கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் * Merry Christmas * நத்தார் வாழ்த்துக்கள்

பூமிக்கு வந்த முதல் நாள்

நற்செய்தி - இறைமகன் இயேசுவின் மீட்பின் வரலாறு சொல்லும் கவிதை


லூக்காஸ் நற்செய்தியில் இயேசுவின் பிறப்பை இரண்டாம் அதிகாரத்தில் நம் உள்ளம் உணரும் வண்ணம் விளக்குகின்றார். ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் உணர்ச்சின் தொடுவான வளைவையும் ஆசிரியர் அளந்து சொல்கின்றார்


வாழ்க்கையின் உயரங்களுக்கும் ஆழங்களுக்கும் நம்மை அழைத்து சென்று அனுபவ செழுமை வழங்குகின்றார்.


இரண்டாம் அதிகாரத்தில் (8-20) பதிமூன்று வரிகளில் வரும் இடையர்களின் செய்தி. இவை மூன்றும் தனித்தனியே மூன்று தளங்களில் விரிவாகப் பார்க்கலாம்


1. கதைத்தளம் 2. கருத்துதளம் 3. ஆன்மீகத்தளம்.


கதைத்தளம்

இடையர்களுக்கு அறிவிப்பு

அவள் தலைபேறான மகனை ஈன்றெடுத்து துணிகளில் பொதிந்து முன்னிட்டியில் கிடத்தினாள் (லூக் 2:7)தங்கள் பெயரை பதிவு செய்யவந்த யோசேப்பும் மரியாளும் பிறந்த குழந்தையை முன்னிட்டியில் கிடத்தினார்கள். இயேசுவை துணிகளில் பொதிந்து முன்னிட்டியில் கிடத்திய கணமே லூக்காஸ் அடுத்தவரியிலேயே முதன்முதலாய் ஆண்டவர் தூதர் விண்ணெளி சுடர் சூழ மீட்பர் பிறந்ததை இடையர்களுக்கு அறிவிக்கின்றார். உன்னதரின் மகனை – ஆண்டவராகிய மெசியாவை – இயேசு பிறப்பை ஏரோது அரசனுக்கோ, தலைமைகுருக்களுக்கோ, படித்த அறிஞர் பரிசேயர்களுக்கோ அறிவிக்கவில்லை. முதன் முதலாய் இடையர்களுக்குத்தான் அறிவிக்கப்படுகின்றது.


விடுதலையை எதிர்பார்த்து தேவாலயத்தில் வாழ்ந்து வந்த அன்னா என்ற இறைவாக்குரைப்பவளுக்கும், மீட்பரை பர்க்காமல் சாகமாட்டேன் என்று வரம் வாங்கி காத்திருக்கும் சிமியோனுக்கும் அந்த அதிஷ்டம் கிடைக்கவில்லை.


பொதுவாக பழையஏற்பாட்டில் பக்கங்களை புரட்டினால் மோசஸ் தாவீது போன்ற ஆடுகளை மேய்த்தவர்களுக்கே அந்த பாக்கியம் கிடைக்கின்றது.


இந்த இடையர்கள் யார்? இரவெல்லாம் விழித்திருந்து ஆடுகளை ஓநாய்களிடம் மிருந்து திருடர்களிடமிருந்தும் காவல் காத்துக்கொண்டிருப்பவர்கள். வானதூதர் தோன்றி இடையர்களுக்கு ‘அஞ்சாதீர் மக்களுக்கெல்லாம் மாபெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கின்றேன். இன்று தாவீதின் ஊரிலே உங்களுக்காக மீட்பர் பிறந்துள்ளார் அவரே ஆண்டவராகிய மெசியா. குழந்தை ஒன்றை துணிகளில் பொதிந்து முன்னிட்டியில் கிடத்தி இருப்பதை காண்பீர்கள். இதுவே உங்களுக்கு அறிகுறியாகும் என்றார். (லூக் 2:10-12) பின் மங்கலபாடல் பாடி வானகம் சென்றனர். வானதூதர் அறிகுறியை கூறினார். ஆனால் அவர்களை போய்ப் பாருங்கள் என்று கூறவில்லை.
இடையர்கள் செய்ததென்ன?


இடையர்களோ ஒருவரையெருவர் நோக்கி "வாருங்கள் போய் நமக்கு அறிவித்த நிகழ்ச்சியை காண்போம்" (லூக் 2;:15) என்று கூறிக்கொண்டே விரைந்து சென்று துணிகளில் பொதிந்து முன்னிட்டியில் கிடத்தியிருந்த குழந்தையைக் கண்டனர்.


இங்கே நாம் கவனிக்கவேண்டியது இரவு முழுவதும் காவல் காத்துக் கொண்டிருப்பவர்கள் அப்படியே ஆடுகளை விட்டுவிட்டு விரைந்து சென்றதை.
அங்கு சென்றார்கள் கண்டார்கள் தமக்கு கூறப்பட்டதை சுற்றியுள்ள அனைவருக்கும் அறிவித்தனர். பின் தாம் கண்டதை, கேட்டதெல்லாம் நினைத்து கடவுளை மகிமைப்படுத்திக் கொணடே திரும்பினர். வெள்ளை மனம் படைத்த இடையர்கள்.


தொழுவத்தில் துணிகளில் பொதிந்து முன்னிட்டியில் கிடத்தியிருந்த குழந்தை,ஆண்டவராகிய மெசியா என்பதை இடையர்கள் எந்த வித சந்தேகமோ, கேள்வியோ இல்லாமல், கண்டு வியந்ததோடு மட்டுமல்லாமல், சுற்றியுள்ள அனைவருக்கும் அறிவித்த அந்த வெள்ளை உள்ளங்கள் கடவுளின் பிள்ளைகள் தான்.


வானதூதர் செய்தி என்ன?
மக்களுக்கொல்லாம் மாபெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தி ஆம் இறைமகன் இயேசு இஸ்ராயல் குலத்திற்கு மட்டும் அல்ல 'மக்களுக்கெல்லாம்' என்பதை அறிய வேண்டும். அவர் உலக மீட்பர் ஆண்டவராகிய மெசியா அப்படிபட்ட தெய்வமகன் பிறந்த இடம் தொழுவம். அதில் துணிகளில் சுற்றப்பட்ட குழந்தைதான் மெசியா என்றால் பொதுவாக யாரலும் ஏற்றுக் கொள்ள முடியாது.


ஆனால் இடையர்கள் யாரும் அதில் சிறிதளவேனும் சந்தேகம் கொள்ளாமல், ஏனெனில் அரசாகப்போகின்றவர் மெசியாவானவர் உயர்ந்த மாட மாளிகையில் ஊரே விழாகோலம் கொண்டு கொண்டாடுகின்ற நிகழ்ச்சிக்கு முற்றிலும எதிராக ஒரு தொழுவத்தில் பிறந்துள்ளார் என்பதை விசுவசித்து சென்றார். இதுவரையில் பார்த்தது கதையின் போக்கில் நடக்கின்ற சம்பவங்கள். இந்த சம்பவங்களின் மூலமாக நமக்கு என்ன சேதி சொல்லுகின்றார்கள் என்பதை படித்து உணர வேண்டும்.


இயேசு பிறந்த பொழுது மகனை ஈன்றெடுத்து, துணிகளில் பொதிந்து (swaddling cloth) முன்னிட்டியில் கிடத்தினாள் (லூக் 2;:7) இடையர்களுக்கு அறிகுறியாக குழந்தை ஒன்றை துணிகளில் பொதிந்து இருப்பதை காண்பீர்கள்(2:12) விவிலியத்தில் ஒரு வார்த்தை பயன்படுத்த பட்டதை வேறு ஒரு இடத்தில் மீண்டும் பொதுவாக பயன்படுத்துவது கிடையாது. அப்படி மீண்டும் மீண்டும் வரும் பொழுது அதை சற்று ஆழமாய் சிந்திக்கவேண்டும்.


'துணிகளில் பொதிந்து' என்று இருமுறை காணப்படுகிறது. அக்காலத்தில் ஊர்விட்டு ஊர் செல்லும் பொழுது ஆண் தன்னுடைய உடம்பில் ஒரு துணியை சுற்றிக்கொண்டு அதன் மேல் தன் ஆடையை அணிந்து கொள்வார்கள. தூரதேசங்களில் செல்லும் பொழுது வழியில் யாராவது இறந்துபோனால் அப்பொழுது அந்த துணியை எடுத்து இறந்தவரின் மேல் முழுவதுமாக் சுற்றி பயணம் முடியும் வரையில் பாதுகாப்பாக கொண்டுவந்து அதை அடக்கம் பண்ணுவார்கள்.யோசேப்பு தான் கொண்டுவந்திருந்த அந்த இறந்தவர்களுக்கு சுற்றும் துணியை தான் இயேசு பிறந்த பொழுது எடுத்து அதில் பொதிந்து வைத்தனர்.
இயேசு தெய்வமாக இருந்து மானிடனாக பிறந்த பொழுது துணியை சுற்றி குழந்தையை கிடத்தினார்கள். துணி மானுடத்திற்கு உருவமாகவும் உள்ளது. அவரை முதன் முதலில் தரிசித்த இடையர்கள் யார் தெரியுமா?
பொதுவாக பலியிடப்போகும் ஆடுகளை – மேய்ச்சலை பார்த்துகொண்டிருப்பார்கள் பலியிடுவாதற்கான ஆடுகளை தேவாலயத்திற்க்கு கொண்டுவருபவர்கள் - அதற்காக காத்துகொண்டிருப்பவர்கள். குழந்தையை சுற்றியது சாவுக்குரிய ஆடை வந்து பார்த்தவர்கள் பலியிடும் ஆட்டை காப்பவர்கள் என்ன பொருத்தம்.


தொழுவத்திற்கும் கல்வாரிக்கும் தொடர்பு உண்டு. இன்னுமொன்றைப் பார்ப்போம்
இடையர்களுக்கு வானதூதர் அடையாள செய்தியாக தெரிவித்தவை இரண்டு. ஒன்று 'துணிகளில் பொதிந்து' மற்றொன்று "முன்னிட்டியில்" (manger) கிடத்தி உள்ளதாகும். குழந்தை இயேசுவை மெசியா என்று முதன் முதலில் பார்த்தவர்கள் அவர்கள் தான். அவரை சுற்றியுள்ளவருக்கு முதன் முதலில் அறிவித்தவர்களும் அவர்கள் தான்.


கருத்துதளம்

இடையர்களின் செய்தி கூறும் கருத்து தளம்

வானதூதர்கள் - இடையர்கள் குழந்தை இயேசுவின் சந்திப்பு கதை தளம். இந்த தளத்திற்கு அடுத்தாற்போல் இடையர்களின் செய்தி கூறும் கருத்து தளத்திற்கு செல்வோம். இடையர்களுக்கு கூறிய அடையாளங்கள் சொல்லும் செய்திகளின் கருத்தை கொஞ்சம் கவனமாகப் பார்ப்போம். லூக்காஸின் வரிகளை மறுவாசிப்பு செய்வோம். 'துணிகளில் பொதிந்து முன்னிட்டியில் கிடத்தி' (லூக் 2;:7)
'துணிகளில் பொதிந்து முன்னிட்டியில் கிடத்தி' (லூக் 2;:12)
'முன்னிட்டியில் கிடத்தியிருந்த' (லூக் 2;:16)
லூக்காஸ் பத்து வசனங்களுக்குள் மூன்று தடவை முன்னிட்டியும் இரண்டு தடவை துணிகளையும் தெளிவாக கூறிவிடுகின்றார். துணி மானுடத்திற்கு உருவமாகவும் உள்ளது. லூக்காஸ் தன் நற்செய்தியில் பிறப்பின் பொழுது தொழுவத்தில் முன்னிட்டியில் துணிகளையும் அடையாளமாக கூறி அதனால் குழந்தை மெசியா என அறிந்து வியப்படைந்து அனைவரும் அறிவித்து மகிழ்ந்து திரும்பினர். மீண்டும் மீண்டும் கூறி இங்கே ஒரு முடிச்சு போடப்படுகின்றது லூக்காஸ் போட்டமுடிச்சு அவிழத் தொடங்கும் இடம் இயேசுவின் கல்லறை.
இயேசு பிறக்கும் பொழுது கூறுபவைகளை பார்த்தோம்
தொழுவத்திற்கும் கல்வாரிக்கும் தொடர்பு உண்டு
இப்பொழுது லூக்காஸ் இயேசு இறக்கும் பொழுது கூறுபவைகளை கவனிப்போம்
நற்செய்திகளில் உள்ள ஒவ்வொரு சொல்லும் மிக நுணுக்கம் வாய்ந்தவை
இயேசுவை சிலுவையிலிருந்து இறக்கிக் "கோடிதுணியில் சுற்றி பாறைகுடைந்த கல்லறையில் அடக்கம் செய்தார்" (லூக் 23;:54)
வந்திருந்த பெண்களும்"கல்லறையையும் உடலை அங்கு வைத்த விதத்தையும் கவனித்தனர்" (லூக் 23;:55)
இராயப்பரோ எழுந்து "கல்லறைக்கு ஓடினார் குனிந்து பார்க்கையில் துணிகள்" மட்டும் கிடக்க கண்டார் (லூக் 24;:12)
இங்கேயும் மூன்று தடவை கல்லறையையும் இரண்டு தடவை துணிகளையும் கூறுகின்றார்.இங்கு துணிகளும் கல்லறையும் மீண்டும் மீண்டும் காணப்படுகின்றது இயேசு உயிர்ப்பின் பொழுது துணிகள் மட்டும் தனியே கிடக்கின்றது. மானுடத்தை விட்டு விட்டு தெய்வமகனாக விண்ணகம் சென்றார். துணிகள் மானுடத்திற்கு உருவகம். இங்கும் வானதூதர் வருகின்றார். சீடர்கள் துணிகளையும் காலியான கல்லறையும் பார்த்து இயேசு உயிர்த்தார் என்று விசுவசித்து வியந்து கொண்டே வீடு திரும்பினர் (24:12) பிறப்பிலும் உயிர்ப்பிலும் சம்பவங்கள் இணையாக காண்கின்றன.


பிறப்பின் பொழுது இடையர்கள் முன்னிட்டியில் துணிகளில் பொதிந்து இருக்க குழந்தையை காணுகின்றனர். உயிர்ப்பிலே சீடர்களும் பெண்களும் கல்லறையில் துணிகள் மட்டும் காண்கின்றனர்.


இடையர்கள் மெசியாவாக காண்கின்றனர்.
சீடர்கள் உயிர்த்த கிறிஸ்துவாக காண்கின்றனர்.
இடையர்கள் இயேசுவை கண்டு மெசியாவாக உணருகின்றனர் .
சீடர்கள் கிறிஸ்துவை காணாமல் உயிர்ப்பை விசுவசிக்கின்றனர்.
அதாவது தேடுங்கள் கண்டடைவீர்கள் என்ற இயேசுவின் வார்த்தை இடையர்களிடம் தொடங்கி
தேடுங்கள் காணமாட்டீர்கள் என்று சீடர்கள் நிலைவரை அதாவது காண்பதில் தொடங்கி காணாததில் நிறைவு என்பதை
லூக்காஸ் தொழுவத்தில் தொடங்கி கல்வாரியில் நிறைவு செய்கின்றார்.

பிறந்த பொழுது யோசேப்பு கொண்டுவந்திருந்த அ10டையை சுற்றி வைத்தனர்.

இறந்த பொழுதோ யோசேப்பு என்பவருடைய கல்லறையில் அடக்கம் பண்ணினார்கள்.
கல்வாரியில் பின் நிகழ உள்ளதை முன் உணர்ந்து இடையர்களுக்கு அடையாள செய்தியாக கூறுவதை காண்கிறேம்


லூக்காஸ் சொல்லவரும் செய்தி என்ன?

காண்பவற்றையல்ல காணாதவற்றை நோக்கிய வண்ணம் நாம் வாழ்தல் வேண்டும் (ரோம 8:25) நற்செய்தி மூன்று தளங்கள் உடையது இவை மூன்று தனித்தனியே எண்ணற்ற நலங்கள் உடையவை இடையர்கள் கதையைக் கண்டோம் விழுமிய கதை விண்ணரசை நோக்கி செலுத்தும் கதை நாம் நமக்குள் பரிமாறி மகிழும் கதை இந்த கதையின் வாயிலாக வாழ்க்கை அலசல்கள் விசுவாசத்தின் செயல்கள் எண்ணற்ற சிந்தனை தீபங்களை, கருத்துக்ளை, தெளிவுபடுத்தியது. இப்பொழுது மூன்றாவது தளமான ஆன்மீகத்தளத்திற்கு செல்வோம்.
இறுதியாக மீண்டும் எழிலோடும் ஏற்றத்தோடும் அதை வாசிப்போம்

ஆன்மீகத் தனம்

ஆன்மா என்றால் என்ன? அதை எப்படி அறிவது?
அதன் அனுபவ எல்லைக்கு எப்படி சொல்வது?
இடையர்கள் வரவால் அன்னைமரியின் அனுபவங்களை லூக்காஸ் தெரிவிக்கின்றார். அவர் கூறும் செய்தி இதுதான். இடையர்கள் எல்லோரும் கண்டதை சொன்னதை எல்லோருக்கும் அறிவித்தார்கள். குழந்தையை சுற்றியுள்ள அனைவரும் இடையர்களின் மொழிகேட்டு வியப்படைந்தனர்.
மரியாளும் வியப்படைந்திருக்க வேண்டும் லூக்காஸ் தெளிவாக எழுதுவார்.
"கேட்ட யாவரும் தங்களுக்கு இடையர்கள் கூறியது பற்றி வியப்படைந்தனர். ஆனால் மரியா இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக் கொண்டிருந்தார்." (லூக் 2;:20) ஆன்மீகம் என்பது அகத்தில் ஒடுங்கும் அனுபவமாக விளக்கப்பட்டாலும் அது அகத்தின் வரிந்து எல்லையற்றதாகிறது அனைவரையும் தன் மக்களாக ஏற்றுக்கொள்ளும் தாய் தன் ஆன்மீக பயணத்தில் செல்லும் நிலையை காட்டுகின்றார்.
புலன் சார்ந்த மனத்தளத்திலிருந்து ஆன்ம தளத்திற்கு எடுத்து செல்லும் முயற்சியில் நற்செய்திகள் சிகரநிலை பெறுகின்றது. அனைத்தையும் தன் உள்ளத்தில் சிந்திக்கும் - மௌனமாய் ஒரு தவத்தை செய்யும் மரியாளை தொடர்ந்து வாசிப்போம். இன்றைக்கு எல்லோருக்கும் தாயாகிய மரியாளின் ஆன்மீக வாழ்வை அழகாக எடுத்துரைக்கின்றார். ஏனெனில் லூக்காஸ் தனது இரண்டாம் அதிகாரத்தில் இருபதாவது வரியில் கூறிய அதே வார்த்தைகளை அதிகார முடிவில் 52வது வரியில் "தாய் இந்நிகழ்ச்சிளை யெல்லாம் தன்னுள்ளத்தில் கொண்டிருந்தாள்" என்பதை கூறுகின்றார்
இடையர்கள் ஆனந்த செய்தியை கூறும் பொழுது சுற்றியுள்ள அனைவரும் வியப்படைந்தனர். மரியாள் என்ன செய்தாள் - என்ன செய்திருப்பாள் தனக்கு மட்டும் கபிரியேல் சொன்ன வாக்கு இன்று இடையர் வழியாக அனைவரும் தெரிந்தது என்று ஆனந்தப்பட்டிருப்பாள் லூக்காஸ் தெளிவாக எழுதுகிறார். "(But Mary) மரியாளோ இந்நிகழ்ச்சிகளை யெல்லாம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்து வந்தாள்" (லூக் 2;:20)
மரியாள் இயேசுக்கு தாயானவள் இனிமேல் உலகோர் அனைத்தும் தாயாக போகின்றவள் அவள் செல்லும் அந்த ஆன்மீக தளத்தை நோக்கி பயணம் காட்டபடுகின்றது. தனக்காக வந்த செய்திகளை உள்வாங்கிக் கொண்டு சிந்தித்து வந்தாள்

அப்படி என்ன சிந்தனைகள் ..?
கபிரியேலின் வாழ்த்து - கன்னி தாயானது
மலடி எலிசபெத்து தாயானது - சந்திக்கும் பொழுது குழந்தை துள்ளியது
எலிசபெத்தின் வாழ்த்து
சூசையின் சந்தேகமும் தெளிவும் 
ஊமை செக்கரியாசு பேசத்தொடங்கியது
ஆகஸ்து அரசரின் ஆணை -
பெத்லேகம் பயணம் -
தொழுவத்தில் பெற்ற குழந்தை -
ஆண்டவராகிய மெசியா -
தாவீது அரியணையில் அமரப் போகிறவர் என்ற இடையர்களின் செய்தி.
இவையெல்லாம் மீறி தேவாலயத்தில் கண்ட இயேசு
வீட்டிற்கு வந்து பணிந்திருந்தார்
அப்பொழுதும் லூக்காஸ் இதே வரிகளை மீண்டும் எழுதுகிறார்
"மரியாள்  இந்நிகழ்ச்சிகளை யெல்லாம் தன்னுள்ளத்தில் கொண்டிருந்தாள்"(லூக்2:51) 

மரியாள் தன் சர்வகாலமும் கடவுள் சிந்னையோடு தியானித்தவளாய் தவமாற்றினாள். தவம் என்பது ஒரு பயணம் அதுவே இலக்கு அல்ல. தொடர் முயற்சி தான் தவம்.
மனத்தவத்தின் மாண்பால் தான் "இதோ உன் மகன்" என்று கிறிஸ்து நம்மை காட்டும் பொழுது ஏற்றுக்கொள்கின்றாள்.
உள்ளத்தில் செய்த தவம் தான் உலகனைத்துமான தாய்மை உணர்வு உருகியது. இயேசு பிறந்த பொழுது உள்ளத்தில் மகிழ்ந்து மொட்டாக அரும்பி காயாகி கனிந்து மலர்ந்து கல்வாரி சிலுவையடியில் பரிமளிக்கின்றது
இடையர்கள் வரவால் அவர்கள் கூறிய அடையாள சொல்லும் கதையை, கருத்தைப் பார்த்தோம். அவர்கள் சொல்லை உள்ளத்தில் சிந்தித்த மரியாளைப் பார்த்தோம். நாமும் உள்ளத்தில் சிந்திப்போம்.

merryxmas
அல்போன்ஸ்- பெங்களுர்