உண்மையா ?அது என்ன? (யோவான் 18:38)
திரு இரன்சாம்- கோடம்பாக்கம் - சென்னை24
(Jeffery Archer எழுதிய The First Mircacle என்னும் ஆங்கிர சிறுகதையின தழுவல்)
நாளை கி.பி. 1ஆம் ஆண்டு பிறந்துவிடும். ஆனால் இதையாரும் அவனுக்குச் சொல்லவில்லை. அப்படி யாராவது சொல்லி இருந்தாலும் அவனுக்கு புரிந்திருக்காது. ஏனெனில், அவனுக்குத் தெரிந்ததெல்லாம் அது உரோமை பேரரசர் அகஸ்டஸ் சீசரின் ஆட்சியில் நாற்பத்து மூன்றாம் ஆண்டு எண்பது மட்டுமே. மேலும் அவன் மனதில் வேறு பல எண்ணங்கள் சுழன்று கொண்டிருந்தன. ஒரு பதிமூன்று வயது சிறுவன் சாதாரணமாக செய்கிறதை விட அதிகமான சுட்டித்தனங்களை அன்று அவன் செய்திருந்ததால், அவனது அன்னை அவன் மீது இன்னும் கோபமாய் இருந்தாள். காலையில் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்துவரும்போது கல் தடுக்கி கீழே விழுந்ததால் தான் அந்த ஜாடி உடைந்துவிட்டது என்ற உணர்மையை எத்தனை முறை கூறினாலும், அவனது அன்னை ஏற்றுக்கொள்ளவில்லை. அப்புறம் அந்த மாதுளம்பழம். அவனுடைய தகப்பனுக்கு மாதுளம் பழங்கள் என்றால் கொள்ளை ஆசை என்றும், அது ஒன்றுதான் வீட்டில் மீதியாயிருந்த ஒரே ஒரு மாதுளம்பழம் என்றும் அவனுக்கு எப்படி தெரியும்? தகப்பனார் வீடு திரும்பியபின் என்ன தண்டனை கிடைக்குமோ? வெளியே சென்று விளையாட முடியாது. ஏனெனில், உள்ளூர் சிறுவர்களுடனர் சேரக்கூடாது என்பது தகப்பனின் கட்டளை. தான் மட்டும் ரோமாபுரியிலேயே இருந்திருந்தால் தன் நண்பர்களோடு எப்படியெல்லாம் விளையாடலாம். இந்த ஊரும் இந்த தேசமும் அவனுக்கு கொஞ்சம் கூட பிடிக்கவேயில்லை.
ஜன்னலின் விளிம்பில் உட்கார்ந்து கொண்டு இதையெல்லாம் அவன் யோசித்துக் கொண்டிருந்த போது, கதவை திறந்து கொண்டு அவன் அண்னை அறையின் உள்ளே வந்தாள். "ஆஹா. ஜன்னலில் உட்கார்ந்து கொண்டு பகல் கனவு காண்பதே உனக்கு வேலையாயிற்று. சரி, எழுந்து வா, உடனே ஊருக்குள் சென்று சில பொருட்கள் வாங்கி வர வேண்டும்" என்று அவன் தாயார் கூறியவுடன், “சரி, அம்மா! உடனே போகிறேன்" என்று கத்திவிட்டு துள்ளி குதித்து ஒட ஆரம்பித்தான் சிறுவன். “ஓடாதே, நில்” தாயார் கூச்சலிட்டபடி சொன்னாள்: "என்னென்ன வாங்க வேண்டுமென்று நான் இன்னும் சொல்லவேயில்லை? அதற்குள் ஒட்டமா?" சிறுவ நின்று தன் தாயாரைப் பார்த்தான். "கவனமாகக் கேள்” என்று கூறிய அவன் அன்னை, ஒன்று, இரண்டு என தன் கைவிரல்களை மடக்கிக் கொண்டே, "நல்ல கோழி ஒன்று, கொஞ்சம் உலர்ந்த திராட்சை. அப்புறம் அத்திபழம், பேரீச்சம்பழம். முக்கியமாக இரண்டு மாதுளம் பழங்கள்" என்று கூறிவிட்டு ஒரு தோல்பையிலிருந்து இரண்டு வெள்ளி காசுகளை எடுத்துக் கொடுத்தாள். “சரி, எண்னென்ன வாங்கவேண்டுமென்று ஒரு முறை எனக்கு சொல்" என்றாள் அன்னை. சிறுவன் மறுமொழி சொன்னான். “எல்லாம் சரியாக வாங்கிக் கொண்டு, மீதி சில்லறையையும் ஒழுங்காக திருப்பி கொண்டு வந்தால், உடைத்த ஜாடி பற்றியும் நீ தின்றுவிட்ட மாதுளம்பழம் பற்றியும் உண் தகப்பனிடம் கூறாமல் விட்டுவிடுவேன்" என்று கூறினாள் தாய்.
தன் தாயாரை நோக்கி புன்சிரிப்பை உதிர்த்த சிறுவனர், இரண்டு வெள்ளி காசுகளையும் தனி மேலாடையின் பையில் போட்டுக் கொண்டு, மாளிகையின் சுற்றுச்சுவர் வாயிலை நோக்கி ஓடினான். அவன் ஓடி வருவதைக் கண்ட வாயிற்காவலன், அந்த அகண்ட கதவுகளின் நடுவிலிருந்த மரச்சட்டத்தை நீக்கிவிட்டு, ஒரமாக இருந்த சிறிய கதவை திறந்துவிட்டான். அதன் வழியாக குதித்து வெளியே சென்ற சிறுவனைப் பார்த்து அந்த வாயிற் காவலன் சொன்னான்: "என்ன ஓட்டம் பலமாயிருக்கே?. வம்பு தும்புல மாட்டாம வேகமாக திரும்பி வாங்க, தம்பி! இல்லன்னா அப்பா தோலை உரிச்சுடுவாரு" சிறுவன் காவலனைப் பார்த்து, "இன்றைக்கு அம்மா காப்பாத்திடுவாங்க" என்று கூறிவிட்டு, முன்னே இருந்த பாதையில் நடக்க ஆரம்பித்தான்.
சற்றே கீழிறங்கிய மலையடிவாரத்தை ஒட்டி அந்த பாதை வளைந்து சென்றது. மண்ணும் தூசியும் கற்களும் நிறைந்திருந்த அந்த பாதையில் நடந்து செல்வது அந்த சிறுவனுக்கு சிரமமாயிருந்தது. அவ்வப்போது குனிந்து தனது காலணிகளில் சிக்கியிருந்த சிறுகற்களை அகற்றுவதற்காக அவன் ஆங்காங்கே நிற்க வேண்டியிருந்தது. ரோமை பேரரசால் அந்த ஊரின் ஆட்சித்தலைவராக நியமிக்கப்பட்டிருந்த தன் தந்தையிடம் இந்த பாதையை செப்பனிடுவது பற்றிச் சொல்லியாக வேண்டும்.
சூரியன் மேற்கே மலைகளின் பின்னே இறங்கி கொண்டிருந்தான். வழக்கத்திற்கு மாறாக அன்று பாதையெங்கும் ஜனக்கூட்டம் அதிகமாயிருந்தது. ரோமை பேரரசின் ஆணைப்படி தன் தந்தையார் இட்ட கட்டளை அவனுக்கு நினைவுக்கு வந்தது. குடிக்கணக்கு சுவடிகளில் தங்களை பதிவு செய்துகொள்ளத் தான் இத்தனை ஜனங்களும் இந்த ஊருக்கு வந்திருக்க வேண்டும். பதினாறு வயது ஆன பிறகு தானும் பேரரசின் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு அதிகார பீடத்தில் உயர்ந்த பதவிகளைப் பெற வேண்டும் என்ற தன் இலட்சியத்தை நினைத்துக் கொண்டே நடந்தான். வழிப்போக்கர்களையும், வண்டிகளையும், குதிரைகளையும், ஒட்டகங்களையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு நடந்த அவனுள் ஒரு கேள்வி எழுந்தது. இத்தனை மனிதர்களும் இரவு தங்குவதற்கு இந்த சிற்றூரில் இடம் கிடைக்குமா?
கொஞ்சம் கொஞ்சமாக இருள் கவிழத் தொடங்கியிருந்தது. மெல்லியதாய் குளிர் காற்றும் வீசிற்று. சிறுவன் வேகமாக நடை போட்டான். சீக்கிரமாக வீட்டிற்கு திரும்பிச் செல்ல வேண்டும். ஏனெனில் சூரியாஸ்தமனத்திற்கு முன்னரே வீட்டிற்கு வந்துவிட வேண்டும் என்பது தந்தையாரின் உத்தரவு. ஊரின் உள்ளே சென்ற பிறகும் அவனால் வேகமாக செல் முடியவில்லை. இருபுறமும் இருந்த வெள்ளையடிக்கப்பட்ட சிறிய வீடுகளின் இடையே சுற்றிச் சுற்றிச் சென்ற தெருக்களையும், வெளியூர்களிலிருந்து வந்து வழியெங்கும் மொய்த்திருந்த ஜனங்களையும் கடந்து, சந்தை பகுதிக்கு வந்து சேர்வது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. கடைகளிலெல்லாம் விளக்குகளும் ஆங்காங்கே பெரிய தீப்பந்தங்களும் ஏற்றப்பட்டிருந்தன. சிறுவன் ஒவ்வொரு கடையாக நோட்டம் விட்டபடி நிதானமாக நகர்ந்து சென்றான். தன் தாயார் வாங்கி வரச் சொன்ன பொருட்களை நினைவுபடுத்திக் கொண்டான். இன்றைக்கு எல்லாம் சரியாக வாங்கிச் செல்ல வேண்டும். இல்லையென்றால் தகப்பனிடம் மாட்டிக் கொள்ள வேண்டியதுதான். வெள்ளைத் தோலும் செந்நிற முடியும் கூர்மையான நாசியும் அவன் வெளிதேசத்து ஆள் என்பதை சொல்லாமல் சொல்லின. ரோமானியர்கள் மீது உள்ளூர்வாசிகளுக்கு வெறுப்பு இருந்ததால் சிலர் அவனை முறைத்துப் பார்த்தார்கள். வேறு சிலர் முகத்தை வேறுபக்கம் திருப்பிக் கொண்டார்கள்.
கோழிகள் விற்கப்படும் கடையின் முன்னே சென்று அங்கிருந்த கோழிகளிலேயே நன்கு கொழுத்த கோழி ஒன்றை கடைக்காரனுக்குச் சுட்டிக்காட்டினான். கடைக்காரன் உள்ளுர் பாஷையில் பேசியது சிறுவனுக்கு விளங்கவில்லை. மேலும், பேரம் பேசுவது தனது அந்தஸ்துக்கு இழுக்கு என்று அவன் கருதியதால், தனது பையிலிருந்து ஒரு வெள்ளி காசை எடுத்து கடைக்காரனிடம் கொடுத்தான். கடைக்காரன் அந்த நாணயத்தை முன்னும் பின்னும் திருப்பிப் பார்த்தான். அதிலிருந்த சீசரின் உருவத்தை உற்றுப் பார்த்தான். வாயில் வைத்துக் கடித்தும் பார்த்தான். ஆனால் கோழியை மட்டும் தருவதாகத் தெரியவில்லை. சிறுவன், தன் தகப்பனின் தோரணையை நினைத்துக் கொண்டு, "இதோ பாரப்பா, நாள் முழுக்க உன் கடையிலேயே நான் நிற்க முடியாது. கோழியையும் மீதி காசையும் சீக்கிரம் கொடு” என்று தனது பாஷையில் அதட்டினான். கடைக் காரன் ஒன்றும் பேசவில்லை. ரோமாபுரி ஆட்களிடம் சச்சரவு வைத்துக் கொள்ளகூடாது என்று அவனுக்கு தெரியும். ஒரமாகச் சென்று, கோழியின் கழுத்தை சீவி எறிந்துவிட்டு இரத்தத்தை வடியவிட்டு, பிறகு கோழியை சிறுவனிடம் தந்தான். தன் பெட்டியிலிருந்து ஏரோதின் உருவம் பொறித்த உள்ளூர் காசுகள் பலவற்றை எடுத்து சிறுவனிடம் கொடுத்தான்.
ஆங்காங்கே எரிந்து கொண்டிருந்த விளக்கு வெளிச்சத்தில் பழங்கள் விற்கும் கடையை தேடிக்கண்டுபிடித்து, உலர்திராட்சை, அத்திப்பழம், பேரீச்சம் பழங்களை வாங்கிக் கொண்டு, அருகிலேயே மற்றொரு கடையில் மூன்று மாதுளம் பழங்களையும் வாங்கிக் கொண்டான். இவற்றையெல்லாம் வாங்கிக் கொள்ள அந்த கோழிக் கடைக்காரன், கொடுத்த மீதிகாசுகளே போதுமானதாயிருந்தன. எனவே இப்போது சிறுவனிடம் ஒரு வெள்ளிக்காசு மீதியிருந்தது. அதை தன் தாயாரிடம் கொடுக்கும் போது அவள் தன்னை பாராட்டுவாள் என்ற எண்ணம் அவனுக்கு சந்தோஷமாயிருந்தது. அந்த சந்தோஷம் தந்த உற்சாகத்தில், திண்ணை போலிருந்த ஒரு இடத்தில் தன் கையிலிருந்து பொருட்களையெல்லாம் வைத்துவிட்டு, மூன்றாவது மாதுளம்பழத்தை உடைத்து சாப்பிட ஆரம்பித்தான். பழச்சாற்றினால் கைகள் கறையானதைப் பற்றி கவலையேபடாமல் நிதானமாக அந்த முழுபழத்தையும் சாப்பிட்டு முடித்த பிறகுதான், இருட்டி வெகுநேரம் ஆகிவிட்டது என்பது அவனுக்கு உறைத்தது.
அவசரமாகக் கோழியை ஒரு கையிலும் மற்ற பொருட்களடங்கிய பையை மற்றொரு கையிலும் எடுத்துக் கொண்டு வேகமாக நடக்க ஆரம்பித்தான். அவ்வப்போது காலைச் சுற்றிவந்த தெருநாய்களை விரட்டிக்கொண்டும், கூட்டமாக நின்றிருந்த ஜனங்களை விலக்கிக் கொண்டும் ஒருவழியாக தன் வீட்டிற்கு செல்லும் மலைப்பாதைக்கு வந்து சேர்ந்தான். அந்த பாதையிலும் ஆங்காங்கே ஜனக்கூட்டம் காணப்பட்டது. இருட்டுவதற்குமுன் வீட்டிற்குள் வந்துவிட வேண்டும் என்ற தன் தந்தையின் கட்டளை நினைவுக்கு வரவே. அங்கும் இங்கும் பார்த்துக் கொண்டு வேகமாக நடந்தான். அப்பொழுது பாதையின் சற்றுதூரத்தில் அவன் கண்ட காட்சி அவன் கவனத்தை ஈர்த்தது. தலையில் முண்டாசும் முகத்தில் தாடியும் கொண்டு காணப்பட்ட ஒரு மனிதனர். கழுதை ஒன்றை ஒட்டிக்கொண்டு வந்தான். அந்த கழுதையின் மேல் கொஞ்சம் கனத்த சரீரமுடைய பெண் ஒருத்தி உட்கார்ந்திருந்தாள். யூத குலவழக்கப்படி, அந்த பெண் தன் உச்சி முதல் உள்ளங்கால்வரை கறுப்பு நிறதுணியால் போர்த்தியிருந்தாள். பாதையை விட்டு விலகி ஓரமாகச் செல்லுமாறு அவர்களிடம் சொல்ல நினைத்து அந்தச் சிறுவன் நிமிர்ந்த போது, அந்த தாடிக்கார மனிதன் கழுதையையும் அந்தப் பெண்ணையும் பாதையின் ஒரமாக விட்டுவிட்டு, அருகிலே சத்திரம் போன்றிருந்த ஒரு கட்டிடத்தினுள் நுழைந்தான்.
ரோமாபுரியில் இதை போன்ற கட்டிடங்கள் விடுதிகளாக பயன்படுவதில்லை. அந்த கட்டிடம் அவ்வளவு பாழடைந்திருந்தது. ஆனால். இன்று இந்த ஊருக்கு வந்துள்ள வெளியூர் ஜனங்கள் எல்லோருமே தங்குவதற்கு இடம் தேடிக்கொண்டிருப்பார்களே?. இத்தனை நெருக்கடியில் கழுதையோடு வந்த இவர்களுக்கு இந்த சத்திரத்தில் இடம் கிடைக்குமா?. இவ்வாறு அவன் யோசித்துக் கொண்டிருக்கும்போதே, அந்த தாடிக்கார ஆள் கட்டிடத்தின் உள்ளேயிருந்து வாடிய முகத்தோடு வெளியே வந்தான். அடாடா. அந்த சத்திரத்தில் இடமில்லை போலும். அந்தச் சிறுவனின் மனம் குறுகுறுத்தது. இதுதான் ஊருக்கு வெளியே இந்த பாதையில் உள்ள கடைசி சத்திரம். இப்போது இவர்கள் என்ன செய்ய போகிறார்கள்? ஏதாவது சாலையோர மரத்தடியில் தங்குவார்களா?. அந்த தாடிக்கார ஆள் கழுதையின் மேலிருந்த பெண்ணிடம் சத்திரத்தின் பின்புறத்தை சுட்டிக்காட்டி, ஏதோ கூறிவிட்டு, அந்த பக்கமாக கழுதையை ஒட்டிக்கொண்டு சென்றான். சிறுவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. சத்திரத்தின் பின்புறம் என்ன இருக்கும்? சிறுவன் மெதுவாக அவர்கள் பின்னே சென்றான். கட்டிடத்தின் மூலையில் ஒளிந்து நின்று கொண்டு எட்டி பார்த்தான்.
ஆடுமாடுகளை கட்டிப்போடும் தொழுவம் அது. அதனுள்ளே கழுதையை ஏற்றிவிட்டு, எரிந்து கொண்டிருந்த சிறிய விளக்கிலிருந்து நெருப்பெடுத்து மற்றொரு பெரிய விளக்கை ஏற்றினான், அந்த தாடிக்கார மனிதன். அந்த இடத்தில் அழுக்கேறிய வைக்கோலும், புற்கட்டுகளும் ஆங்காங்கே சிதறி கிடந்தன. கோழிகளும் ஆடுமாடுகளும் அடைத்து வைக்கப்பட்டிருந்ததால் எழுந்த துர்நாற்றம், அந்த சிறுவனுக்கு ரோமாபுரி தெருக்களின் கழிவுநீர்க் கால் வாய்களை நினைவுறுத்தியது. அவனுக்கு அருவருப்பு உண்டாயிற்று. அந்த தாடிக்காரன் தொழுவத்தின் நடுப்பகுதியிலிருந்த வைக்கோல் கட்டுகளை அப்புறப்படுத்தி விட்டு அந்த இடத்தை சுத்தம் செய்தான். பிறகு அந்தப் பெண்ணை கழுதையின் மேலிருந்து மெதுவாக கீழே இறக்கி, ஒரு வைக்கோல் கட்டின் மேல் உட்கார வைத்தான். தொழுவத்தின் ஒரமாக இருந்த மரத்தொட்டியின் அருகே சென்று, தன் கைகளை கழுவிய பின்னர், இரு கைகளையும் கிண்ணம் போல குவித்து, மரத்தொட்டியிலிருந்து தண்ணீரை மொண்டு எடுத்து வந்து அந்த பெண்ணுக்கு குடிக்கத் தந்தான்.
கட்டிடத்தின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த சிறுவனுக்கு தான் சீக்கிரமாக வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்பதை உள்மனம் உணர்த்தியது. அந்த இடத்தை விட்டுப் புறப்பட எண்ணி சிறுவன் திரும்பிய நேரத்தில், தாடிக்கார மனிதனின் கைகளிலிருந்து தண்ணிரை குடிக்க அந்தப் பெண் குனிந்தபோது அவளது தலையை மூடியிருந்த துணி விலகி கீழே விழுந்தது. அந்தச் சிறுவன் முதன்முறையாக அந்தப் பெண்ணின் முகத்தைப் பார்த்தான். அசைவற்று நின்றபடி அந்தப் பெண்ணின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். இவ்வளவு அழகான பெண்ணை அவன் இதுவரை பார்த்ததேயில்லை. அவளது இனத்தைச் சேர்ந்த மற்ற பெண்களை போல இல்லாமல் தெய்வீக எழிலோடு துலங்கிய அந்த முகமும், ஒளி வீசிய கண்களும், அதில் இழைந்தோடிய கனிவும் அந்தச் சிறுவனை வியப்புக்குள்ளாக்கின. ஏதோ மாயாஜால மந்திரத்தால் கட்டப்பட்டவன் போல, அந்தச் சிறுவன் மெதுவாக தொழுவத்தின் உள்ளே சென்று, அந்தப் பெண்ணின் முகத்தைப் பார்த்தபடியே சற்றுநேரம் நின்றான். சட்டென அந்தப் பெண்ணின் முன்னே முழந்தாளிட்டு தன் கையிலிருந்த வெட்டுண்ட கோழியைக் கொடுத்தான். அந்தப் பெண் கனிவுடன் புன்னகைத்தாள். சிறுவன் தன்னிடமிருந்து மாதுளம் பழங்களையும் மற்ற பொருட்களையும் அவள் முன்னே வைத்துவிட்டு அவளைப் பார்த்தான். அவள் முகத்தில் புன்னகை மாறவில்லை என்றாலும், அவள் ஒன்றுமே பேசவில்லை.
கையில் தண்ணிர் கொண்டுவந்த தாடிக்காரன், வேற்றுதேசத்து சிறுவனைக் கண்டதும், தன் முகத்தை மேல் துணிடினால் மறைத்துக் கொண்டு ஒரமாக நின்றான். சற்று நேரம் முழந்தாளிட்டபடியே அந்தப் பெண்ணின் முகத்தை ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டிருந்த சிறுவன், எழுந்து தொழுவத்தின் வாயிலருகே நின்று மீண்டும் அந்தப் பெண்ணை உற்றுப்பார்த்தான். அந்தப் பெண்ணும் கனிவோடு புன்னகை சிந்தியபடியே அந்த சிறுவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள். ஒருகணம் தயங்கிய சிறுவன், சட்டென அவளை தலைதாழ்த்தி வணங்கினான். பிறகு சத்திரத்தின் முன்புறத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தான். தனது வீட்டிற்குச் செல்லும் சாலையில் ஏறிய பிறகுதான், இரவு வெகு நேரம் ஆகிவிட்டது என்பது தெரிந்தது. ஆனால் இப்போது அவன் மனதில் பயம் இல்லை. தான் செய்தது ஒரு நற்செயல் என்பதால் தனக்கு எவ்வகையிலும் கெடுதல் வராது என்று நம்பினான். வானத்தை அண்ணார்ந்து பார்த்தச் சிறுவன் கீழ்த்திசையில் மிகுந்த பிரகாசத்தோடு ஜொலித்த நட்சத்திரத்தைக் கண்டு வியப்புற்றான், அதன் ஒளியில் மற்ற நட்சத்திரங்களெல்லாம் காணாமற் போய்விட்டது போல தோன்றியது. ஆயினும் வீட்டிற்கு சீக்கிரமாய் போய் விட வேண்டும் என்ற எண்ணம் மேலிட்டதால், வேகமாக நடக்க ஆரம்பித்தான் . மேலேறி வளைந்து சென்ற மலைப்பாதையில் நடப்பது கஷ்டமாயிருந்தது. மேலும் இருட்டில் தனியாக நடப்பதற்கு பயமாகவும் இருந்தது. அந்த இரவின் தனிமையில் வெகுதூரத்தில் கேட்ட சத்தம் அவனை திடுக்கிடவைத்தது.
சுற்றிலும் இருள் சூழ்ந்திருந்த நேரத்தில் மலையடிவாரத்தையொட்டிச் சென்ற பாதையில் தன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த அந்த சிறுவன், தூரத்திலிருந்து வந்த சத்தத்தைக் கேட்டு, நிதானித்து நின்றான். சில மனிதர்கள் கைதட்டிக் கொண்டு ஒன்றாக சேர்ந்து உரத்த குரலில் பாடுவது கேட்டது. மனதில் பயம் இருந்தாலும் எங்கிருந்து இந்த பாட்டுச் சத்தம் வருகிறது என்று தெரிந்து கொள்ள சுற்றும் முற்றும் பார்த்தான். சற்று தூரத்தில் வயல்வெளியில் தீப்பந்தங்களின் வெளிச்சத்தில் ஒரு காட்சி தெரிந்தது ஆட்டு இடையர்கள் வட்டமாக நின்று குனிந்தும் நிமிர்ந்தும் தீப்பந்தங்களை சுற்றி ஆடிக் கொண்டும், கைகளைத் தட்டி பாடிக்கொண்டும் இருந்தனர். அருகிலே வேலியிடப்பட்ட கிடையினுள் ஆடுகள் பத்திரமாக அடைக்கப்பட்டிருந்தன. சற்று தள்ளி சிலர் படுத்துக் கொண்டிருந்தனர்.
இதையெல்லாம் அந்தச் சிறுவன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே வானத்தில் இருளைக் கிழித்துக் கொண்டு மின்னலை போன்றதொரு பேரொளி தோன்றி சட்டென மறைந்தது. சுற்றிலும் இருள் சூழ்ந்திருந்தாலும், அந்த இடையர்கள் கூடியிருந்த இடம் மட்டும் ஒருவிதமான வினோத வெளிச்சத்தில் ஜொலித்தது. இடையர்களில் சிலர் முழந்தாளிட்டபடியும், வேறு சிலர் அச்சத்தோடு தரையில் விழுந்தபடியும் மெளனமாக வானத்தை உற்று பார்த்துக் கொண்டு எதையோ கவனமாகக் கேட்பது போல மேலே பார்த்தபடி இருந்தார்கள். சிறுவன் அந்தக் காட்சியை கூர்ந்து பார்த்துக் கொண்டிருக்கும் போது, தெய்வீக குரலில் பலர் சேர்ந்திசைக்கும் மென்மையான இனிய பாடல் அந்த இடமெங்கும் நிறைந்து சிறுவனின் மனதை மயக்கியது. சட்டென அந்தப் பாடலும் இடையர்கள் இருந்த இடத்தில் தெரிந்த வெளிச்சமும் மறைந்து, மறுபடியும் அந்த இடமெங்கும் இருள் சூழ்ந்தது. சிறுவனுக்கு திடீரென கண்கள் பார்வையற்று போனது போல் தோன்றிற்று. இது என்ன, விசித்திரமான ஒரு காட்சி?
மனதில் மேலோங்கிய பயத்தினால், தன் வீட்டை நோக்கி ஓட ஆரம்பித்தான் அந்தச் சிறுவன். சீக்கிரமாக தன் வீட்டுக்குள்ளே பத்திரமாக போய் சேர்ந்து விடுவதுதான் நல்லது என்று உணர்ந்தான். தன் வீடுவரை வேகமாக ஒடிச் செல்ல தீர்மானித்த அவன் தனக்கு முன்னால் பாதையில் அதைக் கண்டதும், நின்றான். “ஆபத்தான நேரங்களில் பயப்படக்கூடாது" என்று தன் தந்தை சொல்லியிருந்ததை நினைவில் கொண்டு, நிதானமாக இழுத்து மூச்சுவிட்டான். எதுவானாலும் சரி, பாதையை விட்டு விலகக் கூடாது என்று எண்ணிக் கொண்டு அடிமேல் அடி வைத்து முன்னேறிச் சென்றான். ஆனால், அருகிலே சென்று அவர்களை பார்த்தபோது திகைத்து நின்றான். அங்கே மூன்று ஒட்டகங்கள் நின்றிருந்தன. அவற்றின் மேலிருந்த மூன்று மனிதர்களும் சிறுவனையே பார்த்தார்கள். முதல் ஒட்டகத்தில் இருந்தவர் பொன்னிறமான ஆடையணிந்திருந்தார். ஆடையின் மடிப்புகளுக்கிடையே ஏதோ ஒரு பொருளை கையில் பிடித்துக் கொண்டு மறைத்து வைத்திருப்பது தெரிந்தது. அவருடைய இடைகச்சையிலிருந்து தொங்கிய வாளின் உறையின் மேல் விலையுயர்ந்த ரத்தின கற்கள் பதிக்கப்பட்டிருந்தன. இரண்டாவது மனிதர் வெண்ணிற ஆடை அணிந்து இருந்தார். வெள்ளி பேழை ஒன்றை அவரது கைகள் மார்போடு சேர்த்துப் பிடித்திருந்தன. சிவப்பு நிற உடையணிந்திருந்த மூன்றாவது மனிதர், ஒரு சந்தனப் பெட்டியை கையில் வைத்திருப்பது தெரிந்தது.
பொன்னிற ஆடை அணிந்த மனிதர் கைகளை உயர்த்தி அந்த சிறுவனுக்கு புரியாத ஒரு மொழியில் ஏதோ சொன்னார். மற்ற இருவரும் வேறு மொழிகளில் சிறுவனிடம் பேச முயன்றார்கள். இவர்கள் மூவரும் தன்னிடம் என்னவோ தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள் என்றறிந்த சிறுவன், தன் கைகளை மார்பின் மேல் குவித்துக் கொண்டு, தான் யாரென்றும், எங்கே போகிறான் என்றும் தனது மொழியில் கூறிவிட்டு, அவர்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டான். பொன்னிற ஆடையணிந்தவர் மகிழ்ச்சியுடன் தலையசைத்துவிட்டு, சிறுவனுடைய மொழியிலேயே அவனுடன் பேசினார்: "யூதர்களின் அரசராக பிறந்திருக்கிறவர் எங்கே? ஏனெனில் கீழ்த்திசையில் அவரது விண்மீன் எழக் கண்டோம்; அவரை வணங்க வந்திருக்கிறோம்!” சிறுவன் பதில் சொன்னான்: "ஏரோது அரசன் வசிப்பது வடக்கே அந்த மலைகளுக்கு அப்பால்.” வெண்ணிற உடை அணிந்த மனிதர் குறுக்கிட்டு கூறினார்: "நாங்கள் ஏரோது அரசனைப் பற்றி விசாரிக்கவில்லையப்பா! நாங்கள் காண வந்தவர் நம்மைப் போன்ற மனிதர்களின் அரசர் அல்ல; அவர் அரசர்களுக்கெல்லாம் அரசர்; இதோ! பொன்னும் தூபமும் வெள்ளைப் போளமும் அவருக்குக் காணிக்கையாகக் கொண்டு வந்துள்ளோம்" இப்போது பயம் தெளிந்திருந்த சிறுவன் சொன்னான்: "நீங்கள் சொல்கின்ற அரசர்க்கெல்லாம் அரசரை எனக்குத் தெரியாது; அகஸ்டஸ் சீசர் மட்டுமே எனக்குத் தெரிந்தவரை உலகத்தின் பேரரசர்"
பொன்னிற ஆடையணிந்தவர் மீண்டும் பேசினார்: "தம்பி! வானத்தின் கீழ்த்திசையினின்று எழுந்து, அதோ அந்த ஊரின் மேலே ஒளி வீசும் விண்மீனை பார்த்தாயா? அந்த ஊரின் பெயரென்ன?” சிறுவன் வானத்தை ஏறிட்டு அந்த நட்சத்திரத்தை பார்த்தான். அதன் கீழேயிருந்த ஊர் பகலில் தெரிவதை விட மிகத்தெளிவாகத் தென்பட்டது. சிறுவன் கூறினான்: "அது... அது... பெத்லகேம்... சிறிய ஊர்... அங்கே எந்த அரசனையும் நீங்கள் காண முடியாது." இதுவரை பேசாதிருந்த மூன்றாவது மனிதர் சொன்னார்: "அப்படியல்ல, பிள்ளாய்! அது சிற்றுாராக இருந்தாலும் அங்கே எங்கள் அரசனைக் காண்போம்; ஏனெனில் ஏரோதின் அரண்மனையில் தலைமை குருக்கள் யூத மறைநூலில் எழுதப்பட்டிருப்பதை இவ்வாறு வாசித்துக் காட்டினர் "யூதா நாட்டு பெத்லகேமே, யூதாவின் ஆட்சி மையங்களில் நீ சிறியதே இல்லை; ஏனெனில் என் மக்களாம் இஸ்ராயேலை ஆயரென ஆள்பவர் ஒருவர் உன்னிலிருந்தே தோன்றுவார்." சிறுவன் உரத்த குரலில், "இருக்கவே முடியாது. இஸ்ராயேலையும் உலகம் முழுவதையும் ஆட்சி செய்பவர் பேரரசர் அகஸ்டஸ் சீசர் தான்." என்று கூறினான். சிறுவனது வார்த்தைகளை பொருட்படுத்தாமல், தங்களுக்குள் பேசிக்கொண்ட அந்த மூன்று பேரும் சிறுவனை பார்த்து கையசைத்து விட்டு, பெத்லகேம் நோக்கி செல்ல ஆரம்பித்தார்கள். மூன்று ஒட்டகங்களும் செல்வதை திகைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான் அந்த சிறுவன். வானம் இருளில் மூழ்கியிருந்தாலும் அந்த சிற்றூர் மட்டும் அதிசய விண்மீன் ஒளியில் தெளிவாகத் தெரிந்தது.
இன்னும் தான் வீட்டிற்குப் போய் சேரவில்லை என்ற நினைவு தோன்றவே, சட்டென திரும்பி தன் வீட்டை நோக்கி வேகமாக ஒட ஆரம்பித்தான். இன்னும் சிறிது தூரந்தான். அதோ! வீட்டின் சுற்றுசுவர் தெரிகிறது. வாயிலை அடைவதற்குள் அவனுக்கு மூச்சு இறைத்தது. வாயிலின் மரக்கதவை தன் பலங்கொண்ட மட்டும் வேகமாக தட்டினான். பெரிய கதவின் ஒரத்திலிருந்த சிறிய கதவை திறக்கும் ஓசை கேட்டது. திறந்த கதவின் வழியாக, ஒருகையில் வாளும் மறுகையில் தீப்பந்தமும் ஏந்தியபடி வந்த நூற்றுவர் தலைவன், “எங்கே சுற்றிவிட்டு இவ்வளவு தாமதமாக வருகிறாய்? உள்ளே போ. உன் தகப்பனார் ரொம்ப கோபமாயிருக்கிறார். உன்னைத் தேடிக்கண்டு பிடித்துவர படை வீரர்களை அனுப்புவதற்கு ஏற்பாடாகிறது. உடனே போ." என்றான். நூற்றுவர் தலைவனைக் கடந்து உள்ளே வந்த சிறுவன் நேராக மாளிகையின் உள்ளே சென்றான். விசாலமான முன்னறையின் நடுவில் நின்றிருந்த அவனது தந்தை, படைத்தலைவன் ஒருவனுக்கு தனக்கே உரிய அதிகாரத் தொனியில் சில உத்தரவுகளை கொடுத்துக்கொண்டிருந்தார். அவருக்கு அருகே அழுத கண்களும் சிவந்த முகமுமாக அவனது தாயார் நின்றிருந்தாள்.
பேசிக்கொண்டே திரும்பிய தந்தை, தன் மகன் உள்ளே வந்திருப்பதைக் கண்டவுடன், கண்களில் கோபம் கொப்பளிக்க, "எங்கேயடா போயிருந்தாய்?" என்று கத்தினார். சிறுவன் மெதுவாக சொன்னான்: "பெத்லகேமுக்கு." "அது எனக்குத் தெரியும். இவ்வளவு நேரம் அங்கே எந்த பிசாசுகளுடன் சுற்றி கொண்டிருந்தாய்? இருட்டுவதற்கு முன்னதாக வீட்டுக்குள் வந்துவிட வேண்டுமென்று எத்தனை முறை உனக்கு சொல்லியிருக்கிறேன். என்னுடைய அறைக்கு உடனே வா." இன்னும் அழுது கொண்டிருந்த தன் அன்னையை பரிதாபமாக பார்த்த சிறுவன், முன்னே சென்ற தன் தந்தையை தொடர்ந்து சென்றான். இதற்கு மேல் எதுவும் யாரும் தன்னைக் காப்பாற்ற முடியாது என்பது தெளிவாகத் தெரிந்தது. அறையினுள் சென்ற அவனுடைய தந்தை, இருக்கை ஒன்றை இழுத்துப் போட்டு அமர்ந்துகொண்டார். அவனுடைய அன்னை பின்னால் வந்து மெளனமாக கதவருகே நின்றாள்.
கோபம் மிகுந்த குரலில் தந்தை பேசினார்: “இப்போது சொல்! நீ எங்கெங்கே சென்றாய், வீட்டிற்கு வர ஏன் இவ்வளவு நேரமாயிற்று என்று எல்லாம் விவரமாகச் சொல். ஆனால், மரியாதையாக உண்மையை மட்டும் சொல்." சிறுவன் தன் தகப்பனின் முன்னால் பணிவாக வந்து நின்று அன்று நிகழ்ந்தது அனைத்தையும் ஒன்றுவிடாமல் கூறினான். தான் ஊருக்குள் சென்றது, கடைவீதியில் கவனமாக உணவுப்பண்டங்களை வாங்கியது, அவ்வாறு செய்யும் போது ஒரு வெள்ளிகாசை மிச்சப்படுத்தியது, வழியில் தாடிக்காரனுக்கும் கனத்த உடலாயிருந்த பெண்மணிக்கும் சத்திரத்தில் இடம் கிடைக்காமல் போனதை கண்டது, தான் வாங்கிய உணவுப் பண்டங்களை அந்தப் பெண்மணிக்குக் கொடுத்தது, வயல்வெளியில் இடையர்களுக்கு வானத்தில் தோன்றிய அபூர்வக் காட்சியை தானும் கண்டது, அதன்பிறகு "அரசர்க்கெல்லாம் அரசரை" தேடிவந்த மூன்று பெரியோரை சந்தித்தது - இப்படி ஒன்றுவிடாமல் எல்லாவற்றையும் விளக்கமாக விவரித்தான். சிறுவன் கூறியதை கேட்ட தந்தையின் கண்கள் சிவந்தன. கோபத்தோடு கேட்டார்: "கதை இவ்வளவுதானா? இல்லை இன்னும் ஏதாவது இருக்கிறதா?. அந்த "அரசர்க்கெல்லாம் அரசர்!" அவரை பார்த்தாயா?." சிறுவன் மறுமொழியாக, "இல்லை, அப்பா! நான் பார்க்கவில்லை" என்று கூறினான்.
தனது இருக்கையிலிருந்து எழுந்த தகப்பனார், சுற்றிலும் ஒருமுறை பார்த்துவிட்டு, சிறுவனிடம் சொன்னார்: "உனது முகமும் கைகளும் மாதுளம் பழசாறினால் சிவந்து கறைபடிந்திருப்பதை பார்க்கும்போது, அதற்கு ஒரே ஒரு விளக்கம்தான் தெரிகிறது." சிறுவன் பதட்டமில்லாமல் பதில் கூறினான்: "இல்லை, அப்பா! கூடுதலாக வாங்கிய ஒரு மாதுளம் பழத்தைத் தான் நான் சாப்பிட்டேன். எல்லா பொருட்களும் வாங்கிய பிறகும் ஒரு வெள்ளிகாசை மிச்சப்படுத்தி கொண்டு வந்தேன்" என்று சொல்லிவிட்டு, மீதியிருந்த வெள்ளிகாசை தன் அன்னையிடம் கொடுத்தான். ஆனாலும், சிறுவனின் முகத்தை முறைத்துப் பார்த்த அவன் தந்தை, "அந்த மற்றொரு வெள்ளி காசுக்கு வாங்கிய அத்தனை பொருளையும் நீயே தின்று தீர்த்துவிட்டாய். அதனால் தான் வெறுங்கையுடன் வீட்டிற்கு வந்திருக்கிறாய். அப்படித்தானே?" என்று சத்தமிட்டார். சிறுவன் பணிவுடன், "அது உண்மையல்ல, அப்பா !” என்றான். மீண்டும் இருக்கையில் அமர்ந்து கொண்ட தந்தை சிறுவனிடம், "இதோ பார், மகனே! உண்மையைச் சொல்வதற்கு உனக்கு மற்றொரு வாய்ப்பு தருகிறேன். தவறினால், உன் வாழ்நாள் முழுவதும் மறக்கமுடியாதபடி உனக்கு தண்டனை தருவேன், ஜாக்கிரதை!" என்றார்.
சிறுவன் தன் தந்தையை நேராக பார்த்து, “நான் ஏற்கனவே சொன்னதெல்லாம் உண்மைதான், அப்பா! நான் பொய் ஏதும் சொல்லவில்லை" என்று கூறினான். தந்தையின் கோபம் அவருடைய குரலில் தெரிந்தது. "எத்தனை தடவைக் கேட்டாலும் நீ உண்மையை கூறமாட்டாய், அல்லவா? இப்போது எனக்கு வேறு வழியில்லை” என்று கூறிவிட்டு தனது இருக்கையிலிருந்து எழுந்த சிறுவனின் தந்தை, தன் இடுப்பில் கட்டியிருந்த தோல்வார்ப்பட்டையை கழற்றினார். அதன் முனையிலிருந்த உலோகத்தகடுகள் வெளிப்புறம் இருக்குமாறு இரண்டாக மடித்தார். தன் மகனைப் பார்த்து, அவனுடைய கால் கட்டை விரல்களை பிடித்துக் கொண்டு குனிந்து நிற்கும் படி கட்டளையிட்டார். சிறுவன் கொஞ்சமும் தயக்கமின்றி அவ்வாறே செய்தான். கையிலிருந்த தோல்வார்ப்பட்டையை , தலைக்கு மேலே உயர்த்திய தகப்பனார் தன் முழுபலத்தோடு சிறுவனின் உடல் மீது மீண்டும் மீண்டுமாக அடிக்கத் தொடங்கினார். சிறுவன் கொஞ்சமும் எதிர்ப்பு காட்டவுமில்லை; முணுமுணுக்கவுமில்லை. அவனுடைய அன்னை முகத்தை வேறு பக்கமாகத் திருப்பிக்கொண்டு அழுது கொண்டிருந்தாள். பன்னிரண்டு அடிகள் அடித்த பின்னர் நிறுத்திய தந்தை, தன் மகனை அவனுடைய அறைக்கு செல்லும்படி கட்டளையிட்டார்.
எதுவும் பேசாமல் மெளனமாக அறையை விட்டு அகன்ற சிறுவனை பின்தொடர்ந்த அன்னை, தன் மகன் படிக்கட்டுகளில் ஏறிச் செல்வதை சற்று நேரம் பார்த்துவிட்டு, முகத்தில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டே வேகமாக சமையலறைக்குச் சென்றாள். ஒலிவ எண்ணெய் மற்றும் சில மூலிகை தைலங்கள் கொண்ட ஜாடிகளை எடுத்துக் கொண்டு தன் மகனின் அறையை நோக்கி நடந்தாள். இந்த எண்ணெயும் தைலங்களும் தன் மகன் பட்ட அடிகளின் வலியை குறைக்கவும் காயங்களை ஆற்றவும் அனுகூலமாயிருக்கும் என்று நினைத்துக் கொண்டே மகனின் அறையினுள் நுழைந்தாள். சிறுவன் தன் படுக்கையில் படுத்திருந்தான். படுக்கையின் ஒரத்தில் உட்கார்ந்த அன்னை, போர்வையை விலக்கினாள். தான் கொண்டு வந்த தைலங்களை ஒன்றாக கலந்த பின்னர், மகனின் மேலாடையை அவனுக்கு வலிக்காத வண்ணம் மெதுவாக கழற்றினாள். தைலக்கலவையை விரல்களில் எடுத்துக்கொண்டு திரும்பிய அவள், தன் மகனின் உடலைத் கண்டு திடுக்கிட்டாள்.
அவளால் நம்பவே முடியவில்லை. உடலில் காயங்களோ, அடி வாங்கிய சுவடுகளோ ஒன்றுமே இல்லை. தன் மகனின் உடலை தன் விரல்களால் தடவிப் பார்த்தாள். அப்போதுதான் குளித்துவிட்டு வந்ததைபோல சிறுவனின் உடல், பூவை போல பட்டுபோல மென்மையாக அப்பழுக்கற்று இருந்தது. மனதில் திகைப்பும், முகத்தில் ஆச்சரியமும் பொங்கிட, மகனின் உடலைத் திருப்பி அவன் முதுகை பார்த்தாள். எங்குமே காயங்கள் இல்லை. போர்வையை எடுத்து மகனை போர்த்திவிட்டாள், அந்த அன்னை. மகிழ்ச்சியும் வியப்பும் மேலிட, தன் மகனை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டு, அவன் கன்னத்தில் முத்தமிட்ட அன்னை, தன் மகனிடம் "உன் தந்தையிடம் இதைப் பற்றி ஒன்றுமே சொல்லாதே, மகனே! உன் மனதிலிருந்து இந்த நிகழ்ச்சிகளைப் பற்றிய நினைவுகள் எல்லாவற்றையும் முற்றிலுமாக அழித்துவிடு. இதையெல்லாம் கேட்டால் அவருக்கு இன்னும் கோபம்தான் வரும்." என்றுக் கூறினாள். சிறுவனும், "சரி, அம்மா!" என்று பதிலிறுத்தான்.
படுக்கையின் அருகே எரிந்து கொண்டிருந்த விளக்கை குனிந்து ஊதி அணைத்த சிறுவனின் அன்னை, கொண்டு வந்த தைல ஜாடிகளை எடுத்துக்கொண்டு வெளியே சென்றாள். கதவருகே நின்று திரும்பிய அவள், அறையில் பரவியிருந்த மெல்லிய வெளிச்சத்தில் தன் மகனைப் பார்த்து கூறினாள்: “நீ கூறியதெல்லாம் உண்மை தானென்று இப்போது நான் நம்புகிறேன், என் மகனே, போஞ்சு பிலாத்து!"