இயேசுவின் பிறப்பு யாருக்கு?
வீதியெங்கும் விழாக்கோலம் வீடுகளின் முன் மின்னும் நட்சத்திரம் சிறுவர்களின் பட்டாசு சத்தம் இனிப்புகள் பரிமாற்றம் அலங்காரமான ஆடைகள்
இவற்றிற்கு இடையில் "கிறிஸ்து பிறப்பு விழா வாழ்த்துக்கள்" என்ற ஒலி, உதட்டு சாயம் பூசிய உதடுகளை தாண்டி வரும் போதே, அவர்களிடமிருந்து நறுமண தைலத்தின் வாசனை அதை தாண்டி வருகிறது.
இந்த ஆர்ப்பாட்டமான கிறிஸ்து பிறப்பு விழா ஒருபுறமிருக்க,
ஒட்டிய வயிற்றோடு,
குழிவிழுந்த கண்களோடு,
அடுத்த வேளை என்ன?
அந்த வேளைசோற்றுக்கு கூட வழியின்றி
உடலை மறைத்து மானத்தை காத்து கொள்ள கிழிந்த துணியை உடுத்தி
வானத்தையே கூரையாய் கொண்டு, வாழும் மனிதர்கள் நம் அருகில் ஏராளம்.
இயேசு பாலன் ஒளி விளக்குகளின் நடுவில், பட்டாசுகளின் ஆரவாரத்தில் இனிப்புகளின் பரிமாற்றத்தில் ஆடை ஆபரணங்களின் மிதப்பில், விழாக் கோலம் பூண்ட மாளிமையில் பிறக்கவில்லை.
மாறாக, ஏழையாக பிறக்க இடமின்றி விலங்குகள் தங்கும் மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார்.
அவ்வாறு ஏழையாய்ப் பிறந்த இயேசுவை,
நம்மை சுற்றி வாழும் ஏழைகளை
கண்டு கொள்ள நாம் ஏன் மறக்கிறோம்? மறுக்கிறோம்?
டிசம்பர் - 25 கிறிஸ்து பிறப்பு யாருக்கு? இந்த இனிய நாளை உங்கள் உடையதாக்க வேண்டுமா? ஓரு நொடியில் உலகத்தை புரட்டி போட வேண்டாம். மாறாக நீங்கள் உண்ணும் உணவிலிருந்து உங்கள் அருகில் வாழும் ஏழைக்கு உணவு கொடுங்கள். உங்கள் ஆடம்பரத்தை குறைத்து அவர்களின் உடலை மறைத்திட உடை கொடுங்கள். எல்லாவற்றிற்க்கும் மேலாய், உங்கள் பெருமையை மறந்து அவர்களையும் மனிதர்களாகப் பாருங்கள்.
அப்போது, அவர்களின் உதட்டோரம் எழும் புன்னகையால், உங்கள் உள்ளத்தில் இயேசு பிறப்பார்.. அவர்களின் உள்ளத்தில் எழும் நன்றியால் பாலன் ஆசி உங்கள் இல்லத்தில் நிறையும். உங்கள் உள்ளத்ததில் இயேசு பிறக்கவும், உங்கள் இல்லத்தில் அவரின் ஆசியை பெறவும் நீங்கள் தயாரா?
"உங்கள்னதங்களிலே கடவுளுக்கு மகிமை உண்டாகுக. பூவுலகில் நல்மனத்தவர்க்கு அமைதி உண்டாகுக." என வானதூதர் உங்களுக்காக பாடும் பாடல் ஒலி உங்களை வந்தடையட்டும்.
அனைவருக்கும் கிறிஸ்து பிறப்பு விழா நல்வாழ்த்துக்கள்.