பிறப்பு மகிழ்வே

Image

ஓவ்வொரு குழந்தையும் மண்ணிலே பிறப்பது தெய்வத்தாலேயே. மனிதர்களின் விருப்பத்தால் மட்டுமல்ல, இறைமகனது திட்டத்தாலேயே பிறக்கின்றது. அவரது திட்டம் நிறைவேற மண்ணிலே தான் படைத்த மனிதர்களை பயன்படுத்திக் கொள்கின்றார். இத்தகைய தெய்வீக பிறப்பாலே மனிதர்களுக்கு மாத்திரம், தன் சாயலை கொடுத்து, உங்களை தெய்வங்கள் என்றேன் என்கின்றார் இறைமகன் இயேசு. யோ 10: 34

இத்தகைய பிறப்பு மகிழ்ச்சியான ஒன்றே. இதனை தான் போதித்த போது எடுத்துக்காட்டிற்காய் கையாண்ட உதாரணத்தில் கூட விவரிக்கின்றார். யோ 16: 21 பிள்ளையைப் பெற்றெடுக்கும் போது தாய் தனக்குப் பேறுகாலம் வந்துவிட்டதால் வேதனை அடைகிறார். ஆனால் பிள்ளையைப் பெற்றெடுத்த பின்பு உலகில் ஓரு மனித உயிர் தோன்றியுள்ளது என்னும் மகிழ்ச்சியால் தம் வேதனையை அவர் மறந்து விடுகிறார்.

பிறப்பு மகிழ்வானதே. குழந்தைகள் பிறப்பினை கொண்டாடுகின்றோம். மகிழ்ந்து பேருவகை கொண்டு, இனிப்பு வழங்கி முதல் பிறந்த நாளை குழந்தையை தந்த இறைவனுக்கு மொட்டையடித்து காது குத்தி கொண்டாடி விருந்துண்டு மகிழ்வது என்பது காலமாக இருந்து வருகின்ற பழக்கமாய் உள்ளது.

இத்தகைய மகிழ்வு குழந்தைகளின் வளர்ச்சியில் இல்லாது போவதற்கான காரணம் என்ன? வளரும் வயதில் 500 முறை சிரித்து மகிழ்கின்ற ஒரு குழந்தை, வளர்ந்தப் பின்னர் 50 முறைகூட சிரிப்பது இல்லை என புள்ளிவிவரம் சொல்லுகின்றது என்றால் அதனுடைய காரணம் தான் என்ன? என்ன காரணத்தினால் பிறப்பு பின்னொரு காலத்தில் பாரமாகிப் போகின்றது?

வளரும் குழந்தைக்கு விழுமியங்கள் தவறாக விதைக்கப்படுகின்றன என்பது ஒரு குற்றச்சாட்டு. அதனோடு இன்றையச் சூழலில் பெற்றோர் இருவருமே உழைக்கப் போவதால் அவர்களுடைய முன்மாதிரிகை குழந்தைகளுக்கு கிடைக்கப் பெறுவதில்லை என்பதும் ஒரு குற்றச்சாட்டு.

“எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தையாவது அன்னையின் வளர்ப்பிலே” என்ற பாடலின் வரிகள் காதுகளில் ரீங்காரமிடுகின்றது. இன்றைக்கு படிப்பு பணம் கைநிறைய சம்பாதிக்க வேண்டும் என்பதால், பொருளாதாரத்தை காரணம் காட்டி இருவரும் உழைக்கப் போவதால், பல குடும்பங்களில், குழந்தைகள் பெற்றோரைப் பார்ப்பது என்பதுவே அரிதாகிப் போகின்றது. இதனால் பிள்ளைகளுக்கு முன்மாதிரிகை என்பது சின்னத்திரையில், வெள்ளைத் திரையில் வரும் பிரபலங்களும், விளையாட்டு வீரர்களும் தான். (விளையாட்டு என்றால் அது ஓன்றே ஓன்றுத் தான் என்ற நிலை பாரதத்தின் தலையெழுத்தாய் மாறிப் போனதும் அவலமானதே)

நாட்டு நடப்பினைப் பார்க்கும் போது, இன்று பிரதானமாக பணமே தலையெடுத்து நிற்கின்றது. சம்பாதிக்க வேண்டும். பணத்தினை கடின உழைப்பின் வழி சம்பாதிக்க வேண்டும் என்ற நியதியில்லாது எப்படி வேண்டுமென்றாலும் சம்பாதிக்கலாம் என்ற நிலை விழுமியங்களை விழுங்கி விட்டதோ என்று எண்ணத் தோன்றுகின்றது. இதனால் தெய்வபயமும் இன்றி, ஓழுக்கமும் இன்றி, பணமே குறியாக இருந்து வருவதால் யாரை ஏமாற்றி, யாரை சுரண்டி தின்று கொழுக்கலாம் என்ற நிலையே நமது நடப்பாக இருந்து வருகின்றது. இத்தகைய மதிப்பு இல்லாதவற்றிக்கு இன்றைக்கு பிள்ளைகளும் தள்ளப்படுவதால், எப்பொழுதும் படி படியென்று அவர்களை சிறையிலிட்டு துன்புறுத்தக் கூடிய நிலையைப் பார்க்கின்றோம். சிறையைவிட கேவலமாக சில கல்வி நிறுவனங்கள் பணத்தை மையப்படுத்தி குழந்தைகளை மிருத்தன்மைக்கு வளர்த்தெடுப்பதை பார்க்கும் போது, மீண்டும் பாரதி வந்து ஓடிவிளையாடு பாப்பா. கூடி விளையாடு பாப்பா. சாதிகள் இல்லையென்று சொல்லுப் பாப்பா. பயமின்றி இரு பாப்பா. ஓங்கி மிதித்து விடு. காரி உமிழ்ந்து விடு பாப்பா என்று சொன்னால், அவருக்கு மனித குலம் அரிவாளோடு அல்லது துப்பாக்கியோடு பரிசு கொடுக்குமோ என்று நினைக்கத் தோன்றுகின்றது.

கிறிஸ்துவின் பிறப்பு இடையர்களுக்கு மகிழ்ச்சியானதாக இருந்தது. கீழ்திசை ஞானிகளுக்கு மகிழ்வினை தந்தது. பிறருக்கு மடமையாக இருந்தது. உலகம் தலைவராக்க விரும்பினாலும், தன்னை சிலுவையில் அறைந்து கொல்லப் பார்க்கின்றது என்ற போதிலும், பெற்றோர் தந்த விழுமியத்தால் பிறர் மகிழ தன்னை கையளித்தார். மற்றவர்களை சுரண்டி வாழ்வோரை கண்டித்தார். புறக்கணித்த மனிதர்களை ஒன்று கூட்டினார். மனிதத்தை மதிக்காதவர்களுக்கு ஐயோ கேடு என்று சாடினார். எழுச்சி தந்து, புரட்சியை உருவாக்கினார். சிலருக்கு சாட்டையடியாகவும், மிக பலருக்கு மகிழ்வாகவும் இருந்தது. தன்னுடைய பிறப்பின் நோக்கத்தை நிறைவு செய்ததோடு, நம்மையும் அத்தகைய நோக்கத்தோடு வாழ அழைத்தார். இன்று பிறப்பு பாரமாகிப் போனது என்றால், படைத்தவரால் அல்ல, படைப்புகளாகிய நம்முடைய தரம் கெட்ட நடத்தையாலேயே என்பதனை உணர்ந்து, நம்மை திருத்தி தரணியை வாழச் செய்வோம். கிறிஸ்து இயேசு வழியாக நாம் அத்தனை பேரும் நல்லது செய்து வாழ்வதற்காகவே படைக்கப்பட்டு உள்ளோம் என்பதனை உணர்ந்து, நல்லது செய்து நானிலம் மகிழச் செய்வோம். எபே 02: 10

சுயநலங்கள் வேரறுக்கப்பட்;டு, பொதுநலம் பேணப்படும் போது மகிழ்வு நமதாகும். பிறருக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்ட அத்தனை பேரும், தங்களது பிறப்பினை கொண்டாடியிருக்கின்றனர் என்பதுவே உண்மை. அன்னை மரியாள் காட்டும் வாழ்வும் அதுவே. தரணி சிறக்க வியாகுலங்களை எல்லாம் உள்ளத்தில் ஏற்று. சிந்தித்தார்கள். புரிந்து கொள்ள முடியாத நிலையிலும் உடன் பயணித்து மீட்பின் திட்டம் நிறைவேற துணை நின்றார்கள். இதனால் அவர்களின் பிறப்பு மகிழ்வை தந்தது. திருச்சபையும் இன்று அவர்களை நினைத்து மகிழ்கின்றது.

தனக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும். வளனார் இறைதிட்டத்திற்கு பணிந்ததால், மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் ஏற்று, மீட்பின் திட்டத்தை நிறைவு செய்ய உதவினார். அவர் நீதிமான் என்று போற்றப்பட்டார். திருச்சபையின் வளர்ச்சிக்கு வித்திட்ட அத்தனை பேரும் தங்களது பிறப்பால் தான் மகிழ்வு கொண்டதோடு, பிறந்த பிரபஞ்சத்தையும் மகிழ்வித்தனர். நமக்கு நீட்டித்து தரப்பட்டுள்ள வரும் காலமும் நம்முடைய பிறப்பை கொண்டாடுவதோடு, நம்முடைய பிறப்பால் நம்முடைய சாதி, குடும்பம், மதம், இனம் குலம் கோத்திரம் என்ற குறுகிய வட்டத்தை விடுத்து, பிரபஞ்சம் மகிழச் செய்வோம். இதற்காய் நாம் எடுக்கும் முயற்சிகள் அனைத்தையும் உடன் இருந்து வழிநடத்தும் இறைவன் வெற்றி பெறச் செய்வார். அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த கிறிஸ்து பிறப்புப் பெருவிழா நல்வாழ்த்துக்கள்.   

மறைத்திரு அமிர்தராச சுந்தர் ஜா