கிறிஸ்துமஸ் – சிந்தனை

Image

“அவர் தன் தலைமகனைப் பெற்றெடுத்தார். விடுதியில் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. எனவே பிள்ளையைத் துணிகளில் பொதிந்து தீவனத்தொட்டியில்..கிடத்தினார். (லூக்.2:7)

மிகச்சர்வசாதாதணமாக ‘விடுதியில் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை’ என்று கூறிவிட்டார் லூக்கா. வழிப்போக்கருக்கெனத் தங்குமிடங்கள் அப்போது இருந்தன. இருந்தாலும், அச்சத்திரம் நிரம்பிவிட்டது; இயேசுவைத் தன் உதரத்தில் சுமந்து வரும் மரியாவுக்கும் அவள் கணவர் சூசைக்கும் இடமில்லையென்பது சிலுவையில் இயேசு தொங்கிமரிக்கும் இறுதித்தருணத்திலும் நிராகரிக்கப்பட்டார் என்பதை முன்கூட்டியே அறிவிப்பதாகும்!

ஏன், அவர் இளம் வயதிலேயே நிராகரிக்கப்படவில்லையா? ‘அவர் தமக்கு உரியவர்களிடம் வந்தார், அவருக்கு உரியவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை’ (யோவா 1:11). இயேசுவே பின்பு ஒரு நாள் கூறுவார்: ‘நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும், பறவைகளுக்குக் கூடுகளுமுண்டு, மானிடமகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை’(மத்.8:20). நாடு கடந்துபோதல், துன்பத்தால் துவளல் இதெல்லாம் இறைவனின் வழியைப் பின்பற்றுவோருக்கு வருவது வழக்கமான விதி. எனினும் நிராகரிக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட, ஓரங்கட்டப்பட்ட சூழலில் பிறந்த நேரமே கிறிஸ்துவுக்கும் கிறிஸ்துவருக்கும் காலத்தின் முழுமைபெற்ற, முற்றுபெற்ற வேளையாகும் – இறைவனின் வாக்குறுதி நேரம் – கிரேக்க மொழியில் கைரோஸ் (Kairos). வாக்களிக்கப்பட்டவர் உலகத்தின் உச்சகட்டமாக வந்துள்ளார். லூக்கா காட்டும் இயேசுவுக்குக்கூட இடமில்லா வகையில் நிரம்பியுள்ள சத்திரம் வேற்று மனிதரால் நிரம்பியுள்ள சமுதாயத்தின் பிரதிபலிப்பு; இவர்கள் எல்லோரும் ஒன்றுசேர்ந்து நல்லது எதுவும் செய்யமுடியா ஒருகூட்டம்! இத்தகைய ஒரு கூட்டத்துக்குத்தான் “பெருமகிழ்ச்சி தரும் நற்செய்தி” அறிவிக்கப்படுகிறது. இவர்களுக்குள் இருக்கும் கொந்தளிப்புகள், பதவிப்போட்டிகள், ஒருவரையொருவர் ஏறிமிதிக்க எடுக்கும் பிரயத்தனங்கள் – இவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு வருகிறது காலத்தின் முழுமை, முற்றுபெற்ற வேளை, மனித நம்பிக்கையின் ஒரே மூலம் – இயேசு கிறிஸ்துவின் பிறப்பு!

உலகம் போகும் போக்கில் இறைமகனின் வரவு மனித கவனதிற்கு வராததோ, கிறிஸ்துவின் மிக உன்னத தனித்தன்மை உதறித்தள்ளப்பட்டதோ வியப்பான ஒன்றில்லை – அங்கேதான் இடமில்லையே!

‘மாபெரும் மகிழ்ச்சி’ இறுதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. கூச்சலில், போட்டியில், கொந்தளிப்பிலிருந்து தள்ளியிருக்கும் – இவற்றால் பாதிக்கப்படாம லிருக்கும் – சிலரால்தான், மதிக்கப்பெறாதவர்களாக, இதயத்தில் ஏழ்மை யுற்றவர்களாக (மத்.5:8) இருந்த இடையர்களால் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டது!

இன்றுள்ள சூழ்நிலையில் இந்த “மாபெரும் மகிழ்ச்சி” நம்மவரிடையே நிகழ, ஒலிக்க, மதிப்புபெற நாம் அனுமதிக்கிறோமா என்பதைப் பார்க்கக் கடினமே இல்லை! திருச்சபையே சிந்திக்கத் தெரியாதவரின் கூட்டம்தானே, அதன்பின் இது, இதன்பின் அது என்று சரமாரியான சடங்குகளுக்கு அடிமையாயிருக்கும் கூட்டம்தானே என்று உலகத்தால் ஒதுக்கப்படும்போதும் நாம் நம் உயர்ந்த அழைப்பிலிருந்து திசை திரும்ப முடியுமா? நமக்கென உள்ள இலக்கிலிருந்து நம் பார்வையை – உண்மையான மனிதம் கிறிஸ்துவில் வந்துள்ள இறைவனை எதிர்கொள்வதில் மட்டுமே என்ற உண்மையிலிருந்து – அகற்ற முடியுமா?

இச்சமயத்தில்தான் நமக்கொரு செய்தி வருகிறது. கிறிஸ்துவைப்பற்றிக் கவலைப்படாத சமூகம், கிறிஸ்துவைப்போன்று புலம் பெயர்ந்து செல்லும் கோடானகோடி மக்களைப்பற்றியும் கவலைப்படவில்லை! அவர்களுக்கும் ‘விடுதியில் இடமில்லை’ – தங்கள் நாடுகளில் சுதந்திரமாய் வாழ, அடக்குமுறை, உரிமைப்பறிப்பு, வறுமை இவற்றைத் தவிர்க்க, வேற்று மனிதர் மத்தியில் அடைக்கலம் தேடிவரும்போது, நாடுகளில் புகலிடம் கேட்டு வரும்போது, அவர்களுக்கு இடமில்லை, நம் மனிதம், நாடுகளின் மனிதம் அவர்களை நம்மைப்போன்ற மனிதர்களாக, நம்மைப்போன்றே தேவைகள், நாட்டங்கள், ஆசைகள். கனவுகள் கொண்ட மனிதர்களாக, ஏற்க மறுக்கிறது; நம் உள்ளத்தில் இடமில்லை; ஊர்களிலும் நாடுகளிலும் இடமில்லை.

ஐக்கியநாடுகள் அறிக்கைப்படி, உலக அளவில் ஆண்டுதோறும் 21 கோடியே 40 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான அல்லது தரமான வாழ்வைத்தேடி, தம் சொந்த நாடுகளைவிட்டு வேற்றுநாடுகளுக்குச் செல்கின்றனர். இவர்களெல்லாம், மனித உரிமைமீறல், வறுமை, இனப்பாகுபாடு, மதவெறி போன்ற கடினமான சூழல்களால், புலம்பெயர்வதே ஒரே வழி என நினைத்துச் செயல்படும் அளவுக்கு ஓரங்கட்டபட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள். இயேசுவை ஏற்றால் மீட்பும்,சமாதானமும். இவர்களை ஏற்றால் சமுதாய முன்னேற்றம் என்பதை ஏன் மறக்கிறோம்? தங்கள் உரிமையை உணர்ந்து வெளியேறி நம்மிடம் தஞ்சம்தேடும் இவர்கள் நம் உரிமையை மதித்துத் தங்களின் முன்னேற்றத்துக்கும் நம் முன்னேற்றத்துக்கும் பாடுபட மறுப்பார்களா? தங்களின் பெருமைமிக்க பாரம்பரீயங்கள், கலைவன்மை, செயல்திறன் இவை தங்களுக்கு அடைக்கலம் தருவோருக்குப் பயன்படாமல் ஆக்கிவிடுவார்களா? மற்ற மனிதர்களுக்கும் சமுதாயங்களுக்கும் ஏற்றம், மனித உயர்வு, மனித உரிமை உண்டென்பதை மதித்து நம்மவர் நம்நாடுகளின் கொள்கைகளைத் திருத்தியமைக்க மாட்டார்களா? நாட்டின் எல்லாமக்களும் இனத்தவரும் மொழியினரும் மதத்தவரும் எவ்விதப் பாகுபாடடுமின்றி நடத்தப்படாமல் ஒருதலைப் பட்சமாய்ச்செயல்படும் நாடுகளை- அரசுகளைத் திருத்த, ஐக்கிய நாடுகள் அமைப்பில் இடம்வகுக்கப் பாடுபடமாட்டார்களா? ஒரு நாட்டில் ஒரு சாரார், ஓரினத்தார், ஒரு மொழியார், ஒரு பாரம்பரீயத்தார், ஒரு மதத்தார் புலம்பெயர முடிவெடுத்தாலும் அது உலக சமுதாயத்தையே தலைகுனிய வைக்க வேண்டுமென்பதை உணர்ந்து செயல்படத் தொடங்குவார்களா?

“விடுதியில் அவர்களுக்கு இடம்கிடைக்கவில்லை”   

அருட்தந்தை சேவியர் ராஜன் சே.ச. -தூத்துக்குடி