கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் * Merry Christmas * நத்தார் வாழ்த்துக்கள்இன்று இயேசு ஏன் பிறக்கவேண்டும்?

கிறிஸ்து பிறப்பு விழா வரப்போகிறது. அதிலும் விடுமுறை நாட்கள் வரப்போகிறது என்று எண்ணம் தான் அதிக மகிழ்ச்சியை தருகிறது. விழாக்காலம், விருந்து நாட்கள், புதுப்புது தொலைக்காட்சி நிகழ்வுகள், புதிய வகை ஆடைகள் இவற்றை தானே கிறிஸ்துமஸ் நமக்கு கொண்டு வரும். இப்படித்தானே நம் உணர்வுகளின் ஓட்டம் உள்ளது .


உண்மையில் நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது? நம் அனைவரின் உண்மை உணர்வு தான் என்ன? யோசித்துப் பாருங்கள். பரபரப்பான வாழ்க்கை. ஓய்வு இல்லாத வாழ்க்கை. ஒரே நேரத்தில் பற்பல வேலைகள், சமைக்க நேரமில்லை, என்ன சாப்பிடுகிறோம் என்பது நினைவிலும் இல்லை. வேலைகளை முடிக்க வேண்டுமே என்ற பரபரப்பு! வானொலி கேட்டுக் கொண்டே பயணம் செய்கிறோம். தொலைகாட்சி பார்த்துக்கொண்டே பயணம் செய்கிறோம். தொலைக்காட்சி பார்த்துக் கொண்டே சாப்பிடுகிறோம். திரையில் தெரிந்தவருடன் பேசிக் கொண்டே, மின்னஞ்சலுக்கு பதில் பண்ணுகிறோம், தொலைபேசி அழைப்பை ஏற்று பேசுகிறோம். நேரமில்லை. உடகார்ந்து கொண்ட தூங்குகிறோம். ஆனால், இரவில் படுத்தாலும் தூக்கம் வருவதில்லை. தூக்கம் வந்தாலும் நிம்மதியாக தூங்க முடிவதில்லை. பல்வேறு சிந்தனைகள் வேலைப்பளுக்கள் கவலைகள் எதிர்கால எதிர்பார்ப்புகள்… இப்படி எத்தனையோ? விளைவு? உடலுக்கும் , மனதுக்கும் ஒய்வு இல்லை. மனதும் உடலும் பாதிக்கப்படுகிறது. எல்லோர் மனதிலும் கவலை, துக்கம், பயம், குற்ற உணர்வுகள், வெறுப்புகள் பெரும் சுமையாய் …. சுமக்க முடியாத சுமையாய்…


உடலும் ஒத்துழைப்பிதில்லை, ஒழுங்கின்றி ஆக்கப்பட்டுவிட்டது. எல்லாவற்றையும் சாப்பிட முடிவதில்லை. சாப்பிடும் அனைத்தையும் உடல் ஏற்றுக் கொள்வதும் இல்லை. மருந்தும் மாத்திரைகளும் உணவை விட முக்கிய இடம் பிடித்துவிட்டன. எல்லா இடமும் பல் நோக்கு சிறப்பு மருத்துவமனைகள். எல்லா உறுப்புகளிலும் நோய். ஒவ்வொரு உறுப்புக்கும் மருத்துவம் பார்க்கவென தனித்தனி சிறப்பு மருத்துவர்கள், மருத்துவமனைகள். இவற்றிற்கு நாங்கள் சற்றும் இளைத்தவர்கள் அல்ல எனச் சொல்லி கொண்டு ஒவ்வொரு வீதியிலும் ஒரு மனவளக்கலை மன்றங்கள், யோகா மையங்கள், உடற்பயிற்சி நிலையங்கள். இவை போதாதென்று ஆங்காங்கே அழகு நிலையங்களும் புற்றீசல் போல முளைத்துவிட்டன.


மக்களிடையே இப்பொழுதெல்லாம் விழிப்புணர்வு அதிகமாகிவிட்டது. மனநலம் கெடும்போது உடல் நலனும் கெடுகிறது என்பதை புரிந்து கொண்டுள்ளனர். மனநல மருத்துவரிடம் முன் பதிவு செய்துக் கொண்டு காத்திருக்கின்றனர். ஆற்றுப்படுத்துனரை சந்திக்கின்றனர்.


மற்றொரும் பக்கம் பார்த்தால் தற்கொலைகளும், கொலைகளும் அதிகமாகிவிட்டது. வன்முறை பெருகிவிட்டது. பாலியல் வன்கொடுமைகளும் பெருகிவிட்டன. சமூகத்தில் யாருக்கும் பாதுகாப்பில்லை. இதற்கு என்ன காரணம்? “மக்களின் மனம் கெட்டுவிட்டது” இதை ஊடகங்கள் தொண்டை கிழிய கத்திக்கொண்டே, மனங்களை கெடுத்துக் கொண்டே இருக்கிறது. இன்று , இந்த சூழலில் கிறிஸ்து ஏன் பிறக்க வேண்டும்? விருந்து கொண்டாடி, விடுமுறையில் மகிழாவா?


கிறிஸ்து "இம்மானுவேலாக" பிறந்தார். கிறிஸ்து நம்மோடு இருக்கவே பிறந்தார். அதற்காகத் தான் கடவுள் நம்மை தம் சாயலாகவும், பாவனையாகவும் படைத்தார்(சீராக் 17:3). கிறிஸ்து நம்மோடு இருந்தால், நம்முடன் இருக்க நாம் அனுமதித்தால், நாம் பூரண அழகு உள்ளவர்களாக இருப்போம். அழகு நிலையங்கள் தேவை இல்லை. கிறிஸ்து நம் பக்கம் இருக்கும் போது யாருக்கு நாம் அஞ்சவேண்டும், யாருக்கு நாம் அஞ்சி நடுங்க வேண்டும்?(திருபா 27:1) கிறிஸ்து நம்முடன் இருக்கும்போது, நம்மை எல்லாவித அச்சத்தினின்றும் விடுவிக்கிறார். (திருபா 34:4) கிறிஸ்து நம்முடன் இருப்பதால், நம் சார்பில் இருப்பதால், எதுவும் எவரும் நமக்கு எதிராக இருக்க முடியாது(உரோ 8:31). ஏனெனில் நம் வலுவற்ற நிலையில் நம்மால் இதை செய்ய முடியாது என நாம் எண்ணும் சூழலில், கிறிஸ்து நமக்கு வலுவூட்டுவதால், அவரின் துணைகொண்டு எதையும் செய்ய நமக்கு ஆற்றல் உண்டு (பிலி 4:13)


கிறிஸ்துவே நம் சார்பில் செயலாற்றுகிறார்.(திருபா 37:8) கிறிஸ்துவின் துணைகொண்டு நாம் குற்ற உணர்வு, கவலை, பயம், தற்கொலை உணர்வு, தனிமை, ஏமாற்றம், கைவிடப்பட்ட நிலை, மன்னிக்க முடியாத மனநிலை வெறுப்பு வைராக்கியம் ஆகிய அனைத்து மன அழுத்த உணர்வுகளையும் நிலைகளையும் நாம் வெற்றி மேல் வெற்றி அடைய முடியும். (உரோ 8:37). ஏனெனில், மேற்கண்ட மனஅழுத்த உணர்வுகளே அனைத்து மனநோய்களுக்கும், உடல்நோய்களுக்கும் அடிப்படைக் காரணங்கள் என்பது உலக சுகாதார நிறுவன ஆய்வேடுகளில் காட்டப்படும் நிதர்சனம்.


எனவே நம்மோடு இருக்க, நமக்காக போராட, நம் சுமைகளை வாங்கிக் கொள்ள, நம் கவலைகளை இறக்கிவைக்க, நம் நோய்களை குணமாக்க இந்த உலகமும் அதன் பரபரப்பும், மருத்துவரும், உளநல ஆலோசகரும், மருந்துகளும் தர முடியாத, விடுமுறைகளும் விருந்தாடல்களும் கொண்டாட்டங்களும் தரமுடியாத சமாதானத்தை தர இயேசு இன்று நம்மிடம் பிறக்க வேண்டும். அனுமதிப்போமா? நம் அனுமதி ஏன் கிறிஸ்துக்கு வேண்டும். ஏனெனில் நம் விருப்புரிமையின்படி செயல்பட நம்மை விட்டுவிட்டார். அவரை ஏற்று நடப்பது நமது விருப்பத்தை பொறுத்தது(சீராக் 15:14-15). நாம் படைப்புகள், அவர் படைத்தவர் என்பதை மறந்து நம் வாசல்படியில் நின்று நம் கதவை தட்டுகிறார்.


ஏனெனில், அன்பே கடவுள்.

merry xmas
திருமதி. ஜெபா அலங்காரம் -திருச்சி.