கால் பதித்த கடவுள்!
அருட்பணி. யேசு கருணாநிதி, மதுரை மறைமாவட்டம்
அயர்லாந்து நாட்டில் ஒரு டிசம்பர் மாதம். குளிர்காலம். மாலை நேரத் தேநீரைக் குடித்துக் கொண்டிருக்கிறார் ஒரு பெண்மணி. திடீரென அவரது வீட்டின் அழைப்பு மணி ஒலிக்கிறது. ‘யார் வந்திருப்பார்கள்?’ என்று நினைத்துக்கொண்டே கதவின் துவாரம் வழியே பார்க்கின்றார். வாசலில் ஒரு சிறுவனும், சிறுமியும் நின்று கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் பார்த்தாலே ‘ஏழைச் சிறுவர்கள்’ என்று சொல்லிவிடலாம். ஏனோதானோவென்ற ஆடை, அழுக்குப்படிந்த முகம், சிக்கு விழுந்த தலை. ‘என்ன வேண்டும்?’ கேட்கிறார் பெண். ‘உங்கள் வீட்டில் பழைய செய்தித்தாள்கள் இருந்தால் கொடுப்பீர்களா?’ பதில் வருகிறது. ‘ஏன்?’ ‘ரொம்ப பனி பெய்கிறது. குளிர் அதிகமாக இருக்கிறது. இந்தப் பனியில் நடப்பதற்காக பழைய செய்தித்தாள்களை நாங்கள் எங்கள் பாதங்களில் கட்டிக்கொள்வோம். எங்கள் ஆடைகளுக்குள்ளும் வைத்து குளிர்போக்கிக்கொள்வோம்’. அந்தப் பெண்மணி குனிந்து அவர்களின் பாதங்களைப் பார்க்கின்றாள். அவர்கள் பாதங்களில் கட்டியிருந்த பழைய செய்தித்தாள்கள் பனியில் நனைந்து கிழிந்துகொண்டிருந்தன.
விரைவாக அவர்களை வீட்டிற்குள் அழைக்கின்றாள். அவர்களை சோஃபாவில் அமரச் செய்துவிட்டு அவர்களுக்கு தேநீர் கொண்டு வருகின்றாள். தேநீர்க் கோப்பையைக் கையில் எடுத்தவுடன் சிறுவன், ‘அம்மா, நீங்கள் பணக்காரரா?’ என்று கேட்கின்றான். அந்தப் பெண்மணி, ‘எப்படிக் கேட்கிறாய்?’ என, சிறுவன் சொல்கிறான், ‘பணக்காரர்கள் வீட்டில்தான் கப்பும், சாசரும் மேட்ச்சாக இருக்கும் என என் அம்மா சொல்லியிருக்கிறார்கள்’ என்கிறான். அப்போதுதான் அந்தப் பெண்மணிக்குத் தோன்றுகிறது: ‘மற்றவரிடம் இல்லாத பல தன்னிடம் இருக்கிறது. அதை நான் உணராமல் அன்றாடம் என் குறைகளையே நினைத்து புலம்புகிறேனே’ என்று. தன் வீட்டில் இருந்த குழந்தைகளின் பழைய காலணிகளை அவர்களுக்குக் கொடுத்து, ஆடைகளும் கொடுத்து அனுப்புகின்றாள். கதவை அடைத்து விட்டு உள்ளே வந்து அவர்கள் விட்டுச் சென்ற தேநீர்க் கோப்பையை எடுத்துப் பார்க்கின்றாள். ஆம். அது மேட்ச்சாக இருந்தது. சோஃபாவின் அருகில் அந்தச் சிறுவர்களின் காலடித்தடங்கள் பழைய செய்தித்தாளின் ஈரத்தோடு ஒட்டியிருக்கின்றன. அதைத் துடைக்காமல் அப்படியே விடுகின்றாள்.
இரண்டாயிரத்து பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக பெத்லகேம் மாடடைக்குடிலில், ஒரு குளிர் இரவில் தன் பிஞ்சுப் பாதங்களைப் பதித்த பாலஸ்தீனத்தையும் குழந்தையையும் நமக்கு இதைத் தான் நினைவுபடுத்துகின்றது: ‘நாமெல்லாம் செல்வந்தர்கள்’. ‘அவர் செல்வராயிருந்தும் உங்களுக்காக ஏழையானார். அவருடைய ஏழ்மையினால் நீங்கள் செல்வராகுமாறு இவ்வாறு செய்தார்’ (2கொரி 8:9). இறைவனின் பாதப்பதிவுகள் மனுக்குலத்திற்குச் சொந்தமான நாள் கிறிஸ்துமஸ். காலங்களையெல்லாம் கடந்த கடவுள் மனித நேரத்திற்குள் நுழைந்த இரவு இந்த இரவு. பெயர்களையெல்லாம் கடந்த இறைவன் இம்மானுவேல், இயேசு என்று பெயர் பெற்ற நாள் இந்த நாள். இந்தப் பாதச்சுவடுகள் நம் உள்ளங்களிலும், இல்லங்களிலும் பதிய வேண்டும் என்று குடில் ஜோடித்து அழகு பார்க்கின்றோம். அவரது பிறப்பை அடையாளம் காட்டிய நட்சத்திரம் நமக்கும் நல்வழி காட்ட வேண்டும் என ஒளியால் அலங்கரித்துள்ளோம். கீழ்த்திசை உதித்த ஆதவனாய், பாவம் போக்க மனுவுரு எடுத்த நம் மன்னவனின் ஒளி அகஇருள் போக்கி நிறைஒளி தர வேண்டிநிற்கின்றோம். ‘வார்த்தை மனிதரானார். நம் நடுவே தன் காலடிகளைப் பதித்தார்’ (யோவா 1:18).
‘நற்செய்தி அறிவிப்பவரின் பாதங்கள் எத்துணை அழகானவை’ (எசா 52:7) என்று எசாயா முன்னுரைத்தது இன்று நிறைவேறுகின்றது. இந்த நற்செய்தி அறிவிப்பவர் இயேசுவே. அவர் கொண்டு வந்த நற்செய்தி அன்பு, மகிழ்ச்சி, அமைதி, நம்பிக்கை. ‘நீர் வானங்களைப் பிளந்து இறங்கி வரமாட்டீரா?’ (எசா 63:1) என்று வேட்கை கொண்ட எசாயா இஸ்ராயேல் மக்களின் எதிர்பார்ப்பை எடுத்துரைக்கின்றார். இயேசுவின் பிறப்பு மட்டுமல்ல, அவரது பணிவாழ்வும் கூட அவர் இம்மண்ணுலகில் காலூன்றி நின்றதை நமக்குக் காட்டுகின்றது. செக்கரியாவும் தனது பாடலில் ‘நம்முடைய கால்களை அமைதி வழியில் நடக்கச் செய்யவும் நம் கடவுளின் பரிவுள்ளத்தாலும், இரக்கத்தாலும் விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடி வருகின்றது’ (லூக் 1:79) என்று பாடுகின்றார். திருமுழுக்கு யோவான் இயேசுவின் காலடிகளைத் தொடக்கூடத் தகுதியில்லை எனத் தம் வெறுமையை ஏற்றுக்கொள்கின்றார். பாவியான ஒரு பெண் அவரது காலடிகளில் கண்ணீர் வடிக்கின்றார் (லூக் 7:38). மீன்பாட்டைக் கண்டவுடன் சீடர்கள் இயேசுவின் காலடிகளில் விழுகின்றனர் (மாற் 5:22). தொழுகைக்கூடத் தலைவர் யாயீர் காலடிகளில் பணிகின்றார் (மாற் 5:33). தன் இறுதி இராவுணவில் தம் சீடர்களின் காலடிகளைக் கழுவியதோடு மட்டுமல்லாமல் அதையே அவர்களும் செய்ய வேண்டும் எனக் கட்டளையிடுகின்றார் (யோவா 13:14). இயேசுவின் காலடிகளைப் பற்றி விவிலியம் பேசும் இடத்திலெல்லாம், மனுக்குலத்தில் அவர் வேரூன்றி நின்றதுதான் வெளிப்படுகின்றது.
கிறிஸ்து மனுக்குலத்தில் காலூன்றிய இந்த நிகழ்வு நமக்கு மூன்று வாக்குறுதிகளைத் தருகின்றது:
இறைவன் மனுக்குலத்தோடு உடனிருக்க இறங்கி வருகின்றார். பழைய ஏற்பாட்டு காலத்திலிருந்து இறைவன் உடனிருக்கும் இறைவனாகவே மக்கள் நடுவே திகழ்கின்றார். இறைவன் நம்மோடு உடனிருக்கிறாரெனில், நாம் ஒருவர் மற்றவரோடு உடனிருக்கின்றோமா? நம் உடனிருப்பு மற்றவரின் பிரசன்னத்திற்கு அழகு சேர்க்கின்றதா? அல்லது அழித்து விடுகின்றதா?
இன்றைய பல தீமைகளில் மிகக் கொடுமையானது ‘நம்பிக்கையிழப்பது.’ தோல்வியைவிட, தோல்வியைக் குறித்த பயம்தான் நம்மை அதிகமாக பயமுறுத்துகின்றது. கடவுள் மனிதவுரு ஏற்றார். மனிதம் மேன்மையானது. மனிதம் சார்ந்த அனைத்தும் வாழ்வு தருவது. ஆகையால், எதையும் துணிச்சலோடு எதிர்கொள்தல் அவசியம். நம் இறைவன் நாம் அழிவுற நினைக்கும் இறைவனல்லர். நம் வாழ்வு ஒரு கொடை. அந்தக் கொடையைப் பெறுதலே பெரிய பாக்கியம். அதில் மகிழ்வோம்.
இறைவன் - மனிதன், ஆண் - பெண், வளமை - வறுமை, நிறைவு - குறைவு என்று மனிதர் வைத்திருந்த அனைத்துப் பிரிவினைகளும் இயேசுவின் பிறப்பில் அழிந்தன. வலுவற்றதை வல்லமை தழுவிக் கொண்டதால் அனைத்துமே வல்லமை பெற்றது.
நம் நடுவில் அவர் காலடிகளைப் பதித்தார். நாம் ஒருவர் மற்றவர் வாழ்வில் அன்பினால் கால் பதிப்போம்.
வாழ்த்துக்களுடன்,
அருட்பணி. யேசு கருணாநிதி