அன்பின் அரசன்

Image

அன்பே கடவுள் என்று நம் வாழ்வில் பிறந்தது முதல் நம் தாய் தந்தை சொல்வதையும், வேதபுத்தகமும் எடுத்துரைப்பதை நாம் காணலாம். ”வாக்குறுதி மனு உருவானார்”. கவலை, கண்ணீர் ஏக்கத்தோடு ”எங்கள் வாழ்க்கையில் ஒளி ஏற்ற யாராவது வருவார்களா?” என்று காத்திருந்த இஸ்ரயேல் மக்களுக்கு ஒரு செய்தி தெரிவிக்கப்பட்டது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக வானத்தூதர்கள் வழியாக மக்கள் மத்தியில் மகிழ்ச்சி தெரிவிக்கப்பட்டது. அன்று தெரிவிக்கப்பட்ட மகிழ்ச்சி என்ற ”விதை” இன்று வரையிலும் பூத்து குலுங்கி நற்மணம் வீசிக் கொண்டிருக்கின்றன.

மனிதனால் கொடுக்க கூடிய, தரக் கூடிய அன்பு தன்னலம் கொண்டது. பொய்யான அன்பு. ஆனால் கடவுள் மக்கள் மீது வைத்த அன்பு நிரந்தரமானது. அசைக்கமுடியாதது. யாராலும் செய்ய முடியாத ஒரு செயல். அந்த அன்பின் வடிவமே இந்த விழாவின் மையம் ஆனது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக இஸ்ரயேல் நாட்டில் எவ்வளவோ ஆண் குழந்தைகள் பிறந்தன. பெரிய பெரிய வசதியான குடும்பத்திலும், மக்களை வழி நடத்தும் அரசர்கள் மற்றும் அதிகாரிகள் குடும்பத்திலும் குழந்தைகள் பிறந்தன. அந்த குழந்தைகளின் சத்தம் அந்தந்த வீட்டில் மட்டுமே கேட்டது.

ஆனால் ஒரு ஏழை தச்சன் , உழைத்தால் தான் உணவு என்ற நிலையில் இருந்த குடும்பத்தில் பிறந்த குழந்தையின் சத்தம் மட்டும் உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது.

chruch going children அப்போது இஸ்ரயேல் நாடு பெண்களிடையே ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. வாக்குறுதி கொடுக்கப்பட்ட ”மெசியா” என் வயிற்றின் மூலமாகத் தான் பிறப்பார் என்று சமுதாயத்தில் வசதி படைத்த பெண்கள் நான் அப்படி இப்படி என்று பொறாமை கொண்ட நேரத்தில், கடவுள் பொறுமையும் தாழ்ச்சியும் கொண்ட ஒரு ஏழை பெண் மரியா வழியாக அதுவும் ஒரு மாட்டு தொழுவத்தில் கொசுக்கள், நாற்றங்கள் மத்தில் உறைய வைக்கும் கடும் குளிரில் வாக்குறுதி கொடுக்கப்பட்ட மழலை பிறந்தது. அக்குழந்தையின் சத்தம் எல்லோரையும் ஈர்த்தது. மக்களின் வாழ்வில் ஒரு திருப்பத்தை தந்தது அந்த சத்தமே...

இந்த மழலையின் சத்தம் நம் உள்ளத்திலும், குடும்பங்களிலும் கேட்க வேண்டுமா? வாரும் செல்வோம் ”புதிய உடைகள் அணிந்து அல்ல” மாறாக எளிய புது உள்ளத்தோடு அன்பின் அரசன் ஆண்டவரை நோக்கி .....

அருட்தந்தை எ.ஜோசப் HGN,பாத்திமா அன்னை ஆலயம், கோடம்பாக்கம், சென்னை