கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் * Merry Christmas * நத்தார் வாழ்த்துக்கள்

திருத்தந்தை பிரான்சிஸின்
புதிய பார்வையில் இயேசு பிறப்புப் பெருவிழா

இயேசுவின் பிறப்பு இறைவனால் குறிக்கப்பட்டது. உலகத்தைப் படைக்கும்போதே "வார்த்தையானவர்" வாக்களிக்கப்பட்டார். மத்தேயு தமது நற்செய்தியில் ஆபிரகாம் முதல் இயேசுவரை 42 தலைமுறைகளைக் குறிப்பிட்டுள்ளார். (மத் 1:1-11). ஆனால் லூக்கா, இயேசு தொடங்கி ஆதாம் வரை பின்னோக்கிப்பயணம் செய்து தலைமுறைகளைக் கூறுகிறார்.(லூக் 4) ஆனால் யோவான் இயேசுவுக்கு நெருக்கமானவர், இயேசு கடவுளிடமிருந்து வந்தார் என எண்பிக்கிறார். ஆதியிலே வார்த்தை இருந்தார் வார்த்தை மனுவுருவானார் (யோவான் 1:14) நம்மிடையே குடிகொண்டார் என்கிறார். இயேசு மனித அவதாரமில்லை. அவரே கடவுளின் மறு அச்சுப்பதிப்பு (கொலோசேயர்) மூவொரு கடவுளின் இரண்டாம் நிலை. இவருக்குப் பின்னே தூய ஆவியானவர் நம்மை ஆளுகிறார்.


மனித உருவில் பிறக்க நினைத்த இயேசு, தம்மைத் தாழ்த்தி மாட்டுத்தொழுவத்தில் பிறக்கத் தீர்மானித்தார். யோசேப்பு அருகில் மரியா இயேசுவை "வானதூதர்கள் சுற்றி நிற்க" பெற்றெடுத்தார். இந்த குழந்தையைப் (சுமார் 1½ வயது) பார்த்த கீழ்த்திசை ஞானிகள் சிலர் (மூவர் மட்டுமல்ல) நெடுஞ்சாண்கிடையாய் விழந்து வணங்கி, பரிசுகளை அளித்து தத்தம் இடம் திரும்பினர். 12 வயது நிரம்பிய இயேசு எருசலேம் தேவலாயத்தில் பெரிய மறைநூல் அறிஞர்களோடு விவாதிப்பதையும், அவர்கள் மலைத்துப் போனதையும் யோசேப்பும் மரியாவும் பார்த்து வியந்து நின்றார்கள்.


இயேசு தனது புதிய அதிகாரத்தோடு கூடிய போதனையைத் துவக்குவதற்கு முன்னதாக தம்மைத் தயாரிக்கும் நிலையில், ஓடுக்கும் முயற்சியாக, ஆவியானவரால் பாலை நிலத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பல சோதனைகளை மேற்க்கொண்டு அலகையை வென்றார். மாற்கு நற்செய்தியில் காணப்படும் முதல் நிகழ்வு இயேசு ஒரு மனிதனிடமிருந்து பேயை விரட்டியது. நம் வாழ்க்கையிலும் நாம் அலகைக்கு அகன்ற வழியைத் திறந்துவிட்டு "புனிதத்திற்கு" குறுகலான வழியை ஏற்படுத்துகிறோம். வரலாற்றில் கடவுள் புகுந்தது இயேசு உருவத்தில். "மனிதன் பாவம் செய்ய வாய்ப்பிருக்கக்கூடாது" என்பது கடவுளின் விருப்பம். ஆனால் மனிதனோ "நாங்கள் பாவம் செய்யாமலிருக்க வாய்ப்பில்லை" என அங்கலாய்கிறான். பாவத்தை பல வழிகளில் முயற்சி செய்து சுகம் காண்கிறான். லஞ்சம் வாங்கியே வீட்டைக்கட்டிப் பால்காய்ச்சிப் பெருமையடித்துக் கொள்ளும் மனிதன் ஒருவன் லஞ்சமே வாங்காதவனைப் பார்த்து ஏளனம் செய்கிறான். "என்னடா இப்படிப் பிழைக்கிறே, ஒரு வீட்டைக் கட்டி, காரை வாங்கி, நகை நட்டு, வண்டி வாங்கக்கூடாதா" என்கிறான். பிரச்சனைகளை தாமாக குவித்து காலையில் எழுந்ததும் கன்னத்தில் கைவைத்து மனம் ஒடிந்து போகிறான்.


இவனைப் பார்த்து இயேசு கூறுகிறார். "சுமை சுமந்து சோர்ந்திருப்போரே என்னிடம் வந்து கற்றுக் கொள்ளுங்கள். என் சுமை எளிது. என் நுகம் அழுத்தாது. தன் சிலுவையைச் சுமந்து என் பின்னே வாருங்கள்" என்கிறார். அப்படி வாழ்ந்தும் காட்டுகிறார். நமது திருத்தந்தை கூறுவதாவது " நம் திருச்சபையில் புனிதம் இல்லை, ஆயர்கள், குருக்கள், துறவிகள் பொதுநிலையினர் அனைவரும் புனிதமில்லாத போது திருச்சபை எப்படி புனிதமாக இருக்கும்? "என வினவுகிறார். "புனிதம் என்பது பூஜிக்கப்படவேண்டிய ஒன்றல்ல." புனிதம் மண்ணைத் தொடும் அளவுக்கு தாழ்ந்திருக்க வேண்டும். நம்மை வழிநடத்தும் திருத்தந்தை தானே சமைத்துக் கொள்கிறார். துவைத்துக் கொள்கிறார். பேருந்தில் பயணம் செய்கிறார்.


ஆனால் மற்றவர்கள் "தங்கக் கோபுரத்திலிருந்து கீழிறங்க மறுக்கிறார்கள்." சமீபத்தில் ஜெர்மன் நாட்டில் ஆயர் ஒருவர் சுமார் 3000 கோடி ரூபாய் ஆயர் இல்லம் கட்டத் தொடங்கியுள்ளதை அறிந்த திருத்தந்தை அவரை தற்கால பணிநீக்கம் செய்து, திருச்சபையைப் புனிதப்படுத்தும் பணியைத் துவங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


டீவைன் சென்டர் முரிங்கூறில் நடைபெறும் வார தியானத்துக்கு ஒரு வாரத்தில் 10000 பேர் பல மொழிகளில் கலந்து கொள்கிறார்கள். கடந்த 30 ஆண்டுகள் அளவாக 1½ கோடி என வைத்துக் கொண்டால் 3 கோடிப்பேர் தியானம் செய்து என்ன பயன்? அந்த 3 சதவீத கத்தோலிக்கர்கள் தானே இன்னும் இருக்கிறார்கள். கிறிஸ்துவர்களின் வாழ்வு போலியாக உள்ளது. வார்த்தையும் வாழ்வும் ஒன்றாக இல்லாதவரை போலித்தனம் என்னும் மாயை மட்டுமே மிஞ்சும்.


இயேசு தந்தையை முற்றிலும் அறிந்து அதிகாரத்தோடு செயல்பட்டார். இன்று உலகம் முழுவதும் அவர் பின்னால் செல்கிறது. நாமும் ஒத்துழைத்தால் உலகம் முழுவதும் கிறிஸ்தவம் பரவும் - மக்கள் மீட்படைவார்கள் - நிலைவாழ்வைச் சுதந்திரிப்பார்கள்.

merry xmas
பேராசிரியர் அ.குழந்தைராஜ் - காரைக்குடி