திருமணம் என்னும் நெருப்பு


- Deepti Devaraj . Counsellor and Psychotherapist

“இந்தத் தலைமுறை விசித்திரமானது. கையில் கடந்த கால மண்ணையும் எதிர்கால விதைகளையும் வைத்துக் கொண்டு உறக்கத்துக்கும் விழிப்புக்கும் இடையே ஊசலாடுகிறது” என்பார் கலீல் ஜிப்ரான். நீதிமொழிகள் போன்ற பழைய ஏற்பாட்டு வாழ்வியல் கருத்துக்களை உள்வாங்கிக் கவிதைகளில் வடித்துத் தந்த லெபனான் சொற்சிற்பி அவர். குடும்பங்களில் விதை என்பது வளர் இளம் பருவத்தினர். விதைகள் வீரியம் மிக்கதாக இருந்தால்தான் ஓங்கி வளர்ந்து அடர்ந்த தோப்பாகித் தகுந்த பலன் தரும்.


பசுமை மாறாக் காடுகள் பார்வைக்கும் அழகு, பயனும் பெரிது. புவி வெப்பமாகி ஏற்படும் சூழல் மாறுபாடுகளால் உலகம் அழியாமல் காத்து வரும் மிகப் பெரிய அரண் அது. அங்கே கருவாலி மரங்கள் பசுமையுடன் வனத்தை நிரப்பி இருக்கும். ஏகோர்ன் எனப்படும் கருவாலி விதை மிக உறுதியானது. அது வனத்தில் ஏற்படும் காட்டுத் தீயின் வெப்பத்தில்தான் வெடிக்கும். பின்பு பெருமழை வரும் போதுதான் முளைத்து வான் நோக்கி மரமாக வளருமாம்.


அன்புப் பெற்றோர்களே, நீங்கள்தான் இந்த மரங்கள். திருமணம் என்ற நெருப்பில் தூவப்பட்டு முளைத்தெழுந்து, வேர் விட்டுப் பிரமாண்டமாய் வளரும் கருவாலி மரங்கள். அதன் ஏகோர்ன் விதைகள் பிள்ளைகள். உங்கள் பெற்றோர் உங்களுக்கு என்ன நல்லது கொடுத்தார்களோ அதை அழிக்காமல் சிதைக்காமல் உங்கள் குழந்தைகளுக்கு ஊட்டி வளர்க்கக் கடமைப் பட்டிருக்கிறீர்கள். திருமணம் என்ற நெருப்பில் உங்கள் குழந்தைகளை விதைக்கும் முன் அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள், “படித்துப் பெற்ற பட்டங்களை விடப் பண்புகள் முக்கியமானவை” என்று. நீங்கள் கூட்டுக் குடும்பமாய் வாழ்ந்தக் காலத்தில் யாரிடம் போய் “soft skills” பயிற்சிப் பெற்றீர்கள்? குடும்பம் தந்த பயிற்சிகள் அல்லவா அவை? விருந்தினரை வாசல் சென்று வரவேற்றீர்கள். புன்னகையுடன் விருந்தோம்பல் செய்தீர்கள். வீதி வரை சென்று வழி அனுப்பினீர்கள்.


இது போன்ற பண்பாடு, கலாச்சாரம், மனித நேயம் இவையனைத்தும் தலைமுறை தோறும் காப்பாற்றப்பட வேண்டிய ஒன்று. இவற்றை உங்கள் மகளுக்குச் சீதனமாகக் கொடுத்து அனுப்புங்கள். இவைதான் நிலைத்து நிற்கும் சொத்து என்று மகனுக்குத் தெளிவுபடுத்துங்கள். பணம், பதவி வரும் போது பணிவும் வேண்டும்; பணிவிருக்கும் போது துணிவும் வேண்டும். உங்கள் மகனுக்குப் பெண் பார்க்கிறீர்களா? பெண்ணின் பட்டங்களை விட, அவள் பெற்றோர் தரும் நகை, பணத்தை விட, அவள் சம்பளத்தில் உள்ள அளவில்லா பூஜ்ஜியங்களை விட, அவள் முக அழகையும், கட்டுடல் மேனியையும் விட , அவள் பண்பானவளாக வளர்க்கப் பட்டிருக்கிறாளா என்று பாருங்கள். இல்லை என்றால் உங்கள் மகனை பணம் நகைக்காக நீங்களே அடகு வைப்பதற்குச் சமம். உங்கள் மகளுக்கு வரன் தேடுகிறீர்களா? என்ன வேலை? என்ன சம்பாத்தியம்? என்ன உயரம்? தனிக் குடித்தனமா? என்றெல்லாம் பார்ப்பதற்கு முன் பணிவும், துணிவும், பண்பும் இருக்கிறதா என்று பாருங்கள்.


அது போலவே பிள்ளைகளுக்குச் சுகத்திற்கும் சந்தோஷத்திற்கும் வித்தியாசம் சொல்லிக் கொடுங்கள். “Most people mistake comfort for happiness, that is where we miss our children from being human to human being.” வசதிகள் மட்டும் ஒருபோதும் மனிதனை மகிழ்ச்சியாக வைத்திராது. வசதிகள் மட்டும் ஒருநாளும் மனதை திருப்திப் படுத்தாது. வசதிகளுக்கான ஏக்கங்கள் மட்டுமே வளர்ந்து கொண்டே இருக்கும்.


நாம் உண்ணும் உணவே, அறுசுவையாக இருந்தால்தான் சரியான நிறைவான உணவாக இருக்கும். திகட்ட திகட்ட இனிப்பாகப் பிள்ளைகளுக்கு வாழ்க்கையைக் காட்டுவீர்களானால் வாழ்வின் முழுமை தெரியாமல் போய்விடும். பல சமயம் வாழ்க்கை வீணாகி விடும். பிள்ளைகளுக்கு ‘சில சமயம் முயற்சிக்குப் பின்வரும் தோல்வி அழகானது; சுவாரஸ்யமானது; தோல்வி கற்றுத் தரும் பாடங்கள் நிரந்தரமானது என்று கற்றுக் கொடுங்கள். “முயல் வேட்டையில் ஜெயிப்பதைவிட யானை வேட்டையில் தோற்பது நல்லது”. அதே சமயம் இல்லறத்தில் ‘தான்’ தோற்க வேண்டிய தருணங்களும் உண்டு. எப்படித் தோல்வியுற வேண்டும்? யாரிடம் தோல்வியுற வேண்டும் என்றும் சொல்லிக் கொடுங்கள். இல்லையெனில் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இல்லாமல் விவாகரத்து நோக்கி திருமணப் பந்தம் செல்லும்.


முந்தைய தலைமுறை மதிப்பீடுகளான கடந்த கால மண்ணின் சத்துக்களை எதிர்கால விதைகளாம் பிள்ளைகளுக்கு இந்தத் தலை முறையினராம் பெற்றோர்கள் சரியாக ஊட்டினோம் எனில் வாழ்க்கை என்றும் ஊசலாடாமல் அழகாகும்; பசுமையாய் சமூகத்தில் பரந்து விரியும்.