“மரியாளின் அமைதி”


A.C. டிசில்வா. வெலிங்டன்; ஊட்டி

நிறைமாத மகவை சுமந்தபடி ஒரு தாய் மலை நாடுகளின் நடுவில் பயணப்படும் ஒரு நிகழ்வை அமைதியின் பின்னணியாக திருஅவை நம் கண் முன் நிறுத்துகின்றது. என்றால்… சற்று யோசிப்போம் அமைதி என்பது என்ன? நமது பார்வையில் செய்யும் செயலில் இருந்து (எந்த வகை செயலாக இருந்தாலும்) விடுபட்டு ஓய்வு கொள்வதை அமைதி என்கிறோம்… ஆனால்…
எசாயா 40:1-5,9-11.ல் ஒரு பெரும் போராட்டம் ஆறுதலான கனிமொழிகளுடன், எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்பட்ட நிலையில் முடிவு பெற்றதைப் படிக்கின்றோம். போராட்டத்திற்குப் பின் அமைதி இருக்க வேண்டும் ஆனால் அங்கு ஆண்டவரின் வழியை ஆயத்தப்படுத்த - பள்ளத்தாக்கு எல்லாம் நிரப்பப்படவும்; மலை, குன்று யாவும் தாழ்த்தப்படவும்; கோணலானது நேராக்கப்படவும்; கரடு முரடானவை சமதளமாக்கப்படவும் குரலொளி ஒன்று முழங்குகின்றது. (எசாயா 40:3-4) ஆக, ஆண்டவரால் ஆசி பெற்றவர்கள் அவருடைய குரலுக்கு கீழ்ப்படிந்து செயல்படுவதை அமைதி என்று ஏற்றுக்கொள்வதா?.

ஒவ்வொரு போராட்டத்தின் பின்புலமாக ஒரு நம்பிக்கையும் அதனால் ஏற்படும் எதிர்பார்ப்பும் நிச்சயம் இருக்கும். நமது நம்பிக்கையும் - எதிர்பார்ப்பும் ஆண்டவரின் இரண்டாம் வருகை என்று திருத்தொண்டர் பேதுரு ஆணித்தரமாக கூறுகின்றார். ஒரு கிறிஸ்தவனுக்கு இதில் மாற்று கருத்து இல்லை; அதேவேளை இரண்டாம் வருகையை எதிர்பார்த்திருக்கும் நம்மை அவர் மாசு மறுவற்றவர்களாய், நல்லுறவு கொண்டவர்களாய் இரண்டாம் வருகையைக் காணும் வகையில் முழுமுயற்சி செய்யுங்கள் (2 பேதுரு 3:14) என்கிறார். அந்நாள் வரும் வரை, ஓய்வும் தொய்வும் அற்ற முழு முயற்சிகள் தேவை என்று நினைவு படுத்துகின்றார். பேதுரு நமக்கு ஓய்வு - அமைதி என்பது நமது நம்பிக்கையைக் கைக்கொள்ளும் முழு முயற்சி என்கிறார்.

நற்செய்தியில்

மனிதராய்ப் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானைவிடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை. (மத்தேயு 11:11) என்று இயேசுவால் சிறப்பு பெற்ற யோவான்: இடர்பாடுகள் நிறைந்த பாலைவனத்தில் எளிய வாழ்வை வாழ்கின்றார். . அவர், அங்கு முதல் வாசகத்தில் கேட்டதைப் போல் மக்களை நேர்வழிப்படுத்த அழைப்பு விடுத்துக்கொண்டு இருக்கின்றார் .

ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பார்" என யோவானால் பறை சாற்றப் பெற்ற (மாற்கு நற்செய்தி 1:8) இயேசு கிறித்து அமைதியைப் பற்றி பின்வருமாறு யோவான் நற்செய்தி 14:27.ல் அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்; என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன். நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல. நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம்; மருள வேண்டாம்.என்று கூறுகின்றார்… அப்படியானால்…

முடிவாக அமைதி என்பது என்ன?... திருஅவை சூசை, அன்னை மரியாள் இவர்களின் இன்னல் மிகுந்த நெடும் பயணத்தை அமைதியின் அடையாளமாக்குகிறது. நம்பிக்கை சார்ந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் முழு முயற்சிகளை - செயல்களை அமைதி போல் காட்சிப்படுத்தப் படுகின்றன. நற்செய்தியில் வாழும் இடம், இடர்மிகு பாலை நிலமே ஆனாலும் விழிப்போடு முழு முயற்சியோடு வாழும் வாழ்க்கையை வாழ வேண்டும் என வாழ்ந்து காட்டுகிறார் திருமுழுக்கு யோவான். ஆவியால் திருமுழுக்கு கொடுப்பவராகவே இயேசு கிறிஸ்து இருந்தாலும், அவரே அவர் தரும் அமைதி உலகம் தருவதைப் போன்றது அல்ல என்கிறார்.
பின் எது அமைதியாக இருக்கும் …?. ஒரு சிறு கதை வழியாக நம் மனித சிந்தனைகளில் வழியில் யோசிப்போம்.

ஒரு அரசருக்கு அமைதியை எப்படிக் காண முடியும்?.. என சந்தேகம் உண்டாகின்றது. அவர் ஓவியர்களை அழைத்து அமைதியை ஓவியமாக காட்சிப்படுத்தக் கட்டளை இடுகின்றார். கொண்டுவரப்பட்ட ஓவியங்களில் சிறந்தது என மூன்று ஓவியங்கள் அவர் முன் காட்சிக்காக வைக்கப்படுகின்றன. முதல் இரண்டு ஓவியங்கள் இயற்கையின் வண்ணங்களையும் படைப்புகளின் சிறப்பையும் கண் முன் நிறுத்தின இருந்தும் அரசன் அவ்விடம் விட்டு நகர்ந்தான். அடுத்து கண் முன் நின்ற மூன்றாவது ஓவியத்தில் ஆர்ப்பரிக்கும் உயர்ந்த அருவி, இடியும் மின்னலும் வெளிப்படுத்தும் வானம், அருவியின் கரையோரத்தில் காற்றில் ஆடும் உயர்ந்த மரம் என பயமுறுத்தும் நிலைக்கு அதில் வரையப்பட்டிருந்ததைக் காண்கின்றான்.

யார் இதை வரைந்தது?.. என்றான் மன்னன். முன் நிறுத்தப்பட்ட ஓவியரைப் பார்த்து அமைதியை வரையச் சொன்னால் பயத்தை பதிவு செய்திருக்கின்றீர்? என்று கேட்டான். அதற்கு ஓவியர் ஓவியத்தை முழுமையாக பாருங்கள். அதோ அந்த மரக்கிளையில் தன் குஞ்சுகளை பாதுகாத்த வண்ணம் கூட்டில் அமர்ந்திருக்கும் தாய்ப்பறவையின் கடமையையும் தைரியத்தையும் அது வெளிப்படுத்தும் அதன் நம்பிக்கையின் அமைதியையும் உற்றுப் பாருங்கள் என்றான். மேலும், உலகம் தன் வழியே பயணித்துக் கொண்டேதான் இருக்கும்; நாம் தான் பொறுப்புடன் நமது வழியை- வாழ்கையை கடந்து செல்ல வேண்டும் இந்த தாய் பறவையின் அமைதியைப் போல… என்று பதில் தந்தான். மகிழ்ந்த அரசன் பரிசுகளால் அவனை மகிழ்வித்தான்.

எத்தகைய சூழ்நிலையிலும் தன் சிறகுகளின் நிழலில் குஞ்சுகளை பராமரித்து பாதுகாக்கும் தாய்ப் பறவை அந்தச் சூழலிலும் அமைதியாக விழிப்போடு இருந்து கடமைகளை நிறை மனதோடு முழுமையாக செய்து முடித்ததே முழு அமைதியை அதற்குத் தந்தது.


1) இயலாத நிலையிலும் இதைத்தான் அன்னை மரியாளும் சூசையப்பரும் அரசகட்டளைக்கு கீழ்ப்படிந்தவர்களாக செயலாற்றினார்கள். இறைவாக்குப்படி பெத்தலகேம் உலகின் ஒளியைக் கண்டது.
2) பாலைவனம் ஆனாலும் பயமின்றி திருமுழுக்கு யோவான் செயல்பட்டதால் மீட்பரின் முன்னோடி என்று அறியப்பட்டார.
3) தூய ஆவியால் திருமுழுக்கு தரும் வல்லமை படைத்த இயேசு கிறிஸ்துவாக இருப்பினும் கெத்சமனே கற்றுத்தந்த “என் விருப்பம் அல்ல உமது விருப்பப்படியே ஆகட்டும்” என்ற தாரக மந்திரம் தந்தையே என் ஆவியை உமது கரங்களில் ஒப்படைக்கின்றேன் என்ற நிலைக்கு உயர்த்தப்பட அவருக்கு உறுதியைத் தந்தது.

உலகம் மன்னிப்பையும் மீட்பையும் அதனால் அமைதியையும் கண்டது.

வாருங்கள், அமைதி என்பது நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் உள்வாங்கி முழு முயற்சியுடன் நிறைவேற்றுவதில் தான் நிலை கொண்டு உள்ளது என்பதைப் புரிந்து கொள்வோம். வாழ்வு நிலை தாய்பறவைக்கு அமைந்தது போல், திருமுழுக்கு யோவானுக்கு நிகழ்ந்ததைப் போல் நமக்கும் மாறுபட்டுக் கொண்டே இருக்கும். “ இருந்தும் என் விருப்பமல்ல உமது விருப்பமே” என்று நாம் அதை கடந்து கொண்டே இருக்க வேண்டும் - அதுவே அமைதி, அதுவே அமைதி நாயகன் தரும் மாறுபட்ட அமைதியும் ஆகும்.

அமைதியின் நாயகனை அவர் தரும் மாறுபட்ட அமைதியுடன் அன்புடன் அரவணைப்போம்.

 மேலே செல்ல
மேலே செல்ல
 கிறிஸ்மஸ்மலர்
கிறிஸ்மஸ் மலர்
அன்பின்மடல்-முகப்பு
அன்பின் மடல்

xmas