வீதிக்கு வந்த வெண்ணிலா

Image

இம்மண்ணுலகை அழகானதாக, ஆற்றல் மிக்கதாக படைத்து பேருவகைக் கொண்ட நம் இறைவன் தன் மகனை விண்ணிலிருந்து அன்னை மரியாளின் வழியாக இம்மண்ணில் பிறக்கச் செய்த நாளே கிறிஸ்து பிறப்பு நன்னாள். இந்நன்னாளின் சிறப்பினைப் பற்றியும், கிறிஸ்து பிறப்பு விழாவினை கொண்டாடும் நாம் அனைவரும் நம் அண்டை அயலாரின் நம்பிக்கை நட்சத்திரங்களாகத் திகழ, நமது வாழ்வை எவ்வாறு அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதைப் பற்றியும் இக்கட்டுரையில் காண்போம்.


நற்செய்தி காட்டும் இயேசுவின் பிறப்பு:

இயேசுவின் பிறப்பு மாட்டுத் தொழுவத்தில் தரித்திரமாக அமைந்தது. அவரது இறப்பு கல்வாரியில் சரித்திரமாக அமைந்தது. தன்னிலமில்லா பணிவாழ்வு புனிதத் தன்மையை பறைசாற்றியது.

  • நாம் வாழ்வு பெறும் பொருட்டு...1யோவான் 4:9
  • இருளிலும் இறப்பின் பிடியிலும் இருப்போர்க்கு ஒளிதர...லூக்கா 1:78
  • நம்முடைய கால்களை அமைதி வழியில் நடக்கச் செய்ய...லூக்கா 1:79
  • பாவ மன்னிப்பால் வரும் மீட்பை அறிவிக்க...லூக்கா 1:76
  • பகைவரிடமிருந்தும் வெறுப்போர் அனைவரின் பிடியிலிருந்தும் மீட்க...லூக்கா 1:71
  • பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக...லூக்கா 2:34
  • எதிர்க்கப்படும் அடையாளமாக...லூக்கா 2:34
  • விண்ணிலிருந்து வந்த விடியலாக...லூக்கா 1:79
  • கடவுளின் அன்பின் வெளிப்பாடாக...1யோவான் 4:9
மேற்கூறப்பட்ட விவலிய சான்றுகள் இறைமகனின் பிறப்பை துள்ளியமாக எடுத்துரைக்கின்றது.

மீட்பளிக்க மண்ணகம் வந்த இயேசு:

மூவொரு கடவுளின் ஆட்சி முடிவில்லாத ஆட்சி. அவரது ஆட்சியை தொடர்ந்திட தொடர்ந்து கட்டியெழுப்ப கடவுள் தன் மகன் இயேசுகிறிஸ்துவை இவ்வுலகிற்கு அனுப்பி மீட்பை மகுடமாக முடிசூட்டியுள்ளார். இயேசுகிறிஸ்துவின் இறையாட்சியைத் தொடர்ந்து கட்டியெழுப்ப, வளர்த்திட மூவொரு கடவுள் சில இறைவாக்கினர்களை தனது திட்டத்தில் முன்கூட்டியே குறித்து வைத்து அவர்களை இறையழைத்தலால் தேர்ந்தெடுத்தார்.மாட்சி படுத்தினார். இந்த இறையழைத்தல் ஒரு மறைப்பொருள், விசுவாசத்தின் வித்து.

விசுவாசம் இன்றைய உலகிற்கு சவாலாக அமைகிறது. அறிவியலும், தொழில் நுட்பமும் கடவுளை கருவியாக பார்க்கின்றன. இயங்குகின்றன. இந்த சவாலை சரித்திரமாக்க மூவொரு கடவுள் மீண்டும் இந்த மண்ணைத் தேடிவருகிறார். பிறக்கிறார். மலர்கிறார்.

வீதிக்கு வந்த வெண்ணிலா:

கடவுளின் மைந்தர், கருணை தெய்வம், கலங்கரை தீபம், எளியோருக்கு நற்செய்தியும், சிறைப்பட்டோருக்கு விடுதலையும், குருடருக்கு பார்வையும், ஒடுக்கப்பட்டோருக்கு உரிமைவாழ்வும் பெற்றுத் தர வேண்டிய புண்ணியன் வீதிகளில், மக்கள் மத்தியில் மக்களின் அவலங்களில் கால்பதிக்காமல் மக்களின் மனங்களில் இடம் பிடிக்காமல், மக்களின் உறவில் ஒருவராயும், மக்களின் உணர்வுகளிலும் கலந்து விடுதலை தருகின்ற மீட்பராக அவதரித்தார்.
அநீதிகளாலும், அராஜகத்தாலும் மனிதமாண்பு சிதைக்கப்படும் சூழலில் ஆண்டவனே அவனிக்கு வந்து மனிதமனங்களில் குடியிருப்பது தனிமனித மாற்றத்தையும், சமூக மாற்றத்தையும் கொணரவந்தார் என்பது நிஜமாகின்றது. விடியலுக்காய் ஏக்கத்தோடு காத்திருந்த மக்களுக்கு இயேசுவின் பிறப்பு மகிழ்ச்சியைக் கொணர்ந்தது; நம்பிக்கை தந்தது.

நிறைவாக...

இன்று நம் இதயங்களில் பிறக்கும் இயேசு நம் வழியாக செயல்படுகிறார். நமது பிரசன்னம், செயல்பாடுகள், கிறிஸ்துவின் பிரசன்னமாக, செயல்பாடுகளாக அன்பை சுமந்து அமைதியை, உண்மையை, நீதியை, பகிர்வைக் கொணர்பவையாக இருந்தால் நம்மை சுற்றியுள்ள மக்கள் நம்மிலிருக்கும் இயேசுவை அடையாளமாகக் காண்பர். மேலும் தன்னலத்தால் தன்னையும் பிறரையும் அழிப்போருக்கும், புதுமை வித்தியாசம் என்று பண்பாட்டை பாழாக்குவோருக்கும், ஊடகங்களால் மனிதத்தை உருக் குலைப்போருக்கும், அநீதியால் நீதியை நிலைக்குலைய செய்வோருக்கும், இயற்கையை அழிவுக்கு இட்டுச் செல்லும் இதயமற்றோருக்கும் நாம் நம்பிக்கை நட்சத்திரங்களாய் கிறிஸ்துமஸ் விழாக்காலங்களில் ஜொலிப்போம். அப்போது உண்மையான, அர்த்தமுள்ள கிறிஸ்து பிறப்பு நாளாக இந்நாள் அமையும்.

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்ல வாழ்த்துக்களும் உங்களுக்கு உரித்தாகுக.

அருட்சகோதரி லியோ டெய்சி, மத்தியாஸ் ஆலயம், அசோக்நகர், சென்னை 83