைவார்த்தைச் சுட்டிக்காட்டும் விழுமியங்களை கடைப்பிடிக்கிறேனா?

நற்கருணை உணவு

 • "விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே" (யோவா 6:51). "என் சதையை உண்டு என் இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளார்" (யோவா 6:54) என்று இயேசு கூறுவதன் மூலமும், இந்த உணவை உண்ணுமாறு யாவருக்கும் அழைப்பு விடுக்கின்றார்.
 • "திருச்சபை நற்கருணையை உருவாக்குகிறது. நற்கருணை திருச்சபையை உருவாக்குகிறது. தகுதியோடு நற்கருணையை உண்பவர்கள் நற்கருணையாகவே மாறி விடுகிறார்கள்" - புனித அகுஸ்தினார்.
 • நற்கருணையில் இயேசு நம்மை வழிநடத்தும் ஆயனாகவும், நமக்கு நல் உணவைத் தரும் பசும்புல்வெளியாகவும் இருக்கிறார்" - புனித தாமஸ் அக்குவினாஸ்,
 • "இயேசு கிறித்து தன்னையே அழித்து உணவாக மாற்றி நமது ஆன்மாவோடும் இதயத்தோடும் இரண்டறக் கலந்து விடுகிறார். வேறு எந்த செயல்வழியாகவும் இந்த அளவிற்கு அவர் தனது விசுவாசிகளோடு ஒன்றித்து விட முடியாது" - புனித பிரான்சிஸ் தே சேல்ஸ்

குழந்தாய்! உரசிப்பார்!

 • என் வாழ்வின் பசியையும் தாகத்தையும் எதைக் கொண்டு தீர்க்க முயற்சிக்கிறேன்?li>
 • திருப்பலிக்குத் தவறாமல் செல்கிறேனா? நற்கருணை திருவிருந்தில் தகுந்த தயாரிப்போடு பங்கேற்கிறேனா?
 • நற்கருணைத் திருவிருந்துக் கொண்டாட்டத்தில் அப்பமும் இரசமும் இயேசுவின் உடலாகவும் இரத்தமாகவும் மாறுகிறது. என்பதனை நான் நம்புகிறேனா?
 • நற்கருணையின் முக்கியத்துவத்தை நான் என் வாழ்வில் உணர்ந்திருக்கின்றேனா?
 • அழியா உணவாகிய நற்கருணை என்னில் ஏற்படுத்தும் தாக்கங்கள் என்னென்ன?
 • நற்கருணை அருந்துவது என்னைப் பொறுத்த அளவில் வெறும் சடங்காச்சாரமான நிகழ்வா? அல்லது வாழ்வு மாற்றத்திற்கான அழைப்பா?

ஒவ்வொரு முறையும் அன்றாட உணவை எங்களுக்குத் தாரும் என்று வேண்டும்போது இத்தகைய மூன்று விதமான உணவுக்காகவும் செபிக்கிறோம் என்றும் அவை சுட்டிக்காட்டும் சவால்களை வாழ்வாக்க முயற்சிக்கிறோம் என்றும் பொருளாகும். நாம் இதை நினைவில் கொள்ள வேண்டும்.