கிறிஸ்து பிறப்பு விழா - பகிர்வின் விழா
கிறிஸ்து பிறப்பைப் பற்றி திருவிவிலியத்தில் நாம் வாசிக்கின்ற சம்பவங்கள் பலவற்றிலும், பகிர்வு என்ற உன்னத பண்பு மேலோங்கி இருப்பதைக் காண்கிறோம். மீட்பு திட்டத்தின் ஒருபகுதியாக, தமது ஒரே மைந்தனை இவ்வுலகில் மனிதனாகப் பிறக்கச் செய்தபோது, இறைதந்தை தமது அன்பை உலக மாந்தரோடு பகிர்ந்து கொண்டார். இறைமகன் இயேசு பிறந்த செய்தியை வயல்வெளியில் அறிவித்த வானதூதர்கள், தங்கள் மகிழ்ச்சியை இடையர்களோடு பகிர்ந்து கொண்டார்கள். தீவனத்தொட்டியில் கிடத்தியிருந்தக் குழந்தையைக் கண்டஆயர்கள், அந்த நற்செய்தியை தங்கள் அயலாருடன் பகிர்ந்து கொண்டார்கள். நெடுந்தொலைவிலிருந்து விண்மீனை பின் தொடர்ந்து வந்த ஞானியர், தங்கள் உடைமைகளை திருக்குடும்பத்தோடு பகிர்ந்து கொண்டார்கள். எனவே "பகிர்ந்து வாழ்தல்" என்ற கருத்து கிறிஸ்துமஸ் விழாவின் மையச் செய்தியாக அமைகிறது.
ஆண்டுக்கொரு முறை உலகெங்கும் உற்சாகமாகவும், ஆனந்தமாகவும் கொண்டாடப்படுகின்ற கிறிஸ்துமஸ் விழா நாட்கள் நெருங்கி வருகின்ற நேரத்தில், நம்முள் எழுகின்ற எண்ணங்கள் எல்லாம் "புத்தாடை, அணிகலன், அலங்கார குடில் - தோரணங்கள்- வண்ண விளக்குகள், கேக் முதலான தின்பண்டங்கள் -சுவையான விருந்து, நம் மனதிற்கு உகந்தோருக்கு பரிசுகள்" ஆகியன பற்றிய இருப்பது இயல்பே. நமது நெருங்கிய உறவினர்- நண்பர்களோடு நாம் பட்சணங்களையும் பரிசுளையும் பரிமாறிக் கொள்வதில் அடிப்படையாக இருப்பது, இந்த பகிர்வு என்றே கருத்தேயாகும். ஆனால் நல்ல வசதி- வாய்ப்புக்களோடு வாழுகின்ற நமது சொந்தங்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்வதோடு நமது "பகிர்வு" நின்றுவிடுகிறதா அல்லது அதையும் தாண்டிச் சென்று, நம்மைவிட தாழ்நிலையில் இருப்போரையும் நமது "பகிர்வு" கொண்டாட்டத்தில் இணைத்துக் கொள்கிறோமா?
கிறிஸ்து பிறப்பின் நற்செய்தியை இடையர்களுக்கு அறிவித்த வானக தூதரணிகள், "உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உன்டாகுக!" என்ற பாடினார்கள். பகிர்ந்து வாழுகின்ற பண்பு கடவுளுக்கு விருப்பமான, அவருடைய மனதிற்கு உகந்த நற்செயல் என்று திருவிவிலியம் பல இடங்களில் எடுத்துச் சொல்கிறது. திருத்தூதர் பவுல் எபிரேயருக்கு எழுதிய மடலில் "நன்மை செய்யவும் பகிர்ந்து வாழவும் மறவாதீர்: இவ்வகை பலிகளே கடவுளுக்கு உகந்தவை" (எபி 13:16) என்று கூறுகிறார். தனக்கு விருப்பான பகிர்வு குறித்து இறைவாக்கினர் எசாயா வாய் மொழியாகக் கடவுள் பேசும்போது, "பசித்தோருக்கு உங்கள் உணவை பகிர்ந்து கொடுப்பதும், தங்க இடமில்லா வறியோரை உங்கள் இல்லத்திற்கு அழைத்து வருவதும், உடையற்றோரைக் காணும்போது இவர்களுக்கு உடுக்கக் கொடுப்பதும், உங்கள் இனத்தாருக்கு உங்களை மறைத்துக் கொள்ளாதிருப்பதும் அன்றோ நான் விரும்பும் நோன்பு"(எசா 58:7) என்று மொழிகிறார்.
இதே கருத்தினை வலியுறுத்தும் விதமாக "நாங்கள் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்ட கூட்டத்தினருக்கு மறுமொழியாக திருமுழுக்கு யோவான் "இரண்டு அங்கிகளை உடையவர் இல்லாதவரோடு பகிர்ந்து கொள்ளட்டும்; உணவு உடையவரும் அவ்வாறே செய்யட்டும்" (லூக்கா 3:11) என்று சொன்னார். பகிர்வின் சிறப்பினை எடுத்துரைக்கும் விதமாக திருத்தூதர் புனித பவுல் "நல்லதைச் செய்து நற்செயல்கள் என்னும் செல்வத்தை சேர்ப்பார்களாக; தங்களுக்குள்ளதை தாராள மனத்தோடு பகிர்ந்தளிப்பார்களாக " (1 திமே 6:18) என்றும் "மனவருத்தத்தோடோ, கட்டாயத்தினாலோ கொடுக்க வேண்டாம்; முகமலர்ச்சியோடு கொடுப்பவரே கடவுளின் அன்புக்கு உரியவர்" (2 கொரி 9:7) என்றும் தெளிவாகக் கூறுகிறார்.
ஆம் அன்பர்களே! கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு "பகிர்தல்" நல்லதொரு பொருளையும் குறிக்கோளையும் தருகின்றது. நமது நெருங்கிய சுற்றமும்- நட்பும் சார்ந்த சிறிய வட்டத்திற்கும் அப்பாற்பட்டு நம்மிலும் தாழ்நிலையில் உள்ளவர்களை, எளியவரை இன்றியமையா தேவையோடு இருப்பவரை கருத்தில் கொண்டு அவர்களோடு பகிர்ந்திட நாம் முன்வரும் போது கிறிஸ்து பிறப்பு விழாவின் கொண்டாட்டங்கள் நமக்கு மன நிறைவும், மகிழ்ச்சியையும் அளித்திடும் என்பதில் ஐயமில்லை.
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்ல வாழ்த்துக்களும் உங்களுக்கு உரித்தாகுக.