விசுவாச வாழ்க்கையை மராத்தான் ஓட்டத்துடன் ஒப்பிடலாம். எபிரேயர் 12:1-ல் “நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மனஉறுதியோடு ஓடுவோமாக.” என்று திருத்தூதர் பவுல் கூறுகிறார். வாழ்க்கையும், நம்பிக்கையும் ஒரு பெரும் போராட்டத்திலுள்ளது என்று நாம் உணரும்போது, இறைவன் எப்போதும் நமக்கு நம்பிக்கையைத் தரவும், நம்மை உற்சாகப்படுத்தவும் இருக்கிறார். கிறிஸ்து பிறப்புக் காலத்தில், நாம் இறைவனின் ஊக்கத்தை அறியவும், நம்பிக்கையை அடையவும் முடியும். “ஏனெனில், ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்; ஓர் ஆண்மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார்; ஆட்சிப்பொறுப்பு அவர் தோள்மேல் இருக்கும்; அவர் திருப்பெயரோ ‘வியத்தகு ஆலோசகர், வலிமைமிகு இறைவன், என்றுமுள தந்தை, அமைதியின் அரசர்’ என்று அழைக்கப்படும்.” (எசாயா 9:6)
மனிதர்களுடனும், இயற்கையுடனும் தொடர்ந்து நடைபெறுகின்ற போரட்டத்தால் உடைபட்டு, நம்மைப் புண்படுத்துகின்ற உலகின் இருளில் நாம் வாழ்கிறோம். நம் தனிப்பட்ட போராட்டங்கள் நீண்டதாகவும் கடினமானதாகவும் முடிவற்றதாகவும் தோன்றுகின்றன. ஆனாலும், நம்மைத் தேற்றவும், அன்பு செய்யவும் அற்புதமான ஆலோசகராக இயேசு இருக்கிறார். “தம்மை உண்மையுடன் பின்பற்றுபவர்கள் மகிழ்ந்து கொண்டாட வேண்டிய நேரமே இந்தக் கிறிஸ்துப் பிறப்பு விழாக் காலம்” என்று இயேசு அழைக்கிறார். அவருடன் நெருக்கமாக இருப்பவர்களுக்கு, அவர்கள் எதிர்கொள்ளும் எந்தப் பயத்தையும் அல்லது புயலையும் அடக்கி ஆற்றுபடுத்தி, மிக அதிகமான அமைதியை அவருடைய பிரசன்னம் கொண்டு வந்தது என்பதை இயேசு உறுதிப்படுத்தினார்.
அவர் தரும் அமைதியை நாம் அறிந்து கொள்ளவும், அவருடைய உடனிருப்பை அனுபவிக்கும் மகிழ்ச்சியைப் பெற்று கொள்ளவும் இயேசு விரும்புகிறார். “அற்புதம்” என்பது ஒரு சாதாரண அன்றாட வார்த்தையாக இருக்கலாம். ஆனால் இயேசு அந்த வார்த்தையை அசாதாரணமானதாக ஆக்குகிறார். இந்தக் கிறிஸ்துப் பிறப்பு விழாக் காலத்திலும், எதிர்வரும் புத்தாண்டிலும் இயேசுவின் அற்புதத்தால் அனைவரும் நிரப்பப்பட வேண்டும் என்பதே என் பிரார்த்தனை.
எம்மோடு உடனுழைப்போருக்கும், நன்கொடையாளர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும், எம்மை ஊக்குவிக்கின்ற ‘அன்பின் மடல்’ பார்வையாளர்களுக்கும் நன்றியுடன் கூடிய கிறிஸ்துப் பிறப்பு பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். வரவிருக்கின்ற புதிய ஆண்டில் நலமும், வளமும் பெருகிடவும், மகிழ்ச்சியும், அமைதியும் நிலைத்திடவும் வாழ்த்துகிறேன்.
இணைந்துச் செயல்படுவோம் இறையரசை அறிவிக்க...