கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் * Merry Christmas * நத்தார் வாழ்த்துக்கள்

இயேசு கிறிஸ்து நமக்குள் பிறக்க வேண்டும்.


அன்புக்குரியவர்களே!
2013 ஆண்டுகளுக்கு முன் இயேசு கிறிஸ்து பாலகனாய் பெத்லகேமில் மாட்டுத் தொழுவத்திலே பிறந்தார். அன்று மட்டும் அல்ல, இன்றும் நம் ஒவ்வொருவரின் உள்ளத்தில் இயேசு பிறக்க ஆவலாய் உள்ளார். மாற்கு 3:13-ன்படி இயேசு தாம் விரும்பியவர்கள் தன்னோடு இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். ஆனால் நாம் யாரோடு இருக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறோம்? அதிகமான நேரம் நாம் உலகத்தோடு (நண்பர்கள், குடும்பம், தொலைக்காட்சி, தொலைபேசி, களியாட்டங்கள்) இணைந்திருக்கத்தான் விரும்புகின்றோம். திருவெளிப்பாடு 3:20-ல் "இதோ கதவு அருகில் நின்ற தட்டிக்கொண்டிருக்கிறேன். யாராவது என் குரலைக் கேட்டு கதவைத் திறந்தால் நான் உள்ளே சென்று அவர்களோடு உணவு அருந்துவேன். அவர்களும் என்னோடு உணவு அருந்துவார்கள்" என்று இயேசு ஆசையாய் நம்மோடு இணைந்து வாழ வருகிறார். ஆனால் ஆண்டவர் தட்டும் சத்தத்திற்கு நாம் எவ்வளவு உன்னிப்பாய் செவி கொடுக்கிறோம். இவ்வுலகத்தைச் சார்ந்த எல்லா குரல்களும் நம் காதில் வந்து விழுகிறது. ஆனால் ஆண்டவரது குரலோ நம் காதில் விழுவதில்லை.


எப்போது ஆண்டவர் நமக்குள் பிறக்க முடியும்? நான் எப்பொழுது அவரது குரலுக்கு செவி சாய்க்கின்றோமோ, அப்பொழுது தான் அவர் நம்மில் பிறக்கின்றார். நாம் வீட்டில் உள்ளவர்களை நேசிக்கும்பொழுது ஆண்டவர் எனக்குள் பிறக்கின்றார். நான் எனக்கு எதிராய் துரோகம் செய்தவர்கள், என்னை ஏமாற்றியவர்களை மன்னிக்கும்போது இயேசு என்னில் பிறக்கின்றார். பசியால் வாடுபவர்களுக்கு உணவு கொடுக்கும்போது, ஆடையில்லாதிருப்பவர்களை உடுத்தும் போது, தேவையில் இருப்பவர்களைக் கண்டு அவர்களுக்கு உதவும் பொழுது, முதிய வயதுடைய பெற்றோர்களையும் பெரியவர்களையும் நாம் மதித்து, அன்பு காட்டும்பொழுது, ஊனமுற்றவர்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளைச் செய்யும் பொழுது நாம் இயேசுவை நம் உள்ளத்தில் பிறக்கச் செய்கின்றோம்.


அன்னை கன்னிமரியாளும் இறைவனின் சித்தத்திற்கு கீழ்ப்படிந்து இயேசுவை தம் உதரத்தில் பிறக்க வைக்க ஒப்புக்கொண்டார். நாமும் கடவுளின் திருவுளப்படி நடக்க நம்மை ஒப்புக்கொடுக்கின்றோமா? நாம் கிறிஸ்து பிறப்பு விழாவை எப்படி கொண்டாடுகிறோம்? கொண்டாட்டங்களிலும், வெளி ஆடம்பரங்களிலும், உணவு பரிமாற்றத்திலும், மனிதர்களை பிரியப்படுத்துவதிலும் நாம் கவனம் செலுத்துகிறோமா? அப்படி நாம் உலகப்பிரகாரமான தயாரிப்புகளை மட்டுமே செய்து கொண்டிருந்தால், அது உண்மையான கிறிஸ்து பிறப்பு விழா அல்ல. நாம் நம் வீடுகளில் குடில்களை தயாரிக்கிறோம். நம் இதயத்தில் குடில் கட்டுகிறோமா? அதில் இயேசுவை குடியிருக்க அழைக்கிறோமா? நம் இதயக்குடிலில் வந்து தங்க இயேசு ஆசையாய் இருக்கிறார். அவரை வரவேற்க நாம் தயாரா?


எளிய மனத்தோர் பேறுபெற்றோர். ஏனெனில் விணணனரசு அவர்களதே என்று இயேசு மொழிந்தார், அவர் தம் சொல்லில் மட்டுமல்ல. தம் வாழ்விலும் அதை வாழ்ந்து காட்டினார். இவர் பெரிய அரண்மனையிலோ, உயர்ந்த வசதியான இடத்திலோ பிறக்கவில்லை. மாறாக மிருகங்கள் வாழக்கூடிய ஒரு எளிமையான மாட்டுத் தொழுவத்திலே பிறந்தார். ஆனால் இன்றைய காலகட்டத்தில் எளிமையான வாழ்க்கை என்பது யாராலும் நினைத்துப் பார்க்கமுடியாத ஒன்றாகிவிட்டது. எங்கும் ஆடம்பரம், எதிலும் பெருமை. பிறர்முன் உயர்ந்தவர்களாகவே காட்டிக் கொள்ள ஆசைப்படுகிறோம். "மனிதர் முன் தங்களை நேர்மையாளர்களாக காட்டிக்கொள்வது, ஆண்டவர் பார்வையில் அருவருப்பானது." (லூக்கா 16:15) என்று இயேசு கூறுகிறார். இயேசு விரும்பும் எளிமையை நாம் வெறுக்கிறோம். கிறிஸ்து பிறப்பு விழா என்பது மனிதர்களை பிரியப்படுத்தும் பெருமையில் அல்ல. மாறாக ஆண்டவரைப் பிரியப்படுத்தும் எளிமையிலே அடங்கி உள்ளது. ஆகவே கிறிஸ்து பிறப்பு விழாவை எளியவர்களோடு, நம்மை எளிமையாக்கி, எளிமையான முறையிலே கொண்டாடுவோமென்றால் கிறிஸ்து இயேசு உண்மையாக உறுதியாக நம் உள்ளங்களிலே வந்து பிறப்பார்.

மேரி கிறிஸ்டோபர்-சென்னை 24
«-- back