கிறிஸ்மஸ் தாலாட்டு கவிதை
வானதூதர் விண் மீன்களாய் கீதம் முழங்க
வெண்ணிலவாய் வந்துதித்த வெண்மலரே
ஆராரோ – ஆரிராரோ என் அழகு ரோசாவே!
பூஞ்சோலை மலர்களெல்லாம்
உன் வசம் வந்து சேர
புது கவிதை எடுத்து குயில் பாட்டிசைக்க!!
கண்களுக்குள்ளே கருணையை தேக்கி
இதழ்களுக்குள்ளே இனிமையைக் கூட்டி
மனதுக்குள்ளே மானிடரை மீட்டெடுக்க
பூமிக்கு வந்த பிறை நிலவே ஆராரோ
மரியின் மைந்தனே ஆராரோ
மாணிக்கபரலே ஆராரோ
சுந்தர மணியே ஆராரோ
பாலகா! உலகத்து மாயையெல்லாம்
உன் அசைவில் பறந்துவிட
என் மனச் சோகமெல்லாம்
நின் கண் அசைவில் காணாமல் போனதே!
மழலையே! இறைமகனே இறைவனாய் நீ இருக்க
இளையவள் நான் எப்படி தாலாட்ட
என் ஆசானாய் நீ இருக்க
நான் எப்படி கீதமிசைப்பேன்?
மழலை மன்னவா! தெள்ளமுதே!
தென்றலின் வருடலே
வாடை காற்றின் வேகம் உனை கண்டு
அஞ்சும் வேளை – நான்
வெண் சாமரம் கொண்டு வீசிடுவேன்!
ஆரிராரோ நான் பாடிவேன்!
எமை காண புவி இறங்கிய புதுமலரே
என் கானம் நின் செவிக்குள் பாய்ந்தோட
எம் பாட்டு எம்மாத்திரம்? இருந்தாலும்
பாலகா! நான் பாடுகிறேன் நீ உறங்கு!
தாலாட்டு பிழைகளைத் திருத்தி விடு – என்
ஆன்ம தாகத்தையும் தீர்த்து விடு!!
கண்ணான கண்மணியே கண்ணுறங்கு
வெண்மலர் ரோசாவே கண்ணுறங்கு.
ஆரி ஆராரோ! ஆரிராரி - ஆராரோ
திருமதி.அருள்சீலி அந்தோணி-சென்னை