மாறி வரும் கிறிஸ்து பிறப்பு பெருவிழா!
திருமதி. பிலோமினாள் ஆரோக்கியசாமி -ஞானஒளிபுரம், மதுரை
2000ம் ஆண்டு, டிசம்பர் திங்கள் புதிதாக மணமுடித்திருந்த எங்கள் மகள், மருமகனோடு கிருஸ்துமஸைக் கொண்டாட நானும் என் கணவரும் அமெரிக்கா புறப்பட்டோம். இது எங்களுக்கு முதல் அமெரிக்கப் பயணமானதால் உடலெல்லாம் புல்லரிப்பும், மனதெல்லாம் மத்தாப்புச் சிதறலுமாக சிறுபிள்ளைகளுக்குரிய உற்சாகம் தொற்றிக்கொண்டது எங்கள் இருவரையும். அமெரிக்காவை அடைந்த நாங்கள் மகளின் வீடு நோக்கிப் போகும் வழி எங்கும் கிறிஸ்துமஸின் பொலிவைக்காண முடிந்தது. அங்கிங்கெனாதபடி எல்லா இடங்களிலும் வண்ணவிளக்குகள், மலர்க்கொத்துக்கள், கிரீடங்கள், பரவசத்தின் உச்சத்தில் நாங்கள். கிறிஸ்மஸும் வந்தது. 24 ம் தேதி மாலையே திருவிழாத் திருப்பலி. சரசரக்கும் புத்தாடைகளுடனும், பளபளக்கும் அணிகலன்களுடனும் நம்மவருடன் சேர்ந்து நடுநிசித்திருப்பலி காண முடியாமல் போனதே எனும் ஏக்கம் முதல்முறையாக எட்டிப்பார்த்தது எங்களுக்குள். மறுநாள் காலை 6 மணிக்கெல்லாம் எழுந்த நாங்கள் பிள்ளைகள் உறக்கத்திலிருந்து எழுந்து வரக் காத்திருந்தோம். கிட்டத்தட்ட 10 மணிக்கு மாடியிலிருந்து இறங்கி வந்த மகளைப் பார்த்து ஏமாற்றம் கலந்த குரலில் " என்னம்மா! நம்மூர் மாதிரி இங்கு எதுவும் இல்லையே" என்று ஆரம்பிப்பதற்குள் "இதுதானே அம்மா இங்கு பழக்கம்" என்றாள் என் மகள். உண்மைதான்".. எங்களுக்கு அந்நியமாகப்பட்ட ஒன்று அவளுக்குப் 'பழக்கமாக'ப் போய்விட்டது. இந்தப் பழக்கம் அடுத்து வந்த இந்த 16 ஆண்டுகளில் காட்டுத்தீ போல் நாடு, இனம், மதம், மொழி என்ற வித்தியாசம் இன்றி எல்லா இடங்களிலும் தொற்றிக் கொண்டு விட்டது என்பது அனைவரும் அறிந்த இரகசியம். கிறிஸ்துவின் வருகை என்பது வெறும் " Happy Christmas" தானா? வெளி ஆடம்பரங்களும், வியாபார யுத்திகளும் தானா? விடையைத் தேட வேண்டிய தருணம்.
கிறிஸ்து பிறந்த இந்த 2000 ஆண்டுகளுக்குப்பின் இந்த விழா நமக்குச் சொல்லும் செய்தி என்ன?
" உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக!
உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக!"(லூக்கா2:13-14)
நாம் இன்று ஈடுபட்டுள்ள செயல்பாடுகள் விண்ணகத்தில் இறைவனுக்கு மாட்சி சேர்க்கின்றனவா? இல்லை..அவை மண்ணக மாந்தருக்கு மன அமைதியைத்தான் தருகிறதா? நம் இல்லங்களில் தொலைக்காட்சிகள் நமக்கு அன்றாடம் சொல்லும் செய்தி என்ன? கொலை, கொள்ளை, லஞ்சம், கற்பழிப்பு, வேலையில்லாத்திண்டாட்டம், குழந்தைத் தொழிலாளரின் அவலநிலை, நம்மை ஆள்பவர்களின் அலட்சியப்போக்கு...இவைதவிர வேறென்ன? நம்மைச் சுற்றி இப்படிப்பட்ட தீய சக்திகளின் மூச்சுக்காற்று நிறைந்திருக்கும் போது அதைத்தானே நம்மால் சுவாசிக்கவும், சீரணிக்கவும் முடியும்?
மானுடத்தைப் படைத்த மாபரனுக்கு அன்று சத்திரத்தில் இடம் மட்டும்தான் இல்லாமல் போயிற்று. ஆனால் இன்று நமக்குத் திரும்புமிடமெல்லாம் " இல்லை" யென்ற சொல்லைத்தவிர வேறில்லை. உலகில் மனிதம் இல்லை; புனிதம் இல்லை; உறவுகளில் உண்மை இல்லை; உள்ளங்களில், இல்லங்களில் மகிழ்ச்சி இல்லை. குடும்பங்களில் வயதானவர்களுக்கு வாய்ஸ் இல்லை. "வாழ்வின் அஸ்தனமும் அழகு தான்" என்று நினைக்கும் பிள்ளைகள் இல்லை." நேற்று நாமும் இவர்கள் போலிருந்தவர்கள் தானே என்று இளசுகளை அரவணைத்துச் செல்லும் பெரியவர்கள் இல்லை. நாளெல்லாம் உழைக்கத் தயாராயிருப்பவர்களுக்குத் தங்கள் உழைப்பை வெளிக்கொணர வேலை இல்லை. உண்ண உணவில்லை; உடுத்த உடையில்லை. இன்று நாட்டில் பேயாட்டம் போட்டுக்கொண்டிருக்கும் பிரச்சனை...வங்கிகளில் நமது பணமிருந்தும் நம்மால் எடுக்க இயலா நிலை. இதற்குக் காரணமானவர்களின் மெத்தனப் போக்கு. இங்கு எல்லாமே இல்லை என்றான பிறகு நாம் செல்லும் திசைதான் என்ன?
அன்று "காரிருளில் நடந்த மக்கள் ஒளியைக்கண்டதாக"ச் சொல்கிறது விவிலியம். இன்று வெறுமை, பொய்மை, இல்லாமை, தீமை ...இப்படிப்பட்ட ஆமைகள் ஏற்படுத்தும் காரிருளிலிருந்து நாம் கலங்கரை விளக்கத்தைப் பார்ப்பது தான் எப்போது? இன்று நாம் கடந்து செல்லும் திருவருகைக் காலம் என்பது நம்மை 'கிறிஸ்து பிறப்பு'எனும் மகிழ்ச்சிக்கு இட்டுச் செல்லும் 'பாலம்' போன்றது. இருப்பவர், இல்லாதவர் இருவருமே மகிழ்ச்சி காண வழி என்ன? இருப்பவர் மகிழ்ந்து கொடுப்பதும், இல்லாதவர் முகம் மலர வாங்கிக்கொள்வதும் தான் இதற்கு வழி. ஆகவே கொடுப்பதை நமதாக்குவோம், அலுங்கிக் குலுங்கிக் கொடுப்போம். யாருக்குக் கொடுப்பது? காலையில் நாம் கொடுத்த ஒரு பரிசை மாலையில் நமக்கு அந்தப் பரிசின் இன்னொரு பதிவாகத் திருப்பித்தரும் சக்தி படைத்தவர்களுக்கல்ல; நம்மிடமிருந்து பெற்ற உதவியை நமக்குத் திருப்பித் தர இயலாதவர்களுக்கே நம் கரம் நீள வேண்டும்.
சிறுவயதில் கிறிஸ்து பிறப்பை நாடகமாக்கியபோது அதில் நான் பாடிய பாடலொன்று சிந்தனையில் எட்டிப்பார்க்கிறது. அன்னை மரியாள் தன் மடியில் தவழும் தனயனைப் பார்த்துப் பாடுவதாக அமைந்துள்ளது....
- "ஏதுக்கழுகின்றாய் நீ...ஏழை மாது நான் என்ன செய்வேன்?
- கூதலடிக்கின்றதோ பாலா குளிரும் பொறுக்கலையோ
- வாடையடிக்கின்றதோ பாலா மாடடைக் கொட்டிலிலே
- மூடத் துணியில்லையோ பாலா முன்னோர்கள் செய்வினையோ...."
தரித்திரத்தின் உச்சத்தில் தன் தாய் இருப்பது அறியாமல் கொடுமைமிகு குளிரில் குரலெலுப்பும் பிஞ்சு மகனை யார் தேற்றுவது?
- "எளிய மனத்தோராய், ஏழையின் கண்ணீரைத்துடைத்தோராய்
- இரக்கம் மிகுந்தோராய், தாழ்ச்சியை ஆடையாய் அணிந்தோராய்
- தாராளமாய்த் தந்து உதவுவோராய், தன்னலம் துறந்தோராய்"
வாழத் துடிக்கும் ஒவ்வொருவருமே நம் இனிய சொற்களால், செயல்களால், புன்முறுவலால் இந்தத் தாய் மற்றும் சேயின் அழுகையை அமர்த்தலாம்; அவர்களின் குளிர்பட்ட உடம்புக்கு கதகதப்பைக் காணிக்கையாக்கலாம். கண்டிப்பாக இந்த கிறிஸ்துமஸ் நன்னாளை ஒரு அர்த்தமுள்ள நாளாக்கலாம்.
"அன்பின் மடல்" வாசகர்கள் அனைவருக்கும் என் கிறிஸ்துமஸ்,புத்தாண்டு வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன். பிறக்கவிருக்கும் புது வருடம் நம் இல்லங்களையும், உள்ளங்களையும் மகிழ்ச்சியால் நிரப்பட்டும்!