நற்செய்தியாளர் லூக்காவின் கிறிஸ்மஸ்!
சகோதரர் ஸ்டீபன், புதுவாழ்வு தியான நிலையம், மத்தளம்பாறை, தென்காசி
இரக்கத்தின் நற்செய்தியாளர் லூக்கா தன் எழுத்தாற்றலால் இயேசுவின் பிறப்பு நிகழ்ச்சிகளைச் சிறப்பாகவும், தெளிவாகவும் பதிவு செய்துள்ளார். இந்தப் பிறப்புக்குப் பின் பலமாக இருக்கும் வரலாறு, கலாச்சரம், தெய்வீகம் ஆகியவற்றை அழகாக விளக்கிக் கூறுகிறார் ஆசிரியர்.
வரலாறு:
இயேசுவின் பிறப்பு உலக வரலாற்றில் ஒரு மைல்கல்லாக அமைந்தது என்பதை அன்று பாலஸ்தீனா நாட்டைக் காலனி ஆதிக்கமாகக் கொண்டிருந்த உரோமைப் பேரரசு பற்றியக் குறிப்புத் தெளிவுப்படுத்துகிறது. அகுஸ்துஸ் சீசர் (கி.மு 27- கி.பி:14) அன்றைய உரோமைப் பேரரசராக விளங்கியவர். அவர் அவ்வப்போது மக்கள் தொகையைக் கணக்கிட்து காலனி ஆதிக்கத்திற்கே உரியச் செயலாக இருந்தது. குரேனியு என்ற ஆளுநுர் சிரியா நாட்டுக்குப் பொறுப்பேற்றிருந்த காலம் அது. இவரின் காலத்தில் மக்கள் கணக்கெடுப்பு கி.மு 6-7 ஆண்டுகளில் நிகழ்ந்தது என்பது வரலாறு.
இயேசு பிறந்த நாளாகக் கருதப்படும் டிசம்பர் திங்கள் 25 ஆம் நாள் உரோமைப் பேரரசில் சூரியக் கடவுளின் வழிப்பாடாகக் கொண்டாடப்பட்டது. ஏனெனில் இருள் சூழ்ந்தக் குளிர் காலத்தில் வழக்கமாக டிசம்பர் 25ஆம் நாள் சூரியன் வெளிப்பட்டு ஒளிவீசி மக்களை மகிழ்வித்தது. கி.பி. 3ஆம் நூற்றாண்டில் கிறிஸ்தவப் பேரரசராகத் திகழ்ந்த கான்ஸ்டைன்டின், உலகின் ஒளி இயேசு என்கிற ஆழ்ந்தச் சிந்தனைக் கொண்ட ஒர் உண்மையை வெளிப்பாடாகக் கிறிஸ்து பிறப்பை இந்த நாளில் கொண்டாட உத்தரவுப் பிறப்பித்தார் என்பது வரலாறு ஆகும். மக்கள்தொகைக் கணக்கை முன்னிட்டுத் தங்கள் பெயரைப் பதிவு செய்யத் தாவீதின் ஊராக இருந்த பெத்லகேமுக்கு மரியாவும் யோசேப்பும் சென்றது அக்காலத்தின் கட்டாயம் என்பது எந்தவிதச் சந்தேகமுல்லை. அங்கு நிகழ்ந்த இயேசுவின் பிறப்பைப் பழைய ஏற்பாட்டுக் கலாச்சாரக் கண்ணோட்டதுடன் லூக்கா இவ்வாறு விளக்குகிறார். (எசா7:14,4:2, 11:1, எரேமியா 23:5,33:15, செக்க:3:8)
தலைமகன்:
அவர் தம் தலைமகனைப் பெற்றெடுத்தார். விடுதியில் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. எனவே பிள்ளையைத் துணிகளில் பொதிந்து தீவனத் தொட்டியில் கிடத்தினார்.(லூக்கா2:7)
தலைமகன் என்ற குறிப்பு வழக்கமாக ஏனயைப் பிள்ளைகளும் இருந்தனர் என்பதைக் கூறும் சொல். அவ்வாறெனில் இயேசுவைத் தவிர அன்னை மரியா வேறு பிள்ளைகளையும் பெற்றெடுத்தாரா என்பது பலரின் கேள்வி. ஆனால் யூதக்கலாச்சாரத்தில் தலைமகன் என்னும் சொல் குடும்ப உரிமைகளுக்கு உரியவர் என்ற கருத்தில் சொல்லப்பட்டது. (தொ.நூல் 27:29, 33:37) ஒரேமகனாக இருந்தாலும் உரிமைகள் அனைத்திருக்கும் உரியவர் என்ற கருத்தில் அவர் தலைமகனாகக் கருதப்பட்டார்.
இஸ்ரயேல் மக்கள் விடுதலைப் பெறக் கடவுள் எகிப்து நாட்டில் வாழ்ந்த அனைத்து ஆண் தலைமகன்களைச் சாவுக்கு உட்படுத்தினார். (வி.ப. 12:29-32). இதன் விளைவாகத் தன் இஸ்ரயேல் மக்களில் பிறக்கும் தலைமகன்கள் அனைத்தையும் தமக்கு அர்ப்பணம் செய்யும்படி கடவுள் கட்டளையிட்டார். (வி.ப. 13:1-2) இவ்வாறு தலைமகன்கள் (தலைபேறு) கடவுளுக்குச் சொந்தமாயின. ஆகவே தான் இஸ்ரயேல் கலாச்சாரப்படி இயேசுகிறிஸ்து அன்னை மரியாவின் ஒரே குழந்தை என்றாலும் தலைமகன் என்று அழைக்கப்பட்டார்.
விடுதியில் இடம் கிடைக்கவில்லை:-
இயேசு ஒரு விடுதியில் கிடைக்காமல் ஆடுமாடுகளை அடைக்கப் பயன்படுத்தப்பட்ட ஒரு தொழுவத்தில் பிறந்தார். அந்த மாட்டுதொழுவம் யூத வழக்கப்படி மக்கள் வாழும் வீட்டோடு இணைக்கப்பட்ட ஒரு குகையாகக் கூட இருந்திருக்கலாம். இயேசு வழிப்போக்கர்கள் தங்கும் விடுதியில் பிறக்காமல் ஒரு வீட்டுடன் இணைந்த தொழுவத்தில் பிறந்ததின் ஆழ்ந்த உட்பொருள் எரேமியா கூறிய மெசியா பற்றிய ஒர் இறைவாக்கில் விளக்குகிறார்.
இஸ்ரயேலின் நம்பிக்கையே துன்ப வேளையில் அதனை மீட்பவரே,
நாட்டில் நீர் ஏன் அந்நியரைப் போல் இருக்க வேண்டும்?
இரவு மட்டும் தங்கும் வழிப்போக்கர்போல் நீர் ஏன் இருக்க வேண்டும்.....
ஆண்டவரே நீர் எங்கள் நடுவில் உள்ளீர்(எரேமியா: 14:8-9)
இயேசு கிறிஸ்து, தான் மீட்க வந்த மக்களுடன் நிரந்தரமாகத் தங்க வந்தக் காரணத்தினால் அவர் விடுதியில் பிறக்கவில்லை என்கிற ஆழ்ந்தக் கருத்தை லூக்கா விளக்குகிறார்.
தீவனத்தொட்டி:-
அன்னை மரியா குழந்தை இயேசுவை ஒரு தீவனத்தொட்டியில் கிடத்தியும், மாடுகள் தரும் வெப்பம் பெறவே என்கிற கருத்தும் அதுவே. தீவனத்தொட்டி என்பது கால்நடைகள் தீனிப் பெறத் தொழுவத்தில் இருக்கும் ஒரு சிறு தொட்டி. ஆனால் அஃது ஒரு சிறந்த சிந்தனையைத் தருகின்றது. அஃதாவது இயேசுகிறிஸ்து உலகின் உணவாக வந்தார் என்றும் உலக மக்கள் அனைவரும் உணவுப் பெற, குறிப்பாக ஆன்மீக ஊட்டம் பெற உலகில் பிறந்தார் என்ற ஒரு கருத்தும் உள்ளது. கால்நடைகள் ஆர்வத்துடன் தீவனத் தொட்டிகளை நாடி வந்து நிறைவுப் பெறுவது போல் இஸ்ரயேல் மக்கள் தம்மை நாடி வரவில்லையே என்ற எசாயாவின் இறைவாக்கு இங்கே பொருத்தமாகக் கொள்ளலாம்.
காளை தன் உடைமையாளனை அறிந்து கொள்கின்றது;
கழுதை தன் தலைவன் தனக்குத் தீனி போடும் இடத்தைத் தெரிந்து கொள்கின்றது;
ஆனால் இஸ்ரயேலோ என்னை அறிந்து கொள்ளவில்லை; என் மக்களோ என்னைப் புரிந்து கொள்ளவில்லை. (எசாயா 1:3)
நமக்காக இயேசு பிறந்து நம்முடைய உணவாகவும் ஊட்டச்சத்தாகவும் கருதி அவரை நாமும் நாடிச் செல்லவேண்டும் என்ற கருத்தை இங்கு லூக்கா பதிவுச் செய்கிறார்.
இயேசுவின் பிறப்பில் தெய்வீகம்:-
இயேவு பெத்லகேமில் பிறந்தபோது அவரைச் சந்திக்க வந்தார்கள் மூன்று ஞானிகள் அல்லது ஞானம் மிகுந்த அரசர்கள் என்பதை நற்செய்தியாளர் மத்தேயு கூறுகிறார். ஆனால் இயேசுவை சந்தித்த முதல் கூட்டம் எளிய இடையர்கள் என்றும், அதன் பிறகு வந்தவர்கள் வானத்தூதர்கள் என்றும், விண்ணகத்தூதர்கள் என்றும் லூக்கா குறிப்பிடுகின்றார். ஆனால் இரண்டு பேரும் சொல்வது என்ன என்றால், சந்தித்த இரண்டு கூட்டத்தாரும் சந்திப்பில் ஒரு தெய்வீகத்தைக் கண்டுகொண்டார்கள். இயேசு பிறந்த செய்தியை இடையர்கள் வானத்தூதர்கள் வழியாகப் பெற்றனர். ஆண்டவரின் மாட்சி அவர்களைச் சூழ்ந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் என்கிற தெய்வீகக் குறிப்புடன் இயேசு இடையர்களுக்கு அறிமுகம் செய்யப்படுகிறார். துணிகளில் சுற்றித் தீவனத்தொட்டியில் கிடத்தியிருக்கும் குழந்தையின் அரசத்துவத் தன்மையையும் உலகின் உணவாக விளங்கவிருக்கும் மீட்பர் தன்மையையும் கூட இடையர்கள் அறிந்துக் கொள்கிறார்கள்.
வானத்தூதர்கள் இடையர்களுக்கு அளித்த அறிவிப்பைத் தொடர்ந்து அவர்களும் இயேசு குழந்தையைச் சந்தித்து, உன்னதக் கடவுளின் சார்பாகவும் உலக மக்கள் சார்பாகவும் வாழ்த்துக் கூறுகின்றனர்.
' உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக! '(லூக்கா 2:13-14)
இவ்வாறு இயேசுகிறிஸ்துவின் பிறப்பு, நற்செய்தியாளர் லூக்காவின் திறமைமிக்க விளக்கத்தில் ஒரு வலராற்றுப் பின்புலம் பெறுகின்றது. யூதகலாச்சாரபடி உரிய விவிலிய மேற்கோள்களுடன் கருத்தாழம் மிக்கதாய் இருக்கின்றது. மேலும் கடவுளுக்கே உரியத் தன்மைகளையும் பெற்று நிறைவடைகின்றது.