கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் * Merry Christmas * நத்தார் வாழ்த்துக்கள்

"உங்களுக்காகப் பிறந்திருக்கிறார்."(லூக்.2:11)

"இன்று ஆண்டவராகிய மெசியாஎன்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார்" (லூக்.2:11)

1988இல் நடந்த ஒரு நிகழ்ச்சி. அமெரிக்க ஐக்கிய நாட்டின் நியூயார்க் மாகாணத்தில் ஸ்டாட்டான் ஐலண்ட் (Staten Island) எனும் இடத்தில் ஏதோ ஒரு காரணத்தால் ஒரு கோவிலைப் புழக்கத்திலிருந்து நிறுத்தியிருந்தார்கள். இதனால் அது பாழடைந்துபோய்விட்டது. அதைப்புதுப்பித்துத் திருவழிபாடு தொடங்கவேண்டுமென்று ஓர் இறைப்பணியாளருக்கு உத்தரவு வந்தது. அதிலும் கிறிஸ்து பிறப்புவிழாவன்று தொடங்கவேண்டுமென்று திட்டம்.


அவரும் சென்று அக்கோவிலைப்பார்த்துப் பழுதுபார்க்கும் வேலையைத் தொடங்கினார். தான் தங்கியிருந்த இடம் சிறிது தூரம் என்றாலும்.தவறாது இங்கு வந்து எல்லா வேலைகளையும் மேற்பார்த்து வந்தார். அவருக்கும் மகிழ்ச்சியாயிருந்தது. நாள் நெருங்க நெருங்க வேலையை முடுக்கிவிட்டு டிசம்பர் 22ஆம் தேதிக்குள் எல்லாம் தயாராகிவிட்டது. ஆனால், அன்று பலத்த மழை, பனியும் பொழியத்தொடங்கிவிட்டது. மீண்டும் பழுது ஏதேனும் ஏற்பட்டிருக்குமோ என அஞ்சி அதைப்பார்க்க வந்த இறைப்பணியாளருக்கு பயந்தபடியே நடந்திருந்ததைக் கண்டு அதிர்ச்சி.


பீடத்தை அரவணைப்பதுபோல் இருந்த "ப" வடிவ சுவற்றில் பீடத்தின் இடப்புறம் சுண்ணாம்புக்கலவை பெயர்ந்து விழுந்திருந்தது. பார்ப்பதற்குக் கண்ணை மிகவும் உறுத்தியது. கோயிலில் அமர்ந்திருப்போர் யாரும் பீடத்தைப் பார்த்தாலே அது கண்ணில்பட்டுவிடும். கடினப்பட்டுக் கீழே கிடந்த காறை, மண் எல்லாவற்றையும் அவர் அகற்றினார். இப்போது என்ன செய்வது? மீண்டும் பூச முடியாது. ஒரு பெரிய துணியாவது தொங்கவிட்டு அதை மறைக்கலாம்.


இவ்வாறு யோசித்த அவர் பெய்யும் மழையையும் பொருட்படுத்தாமல் தன் தங்குமிடப்பகுதியிலிருந்த கடைகளை நோக்கிப் போனார்.துணிக் கடைகளில் தகுந்த அளவுக்குப் பெரிதான அதே நேரத்தில் கோவிலுக்குத் தகுந்த பூ வரைந்திருந்த ஒரு துணியை அவரால் காணமுடியவில்லை. ஆனால் பழைய பொருட்கள், விரிப்புகள், துணித்துண்டுகள் விற்கும் அன்ட்டீக் ஷாப் (antique shop) கடையில் அவருக்குப் பிடித்தமான ஒரு துணியைக் கண்டார். உண்ணும் மேசைக்கான விரிப்பு போலிருந்த அத்துணியில் பின்னப்பட்ட உருவம் அகலமான ஒரு சிலுவை. அதன் நிறமும் இளம்‌ ஊதா நிறம். நீள அகலமும் கோவில் சுவரில் இடிந்த காறைப் பகுதியை மறைக்கக் கூடியது. ஆண்டவருக்கு நன்றி சொல்லி அத்துணியை வாங்கி மீண்டும் கோயிலுக்கு வாகனத்தை ஒட்டிவந்தார். கையில் கிடைத்த பொருட்களை வைத்துக் காறைப்பகுதி விழுந்திருந்த இடத்தை இத்துணியால் மறைத்தார். தூரத்திலிருந்து பார்க்கும்போது அது மிகப்பொருத்தமாகப்பட்டது. அவருக்கு நிம்மதி பெருமூச்சு. இரவு நேரமுமாகிவிட்டது. எனவே வீட்டுக்குக் கிளம்பினார்.


மறுநாள் காலை டிச. 23ஆம் தேதி மழை சிறிது குறைந்திருந்ததுபோல் தெரிந்தது. ஆனால் பனிமூட்டம் குறைந்ததாகச் சொல்ல முடியாது. தான் தொங்கவிட்ட துணி சரியாக இருக்கிறதா எனப் பார்க்கக் கோவிலுக்கு வந்தார். அத்துணி அதே இடத்தில் இன்றும் தொங்கிக்கொண்டிருந்தது. "சரியாகத்தான் இருக்கிறது, கிறிஸ்துமஸ் ஆராதனை வரை தாங்கும்" என்று உறுதி செய்துவிட்டுக் கோவில் வளாகத்தைத் தாண்டி காரில் வெளியே வரும்போது சாலை ஓரத்தில் வயது முதிர்ந்த ஒரு பெண் நின்று கொண்டிருந்தார். பேருந்து நிற்க வேண்டிய இடம் அது. ஆனால் அடுத்த பேருந்து அவ்வழியே வர இன்னும் முக்கால்மணி நேரம் பிடிக்குமே என்பதை உணர்ந்து, காரை நிறுத்தி அப்பெண்மணியிடம்‌, "பஸ்ஸுக்காகக் காத்திருக்கிறீர்களா?" எனக்கேட்டார். .


"ஆமாம். இப்போதுதான் வண்டி வந்தது. ஆனால், நான் இங்கே நின்று கொண்டிருப்பதை பஸ் திரைவர் பனிமூட்டத்தில் கவனிக்கவில்லை போலிருக்கிறது. நேரே சென்றுவிட்டார். அடுத்த பஸ் வார இன்னும் முக்கால் மணி நேரம் ஆகுமா?"


ஆமாம்மா. மழையிலேயும் குளிரிலேயும் இன்னும் முக்ககால் மணி நேரம் ஏன் நிற்கவேண்டும்? என்னோடு வாருங்கள். கோவிலில் உட்கார்ந்திருங்கள். குளிராவது குறையுமல்லவா? கோவிலுக்குள் நுழைந்த அப்பெண் ஆலயப் புதுப்பொலிவைப் பார்த்தார். பீடத்தின் பக்கம் கண் திருப்பினார். அருகில் சுவரில் தொங்கிய துணியையும் கவனித்தார். அவர் கண்கள் வியப்பால் பெரிதாயின. நேரே அத்துணி அருகே வந்தார். அத்துணியில் பின்னியிருந்த சிலுவையைக் கண்டார். அவர் பார்வை அத்துணியின் கீழ் வலது மூலைக்குச் சென்றது. வியப்பால் விரிந்த தான் வாயை கையால் பொத்திக்கொண்டார்.


இறைப்பணியாளருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. "இந்தத் துணியை ஏற்கனவே பார்த்திருக்கிறீர்களா? இந்த எழுத்துக்கள் பற்றியும்‌ ஏற்கனவே தெரியுமா?" என்றுகேட்டார். அப்பெண் தன் கதையைச் சொன்னார். "நானும் என் கணவரும் ஜெர்மெனியைச் சேர்ந்த யூதகிறிஸ்தவர்கள். என் கணவர் பிறந்த நாளுக்கு என் பெயரின் மூன்று எழுத்துக்களையும் சேர்த்து ஒரு சிலுவைபோன்ற உருவத்தையும் பின்னித் தைத்து அவருக்கு அன்பாய்க் கொடுத்த ஒரு மேசை விரிப்பு தான் இது. யூதர்களை வேரறுக்க ஹிட்லர் வீடு வீடாய்த் தேடினான். இதையறிந்த என் கணவரும் நானும் வீட்டை அப்படியே விட்டு விட்டு ஒரு கப்பலில் ஏறி இங்கே அமெரிக்காவுக்கு வர இருந்தோம். ஆனால் எப்படியோ பெண்கள் கூட்டத்தில் எனக்கு ஓரிடம் இருந்தது. ஆண்கள் பகுதியில் அவருக்கு இடமில்லை. எப்படியேனும் நான் வந்து உன்னை நியூ யார்க்கில் பார்ப்பேன். நீ தைரியமாயிரு என்று சொல்லி என் உயிரைப் பெரிதாய் எண்ணி அனுப்பிவிட்டார் என் கணவர். ஆனால் இதுவரை நான் அவரைப் பார்க்கவில்லை. ஆண்டுகளும் 50 ஓடிவிட்டன" என்றார் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே. கணவர் இல்லாத நிலையில் இக்கோயிலுக்கு அருகே ஓரிடத்தில் வீட்டுவேலை செய்து பிழைப்பதாயும் சொன்னார்.


அத்துணியின் வரலாற்றைக் கேட்ட இறைப்பணியாளர் அப்பெண்ணே அத்துணியை எடுத்துக்கொள்ளலாம் என்று சொன்னார். "வேண்டாம். என் கணவருக்கு இல்லாத துணியானாலும் கோவிலை அலங்காரம் செய்யும் அந்தஸ்து அதற்குக் கிடைத்திருக்கிறது. இங்கேயே இருப்பதுதான் நல்லது" என்று அப்பெண் கூறினார்.


கதையைக் கேட்டு உருகிவிட்ட இறைப்பணியாளர் நானே என் காரில் உங்களை உங்கள் வீட்டில் விட்டுவிடுகிறேன் என்றார். "நான் செல்ல வேண்டிய இடம் ப்ரூக்ளினில் (Brooklyn)இருக்கிறது. அதிகதூரம் இல்லையா?""பரவாயில்லை. உங்கள் துணி எனக்குக் கைகொடுத்துவிட்டதே. வாருங்கள்" என்று சொல்லிக் காரின் கதவைத் திறந்துவிட்டு அப்பெண்ணை அவரின் வீட்டுக்கே கொண்டுசென்று விட்டார் இறைப்பணியாளர். மூன்றாவது மாடியில் ஒரு சிறிய ஃப்ளாட்டில்தான் (Flat) அப்பெண் குடியிருந்தார். ஸ்டாட்டான் ஐலண்டுக்குத் திரும்பி வரும்வழி முழுவதும் அப்பெண், அத்துணி அப்பெண்ணின் கணவர்பற்றியே சிந்தனை.


24ஆம் தேதி இரவு கிறிஸ்து பிறப்பு ஆராதனைக்கு மக்கள் வந்தார்கள். புதிக்கப்பட்டுள்ள ஆலயம்பற்றி மிக மகிழ்ந்தார்கள். மழையும் பணியும் ஒத்துழைக்கவில்லையே எனச் சிறிது வருத்தப்பட்டார்கள்.


வழிபாட்டை மிகச்சிறப்பாக நடத்திவிட்டு, வந்திருந்த ஒவ்வொருவருக்கும் கிறிஸ்துபிறப்பு வாழ்த்துசொல்லிக் கைகுலுக்கி அனுப்பிவைத்த இறைப்பணியாளருக்கு வயதான ஒரேஒருவர் மட்டும் முன் வரிசை இருக்கையில் அமர்ந்து பீடத்தருக்கே சுவரில் தொங்கும் துணியையே உன்னிப்பாய்ப் பார்த்துக் கொண்டிருந்தது வியப்பாய் இருந்தது. அருகில் வந்தார். "கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள். எல்லோரும் சென்றுவிட்டார்களே. நீங்கள் போகவில்லையா?"


"போக வேண்டும்தான். இந்தத்துணி..இந்தத்துணி?" மேலே வார்த்தைகள் வரவில்லை. தொண்டை அடைத்துக்கொண்டது.


"இதைப் பார்த்திருக்கிறீர்களா?"


அம்முதியவர் தன் கதையைச் சொன்னார். முந்தின நாள் அப்பெண் கூறிய அதே கதைதான். கப்பலில் ஏற்றிவைத்த நாளிலிருந்து தான் மனைவியைப் பார்க்கவேயில்லையாம், முகவரியும் தெரியாதாம்.


இவர் தான் அப்பெண்ணின் கணவர் என்பதை உணர்ந்த இறைப்பணியாளர் "தயவுசெய்து என்னோடு வாருங்கள். சிறிது தொலைவிலிருக்கும் ஓரிடத்துக்கு உங்களைக் கூட்டிச்செல்கிறேன் என்று கூறி ஸ்டாட்டான் ஐலண்டீலிருந்து ப்ரூக்லினுக்கு அம்முதியவருடன் காரைச் செலுத்தினார். அதே தெரு, அதே அடுக்குமாடிக் குடியிருப்பு, மூன்றாம் மாடி. அதே அபார்ட்மெண்ட். கதவைத் தட்டினார் இறைப்பணியாளர். கதவைத் திறந்த அப்பெண் மெரி கிறிஸ்த்மஸ் (Merry Christmas)என்று சொல்லிக்கொண்டே அவரை வரவேற்க முற்படும்போது அருகே –ஆமாம், அவர் கணவரை – பல ஆண்டுகளாகப் பார்க்க முடியாத கணவரைப் பார்க்கிறார். இருவரும் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவிக் கண்ணீர் வடிக்கிறார்கள். அதுவரை அத்தகைய ஒரு பாசச் சந்திப்பை அவ்விறைப்பணியாளர் கண்டதேயில்லை. நன்றிமேல் நன்றி சொன்ன அவ்விருவருக்கும் வாழ்த்தும் வணக்கமும் கூறி விடைபெறுவது கடினமாயிருந்தது.


கிறிஸ்து பிறப்பு விழாவுக்காக அக்கோவிலை ஆயத்தம் செய்தார் இறைப்பணியாளர். மழையையும் மூடுபனியையும் கொடுத்துச் சோதித்தார் பிறக்கவிருக்கும் குழந்தை இயேசு. கிறிஸ்துமஸ் வரும்நாளில் அப்பெண் கோவிலுக்குத் தற்செயலாக வந்தார். பிறக்கும் குழந்தை இயேசுவை வழிபட அங்கு அம்முதியவர் வந்தார். ஆனால், குழந்தைஇயேசு இவர்களுக்கு ஆசீர்வாதத்தின்மேல் ஆசீர்வாதத்தைப் பொழிந்தார். தான் பிஞ்சுக் கைகளை ஆட்டிக்கொண்டே பவள வாய் திறந்து நமக்குக் கூறும் மொழி: (மத்தேயு நற்செய்தி, 6ஆம் அதிகாரம்,33ஆம் வசனம்) "அனைத்திற்கும் மேலாக இறைவனின் ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுங்கள். அப்போது இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்.


"உங்களுக்காகப் பிறந்திருக்கிறார்."(லூக்.2:11)

merry xmas
அருட்தந்தை சேவியர் ராஜன் சே.ச. தூத்துக்குடி
«-- back