கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் * Merry Christmas * நத்தார் வாழ்த்துக்கள்



கிறிஸ்துமஸ் கொடை-சிறுகதை

"வசந்த் டேய் வசந்த் மணி ஆறாச்சு படிக்க வாடா. விளையாண்டது போதும். அம்மா கூப்பிடுறாங்க" என்றான் ஜேம்ஸ்.


"அண்ணே ஒரு பத்து நிமிசம் இது தான் லாஸ்ட் கேம் பீளிஸ் அண்ணா"


"எனக்குத் தெரியாது அம்மா திட்டுனா வாங்கிக்கோ"


"சே", என பேட்டை தூக்கி போட்டு விட்டு வீட்டை நோக்கி நடந்தான் வசந்த் "ஜேம்ஸ் எவ்ளோ நேரம் கூப்பிடுறான்? உடனே வந்தா என்ன? எத்தனை தடவ சொல்லியிருக்கேன் 6மணி ஆன படிக்க வரண்ம்னு? போய் கைகால கழுவிட்டு படிக்க வா" என்றாள் அம்மா.
"இது என்ன Schoolஆ ஆறுமணியானா பெல் அடிச்ச மாதிரி வீட்டுக்கு வரணும்னு" என முணுமுணுக்க.
"அங்க என்ன முணங்கிட்டு நிக்ற" என அம்மா கேட்க ஒண்ணுமில்ல என்று கூறி பாத்ரூம் கதவ ஓங்கி சாத்தினான்.
"இப்படியெல்லாம் கோபப்படுறது தப்பு வசந்த் சீக்கிரமா கழுவிட்டு வெளியில வா" என்றாள் அம்மா.
வெளியில் வந்த வசந்திடம் "டேபிள்ல பால் வச்சிருக்கேன் குடிச்சிட்டு ஹோம்வொர்க் பண்ணு, இப்ப வர்றேன்" என்றாள் அம்மா.
டயரி எடுத்துப் பார்த்துவிட்டு "அம்மா முதல்ல நான் கணக்கு செய்றேன். அப்புறமா மத்தத படிக்கிறேன்" என்றான் வசந்த் "சரி தப்புஇல்லாம செய். கவனமா செய் அடுப்புல வேல முடிச்சிட்டு வர்றேன்"


"ஏய் இனியா பென்சில் தாடி. கணக்கு செய்துட்டு திருப்பித் தாறேன்"
"ஏன் உன் பென்சில் எங்க?" என்றாள் இனியா.
"அது தொலைஞ்சு போச்சுடி அம்மாகிட்ட சொல்லிறாத. செய்துட்டு தர்றேன்" என்று கூறி அவள் டப்பாவை திறந்து வசந்த் எடுக்க இனியா "அம்மா அண்ணா என் பென்சில் எடுக்கிறான். போடா நான் தர மாட்டேன்" என்றாள். நறுக்கென்று இனியா தலையில் குட்டு வைக்க இனியா ஓவென அழ ஆரம்பிக்க
"என்னடா பண்ணின? நேத்துதானே உனக்கும் புது பென்சில் குடுத்தேன்? மூணாங்கிளாஸ் படிக்கிற இந்த சின்ன பொண்ணு பத்திரமா வச்சுருக்கா எங்க போச்சு உன் பென்சில்?" "கிளாஸ்ல தாம்மா வச்சுட்டுப் போனேன் வந்து பார்த்தா காணோம்மா"


"ஆமா நீ எங்கேயாவது விளையாடப் போகையில் தொலைச்சிருப்ப. அதுக்கு ஏன் மத்த பிள்ளைங்க மேல பழிசுமத்துற? எதிலேயும் கவனமே கிடையாது. டேய் ஜேம்ஸ் செல்ஃபிலிருந்து பென்சில் ஒண்ணு எடுத்துக் கொடு. இதையாவது பத்திரமா வைச்சுக்க. இனியா வா சாப்பாடு ஊட்டிவிடுறேன். வசந்த் கவனமா கணக்கு செய். சாப்பாடு கொடுத்துட்டு வர்றேன்" அரைமணி கழித்து வந்த அம்மா வசந்திடம் "கணக்கு செய்தத காண்பி" என்றாள். வசந்த் காட்ட "வெரிகுட் கரைக்டா செய்திருக்கியே அடுத்து என்ன ஹொம்வொர்க் கொடுத்திருக்காங்க டயரி எடுத்துத் தா" என்றான்.


வசந்த் தயங்கிக் கொண்டே டயரியைக் காட்ட "என்ன வசந்த் நாளை தலைமையாசிரியை சந்திக்கவும் போட்டிருக்காங்க. எதுக்கு வரச் சொல்லியிருக்காங்க ஏதும் தப்பு பண்ணினியா?" "ஆமாம்மா அவனும் இன்னொருத்தனும் கிரவுண்டுல கட்டி உருண்டு சண்டை போட்டாங்களாம். அதுக்குத் தான் HM உங்கள பார்க்க வர்றச் சொல்லியிருக்காங்க" என்றான் ஜேம்ஸ். ஏண்டா இப்படி உயிர வாங்குற? இந்த இரண்டு பிள்ளைகளும் உன்கூடத்தானே பள்ளிக்கூடம் வர்றாங்க.


ஏதாவது அவங்களப்பத்தி கம்ளெயிண்ட் வருதா? சேட்டை சேட்டைன்னு சொல்லி அம்மா வசந்த்யை அடிக்க ஜேம்ஸ் "விடுங்கம்மா பிளிஸ் விடுங்க. ஏதோ கோபத்துல சண்டை போட்டுட்டாங்க சரி விடுங்க" என்று கூறி வசந்தயை தன் பக்கம் இழுத்துக் கொண்டான். "இந்த தடவ உங்க அப்பா கிறிஸ்மஸ்க்கு வர்றப்போ அடுத்து வெளிநாடு போகவேண்டாம்னு சொல்லியிருவேன் உன்னைய எல்லாம் வச்சு என்னால சமாளிக்க முடியாதுடா. ஒவ்வொரு முறையும் HM கிட்ட தலைகுனிஞ்சு நிக்குற மாதிரி இருக்குது" என்றாள் அம்மா.


அழுதுகொண்டுருந்த வசந்திடம் ஜேம்ஸ் சமாதானப்படுத்தினான். "அழாதேடா நீ சேட்டை செய்யப் போய்தானே அம்மாவுக்கு கோபம் வர்து வா சாப்பிடலாம்" என்றான். "ஒண்ணும் வேண்டாம். போடா அம்மாகிட்ட போட்டுக் கொடுத்துட்டு எங்கிட்ட வந்து பேசுறியாக்கும்? எனக்கு சாப்பாடும் வேண்டாம் ஒண்ணும் வேண்டாம்" என்றான். "சாப்பிடாம படுக்கக் கூடாது. வா வசந்த் சாப்பிட்டுப் படு" என்றாள் அம்மா.


"உங்களுக்கு என்னைய கண்டாலே பிடிக்கல. அண்ணாவும் இனியாவும் தான் உங்களுக்குப் பிடிக்கும். அடிக்கிறதையும் அடிச்சுட்டு இப்ப என்ன பாசம் பொங்குது. எப்பதான் இந்த அப்பா வருவாங்கன்னு இருக்கு. எனக்கு சாப்பாடு ஒண்ணும் வேண்டாம் போங்க" கோபமாக கூறிவிட்டு படுத்துக் கொண்டான்.


டிசம்பர் 22


"அம்மா அப்பா எத்தன மணிக்கு வருவாங்க?" என்றான் வசந்த். "நீ ஸ்கூல்ல இருந்து வர்றப்போ அப்பா வீட்டில இருப்பாங்க வசந்த்" "அய்யா சாயங்காலம் நம்ம அப்பாவ பார்க்கலாம்டி இனியா. அம்மா அப்பாக்கிட்ட பேட் வாங்கிட்டு வர்றச் சொன்னேன். ஜேம்ஸ் அண்ணா பேட்கேட்டா கொடுத்துறாதீங்க" என்றான் வசந்த். "சரிடா சரிடா நீ கேட்டது உனக்குத்தான் சரியா? போ கடைசி பரீட்சையை அப்பாவ பார்க்கப்போற சந்தோசத்துல சரியா எழுதாம வந்துராத சரியா?" என்றாள் "சரிம்மா பை பை" எனக் கூறிவிட்டுச் சென்றான்.


அன்று மாலை மூவரும் வீடு திரும்பியபோது அம்மா அப்பா வந்துட்டாங்களா? என மூவரும் கேட்க "பசங்களா அப்பா நாளைக்குத்தான் வர்றாங்களாம்" என்றாள் அம்மா சோகமாக. மூவரும் வருத்தமாக அப்படியே சோபாவில் உட்கார "சே எவ்வளவு ஆசையா அப்பாவ பார்க்கலாம்னு நினைச்சேன்" என்று வசந்த் கூறிமுடிக்க பெட்ரூம்லிருந்து Jingle Bells பாட்டு ஒலிக்க கிறிஸ்துமஸ் தாத்தா ஆடிக்கிட்டே வரவும் ஏய் அப்பா என்று கூறி மூவரும் அப்பாவை கட்டிப்பிடிக்க, ஒவ்வொருத்தரையும் தூக்கி முத்தமிட்டு அவர்களுக்கு வாங்கி வந்த பொருட்களைக் கொடுக்க அன்று இரவு 11 மணி வரை சந்தோச வெள்ளம் கரை புரண்டோடியது. "அப்பா நீங்க இனிமே வெளிநாட்டுக்கு வேலைக்குப் போக வேண்டாம். எங்களோடவே இருந்துருங்க" என் ஜேம்ஸ் கூற இனியாவும் வசந்த்தும் சேர்ந்து கொண்டனர். "சரி பசங்களா யோசிப்போம். இப்பப் போய் படுக்கலாம் வாங்க" என்றார் அப்பா.


டிசம்பர் 23


வசந்த் அப்பா வாங்கி வந்த பேட்டைத் தூக்கி கொண்டு வெளியே போக "டேய் வசந்த், குடில் ஜோடிக்க வேணாம்மா? விளையாடப் போற?" என்று அப்பா கேட்க, "அப்பா பிளீஸ்ப்பா என் நண்பர்கள்கிட்ட பேட்டை காண்பிச்சு நான் ஒரு விளையாட்டு விளையாண்டுட்டு வர்றேன். கை துரு துரு இருக்குப்பா" என்றான் வசந்த். அப்பாவும் சிரித்துக் கொண்டே "சரி நீ போய் விளையாடு" என்றான். அம்மா அப்பா இனியா ஜேம்ஸ் நால்வரும் குடில் ஜோடனையில் ஈடுபட்டனர். திடீரென "ஜேம்ஸ் அண்ணா ஜேம்ஸ் அண்ணா" என பசங்க பதறிக் கொண்டு கத்த ஜேம்ஸ் வேகமாக வெளியே வந்தான். அங்கே வசந்த் காலிலிருந்து இரத்தம் ஒழுக அய்யோ "கால் போச்சு கால் போச்சு" என நிக்க முடியாமல் கத்த ஜேம்ஸ் அப்படியே வசந்த்யை தூக்கிக் கொண்டு "என்னடா ஆச்சு" என்றான். "கல் தடுக்கி விழுந்தேன் அய்யோ உயிர் போகுதுண்ணா" என அழ சரி சரி அழாத இதோ அப்பா வந்துட்டாங்க ஒடியே வந்த அம்மா அப்பா பதறிவிட்டார்கள்.


"கால் எலும்பு ஒடிந்த மாதிரி இருக்குது" என்று கூறிய அப்பா தோள்ல போட்டுட்டு "ஆட்டோ கூட்டிட்டு வா ஜேம்ஸ்" என்றார். ஜேம்ஸ் ஓட அம்மாவிடம் பணம் எடுத்துட்டு வசந்துக்கு வேற டிரஸ் எடுத்துட்டு வா என்றார். ஆட்டோ டிரைவரிடம் "மரியாள் மருத்துவமனைக்கு வேகமாக போங்க" என்றார். அம்மா "ஜேம்ஸ் இனியாவ பார்த்துக்கோ" என்று கூறி ஆட்டோவில் ஏறினாள்.


இரவு 7 மணிபோல் அப்பா "ஜேம்ஸ் வசந்த்க்கு கால் எலும்பு உடைஞ்சிருக்கு காயம் வேற ஆழமாக இருக்குனு டாக்டர் சொல்றார். ஆச்சி தாத்தாவுக்கு போன் பண்ணி வரச் சொல்லியிருக்கேன். இனியாவுக்கு சாப்பாடு கொடுத்துரு" என்றார்.


"சரிப்பா, ரொம்ப கஷ்டமா இருக்குப்பா. தம்பி ரொம்ப அழறானா? நீங்களும் அம்மாவும் அவன் கூடவே இருங்கப்பா நான் இங்க பார்த்துக்குறேன்" என்றான் ஜேம்ஸ்.


டிசம்பர் 25


மருத்துவமனை படுக்கையில் படுத்திருந்த வசந்திடம் அம்மா அப்பாவும் ஹேப்பி கிறிஸ்மஸ் என்று கூறி சிலுவைப்போட்டு முத்தமிட்டனர். "நான் எல்லாருக்கும் கஸ்டம் கொடுத்திட்டேன்ல சாரிம்மா சாரிப்பா" என கண்கலங்க "சே சே கஸ்டமெல்லாம் இல்லப்பா நீ சந்தோசமா இருக்கணும் அதுதான் வேண்டும்" என்று அம்மா கூற "உங்களுக்கு என் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் ஜேம்ஸ் அண்ணாவும் இனியாவும் ஆச்சி தாத்தாக்கூட சந்தோசமா கிறிஸ்மஸ் கொண்டாடிக்கிட்டு இருப்பாங்க தானேம்மா" என்று கூற ரூம் கதவு தட்டுற சத்தம் கேட்டு அம்மா கதவை திறக்க அங்கு ஜேம்ஸ் இனியா தங்கள் ஆச்சி தாத்தாவோடு நின்றிருந்தார்கள். "ஹாய் வசந்த் ஹேப்பி கிறிஸ்மஸ்" என்று கூறி ஜேம்ஸ் வசந்தை கட்டிப்பிடித்து முத்தமிட்டான். இனியாவும் அண்ணா என்று கூறி முத்தமிட்டாள். "உன் கூட கிறிஸ்மஸ் கொண்டாட நீ இருக்குற இடத்துக்கே வந்துடோம்ல" என்றான் ஜேம்ஸ்.


"ஆமா வசந்த் நீ இல்லாம ஜேம்சும், இனியாவும் புது டிரெஸ் கூட போடமாட்டேன் சொல்லிட்டாங்க. நீ இல்லாம மத்தாப்பு பட்டாசு கூட வெடிக்கல. உன் கூடத்தான் கொண்டாடுவோம் என அடம்பிடிக்க தாத்தா வேற வழியில்லாமா உனக்கு பார்க்குற டாக்டர்கிட்ட அனுமதி வாங்கி கூட்டிட்டு வந்துட்டாங்க" என்றார் ஆச்சி.


"வசந்த் அண்ணா இந்தா உன் புது டிரெஸ். அம்மா அண்ணாவுக்கு போட்டுவிடுங்க. நாங்களும் புது டிரெஸ் போடப் போறோம்" என்று கூறி போட்டுக் கொள்ள அப்பா அனைவருக்கும் கேக் கொடுக்க, ஜேம்ஸ் "இனியா நாம் வாங்கிட்டு வந்த பொருட்கள வெளியில எடுத்து வை நான் போய் வீல்சேர் கொண்டு வர்றேன்" "என்னடா என்னப் பண்ணப் போற?" என அம்மா பதட்டமாகக் கேட்க, "அம்மா பதறாதீங்க டாக்டர்கிட்ட அனுமதி வாங்கிட்டேன் வசந்த்யை வீல்சேர்ல வச்சு ஆஸ்பத்திரில்ல இருக்கும் ஒவ்வொருக்கும் ஸ்வீட்ஸ் கொடுக்கப் போறோம்" என்று கூறி வெளியே போய் சக்கரநாற்காலி கொண்டு வர "வசந்த் அண்ணா இந்த சாண்டாகிளாஸ் முகமூடியை போட்டுக்க" என இனியா போட்டுவிட வசந்த் சந்தோசமாக போட்டுக் கொண்டான். அதற்குள் ஜேம்ஸ் பலூன் எல்லாம் கட்டி சக்கரநாற்காலியை அலங்கரித்தான்.


அப்படியே அப்பாவின் உதவியோடு வசந்தை தூக்கி உட்கார வைத்து சக்கரநாற்காலியை தள்ள, இனியாவும் அப்பாவும் இனிப்பு டப்பாகளை எடுத்துக் கொள்ள, ஒவ்வொரு நோயாளி அறை முன் நின்று கிறிஸ்மஸ் தாத்தா வந்திருக்காங்க கதவ திறங்க என இனியா தட்ட, வசந்த் கிறிஸ்மஸ் வாழ்த்துக் கூறி இனிப்புகள் வழங்கினான். நோயாளிகள், பணியாளர்கள், பார்வையாளர்கள், தாதியர்கள், மருத்துவர்கள் என அனைவருக்கும் கொடுத்துவிட்டு தங்கள் அறைக்கு வந்தனர்.


ஜேம்ஸ் வசந்துக்கு போட்ட முகமூடியை கழட்ட அவன் கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்தது. "என்ன அண்ணா கால் ரொம்ப வலிக்குதா" என இனியா கேட்க இருவரையும் கன்னத்தோடு அனைத்துக் கொண்டான்.


"கால் வலிக்கல என் மனசுதான் வலிக்குது. உங்க உண்மையான அன்பை இத்தனை நாள் நான் புரிஞ்சுக்கலையே. கால் உடைஞ்சதுக்காக நான் சந்தோசப்படுறேன். உங்க அன்பை புரிஞ்சுக்கிட்ட புது வசந்தா நான் வீடு திரும்புவேன். அம்மா அப்பா உங்களுக்கும் பெருமை சேர்ப்பேன். என் உள்ளத்தில் யேசு பிறந்துட்டார்" என்றான். எல்லோர் கண்களிலும் ஆனந்த கண்ணீர் தளும்பி நின்றது. ஒரு வித்தியாசமான கிறிஸ்மஸ் கொண்டாடிய நிறைவும் மகிழ்ச்சியும் அங்கு அனைவரது உள்ளத்தில் நிறைந்திருந்தது.

merry xmas
திருமதி அமலி எட்வர்ட் -நாகமலை - மதுரை