கிறிஸ்துமஸ்க்கு தயாரா?

Mary & Jesus நீங்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட தயாரா? இந்த நாட்களில் அநேக மக்கள் கேட்கும் கேள்வி இது…. யாராவது உண்மையில் தயாராக இருக்கிறோமா? இன்னும் நிறைய காரியங்கள் இருக்கிறது. வீட்டுக் காரியங்களை எல்லாம் செய்வதில் முழ்கிவிடுகிறோம். ஆனால் உண்மையிலேயே நிறைய மக்கள் கொண்டாட வேண்டிய நாளான்று சோர்ந்து போய்விடுகிறார்கள்.

உண்மையில் நாம் நினைப்பது நமக்கு ஒரு முழுமையான, சரியான விழாவை கொண்டாட வேண்டும் என்பதே. நாம் முழுமையாக தயாராகும் வரை ஆண்டவர் காத்திருப்பதில்லை. மாறாக, முதன் முறையாக அவர் பிறந்தது போலவே இப்பொழுதும் ஒவ்வொரு உள்ளத்தில் அன்பையும் மகிழ்ச்சியையும் தர விரும்புகிறார்.

லூக்கா நற்செய்தியில் உள்ளதுபோல இயேசுவின் பிறப்பிற்கு மரியாள் தயாராக இல்லை. அவர் கன்னியாகவே இருந்தார். அவர் நிச்சயமாகவே இல்லை. அதனால் தான் கபிரியேல் தூதர் கேட்டபோது மரியாள் “நானோ” என்று பதிலளித்தார்.

மரியாள் தான் எவ்விதத்திலும் சிறந்தவள் அல்ல என்று அறிந்தவர். இரண்டாயிரம் வருட காலமாக கிறிஸ்தவ பக்தி முறைகளில் நாம் மரியாளை அமல உற்பவியாக, இறைவனின் தாயாக, பரலோக, பூலோக அரசியாக, உடன் மீட்பராக அவளைப் பார்க்கிறோம். ஆனால் நிஜமான வாழ்வில் மரியாள் ஒரு எளிய படிப்பறிவில்லாத இளம் கிராமத்துப் பெண். உழைக்கக்கூடிய ஒரு குடும்பத்துப் பெண், இயேசுவின் தாயாக மாறியது, மரியாவின் விருப்பமல்ல, மாறாக ஆண்டவரின் இரக்கம்.

லூக்கா நற்செய்தியில் மரியாளின் கீழ்ப்படிதலையும், நாம் எப்படி ஆண்டவருடைய வார்த்தைகளுக்கு கீழ்ப்படிவது என்று பார்க்கிறோம். மரியாள் தாழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டார். ஆண்டவருடைய அழைப்பை ஏற்க தான் எந்தவிதத்திலும் தகுதியற்றவள் என்பதை நினைத்து மனம் குழம்பினார். ஆனாலும் கடவுளின் திட்டத்தை முழுமையாக ஏற்றுக் கொண்டார். அவர் தன்னை ஆண்டவரின் கைவேலைப்பாடாகவோ, பணிசெய்பவாளாகவோ அல்ல, மாறாக ஒரு அடிமையாக தன்னை ஒப்புக் கொடுத்தார்.; இந்த அழைப்பை ஏற்றுக் கொண்டதனால் வரப்போகும் குழப்பங்கயையும் பின் விளைவுகளையும் பொருட்படுத்தாமல் கடவுளது திட்டத்தோடு தன்னையும் இணைத்துக் கொண்டார். தன் மனதில் குழப்பங்களோடும், கேள்விகளோடும் இருந்தாலும், அதற்கும் மேலாக, “உமது வார்த்தையின்படியே எனக்கு ஆகட்டும்” என்றார். மனிதர் கண்களுக்கு கடினமான காரியங்களும் ஆண்டவரால் கூடும் என்று அறிந்திருந்தார்.

மரியாள் மகிழ்ச்சியில் பாடிய பாடல் முழவதும் இயேசுவின் பிறப்பினால் உலகிற்கு கிடைக்கப்போகும் மீட்பைக் குறித்து ஆண்டவரை புகழ்ந்து பாடும் திருப்பாடலாக அமைந்திருக்கிறது. இயேசு மெசியாவாக வரும்பொழுது புரட்சிகரமான, தனித்தன்மை நிறைந்தவராக இருப்பார். அவர் வருகையின் மூலம் தாழ்நிலையில் உள்ளவர்கள் உயர்த்தப்படுவர். செருக்குற்றோர் தாழ்த்தப்படுவர். பசித்திருப்போர்க்கு உணவு வழங்கப்படும். ஆணவமிக்கோர் சிதறிக்கப்படுவர் என்ற கருத்துக்களை தீர்க்க தரிசனமாக வழங்குகிறது. அமைதியின் அரசர், கடவுளின் மகன், உலக மீட்பர் போன்ற பட்டங்கள், அரசர் அகஸ்டஸ் சீசருக்கு உரியதல்லை. அது இயேசுவுக்கே உரியது. இயேசு யூதருக்கு மட்டுமே உரியவரல்ல. மாறாக புறவினத்தார் அனைவருக்கும் உரியவர்.

மரியாளின் பாடல் நமக்கு சொல்வதெல்லாம், கிறிஸ்துமஸ் என்பது கிறிஸ்து பிறந்தது மட்டுமல்ல, அதைவிட மேலாக அவர் பிறப்பு இந்த உலகத்தில் நீதி, அமைதி, அன்பு மற்றும் இறையாட்சியை நிறுவுவதே. கொண்டாட்ங்களின் மூலம் நாம் நம் வாழ்வின் கடினமான உண்மையின் நிலையிலிருந்து தப்பிக்க முயல்கின்றோமா? மரியாள் உண்மையிலிருந்து தப்பித்து ஓடவில்லை. மரியாள் ஒரு எளியகுடும்பப்பெண். தன் குடும்பத்தார் யாருடைய உதவியில்லாமல், குழந்தையைப் பெற்றெடுத்தார். மரியாள் பிறருடைய அன்பையும் இரக்கத்தையும் பெற்றுக் கொண்டார்.

பல நேரங்களில் நம் சுயநலமாகவே வாழ்ந்து வருகின்றோம். பிறருடைய பிரச்சினைகளை மறந்து விடுகின்றோம். இந்த கிறிஸ்துமஸ் காலத்தில் மரியாளின் பாடல் கூறும் கருத்துக்களைச் சிந்திப்போம். இயேசுவின் போதனைப்படி வாழ அழைக்கப்பட்டிருக்கும் நாம் தொண்டு புரிபவர்களாக வாழவும், நம் அன்பு உள்ளதை பிறரோடு தாராளமாக பகிர்ந்து வாழவும், துன்பப்படுவோரின் நண்பர்களாக, அவர்களோடு இணையவும் முடிவு எடுப்போம்.

மரியாளின் பாடலிருந்து நாம் அருமையான கருத்துக்கு ஒரு புதிய வழியைப் பார்ப்போம். இந்த புதிய வழியானது நமது அன்றாட வாழ்க்கையையும், எதிர்பார்ப்புகளையும் தலைகீழாக மாற்றிவிடுகிறது. உண்மையிலே இது சந்தோஷமானது. நம்மை மறுரூபமாக்குகிறது. இது நம்மை பிறரோடும், ஏழைகளோடும் அன்பை பகிர்ந்து வாழ அழைக்கிறது.

ஆகவே கிறிஸ்துமஸ் கொண்டாட நாம்; தயாரா? கிறிஸ்துவின் விழுமியங்களை உணர்ந்தவர்களாக அவர் பிறப்பின் உண்மையான பொருளை புரிந்துக் கொண்டு, இக்கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடினால் இயேசுபாலன் நம் உள்ளத்தில் வந்து பிறக்கமுடியும். வாருங்கள் அர்த்தமுள்ள கிறிஸ்து பிறப்பு பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்வோம்.

திருமதி மேரி கிறிஸ்டோபர்- சென்னை 24