இயேசுவின் வருகை வரவேற்பா? புறக்கணிப்பா?
சிமியோன் இயேசுவைப் பற்றிக் கூறியது.
"இதோ, இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும, எதிர்க்கப்படும் அடையாளமாகவும் இருக்கும்.
இவ்வாறு பலருடைய மறைவான எண்ணங்கள் வெளிப்படும். "
( லூக்கா 2:34-35)
இயேசுவின் பிறப்பை ஒட்டிய நிகழ்ச்சியைப் பற்றி நாம் தியானிக்கும் பொழுது, அவரைச் சிலர் ஏற்றுக் கொண்டனர். சிலர் அவரைப் புறக்கணித்தனர். இயேவின் பிறப்போடு தொடர்புக்கொண்ட 15 பேரைப் பற்றிச் சிந்துத்து தியானிப்போம்.
1.செக்கரியா:
இவர் ஒரு குருவானவர். இறைவனின் இல்லத்தில் செபித்துக் கொண்டிருந்தபொழுது, இறைவன் இவருக்கு நல்லதொருசெய்தியை அளிக்கின்றார். இவருடைய வாழ்க்கையில் ஒருசோகமான நிகழ்வு இருந்தது. இவருக்குப் பிள்ளைப் பேறுகிடையாது. கோவிலில் மனத்துயரத்தோடு வேண்டுதல் செய்கின்றார். கடவுள் இவரது வேண்டுகோளுக்கு செவிசாய்க்கின்றார். முதிர்ந்தவயதிலும், இயேசுவின் முன்னோடியான திருமுழுக்கு யோவானை பெற்றெடுக்கும் அருள் இவருக்குக் கிடைத்தது. திருமணஆகியும் வயது முதிர்ந்தநிலையிலும் முடியாதகாரியம் என்று நினைத்தபொழுதும், அற்புதமானவழியில் அவருக்குக் குழந்தைபாக்கியம் கிடைத்தது.
2.எலிசபெத்து:
குழந்தைச் செல்வம் இல்லாத மலடி இவர். ஆயினும் தனது கணவனைப் போல மெசியாவிற்காக இவர் விசுவாசத்தோடு காத்திருந்தர். உள்ளொளியின் வழியாக மரியாவின் வயிற்றில் மெசியா கருத்தருக்கின்றார் என்ற அருளைப் பெறுகின்றார், அன்னை மரியாள் அவரைச் சந்திக்க வந்த பொழுது, ஆவியாலும், ஆனந்தத்தாலும் முற்றிலும் ஆட்கொள்ளப் படுகின்றார். அன்னைமரியாளை "இறைவனின் தாய் என்னிடம் வர நான் யார்? என்று கூறி இது நிறைவேறும் என்று விசுவரித்தவர் பெறுபெற்றவர் என்று புகழாரம் சாற்றுகின்றார்.
3.வானதூதர்கள்:
வானதூதர் என்றாலே "நற்செய்தியைக் கொண்டுவருபவர்கள்" என்பது பொருள். அன்னைமரியாளுக்குக் கபிரியேல் என்ற வானதூதர் மெசியா பிறப்பைப் பற்றிய நல்லசெய்தியை அளிக்கின்றார். செக்கரியாவுக்கும், யோசேப்புக்கும், இடையர்களுக்கும், ஞானிகளுக்கும் பெயரிடப்படாத வானதூதர்கள் இயேசுவைப் பற்றி நற்செய்தயை அறிவிக்கின்றார்கள்.
4.மரியாள்:
திருமணத்ததிற்குமுன் கருத்தரித்தால் ஒருபெண் கல்லால் எறிந்து கொல்லப்படுவாள் என்ற சட்டம் ஒன்று உண்டு என்பதை அறிந்திருந்தும் மரியாள், இறைவனின் தாயாக உருவாகும் நிலையை வீரத்தோடு ஏற்றுக் கொண்டு, இறைவனின் சித்தத்திற்கு அடிபணிந்து "ஆம்" என்று விடையளிக்கின்றாள். விசுவாசமும் கீழ்ப்படிதலும் அவளது சிறப்பு அம்சங்களாகும். தொட்டில் முதல் சிலுவை வரை, கருவறையிலிருந்து கல்லறை வரை இவளது இதயத்தில் வாள் ஒன்று ஊடுருவிற்று. எந்தப் பெண்ணுக்கும் கிடைக்காத ஓர் உன்னத கொடை, அருள் - இறைமகனின் தாயாக உருமாறும் நிலையைப் பெறுகின்றாள்.
5 யோசேப்பு:
இவர் ஒரு நீதிமான். மரியாளைப் புறக்கணித்து, விவாகரத்துக் கொடுத்து அவமானம் செய்யும் செயலை இவர் மேற்கொள்ளவில்லை. ஒரு வார்த்தைக் கூட பேசாத ஒரு ஞானி. தனது விவேகத்தால் அர்க்கெலாவுஸ் ஏரோதின் மகன் யூதேயாவில் அரசனாயிருக்கின்றான் என்று அறிந்தும், நசரேத்துக்குக் குடிபுகுந்து இயேசுவையும் மரியாளையும் பாதுகாக்கின்றார். உன்னத ஆசானாகிய இயேசுவுக்கே ஆசானாகும் பெருமைப் பெறுகின்றார்.
6. திருமுழுக்கு யோவான்:
தாயின் கருவில் இருக்கும் பொழுதே மரியாவின் வருகையால் அபிஷேகம் பெறுகின்றார். தனது மெசியாவை அறிவிக்கும் முன்னோடியான இவர், மெசியா தன் இல்லம் வந்துவிட்டார் என்பதை உணர்ந்து ஆனந்தத்தால் நடனமாடுகின்றார். தாய்மார்களின் கருவில் இருந்து கொண்டே இவ்விருவரும் - இயேசும் யோவானும் சந்திக்கின்றனர். இயேசுவின் வருகையை இவர் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கின்றார்.
7.அகஸ்டஸ் பேரரசன்:
போரும் பூசலும் குழப்பம் நிறைந்திருந்த உரோமை சாம் ராஜ்ஜியத்திற்கு அமைதியைக் கொண்டுவந்தவர் இவர். "போன்றிபெக்ஸ் மாக்சிமஸ்" அதாவது "உன்னத குரு"என்ற பட்டத்தைத் தனக்கே சூட்டிக் கொண்டவர். கர்வத்தோடு மக்கள் கணக்கெடுப்பைச் செய்யுமாறு ஆணை பிறப்பித்தவர். உலக அரசனின் ஆணைக்குக் கீழ்ப்படிகின்றார் இயேசு – மன்னதி மன்னன் - ராஜாதிராஜன்... அகஸ்டஸ் பேரரசனின் ஆணையில் இயேசு பெத்லெகேமில் பிறக்கும் நிகழ்வுக்கு இவர் ஒர் யுக்தியாய் செயல்படுகின்றார்.
8.இடையர்கள்:
இவர்கள் படிப்பறிவில்லாத பாமர மக்கள் சமுதாயத்தால் ஒதுக்கப்பட்டவர்கள், ஒரங்கட்டப் பட்டவர்கள், முகவரி இல்லாதவர்கள். தங்கள் கடமைகளைச் செய்து கொண்டிருந்த பொழுது –கிடையைக் காத்துக் கொண்டிருந்தபொழுது மெசியாவின் பிறப்பைப் பற்றிய செய்தியை முதன்முதலாகப் பெறக் கூடிய பேறுபெற்றவர்கள். பலியாக ஒப்புகொடுக்கப்படும் ஆட்டுக்குட்டிகளை திருக்கோவிலுக்கு அர்ப்பணிக்கக் கொடுக்கும் தொழிலில் ஈடுபட்ட இவர்களுக்கு, உலகின் பாவங்களைப் போக்கும் செம்மறியைப் பார்க்கும் பாக்கியம் கிடைக்கின்றது. இவர்களே இயேசுவின் முதல் நற்செய்தியாளர்கள்.
9.மூன்று ஞானிகள்:
கீழ்த்திசையிலிருந்து புறப்பட்ட வானவியல் அறிஞர்கள் மெசியாவின் பிறப்பை அறிந்து அவரை தொழுவதற்க்காக இஸ்ரயேல் நாட்டிற்கு வந்து யூதர்களிடம் விசாரித்து அறிந்து கடைசியில் ஏரோது மன்னனிடம் வருகிறார்கள். அவர்களின் வருகையாலும், பிறந்திருக்கும் மெசியாவாலும் கலங்கிப் போனான். யூதா ராஜாவின் பிறப்பை உறுதி செய்த பின் தந்திரமாக அனுப்பினான். மீண்டும் விண்மீன் வழிகாட்ட அவர்கள் குழந்தை இயேசுவை பார்த்து தங்களின் ஆராதனையை செய்து, கொண்டு வந்த பரிசு பொருள்களை கொடுத்து விட்டு, எச்சரிக்கப்பட்ட வழிகளில் தத்தம் நாடுகளுக்குச் சென்றார்கள். தங்கம் - அரசன் என்பதைக் குறிக்கிறது. தூபம் - இயேசுவின் தெய்வீகத் தன்மையைக் குறிக்கிறது. வெள்ளைப் போளம் - மனிதத் தன்மையைக் குறிப்பதாகும்.
10.ஏரோது மன்னன்:
கொடுமையாகச் செயல்படும் அரசன் இவன். தனது குடும்ப நபர்களையும், ராபிகளையும் கொன்று குவித்தவன். அராஜகத்தோடு அரசைக் கைப்பற்றியவன். மெசியா வருகையைப் பற்றிக் கேள்வியுற்று அஞ்சுகிறான். நடுங்குகிறான். குழப்பம் அடைகின்றான். அவன் ஒரு பொய்யன். இயேசுவைக் கண்டபின் என்னிடம் வாருங்கள், நானும் இவரைக் கண்டு ஆராதிப்பேன் என்று ஞானிகளிடம் பொய் சொல்லுகின்றான். இயேசுவின் வருகை இவனது அரசுக்கு அச்சுறுத்தும் செயலாக இருக்கும் என்ற அச்சம் இவனைக் கவ்வியது.
11குருக்களும், மறைநூல அறிஞர்களும்:
மெசியாவின் வருகையைப் பற்றி முன்னறிவிக்கப்பட இறைவாக்குகளைப் பற்றி நன்கு அறிந்தவர்கள் இவர்கள் (மீக்கா 5:2). ஆனால் குழந்தை இயேசுவை இவர்கள் காணும் வாய்ப்பைப் பெறவில்லை. இறைவனைக் கண்டு அறிந்து கொள்ள அறிவு மட்டும் பற்றாது, விசுவாசம் வேண்டும். பிற்காலத்தில் இயேசுவின் எதிரிகளாக உருமாறுபவர்கள்.
12 அர்க்கெலாவுஸ் மன்னன்:
இவன் தன் தந்தை ஏரோது மன்னனைப் போல் ஒரு கொடுங்கோலன் அரக்கன். தனது அரசில் இருந்த 3000 திறமைசாலிகளைக் கொன்று குவித்தவன். இவனது அரக்கக் கைகளிலிருந்து குழந்தை இயேசுவை காப்பாற்ற யூதேயப் பகுதிக்குச் செல்லாமல் கலிலேயப் பகுதியிலுள்ள நசரேத்துக்குக் கொண்டு செல்கின்றார் விவேகமுள்ள இயேசுவின் வளர்ப்புத் தந்தை யோசேப்பு.
13 சிமியோன்:
ஆவியின் வழியில் நடந்த நேர்மையாளர். ஞானமும் அனுபவமும் கலந்து செயல்பட்ட முதிர்ச்சியடைந்த உன்னத மனிதர். மெசியாவின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்த செம்மல். மரியா, யோசேப்பைத் தவிர குழந்தை இயேசுவைத் தான் கரங்களில் தாங்கி அரவணைக்கும் பாக்கியம் பெற்றவர். புறஇனத்தார்க்கு இயேசு ஒளியாய் இருப்பார். அவரது வருகை பலருக்கு வீழ்ச்சியாகவும் மற்றும் பலருக்கு எழுச்சியாகவும் இருக்கும் என்று இறைவாக்கு உரைத்தவர். மெசியாவைத் தன் கண்களால் கண்டதால் தனது வாழ்வின் குறிக்கோள் நிறைவேறிவிட்டது. இனி என்னை இவ்வுலகினின்று போக விடும் என்று நிறை புகழ்ச்சிப் பாடலைப் பாடியவர்.
14 அன்னா:
இவள் ஓர் இறைவாக்கினள். 84 வயதாகினும் மெசியாவிற்காகக் காத்திருப்பதில் இவள் மனம் சோர்ந்து போகவில்லை. கைப்பெண்ணாயிருந்தும் கசப்புமனப்பான்மையில் தஞ்சம் புகவில்லை. "இவர் கோவிலை விட்டு நீங்காமல் நோன்பிருந்து மன்றாடி அல்லும் பகலும் திருப்பணி செய்து வந்தாள். குழந்தை இயேசுவைக் கண்டதும் கடவுளைப் புகழ்கின்றாள். குழந்தையைப் பற்றி எல்லாரிடமும் பேசி வந்தாள். முதிர்ந்த வயதிலும் நற்செய்தி அறிவிக்கும் நற்செய்தியாளராகப் பணிபுரிகின்றாள்.
15 மாசில்லாக் குழந்தைகள்:
குழந்தைப் பருவத்திலேயே, குழந்தை இயேசுவைக் காணாதிருந்தும் குழந்தை இயேசுவுக்காக இரத்தம் சிந்திய முதல் மறைசாட்சிகள் மாசில்லா குழந்தைகள். அராஜக மன்னனின் கொடுங்கோலாட்சியில் இயேசுவுக்காகப் பலியாடுகளானவர்கள். இவர்கள் இயேசுவுக்காக மட்டுமல்ல, இயேசுவிற்கு பதிலாய் தங்கள் உயிரை ஈந்தவர்கள்.
இயேசுவின் வருகை – நமக்கு –"வரவேற்பா? புறக்கணிப்பா?" சிந்திப்போம் - செயல்படுவோம்!
அருட்தந்தை தம்புராஜ் சே.ச. தியான ஆசிரமம்-சென்னை