கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் * Merry Christmas * நத்தார் வாழ்த்துக்கள்

உண்மையா! அது என்ன? ஒரு தேடல்.

நம் வாழ்க்கையின் பல சந்தர்ப்பங்களின் நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டிய முக்கியமான கேள்வி இது! நீதி இருக்கையில் அமர்ந்து, வழக்குகளை விசாரணை செய்து மக்களுக்கு நீதி தீர்ப்பு வழங்கும் மிகப் பெரிய பொறுப்பை வகித்த பிலாத்து, இயேசுவைப் பார்த்துக் கேட்கிறான்.

"உண்மையா! அது என்ன? " பொதுமக்களுக்கும், சீடர்களுக்கும், பலரும் இயேசுவிடம் கேள்விகள் கேட்ட பொழுது, உவமைகளோடும், உவமானங்களோடும் விளக்கம் கூறிவந்த இயேசு பிலாத்துவின் இந்தக் கேள்விக்குப் பதில் கூறியதாக விவிலியத்தில் நாம் காண்பதில்லை!


"உண்மையா! அது என்ன?" இந்த கேள்வி மதம் சார்ந்த, உளம்சார்ந்த, ஆன்மீகமான, தத்துவரீதியான கேள்வியாகக் கருதப்படும் வேளையில் ஒரு சமூகத்தின் பார்வையில், சமூகரீதியாக, இக்கேள்விக்குப் பதில் தேட என்னோடு சேர்ந்த உங்களையும் அழைக்கிறேன்.


நான் சிறுமியாக இருந்தபொழுது கேட்ட கதை ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது. குருடர்கள் ஐந்து பேர் யானை எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள யானையைத் தடவிப் பார்க்கின்றனர். காலைத் தடவியவன் 'யானைப் பெரியத்தூண்' போல் இருக்கும் என்றும் காதைத் தடவியவன் 'யானை பெரிய முறம்' போல் இருக்கும் என்றும், ஐந்து பேரும் தங்கள் தொட்டு உணர்ந்த அனுபவத்தின் வாயிலாக யானைக்கு வடிவம் தந்தனர். அதையே உண்மை என்றும் நம்பினர். சிறுமியாக இருந்தப்பொழுது இந்தக் கதையைக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்திருக்கின்றேன். வாழ்க்கையின் பல வடிவங்களைத் தாண்டி, பல அனுபவங்களை உணர்ந்து உண்மையைத் தேடும் இவ்வேளையில் இதே கதை உதட்டின் ஓரத்தில் ஒரு புன்முறுவலின் கீறலைக் கூட உண்டாக்கவில்லை. மாறாக கதையின் கருப்பொருளின் வீரியம், உள்ளத்தின் ஆழத்தில் போட்ட கீறலினால் மெலிதான வலியைத் தான் உணரமுடிகிறது.


இந்த ஐந்துக் குருடரோடு ஒரு சமூகம் அல்லது ஒரு குழுவை நான் ஒப்பிட்டுப் பார்க்கிறேன். ஒவ்வொருவரும் தங்களின் சொந்த அனுபவம், உணர்வு, வளர்ந்து வந்த சூழல், கடைப்பிடித்து வந்த மதீப்பீடுகள் இவற்றை மையமாக வைத்து ஒரு செயலை அல்லது கருத்தை சரி என்றும், உண்மை என்றும் நம்புகின்றனர். ஆனால் உண்மையை அறிய தராசுத்தட்டில் நாம் வைக்கும் எடைக் கற்களாகிய அனுபவம், உணர்வு, சூழல், மதிப்பீடுகள் இவை குழுவில் இருக்கும் ஒருவருக்கொருவர் மாறுபட்டுவதால் ஒருவருக்கு சரி என்றும், உண்மை என்றும் தோன்றுவது மற்றவருக்கு சரி என்றும், உண்மை என்றும் தோன்றுவதில்லை.


merry xmasகாலைத் தொட்டு உணர்ந்தவன் யானை 'தூண்' போல் இருக்கும் என்று சொன்னது உண்மையே! அது போலவே காதைத் தொட்டு உணர்ந்தவன் யானை 'முறம்' போல் இருக்கும் என்று சொன்னதும் உண்மையே! ஆனால் யானையைக் கண்ணால் பார்த்த பார்வையுடைய ஒருவனுக்கு – ஒரு குருடனின் அனுபவம் மட்டும் யானையின் முழு வடிவத்தைத் தருவதில்லை. மாறாக ஐவரின் அனுபவத்தையும் சேர்த்தால் மட்டுமே யானை முழு வடிவம் பெறும் என்ற உண்மை புரிகிறது.


இந்த புரிதலை ஏற்றுக் கொள்ளாமல் தங்களின் அனுபவத்தை மட்டுமே வைத்து யானை தூண் தான், யானை முறம் என்று வாதம் செய்யும் பொழுது, ஐவரும் பிறரின் கண்களுக்கு கேலிப் பொருளாகி விடுகின்றனர்.


ஒரு சமூகம் அல்லது சமூகம் சார்ந்த ஒவ்வொருவரின் அனுபவங்களும், உணர்வுகளும், மதிப்பீடுகளும், சூழலும் உண்மையே! ஆனால் ஒரு தனிப்பட்டவரின் இந்த எடைக்கற்கள் மட்டும் ஒரு செயலுக்கு சரியான, முழுமையான மதிப்பை தர இயலாது என்பதை குருடர் யானைக் கதை தெளிவாக்குகிறது.


அப்படியானால் உண்மையை எப்படித் தான் தெரிந்துக் கொள்வது? உண்மையை நாம் தேடிச் செல்ல வேண்டும் . நாம் ஒரு பொருளைத் தேடினால் அப்பொருள் எப்படியாக இருக்கும் என்று அந்தப் பொருளின் பிம்பம், நம் மனத்திரையில் இருந்தால் மட்டுமே நாம் தேடும் பொருளை கண்டடைவோம் அல்லது பிலாத்துவைப் போல கண்ணிருந்தும் குருடராய்த் தான் இருப்போம். "நானே உண்மையும் உயிரும் வழியும்" என்று வெளிப்படையாக கூறிவந்த இயேசுவைப் பற்றி பிலாத்து அறிந்திருக்கவில்லை. அவரைத் தேடியது இல்லை. அதனாலேயே கண்ணுக்கு முன்பாக இருந்தும் அவனால் காணமுடியவில்லை.


உண்மை என்பது நாம் கண்ணால் காண்பதும் இல்லை. காதால் கேட்பதும் இல்லை. நம் முன்னோர் எத்துணை அழகாகச் சொல்லிச் சென்றனர்.


"கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய். தீர விசாரிப்பதே மெய்."


ஒவ்வொருவரும் தங்கள் மனக்கதவுகளைத் திறந்து, எப்படி தனது அனுபவமும், மதிப்பீடுகளும், சூழ்நிலைகளும், உணர்வுகளும் உண்மையோ, அதுபோலவே சக மனிதனுடையவையும் உண்மையே என்ற புரிதலை புத்தி ஏற்கின்றதோ, அப்பொழுது தான் ஒரு செயல் முழு வடிவம் பெறும்.


முரண்பாடுகள் நிறைந்தது தான் வாழக்கை. ஒரு மனிதனுக்கும் சக மனிதனுக்கும் இடையே முரண்பாடு! ஒரு குழுவிற்கும் மற்ற குழுவிற்குமிடையே முரண்பாடு! ஏன் ஒரே மனிதனுக்குள்ளேயே முரண்பாடு – சிறுமியாக இருந்தபொழுது சிரிப்பை உண்டாக்கிய கதை வளர்ந்த பெண்ணில் வலியை உண்டாக்குகிறது. – உணர்வுகள் சிரிப்பும் வலியும் முரண்பட்டது தான். ஆனால் அது தான் இயற்கை! முரண்பாடுகள், மாறுபாடுகள், வேறுபாடுகள் என்ற இத்தனை பாடுகளுக்கு இடையிலும் ஒற்றுமையிலும், சமாதானத்திலும், அன்பிலும் வாழவே நாம் அழைக்கப் பட்டிருக்கின்றோம்.


நான் எங்கோ கேட்டிருக்கின்றேன். "உண்மை என்பது ஒரு இலக்கு அல்ல, மாறாக நாம் தேடுகின்ற பயணம்." இப்பயணத்தில் நாம் தேடுகின்ற பொருளை அறிந்திருக்க வேண்டும். பயணத்திற்கான பாதையை அறிந்திருக்க வேண்டும். பயணம் மேற்கொள்ள நமக்கு உயிர் வேண்டும். ஆகவே தான் இயேசு சொன்னார்.


"நானே உண்மையும், வழியும், உயிரும்".


பாலன் இயேசுவின் பிறப்பிற்கு, அவரது வருகைக்கு நம்மைத் தயாரிக்கும் வேளையில் "எதற்காக நான் இவ்வுலகிற்க்கு வந்தேன்" என்று இயேசுவே கூறும் உயிருள்ள வார்த்தைகள் நம் தேடலுக்கு நிறைவு தரும்.


	
	"உண்மையை எடுத்துரைப்பதே என் பணி! 
	இதற்காகவே நான் பிறந்தேன். 
	இதற்காகவே உலகிற்கு வந்தேன். 
	உண்மையைச் சார்ந்தவர் அனைவருக்கும் 
	என் குரலுக்குச் செவிசாய்க்கின்றனர்."
	யோவான் நற்செய்தி 18:37 
merry xmas
திருமதி.நிர்மலா அல்போன்ஸ்- மெல்போன் ஆஸ்திரேலியா
«-- back