எளிய மனத்தோர் பேறுபெற்றோர்
எஸ்தர் வில்சன்
"வாக்கு மனிதர் ஆனார் நம்மிடையே குடிகொண்டார். (யோவான் 1:14)
ஆண்டவர் இஸ்ராயேல் மக்களோடு செய்து கொண்ட உடன்படிக்கை நிறைவேறுமாறு, தன் ஒரே பேறான மகனை உலக மீட்பிற்காக உகந்தளித்தார். பழைய ஏற்பாட்டு காலம் முதல் ஆண்டவர் தேர்ந்து கொண்ட அணைவரும் எளிய மனிதர்களே. மீட்பரை உலகிற்கு அளிக்க எளிமையே உருவான அன்னை மரியாளை தேர்ந்தெடுத்தார். வளர்ப்பு தந்தை புனித யோசேப்பும் எளிமையும் அமைதியும் நிறைந்தவர். மெசியா எனும் மீட்பர் மாடமாளிகையில் பிறக்கவில்லை எங்கும் இடமின்றி ஏழை குடிலில் பிறந்தார்.
இறைமகன் இயேசு பிறந்த நற்செய்தி முதன் முதலில் எங்கோ ஆடு மேய்த்துக் கொண்டிருந்த இடையர்களுக்கு அறிவிக்கப்பட்டது. இதில் புதைந்துள்ள ஆழ்ந்த பொருள் என்ன? இதன் மூலம் இறைவன் நமக்கு என்ன கூறுகிறார் என்பதை பார்ப்போம்.
முதலாம் நூற்றாண்டில் நிகழ்ந்த நிகழ்வு இது. அக்காலத்தில் இடையர்கள், சமுதாயத்தில் ஒதுக்கப்பட்டு மிகத்தாழ்ந்த நிலையில் இருந்தனர். இதற்கு அவர்களை ஒதுக்கிய யூத மதத்தலைவாகளும்,மேல் தட்டு யூதர்களும் இயம்பிய காரணங்கள் பல. முதலாவதாக ஆடு மேய்க்கும் பணியின் காரணத்தினால் அவர்கள் அசுத்தமாக இருக்கிறார்கள் என்றும், இரண்டாவதாக, இதனால் மதரீதியாகப் பின்பற்றப்படும் ஒழுங்குகளையும், சுத்திகரிப்யையும் அவர்கள் சரிவரப் பின்பற்றுவதில்லை எனவும், மூன்றாவதாக அவர்கள் படிப்பறிவில்லாத, முரடர்கள் எனவும் கூறி அவர்களை ஆலயத்திற்குள் வரவிடாமல் தடை செய்தனர். அவர்கள் நீதிமன்றத்தில் சாட்சியம் கூறினாலும் அதை ஏற்றுக் கொள்வதில்லை. இவ்வாறு இடையர்கள் அவமானப்படுத்தப்பட்டும், ஒதுக்கப்பட்டும் காணப்பட்டனர்.
இத்தகைய தாழ்நிலையில் இருந்த இடையர்களுக்கு தான் இயேசு பிறந்த மகிழச்சியான நற்செய்தி முதலில் அறிவிக்கப்பட்டது. அதன் மூலம் இறைவன் நமக்கு கூறுவது யாதெனின் “சமுதாயம் ஒதுக்கலாம், ஓடுக்கலாம், ஆனால் என் மனதிற்கு இனியவர்கள் நீங்கள்” என்பதே.
வானதூதர் அவர்களிடம் "அஞ்சாதீர்கள் இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார்." (லூக்கா 2:10)
இடையரிடம் வானதூதர் “மீட்பர்”, மெசியா" என்று இயேசுவை சரியாக அடையாளப்படுத்தும் முக்கியமான வார்த்தைகளைக் கூறி நற்செய்தியை அறிவித்தார். சமூதாயத்தில் முக்கியத்துவம், பெறாத மனிதர்களை இறைவன் உயர்த்தி மிக அற்புதமான செய்தியை அளித்தார். இதன் மூலம் உலக மக்கள் அனைவரையும் மீட்க மெசியா பிறந்தார் என்பதை இறைவன் நமக்கு வெளிப்படுத்தினார்.
அடுத்ததாக இச்செய்தியை இடையர்கள் எவ்வாறு ஏற்றுக் கொண்டனர், அவர்கள் என்ன செய்தார்கள் என்பதை பார்ப்போம்.
வானதூதர் முதலில் கூறிய வார்த்தை "அஞ்சாதீர்கள்” என்பதே. ஏனென்றால் திடீரன்று வானதூதர் இருளில் தோன்றியதால் அவர்கள் அஞ்சி நடுங்கினர். பின்னர் மெசியா பிறந்த நற்செய்தியை கேட்டதும் அதை அப்படியே, எந்தக் கேள்வியுமின்றி, ஏற்றுக் கொண்டு விசுவசித்தனர். மெசியா எப்படி இந்தச் சாதாரண நிலையில் பிறப்பார், என்றெல்லாம் ஐயப்படவில்லை, தயக்கமில்லை, கேள்வி இல்லை. உடனடியாக அவர்கள் கூறியது - "வாருங்கள், நாம் பெத்லகேமுக்கு போய் ஆண்டவர் அறிவித்திருக்கிற இந்த நிகழ்ச்சியைப் பார்ப்போம்” என்பதே (லூக்கா 2:15)
இதோடு அவர்கள் நின்றுவிடவில்லை. அந்த குழந்தையை பற்றி தங்களுக்கு சொல்லப்பட்ட செய்தியை தெரிவித்தார்கள். அதைக் கேட்ட யாவரும் இடையர்கள் தங்களுக்கு சொன்னவற்றை குறித்து வியப்படைந்தனர்.(லூக்கா 2:17-18)
அவ்வாறு இவர்களுக்கு முதலில் அளிக்கப்பட்ட நற்செய்தியை பரப்புபவர்களாகவும் மாறினார்கள். இவர்களின் சாட்சியத்தைக் கூட ஏற்காத யூதர்கள், இப்போது இதைக் கேட்டு வியப்படைந்தார்கள்.
இதையே புனித பவுல் கொரித்தியருக்கு எழுதிய திருமுகத்தில் கூறுகிறார்
எனவே நாம் ஒவ்வொருவரும் எளிய இடையர்களாக மாறுவோம், இறைவனின் மனதுக்கு இனியவராவோம், எல்லோருக்கும் நற்செய்தியை எடுத்துக் கூறுவோம்.
-