ஓளி பிறந்தது.

merry christmas “அக்கா இந்த சூரியா பயல பார்த்தியக்கா? ஸ்கூல டூர் கூட்டிட்டுப் போறாங்க 150ரூபா வேணும்மினு கேட்டான். இன்னிக்குத்தான் கடைசினு சொன்னான். ஆளக் காணாமே” என்றாள் கார்த்திகா.

“அய்யோ, இப்பத்தானே கார்த்திக்கா சூர்யா வந்துட்டுப் போச்சு, எங்கிட்ட வந்து அம்மா வந்துச்சான்னு கேட்டுட்டுப் போனான்”

“இந்த மனுசன் வந்துட்டா குடிக்கிறதுக்கு காசு வேணுமினு அடிச்சே வாங்கிருவாரு. சுரி நான் ஸ்கூல போயே பார்த்து கொடுத்திட்டு வர்றேன்”.

“கார்த்திக்கா, இதோ சூர்யா ஓடி வருது பாரு”

ஏன்டா சூர்யா அழுதுகிட்டே வர்ற? இந்தாட நீ கேட்ட ரூபா. வேலை செய்ற வீட்ல சம்பளத்துல கழிக்கச் சொல்லி வாங்கியாந்தேன். பத்திரமா கொண்டு கொடுத்துருடா”

“போம்மா, ஜெனி டீச்சரு எனக்காக அஞ்சு மணிவரைக்கும் இருந்துட்டு இப்பத்தா பஸ்ல ஏறி போறாங்க. நான் எப்படி கொடுப்பேன். நாளைக்கு என்னயை விட்டுட்டுப் போயிருவாங்க” என சூர்யா அழ..

“ சூர்யா அழாதேடா, இப்ப என்ன உனக்கு காசு அவங்கிட்ட கொடுக்கனும் அம்புட்டுத் தானே மூணு ஸ்டாப் தள்ளி தானே அவங்க வீடு உனக்குத் தான் தெரியுமில்ல வா நம்ம ரெணடமு பேரும் போய்கொடுத்துட்டு வருவோம்.” ஏன கார்த்திகா சொன்னதும், சூர்யாவுக்கு ரொம்ப சந்தோசமாயாடுச்சு. சரி அம்மா கிளம்பு” என்றான் சூர்யா.

கிளம்பி சிறிது தூரமே நடந்திருப்பார்கள். சூர்யாவின் அப்பா அங்கே தள்ளாடி கொண்டு வருவது தெரிந்தது.

“ஐய்யா, சூர்யா இந்தா பஸ் காசு இந்தா, டீச்சருக்கிட்ட கொடுக்க வேண்டிய டூர் காசு 150 ரூபா. உங்கப்பா இப்ப நம்ம இரண்டு பேரையும் பார்த்தா காச புடுங்கிருவாரு. அதனால நீ ஸ்கூல் வரைக்கும் போற மாதிரி போயிரு. இல்லைன்னா இந்த காசு உனக்குக் கிடைக்காது” என்று படபடவென்று காசையும் ரூபாயையும் கொடுத்தாள். “என்னம்மா ரூபா நோட்டு நனைஞ்சிருக்கு” ‘அம்மாகிட்ட பர்ஸ் இல்லப்பா ஜாக்கெட்டுக்குள்ள வச்சிந்தேன். கொண்டா துடைச்சுத் தாறேன்” என்று கூறி தனது சேலை முந்தானையால் ஒத்தி எடுத்து சீக்கிரம் போயிட்டு இருட்டுறதுக்குள்ள வந்துரு, பார்த்து போயிட்டு வாய்யா” என்றாள். “சரிம்மா” என்ற காசை வாங்கிக் கொண்டு அப்பா வரும் பாதையை விட்டு வேறுபாதையில் ஓடினான்.

“டீச்சர் டீச்சர்”

“யாரு? அடடா என்ன சூர்யா வாப்பா என்ன இந்த நேரத்துல”

“டீச்சர் அம்மா டூர் போக காசு கொடுத்து விட்டாங்க. அத குடுத்துட்டுப் போகலாம்னு வந்தேன். டீச்சர் நாளைக்குக் காலைக் கூட குடுத்துருக்கலாம்ல சரி பரவியில்லை. ஏன்ன சூர்யா நோட்டு ஈரமா இருக்கு?”

சாரி டீச்சர் அது அம்மாவோட வேர்வை பட்டுச்சு டீச்சர்” என பயந்து கொண்டு சொல்ல

“அதனால் என்ன சூர்யா இது அம்மாவோட வேர்வை மட்டுல்ல அம்மாவோ அன்பு, பரிவு,பாசம், கனவு, உழைப்பு எல்லாம் கலந்த ஈரம் தான் சூர்யா. நீ நல்லா படிக்கிற. இதை மாதி தொடர்ந்து படிச்சு பெரியாளாகி அம்மாவ நல்லா வச்சுக்கனும் சூர்யா. செய்வியா?” “கண்டிப்பாக டீச்சர் அப்பா குடிச்சே பாழாகுறாரு.. அம்மா உழைப்புல தான் டீச்சர் நான் படிக்கிறேன். அம்மா அடிக்கடி சொல்லுவாங்க நான் கலெக்டர் ஆகி மதுகடையை மூடனுமாம். நிச்சயமா அம்மா நினைச்ச மாதிரி கலெக்டர் ஆவேன். இந்த மதுகுடிப்பழக்கத்தை ஒழிக்க பாடுபடுவேன் டீச்சர்” என்றான் சூர்யா.

“வெரிகுட் இப்படித்தான் இருக்கணும் நிச்சியமா நீ பெரிய ஆளா வருவ. வா காப்பி சாப்பிட்டுப் போலாம்”என்றார் ஜெனி டீச்சர் . “இல்ல டீச்சர் ரொம்ப நன்றி பொழுது சாயரத்துக்குள்ள அம்மா வரச் சொன்னாங்க நான் போய்டு வர்றேன் டீச்சர்” என்றான்.

“ சரிப்பா பத்திரமா போயிட்டு வா”

“தேங்க்யு டீச்சர்” என்று கூறிவிட்டு கிளம்பினான்.

இந்த ஜெனி டீச்சருக்கு எம்மேல ரொம்ப பாசம் ரொம்ப நல்ல டீச்சரு. நான் நல்லா படிச்சு பெரியாள வந்துரமினு அம்மா மாதிரியே ஆசைபடுறங்க டீச்சர். பாவம் அம்மாவுக்கு ஒரு நல்ல பர்ஸ் வாங்கித் தரனும் என மனதிற்குள் பேசிக் கொண்டு வீட்டை நோக்கி வர அங்கே ஓரே கூட்டம். அங்கே என்ன கூட்டம் என கூட்டத்திற்குள் நுழைந்து போய் பார்க்க அம்மா இரத்த வெள்ளத்தில் கிடந்தாள். “அம்மா” என கதறிக் கொண்டு அருகில் செல்ல

“ வந்துட்டியாப்பா என் ராசா, எங்க உன்ன பார்க்காமலே போயிடுவேனோனு நினைச்சேன். அம்மா உயிரோட இருப்பேனு தெரியல.” அம்மாவின் வாயை சூர்யா வேகமாக தன் கையால் பொத்தி “அப்படி சொல்லாதீங்கம்மா. நீங்க எனக்கு வேணும்மா” என கதறி அழ “சூர்யர நீ நல்லா படிக்கணும்;, குடிகார மகன் சீரழிஞ்சுப்போயிட்டானு ஊரு உனக்கு பட்டம் கட்டிடக்கூடாது. ஜெனி டீச்சருக்கிட்ட சொல்லி எப்படியாவது படிச்சிரு. நீ பெரியாளாகனும். இது தான் அம்மாவோட ஆசை” எனக் கூறி சூர்யாவை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க அப்படியே தலை சாய்ந்து உயிர் போனது.

“அம்மா, அம்மா” என கதறி கதறி அம்மாவை கட்டிப்பிடித்து சூர்யா அமுது கொண்டிருக்கையில் 108 ஆம்புலன்ஸ் வந்தது. ஆதில் வந்டத டாக்டர் கையைப்பிடித்துப் பார்த்து இறந்து விட்டதாகக் கூறி விட்டு போய்விட்டார்.

ஊரே கார்த்திகா புருசன திட்டிக் கொண்டு இருந்தது. குடிக்கக் காசு கேட்டு தன் மனைவியை அடித்துத் தள்ளி விட தலை அங்கிருந்த கல்லில் மோதி இரத்த வெள்ளத்தில் மயங்கிப் போன மனைவியைப் பார்த்ததும் அந்த நிமிடமே செத்துவிட்டாள் என நினைத்து தலைமறைவாகி விட்டானு அங்குள்ளவர்கள் பேச, சூர்யா இது எதையும் கவனிக்காம அம்மாவை கட்டிப்பிடித்து கதறிக் கொண்டிருந்தான்.

மறுநாள் காலையில் ஈமச்சடங்குகள் முடித்து வீட்டிற்குள் முடங்கிக் கிடந்தான் சூர்யர. செய்தி கேட்டு ஓடி வந்த ஜெனி டீச்சர் “சூர்யா” என கூப்பிட்டதும், ஓடியே வந்து டீச்சரைக் கட்டிப்பிடித்து “அம்மா என்னை விட்டு போயிட்டங்கன்னு” கதறி அமுதபோது டீச்சர் அவனை தன்னோடு அரவணைத்துக் கொண்டார்கள். அருகில் இருந்தவர்கள் நடந்தகை சொல்ல, “பாவம் சூர்யாவுக்கு சொந்தமெனு சொல்லிக்க யாரும் இல்ல. இவங்க அப்பனும் தலைமறைவாயிட்டான். இப்ப இவன யாரு பார்த்தக்கிறதுனு தெரியல” என்று சொன்னப்ப, ஊர் தலைவர்கிட்ட சூர்யாவை தான் கூட்டிக்கிட்டுப் போய் படிக்க வைப்பதாகக் கூறி சூர்யாவை அவர்கள் வீட்டிற்கு அழைத்துக் சென்றார்கள்.

வீட்டிற்குச் சென்றவுடன் தன் கணவன் வளனிடம் நடந்ததை கூறினார்கள். அவர் உடனே “குஐசு”பதவி பண்ணனும் பையன் நம்மக்கிட்ட இருக்கானு தகவல் தெரிவிக்கனும். நாளைக்கு ஏதாவது தொந்திரவு வரக்கூடாது” என்ற கூறியவர் “சூர்யாவுக்கு ஏதாவது சாப்பிடக் கொடுத்து முதல்ல அவன தூங்க வை. நான் ஸ்டேசன் வரை போயிட்டு வர்றேன்.” என்று கூறி கிளம்பினார். சூர்யர ஆறுதல் படுத்தி சாப்பிட வைத்து அவனை தூங்க வைப்பதற்கு டீச்சர் ரொம்ப கஷ்டப்பட்டார்கள். பத்து வயது நிரம்பிய பையனுக்கு வாழ்க்கையில் இவ்வளவு துன்பங்கள் வந்திருக்கக்கூடாது. “ஆண்டவரே இவனுக்கு நல்ல வாழ்க்கை அமையனும்னு” ஜெபம் செய்து கொண்டிருந்த போது வளன் போலீஸ் ஸ்டேசன் போய் திரும்பி வந்தார்.

“சூர்யா எங்கே?” என்றார்.

“தூங்கிட்டு இருக்கான்”

“சரி, இங்க வந்து உட்காரு” என்றார்.

“என்னங்க ஏதாவது பிரச்சனை ஆயாச்சா”

“அதெல்லாம் ஒன்னுமில்லை. ஆங்க என் பிரண்டு வினோ தான் இருந்தான். மேட்டர சொல்லிட்டு பிரச்சனை இல்லாம பார்த்துக்கோனு சொன்னேன் சரினு சொல்லிட்டு பையன் இங்க இதே ஊர்ல படிக்க வைக்காத, வெளியூர்ல ஹாஸ்டல்ல சேர்த்திருனு” சொன்னான். “என்னா தலைமறைவாயிட்ட அவங்க அப்பாவால ஏதாவது பிரச்சனை வந்திரக்கூடாதுன்னு நினைக்கிறான்” என்றார்.

“ஆமாங்க அதுவும் சரி தான். சென்னையில் நம்ம சொந்தக்கார பாதரு ஜார்ஜ் இருக்காருல்ல அவர்கிட்ட பேசி ஏதாவது ஏற்பாடு செய்துரலாம் “ ஆமா நானும் அவரத்தான் நினைச்சேன். அங்கதான் அவன் பாதுகாப்பா இருப்பான். காலையில சூர்யாக்கிட்ட பக்குவமா எடுத்துச் சொல்லு பாவம் சின்ன வயசுல வாழ்க்கையே பிரச்சனையாயிருச்சு. ஆமாங்க, சரி நான் பாதர்கிட்ட பேசுறேன்” என்றார் ஜெனி டீச்சர்.

ஏழு ஆண்டுகள் ஓடிவிட்டது. இப்ப சூர்யா பிளஸ்டூ படிக்கிறான். படிப்பிலும் ஓவியம் வரைவதிலும் பேசுவதிலும் மிகவும் திறமையானவனாக உருவாகி விட்டான். ஓவ்வொரு ஆண்டும் காலாண்டு மற்றும் ஆண்டு விடுமுறைக்கு டீச்சர் வீட்டிற்கு வருவான். வரும் போதெல்லாம் தான் பெற்ற பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் கொண்டு வந்து காண்பிப்பான். பாதர் அவனை தனிப்பட்ட அக்கறையோடு கவனித்துக் கொள்வதை பெருமையாகக் கூறுவான். “டீச்சர் நீங்களும் வளன் அய்யாவும் இல்லைன்னா என் வாழ்க்கை ஒன்னுமில்லாம ஆயிருக்கும்” என்று கூறும்போதெல்லாம் அவனது கண்கள் நன்றியால் கலங்கும். ஓவ்வொரு ஆண்டும் பாதர் ஜார்ஜ் கிறிஸ்மஸ் விழாவின் போது சூர்யாவை தன்னோடு வைத்துக் கொள்வார். அவன் இருப்பது எனக்கு ரொம்ப உதவியாக இருக்குதுன்னு கூறுவார். ஆனா இந்த முறை “நானும் சூர்யாவும் உங்க வீட்ல தான் கிறிஸ்மஸ் கொண்டாட வர்றோம்” என்று டிச்சர்கிட்ட பாதர் சொன்னப்போது டீச்சடும் வளனும் ரொம்ப சந்தோசப்பட்டார்கள் . வீட்டை அலங்காரம் பண்ணுவதிலும் சூர்யாவுக்கு ட்ரெஸ் மற்றும் ஸ்வீட்ஸ் எல்லாம் பார்த்து பார்த்து இருவரும் வாங்கினார்கள். 24ம் தேதி காலை சூர்யாவும், பாதரும் வந்தார்கள். சூர்யா முகத்தில் ரொம்ப மகிழ்ச்சி தெரிந்தது. ரொம்பவே உற்சாகமாக இருந்தான். காலை டிபன் நால்வரும் சாப்பிடும் போது வளன் சூர்யாகிட்ட “என்ன சூர்யா ரொம்ப மகிழ்ச்சி உன் முகத்துல தெரியுது. ஏதாவது சாதனை புரிஞ்சியா” என்றார்.

பாதர் “ ஆமாம் அந்த மகிழ்ச்சியை பகிர்ந்துக்கத் தானே இந்த கிறிஸ்மஸ்க்கு இங்க வந்தோம்” என்றார்.

டீச்சரும் வளனும் ஆவலோடு அவர் முகத்தைப் பார்க்க

பாதர் தொடர்ந்தார். “ஒவ்வொரு ஆண்டும் பள்ளியில தேர்வு முடிந்ததும் கிறிஸ்மஸ் விழா கொண்டாடுவோம். இந்த முறை பள்ளியில கொண்டாடாமா சிறைச்சாலையில கொண்டாடலாம்னு தோணிச்சு. அதனால மாணவர்கள்கிட்ட கிறிஸ்மஸ் விழா இந்த முறை பள்ளியில சிறைசாலையில கொண்டாடலாம்னு சொன்னேன். பொறுப்பை சூர்யாக்கிட்ட கொடுத்திட்டேன். கைதிகளுக்கு கலைநிகழ்ச்சிகள், சாப்பாடு எல்லாம் சூர்யா ஏற்பாடு தான். அவனுடைய கருத்தாழமிக்க நாடகம் மிகப்பெரிய பாராட்டை பெற்றுத்தந்ததும் இல்லாம, அவனே எதிர்பாக்காத ஒர் பரிசும் அவனுக்குக் கிடைத்தது” என்று முடித்தார். .

“சூர்யா அப்படி என்னதான் நாடகம் போட்ட? அதென்ன பரிசுன்னு” டீச்சர் ஆவல் பொங்க கேட்ட.

“ ஒரு குடிகாரனால ஒரு குடும்பம் என்னடி சீரழியுதுன்னு சொல்லி, அந்த குடிகாரன் திருந்தி வாழ்க்கையை எப்படி நல்லமுறையில வாழ்ந்தான்னு என் கதையையும் அதுல புகுத்தி போட்டேன். டீச்சர்”

“அவன் ஒளி பிறந்தது என்று போட்ட நாடகத்தால அவனுடைய உள்ளத்திலும் ஒரு மகிழ்ச்சி ஒளி பிறந்தது” என்றார் பாதர்.

பாதரே தொடர்ந்தார். “நாடகம் முடிந்தவுடன் ஒரு கைதி மேடைக்கே ஓடி வந்துட்டார். வந்தவர் மைக்கைப் பிடித்து இந்த நாடகம் என் வாழ்க்கை என் வாழ்க்கை” என அழ போலீஸ் அவரை கிழே இறக்க வந்தார். அவரை தடுத்து நிறுத்தி “அவர் உள்ளத்துல உள்ளதெல்லாம் வெளியே சொல்லட்டும் அவரை தயவு செய்து விடுங்கள்” என்றேன். அந்த கைதியும் சொன்னார்.

“குடி வெறியால என் மளைவியை கொன்றேன். ஏன் மகன் சூர்யாவை இழந்தேன்.” ஏன்று கூறி அழுதபோது நானும் சூர்யாவும் அதிர்ச்சியால் உறைந்து போனோம் என்றார் பாதர்.

சூர்யர தொடர்ந்தான் “ அவர்தான் என் அப்பானு தெரிந்சுக்கிட்டேன். மிகவும் மெலிந்து உருமாறி போயிருந்தார். அவர் அத்தனை பேர் முன்னிலையிலும் தன் தவறை உணர்ந்து அழுதபோது என்னால் அதற்குமேல் தாங்க முடியவில்லை டீச்சர். அப்பானு ஓடிப்போய் கட்டி பிடிச்சுட்டேன். ஆப்பா ஒரு நிமிடம் என்னை கூர்ந்து பார்த்தார். சட்டென அத்தனைபேர் முன்னிலையிலும் என் கால்ல விழுந்து;ட்டார். நான் பதறிப் போனேன். அப்பா அழாதீங்கப்பான்னு சொல்லி அவரை மேடையில இருந்து இறக்கினேன. ஓட்டுமொத்த கைதிகளும் எந்திரிச்சு நின்னு எங்களை பார்த்து கைத்தட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.” என்று சொல்லும் போது அவன் நா தழுதத்தது.

“ஒவ்வொரு முறையும் கிறிஸ்மஸ் கொண்டாடும் போது நம் உள்ளத்தில யேசு பிறக்கனும் பாதர் சொல்லுவாங்க. இந்த வருடம் எங்கப்பா உள்ளத்துல நான் மீண்டும் மகனாக பிறந்துட்டேன். என் மனசுல எங்கப்பாவுக்கு ஒரு இடம் கொடுத்துட்டேன் டீச்சர்” என்றான் சூர்யா.

“வெரிகுட் சூர்யா உண்மையிலேயே இந்த கிறிஸ்மஸ் ஒரு சிறப்பான கிறிஸ்மஸ தான் இரு உனக்கு ஒரு கிறிஸ்மஸ் பரிசு வச்சுருக்கேன்” என்று கூறி ஒரு டப்பாவை கொண்டு வந்து அவன் கையில் கொடுத்தார்கள். பிரித்துப் பார்த்த சூர்யாவுக்கு ஒன்றம் புரியவில்லை. அதில் ஒரு 100 ரூபாய் நோட்டும் 50 ரூபாய் நோட்டும் இருந்தது. “என்ன டீச்சர்” என்று பார்வையில் டீச்சரை பார்த்தான் சூர்யா.

“அத மோந்து பார் உன் அம்மாவோட வாசம் தெரியும்” என்றார்கள்.

அவன் அப்படியே முகர்ந்து பார்த்து “ அம்மா” என்றவன் கண்களில் நீர் தேங்கியது. சூர்யா இந்த கிறிஸ்மஸ்க்கு உன்னோட அப்பா மட்டுமில்ல உன் அம்மாவும் இந்த ரூபாய் வடிவில் உன் கூட இருக்காங்க இல்லையா சூர்யா” என்றார்கள்.

“டீச்சர் அம்மாவே பக்கத்துல வந்துட்ட மாதிரி இருக்குது டீச்சர் எவ்வளவு பத்திரமா இத்தனை ஆண்டுகள் பாதுகாத்திருக்கீங்க! எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலை டீச்சர். பாதார், வளன் அய்யா, நீங்க மூணுபெரும் இல்லலைன்னா எனக்கு ஒரு முகவரியே இருந்திருக்காது. உங்க மூணுபேருக்கும் நான் ரொம்ப நன்றி கடன் படடிருக்கேன் டீச்சர்” என கண்கள் கலங்க கூற உடனே வளன் சூர்யாவை அரவணைத்து சூர்யா நீ உங்கம்மா கனவை நிறைவேத்தனும் அதுதான் நாங்க எல்லாரும் உங்கிட்ட எதிர்பார்க்கின்றோம். இனி உன் வாழ்க்கை ஒளிமயமா பிரகாசமா இருக்கும்” என்றார்.

வெளியே பட்டாசு ஒளி ஒலி தெரிய அங்கு அனைவரது முகத்திலும் உள்ளத்திலும் ஒரு புத்தொளி பிறந்த சந்தோசம் தெரிந்தது. இந்த வருட கிறிஸ்மஸ் கொண்டாட்டம் ஓர் அர்த்தமுள்ள கிறிஸ்மஸ் விழாவாக அவர்களுக்கு அமைந்தது.

திருமதி அமலி எட்வர்ட், நாகமலை,மதுரை