நம்பிக்கை நட்சத்திரம்
விண்ணின்று இம்மண்ணில் பிறந்திட்ட
விண்ணவனே எம் இயேசு பாலகனே!
மாமரி கருவில் மாபரன் அருளால்
மகனாய் உதித்திட்ட இறைமகனே!
பூபாலனாகப் பூத்திட்ட பூந்தளிரே
புன்னகை வேந்தனே - நீரே
புவியோரின் நம்பிக்கை நட்சத்திரம்!
இளமை தேய்பிறையாய் என்றென்றும்
வாழ்வை அலைகடலாய் ஏற்று
கண்ணீரில் நிதமும் நீராடி
சோகத்தில் என்றும் கால்பதிக்கம்
இளம் மொட்டுக்களுக்கும்
கைவிடப்பட்ட கைம்பெண்களுக்கும்
நீரே நம்பிக்கை நட்சத்திரம்!
சிறுபான்மை இனம் அழிய
சினத்தோடு செயல்பட்டு
சிறுபான்மையினரின் நிர்வாக
உரிமைகளை நிதமும் சீரழித்து
வரவோர் மனம் மாறி
நற்செயல்கள் புரிந்திட விரும்புவோருக்கு
நீரே நம்பிக்கை நட்சத்திரம்!
இரக்கம் தூய்மை நட்பு நேர்மை
பகிர்வு வாய்மை அன்பு பண்பு
சமத்துவம் சமாதானம் சமரசம் என்னும்
நல்மதிப்பீடுகளின்படி வாழச் செய்து
புதிய இலட்சியங்களை அடைந்து
புது சுவாசம் பெறச் செய்யும்
நீரே நம்பிக்கை நட்சத்திரம்!
சுயநலப் போர்வையில் சிக்கி
"பகிரா" மனங்கொண்டு
தான் என்ற அகந்தையில்
வாழ்வதை தவிர்த்து-நிதம்
பொறுப்புள்ள மனிதர்களாய்
பரமனின் வழியில் பகிர்ந்து வாழ
விழைவோருக்கு இயேசு பாலகனே
நீரே நம்பிக்கை நட்சத்திரம்!