கிறிஸ்து இல்லையேல் கிறிஸ்மஸ் இல்லை!
திருமதி ரெஜினா சின்னப்பன்- சென்னை-24
உலகத்தில் பிறந்த மனிதர்களில் பலர் மகான்களாக வாழ்ந்துத் தங்களைக் கடவுளாகவும், கடவுளின் பிரதிநிதிகளாகவும், இறைவாக்கினர்களாகவும் விளம்பரப்படுத்திக் கொண்டு அதாவது பிரகடனப்படுத்திக் கொண்டு மிகுந்த பக்தி உள்ளவர்களாக வாழ்ந்துள்ளார்கள். இவ்வாறு வாழ்ந்தவர்களின் அடிப்படையில் பல மதங்களும், அவற்றைப் பின்பற்றக் கூடிய ஒழுங்கு மறைகளும் உருவாயின. இவர்களில் புத்தபிரான், நபிகள் நாயகம், கிறிஸ்து, கன்யூசியஸ், டால்ஸ்டாய் போன்றவர்கள் முதன்மையானவர்கள் எனலாம்.
எத்தனையோ முதன்மையானவர் இருந்தாலும் கிறிஸ்து பிறப்பு மாத்திரமே ஆக்கப்பூர்வமாகச் சரித்திரத்துடன் பேசப்படுகிறது. உலகின் நிகழ்வுகளைப் பற்றி எழுதிய சரித்திர ஆசிரியர்கள் கிறிஸ்துவையே கதாநாயகனாகவும் அவரைப் பற்றிய செய்திகள் மையப்பொருளாகவும் வைத்துக் கிறிஸ்துவுக்கு முன் கிறிஸ்துவுக்குப் பின் (கி.மு-கி.பி) என்று கணக்கிட்டு எழுதியுள்ளார்கள். எந்த ஒரு மகானிகளின் பிறப்பும் மனித சரித்திரத்தில் முன் குறிப்புகளாகக் குறிப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கிறிஸ்துவின் பிறப்பு மாத்திரமே கணக்கிட்டுச் சொல்லப்பட்டிருக்கிறது. இவர் யாரிடம் பிறப்பார்? (எசாயா 7:14) எந்தக் குலத்தில் பிறப்பார்? (எசாயா 11:1) எங்குப் பிறப்பார்? (மீக்கா 5:12) என்றெல்லாம் சான்று உள்ளது. இதைக் கிறிஸ்து பிறப்பதற்குச் சுமார் 740 ஆண்டுகளுக்கு முன்பே அறிவிக்கப்பட்டிருக்கிறது.
எனவே கிறிஸ்மஸ் என்று அழைக்கப்படும் கிறிஸ்து பிறப்பு விழாவைக் கொண்டாடுவதில் ஒரு தெளிவான அர்த்தம் உள்ளதை நாம் புரிந்துக் கொள்ளலாம். இந்த அர்த்தத்தை நாம் சிறப்பான வகையில் செயல்படுத்தும் போது நாம் மகிழ்ச்சியும், பெருமையும் அடைவதில் நியாயம் இருக்கிறது. மேலும் கிறிஸ்து பிறப்பு இல்லையெனில் கிறிஸ்துமஸ் இல்லை என்பது உண்மையாகிவிடும்.
கடவுள் தனது மகனைத் தனது மாட்சிமையைத் துறந்து தான் படைத்த மனிதர்களைத் தங்களது தவறுகளிலிருந்து மனம் மாற்றித் தமக்குரியவர்களாக மீட்கவும், ஒவ்வொரு மனித உள்ளங்களிலும் மாபெரும் மகிழ்ச்சியாகிய இறையரசை வழங்கவும் இறைவன் பூமியில் மனிதனாக அவதரித்த அந்தப் புனிதமான நாளைத்தான் டிசம்பர் திங்கள் 25-ம் நாள் கிறிஸ்துமஸ் என்று கிறிஸ்து பிறப்பு விழாவாகக் கொண்டாடுகிறோம்.
இயேசு கிறிஸ்து வார்த்தையாக இருந்து ஒரு மனிதர் இப்படித்தான் வாழ வேண்டும் என்று நமக்குக் கற்றுக் கொடுத்தார். கற்றுக் கொடுத்த பொருளின் மேன்மையை உன்னதத்தை மனிதர்களாகிய நாம் புரிந்து கொள்ள விரும்பவில்லை. அவ்வாறு புரிந்து கொள்ள விரும்பாத, முடியாதபோது விருப்பம் காட்டாதபோது, முயற்சிச் செய்யாதபோது மனிதன் வாழ்வதற்கான ஒழுங்கு முறைகளைச் சொல்லி அவற்றைப் பின்பற்றுவதற்குத் தன்னையே மாற்றிக் கொண்டு சாதாரண ஒரு குழந்தையாய் கிறிஸ்து பிறந்த இந்நாள் தான் கிறிஸ்மஸ் என்ற கிறிஸ்து பிறப்பு நாளாகும்.
காலம் கனிந்தப் போது கடவுள் மனிதரானார். கடவுள் மனிதனாகப் பிறந்ததால் தான் கடவுளின் பேரிரக்கத்தின் பங்காளிகளானோம். கடவுள் உலகின் மீது அன்பு கூர்ந்ததால் தான் அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டுப் பிள்ளைகளாகுமாறு தம் மகனை அனுப்பினார். கடவுள் உலகின் மீது அன்பு கூர்ந்தார். தம் மகன் வழியாக அதை மீட்கவே அவரை உலகிற்கு அனுப்பினார்.(யோவான் 3:16-17) தம் சொந்த மகனை அனுப்பி மனிதரிடமுள்ள பாவத்திற்கு முடிவுக் கட்டனார்.(உரோமையர் 8:3-4) அனுப்பினார். மீட்டார் என்ற வார்த்தைகளிலேயே கிறிஸ்மஸ் நிறைவு பெற்று விட்டது எனலாம். எப்படி எனில் கடவுள் அவரது மக்களாகிய நம்மை மீட்கக் கடவுளாம் தந்தை தம் மகனை மரியாவின் மனிதனாகப் பிறக்க அனுப்பினார் என்பதே பொருளாகும். இதன் விளக்கம் கிறிஸ்து பிறப்பு இல்லை எனில் கிறிஸ்மஸ் இல்லை என்பதேயாகும்.