இயேசுவின் பிறப்பும், பாரம்பரிய நம்பிக்கைகளும்...

ச.பெ.அமல்ராஜ் OSSM திருச்சி

இயேசு மனிதர்‌ என்னும்‌ உண்மை, அவர்‌ மரியா என்னும்‌ பெண்ணின்‌ வயிற்றில்‌ கருவாகிப்‌ பிறந்தார்‌ என்பதிலிருந்து தெரிகிறது. அதே நேரத்தில்‌ இயேசு உண்மையாகவே கடவுள்‌ என்ற உண்மை அவர்‌ தூய ஆவியின்‌ வல்லமையால்‌, கடவுளின்‌ நேரடியான செயல்பாட்டின்‌ பயனாக மரியாவின்‌ உதரத்தில்‌ கருவாகி இவ்வலகில்‌ பிறந்தார்‌ என்பதிலிருந்து தெரிகிறது. எனவே இயேசு உண்மையிலேயே “இம்மானுவேல்‌” ஆவார்‌.

“இதோ! கன்னி கருவுற்று ஒர்‌ ஆண்மகனைப்‌ பெற்றெடுப்பார்‌ அக்குழந்தைக்கு இம்மானுவேல்‌ எனப்‌ பெயரிடுவர்‌” என்று இறைவாக்கினர்‌ வாயிலாக ஆண்டவர்‌ உரைத்தது நிறைவேறவே இவை யாவும்‌ நிகழ்ந்தன. இம்மானுவேல்‌ என்றால்‌ கடவுள்‌ நம்முடன்‌ இருக்கிறார்‌ என்பது பொருள்‌ - மத்‌தேயு 1:22-23
இடையர் இயேசுவை வணங்குதல்
ஒவியர்: Gerrard Van Honthorst,1622

இயேசுவின்‌ பிறப்பு குறித்து லூக்கா நற்செய்தி. மத்தேயு நற்செய்தி, திருமுறையினைச்‌ சேரா நூல்களில்‌ சில விவரிக்கின்றன. லூக்கா நற்செய்தியும்‌, மத்தேயு நற்செய்தியும்‌ யூதேயா நாட்டின்‌ பெத்லகேம்‌ எனும்‌ ஊரில்‌ இயேசு ஒரு கன்னியிடம்‌ பிறந்தாரெனக் குறிக்கின்றன.

லூக்கா நற்செய்தியின்படி அகுஸ்து சீசரின்‌ கட்டளைப்படி மக்கள்‌ தொகைக்‌ கணக்கில்‌ தன்‌ குடும்பத்தைப்‌ பதிவு செய்யத் தாவீதின் வழிமரபினரான யோசேப்பும்‌, அவருக்கு மண ஒப்பந்தமான மரியாவும்‌ நாசரேத்து ஊரிலிருந்து யூதேயாவில் உள்ள பெத்லகேம்‌ என்ற தாவீதின்‌ ஊருக்குச்‌ சென்றனர்‌. அங்கு இருந்தபொழுது மரியாவுக்குப்‌ பேறுகாலம்‌ வந்தது. அவர்‌ தம்‌ தலைமகனைப்‌ பெற்றெடுத்து பிள்ளையைத்‌ துணிகளில்‌ பொதிந்து தீவனத்‌ தொட்டியில்‌ கிடத்தினார்‌. இதன்பின்‌ அப்பகுதியில்‌ உள்ள வயல்‌வெளியில்‌ தங்கள்‌ கிடையைக்‌ காவல்‌ காத்துக்‌ கொண்டிருந்த இடையர்களுக்கு வானதூதர்‌ தோன்றி அவர்களிடம்‌, 'இன்று ஆண்டவராகிய மெசியா என்னும்‌ மீட்பர்‌ உங்களுக்காகத்‌ தாவீதின்‌ ஊரில்‌ பிறந்திருக்கிறார்‌' எனக்‌ கூறி இயேசுவின்‌ பிறப்பை அவர்களுக்கு அறிவித்தனர்‌. அவர்கள்‌ சென்று மரியாவையும்‌ யோசேப்பையும்‌ தீவனத்‌தொட்டியில்‌ கிடத்தியிருந்த குழந்தையையும்‌ கண்டு வணங்கினர்‌.

மத்தேயு நற்செய்தி விண்மீன்‌ ஒன்றின்‌ வழிகாட்டுதலால்‌ கிழக்கிலிருந்து ஞானிகள்‌ சிலர்‌ வந்து இயேசுவை வணங்கினர்‌ என்று குறிக்கின்றது. இதன்பின்‌ ஏரோது குழந்தையைக்‌ கொல்லத்‌ தேடுவானெனக் கனவில்‌ யோசேப்பு எச்சரிக்கப்பட்டதால்‌, அவர்கள்‌ மூவரும்‌ எகிப்துக்குத்‌ தப்பி ஓடிச்‌ சென்றனர்‌. ஏரோது காலமானதும்‌, எகிப்திலிருந்து திரும்பி வந்து நாசரேத்து எனப்படும்‌ ஊருக்குச்‌ சென்று அங்குக்‌ குடியிருந்தனர்‌.

இந்த நிகழ்வு பல கிறித்தவப்‌ பிரிவுகளில்‌ மிகவும்‌ சிறப்பாகக்‌ கொண்டாடப்‌படுகின்றது. கத்தோலிக்கத்‌ திருச்சபை உட்பட்ட சில சபைகளில்‌ கிறித்துமசு அன்று திருவிழிப்பு ஆராதனையோடு இவ்விழா சிறப்பிக்கப்படுகின்றது. குறிப்பாகக் கிழக்கு மரபுவழித்‌ திருச்சபையில்‌ இவ்விழாவுக்கு முன்‌ 40 நாட்கள்‌ நோன்பிருப்பது (Nativity Fast) வழக்கில்‌ உள்ளது. கத்தோலிக்கத்‌ திருச்சபை, ஆங்கிலிக்க ஒன்றியம்‌ முதலிய பல பிரிவுகளில்‌ இவ்விழாவுக்கு முன்‌ வரும்‌ நான்கு ஞாயிறுகளைத்‌ திருவருகைக்‌ காலம்‌ என வைத்து இவ்விழாவுக்கு ஆயத்தம்‌ செய்கின்றனர்‌.

கிறிக்கவ இறையியலில்‌ வாக்கு மனிதரான நிகழ்வாக இது கருதப்‌படுகின்றது. ஆதாம்‌, ஏவாள்‌ இவர்களின்‌ வீழ்ச்சியால்‌ விளைந்த பாவத்தைப்‌ போக்க கடவுளின்‌ திருவுளப்படி அவரின்‌ ஒரே மகன்‌ இயேசு மனிதனாகப்‌ பிறந்ததாக நம்பப்படுகின்றது. 4ஆம்‌ நூற்றாண்டு முதல்‌ கிறித்தவக்‌ கலையில்‌ இந்நிகழ்வு முக்கியப்‌ பங்கு வகிக்கின்றது. 13ஆம்‌ நூற்றாண்டு முதல்‌ கிறித்துமசு சூடில்‌ அமைத்து இவ்விழாவைக்‌ கிறித்தவர்கள்‌ கொண்டாடுகின்றனர்‌.

எகிப்துக்குத்‌ தப்பி ஓடிச்‌ செல்லுதல்

egypt
எகிப்துக்குத்‌ தப்பி ஓடச்‌ செல்லுதல்‌.
ஓவியர்‌ Giotto Di Bondone(1276-1337)
scrovegni Chapel, பதுவா, இத்தாலி)

எகிப்துக்குத்‌ தப்பி ஓடிச்‌ செல்லுதல்‌ என்பது விவிலியத்தின்‌ மத்தேயு நற்செய்தி 2:13-23 முடிய விவரிக்கப்படும்‌ ஒரு நிகழ்வாகும்‌. இதில்‌ ஞானிகள்‌ குழந்தை இயேசுவை வணங்கிவிட்டுத்‌ திரும்பிச்‌ சென்றபின்‌ யோசேப்பும்‌ அவர்‌ மனைவி மரியாவும்‌ குழந்தையாயிருந்த இயேசு கிறித்துவோடு எகிப்து நாட்டிற்குத்‌ தப்பி ஓடிச்‌ சென்றனர்‌. ஏனெனில்‌ ஆண்டவருடைய தூதர்‌ யோசேப்புக்குக்‌ கனவில்‌ தோன்றி, குழந்தையை ஏரோது கொல்வதற்காகத்‌ தேடப்‌ போகிறானென எச்சரித்தார்‌. ஏரோது இறக்கும்வரை அவர்கள்‌ அங்கேயே இருந்தனர்‌. இவ்வாறு எகிப்திலிருந்து என்‌ மகனை அழைத்து வந்தேன்‌ என்று இறைவாக்கினர்‌ வாயிலாக ஆண்டவர்‌ உரைத்தது நிறைவேறியது என மத்தேயு நற்செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.

எகிப்துக்குத்‌ தப்பி ஓடிச்‌ செல்லுதல்‌-இரஷ்ய திருவோவியம்
படத்தின் கீழ்ப்பகுதியில் வேற்று இன தெய்வ சிலைகள் உடைவது சித்தரிக்கப்பட்டுள்ளது (17நூற்றாண்டு)

இந்நிகழ்வைப்‌ பற்றிச்‌ செவிவழிப்‌ பாரம்பரியக்‌ கதைகள்‌ பல உள்ளன. குழந்தை இயேசு எகிப்துக்குள்‌ நுழைந்தபோது அங்கிருந்த வேற்று இன தெய்வச்‌ சிலைகள்‌ உடைந்ததாகவும்‌, குழந்தையாக நோயுற்றிருந்த நல்ல கள்ளனையும்‌ அவரின்‌ தாயையும்‌ மரியா சந்தித்து அடைக்கலம்‌ பெற்றதாகவும்‌, குழந்தை இயேசு குளித்த நீரில்‌ நல்ல கள்ளனையும்‌ குளிக்கச்‌ செய்து அவரின்‌ நோய்‌ நீங்கியதாகவும்‌ கதைகள்‌ உள்ளன. மேலும்‌ எகிப்துக்குப்‌ போகும்‌ வழியில் பலரைச்‌ சந்தித்ததாகவும்‌ கூறப்படுகின்றது. அவர்களுள்‌ புனித அபரோடிசியுசு குறிப்பிடத்தக்கவர்‌ ஆவார்‌. ஆயினும்‌ இவற்றிற்கு எல்வித விவிலிய ஆதரமும்‌ இல்லை.

இந்நிகழ்வே பொதுவாக இயேசுவின்‌ பிறப்பைச்‌ சித்திரிக்கும்‌ கலை முறையின்‌ இறுதிக்‌ காட்சி ஆகும்‌. மேலும்‌, மரியா, குழந்தை இயேசு இவர்களின்‌ வாழ்வின்‌ சித்திரிப்பில்‌ மிக முக்கியமான கருப்பொருளாகவும்‌ உள்ளது.

நன்றி-ஜெகன் மாதா மலர்
 மேலே செல்ல
மேலே செல்ல
 கிறிஸ்மஸ்மலர்
கிறிஸ்மஸ் மலர்
அன்பின்மடல்-முகப்பு
அன்பின் மடல்

xmas