மேரி மேஜர் மகாபேராலயமும் குழந்தை இயேசுவின் குடிலும்


அருள்தந்தை சேவியர் ராஜன் சே.ச. தூத்துக்குடி

பெத்லெகேமில் நம் ஆண்டவர் இயேசு பிறந்தார். பெத்லெகேம் பாலஸ்தீனத்தில் ஓர் ஊர். இந்த பெத்லெகேமுக்கும் பெரிய பேரரசின் தலைநகரான ரோமுக்கும் என்ன தொடர்பு? பெத்லெகேமில் இயேசு பிறந்த குடில் ரோம் நகரில் இருக்கிறதென்றால்அதை நம்ப முடிகிறதா? ஆனால் அது உண்மை.


basilica_maggioreரோம் நகரிலுள்ள மரியன்னை மகாபேராலயத்துக்குக் (ஆங்கிலத்தில் Mary Major Basilica) குடிலின் மகாபேராலயம் என்று ஒரு பெயர் இருந்தது. 5ஆம் நூற்றாண்டடைச் சார்ந்தது. குழந்தைகளின்றி இருந்த பிரபுக்கள் வம்சத்தைச் சார்ந்த ஜான் ('Ioannes') தம்பதியருக்குத் தங்கள் சொத்து தேவமாதா பக்திக்கெனச் செல்லட்டும் என்ற ஆசை. இவர்களுக்கு ஒரு நாள் கனவில் மரியன்னை தோன்றி மறுநாள், அதாவது ஆகஸ்டு 5ஆம் தேதி, எஸ்கெலின் மேட்டின் முகட்டுப்பகுதியில் எங்குப் பனியைப் பார்க்கின்றார்களோ அங்குத் தனக்கு ஓர் ஆலயம் எழுப்பவேண்டுமெனக் கூறினாள். ஆனால், ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் எனும் கோடைகாலத்தில் பனி எப்படிப் பொழியும்? அதுதான் அற்புதம், புதுமை. யாரும் மறுக்கமுடியாத ஓர் அற்புதம் நிகழ்த்தித் தனக்கு ஆலயம் கட்டப்படவேண்டிய இடத்தைச் சுட்டிக்காட்டினாள் மரியாள். எஸ்கெலின் மேட்டுப்பகுதியில் (எஸ்கெலின் குன்று என்றே பெயரிட்டிருந்தார்கள்!) பனிவிழுந்த பகுதிதான் அன்னைக்குக் கோயில் கட்டவேண்டிய இடம்.


லாத்தெரான் மேட்டுப்பகுதியில் வாழ்ந்துவந்த போப்பாண்டகையிடம் இதைத் தெரியப்படுத்தக் கூறியிருந்தாள் தேவஅன்னை. அதே இரவில் லிபேரியுஸ் போப்பண்டகைக்கும் (352-266) கனவில் தோன்றிய மரியா, தனக்கு ஆலயம் எழுப்ப வேண்டிய இடம் மறுநாள் அவருக்கு அறிவிக்கப்படும் என்றும் கூறியிருந்தாள்.

மூவரும் பரிவாரங்கள் சூழச்சென்று அந்த இடத்தைப் பார்த்தார்கள். கோயிலின் எல்லைப் பகுதியைப் பனியின் ஓரத்தை வைத்தே போப்பண்டகை கோடிட்டார்.


அங்கே ஜான் தம்பதியரின் பணஉதவிடன் மரியன்னைக்கு ஓர் ஆலயம் எழுப்பினார் லிபேரியுஸ் போப்பண்டகை. இது நடந்தது 358ஆம் ஆண்டு எனக் கருதப்படுகிறது. எனினும், இவ்வரலாறு பற்றி 1288 அல்லது அதற்குப் பின்னரே பேசப்பட்டதால் அதற்குக் குடிலின் மரி ஆலயம் என்றபெயரே இருந்தது. எப்படியோ அக்கோயில் அழிவுக்கு ஆளானது.


431ஆம் ஆண்டு எபெசுஸ் பொதுச்சங்கம் (Ecumenical Council of Ephesus) இயேசு முழு இறைவன் முழு மனிதன் என்றும் மரியா இறைவனின் தாய் என்று அழைக்கப்படத் தகுதியானவள் என்றும் அறிவித்தது. 432-440 ஆண்டுகளில் போப்பாண்டகையாயிருந்த முன்றாம் சிக்ஸ்துஸ் இறைஅன்னைக்கு மிகப்பெரிய கோயில் எழுப்ப முடிவெடுத்து முன்பு பனியன்னைகோயில் இருந்த அதே இடத்தைத் தேர்ந்தெடுத்தார்.


ரோம் நகரில் அப்போதிருந்த 26 மரியன்னைப் பேராலயங்களில் இதுவே பெரிது என்பதால் இது மரியன்னை மகாபேராலயம் (ஆங்கிலத்தில் MARY MAJOR, இத்தாலிய மொழியில் SANTA MARIA MAGGIORE) என்று அழைக்கப்படுகிறது. இருந்தாலும் அங்கு இருந்த முதல் கோயிலுக்கான லிபேரியுஸ் பசிலிக்கா என்ற பெயரும் இன்றும் வழக்கத்தில் உள்ளது. இவற்றோடு, மரியன்னை பெத்லெகேமில் இயேசுவைப் பெற்றெடுத்துக் கந்தைத் துணிகளில் சுற்றிக் கிடத்தியிருந்த தீவனத்தொட்டியில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித பண்டங்கள் கோயிலுக்கு அருகே ஒரு சிறு குகை போன்ற அமைப்பில் ஜெபக்கூடத்தில் வைக்கப்பட்டிருந்ததன.


ஐந்தாம்சிக்ஸ்துஸ் போப்பாண்டகை கோயிலுக்கு இரு இறக்கைகளைச் (Transept) சேர்த்து வலதுபுற இறக்கையில் தரை தளத்தில் நற்கருணை ஆலயம் அமைத்தார். படிகள் மூலம் இறங்கி அக்குகை ஜெபக்கூடத்தை அடைய வழி செய்தார். திருப்பலி நிறைவேற்றப் பீடமும் அமைக்கப்பட்டது. இதனால் இம்மகாபேராலயம் தீவனத்தொட்டி மகாபேராலயம் (இலத்தீனில் Basilica ad Praesepem ஆங்கிலத்தில் Basilica of the Crib) என்றும் பெயர்பெற்றது. இயேசுவைத் தாங்கிய மரியன்னை, சூசையப்பர், மாடு, கழுதை இவற்றின் தலைகளும் இருக்கின்றன. மூன்று ஞானிகளும் தங்கள் காணிக்கைப் பொருட்களோடு அங்கே இருக்கிறார்கள். பெத்லெகேம் மாடடைக்குடிலிலிருந்து வந்த கற்கள் இன்னும் வேறு திருப்பண்டங்கலென பெத்லெகேமே இங்கு வந்துவிட்டது.(மரியன்னை சொரூபம் உருகுலைந்துவிட்டதால், புதிய சொரூபம் பதினாறாம் நூற்றாண்டில் வைக்கப்பட்டது.)


இடதுபுற இறக்கையில் மரியன்னைக்கான கோயில். பீடத்தின்மேலே அவள் உருவப்படம். இது புனித லூக்காஸ் வரைந்தது என்றுசிலர் நம்புகிறார்கள். ரோம் நகரம் ப்ளேக் தொற்றுநோயால் அவதியுற்றபோது போப்பாண்டகைஆணைக்கிணங்க நகரைச்சுற்றி பக்தியோடு இப்படம் எடுத்துவரப்பட்டது. நோயும் நீங்கியது. எனவே, இப்படம் தனி மரியாதை பெற்று இங்கே நிறுவப்பட்டு மரியா ரோமுக்கு சுகம் தந்தவள் என்ற பொருளில் மரியா சாலுஸ் ரோமே (Maria Salus Romae) என்று மேன்மையடைகின்றது. இப்படத்துக்கும் மேலே, பெரிய சதுர வடிவில் லிபேரியுஸ் போப்பாண்டகை பனியை அள்ளிப் போடும் காட்சி செப்புத்தகட்டில் bas-relief முறையில் செதுக்கப்பட்டுத் தொங்குகிறது. மேலே படம் 2 பார்க்க.


பேராலய பிரதானப் பீடத்தின் முன் ஏறத்தாழ 10 மீட்டரில் வலப்புறம் இடப்புறமென படிகள்மூலம் கீழே இறங்கலாம். தேவஅன்னை பெற்றெடுத்த குழந்தை இயேசு கிடத்தப்பட்டிருந்த மாடடைக்குடில் தீவனத்தொட்டியின் ஐந்து பலகைக்கட்டைகள் பிரதானப் பீடத்தின் திசையில் சுவற்றையொட்டி ஓர் அகலமான கண்ணாடிப் பேழையில் வைக்கப்பட்டுள்ளன. அழகிய வேலைப்பாடுகள் கொண்ட அப்பேழையைப் பார்த்தவண்ணம் போப்பாண்டகை ஒன்பதாம் பியுஸ் (பத்திநாதர்) ஜெபிப்பதாக ஒரு பளிங்குச்சிலை இருக்கிறது. நம்மைப் பரவசமாக்கும் புனித இடம். இதனால், தீவனத்தொட்டி மகாபேராலயம் அல்லது குடிலின் மகாபேராலயம் (Basilica ad Praesepem) என்றும் இப்பசிலிக்கா பெயர் பெற்றுருப்பது பொருள் பொதிந்ததுதானே!


கிறிஸ்து பிறப்பின் புனித இடத்துக்கும் இயேசு சபையைத் தோற்றுவித்த புனித இஞ்ஞாசியாருக்கும் தொடர்பு உண்டு.


மீண்டும் மகாபேராலயத்தின் வலப்புற இறக்கையின் குகைக் கோயிலுக்கு வருவோம். குடிலின்கீழே ஒரு திருப்பலிபீடம் இருக்கிறது. இப்பீடத்தில்தான் இயேசுசபையைத் தோற்றுவித்த புனித இஞ்ஞாசியார் தன் முதல் திருப்பலியை நிறைவேற்றினார். வெனிஸ் நகரில் புனித சவேரியார் உட்பட்ட தன் சீடரோடு 1537ல் குருப்பட்டம் வாங்கிய புனித இஞ்ஞாசியார் புனித பூமியின் பெத்லெகேமில் இயேசு பிறந்த இடத்தில்தான் தன் முதல்பலியை நிறைவேற்றவேண்டுமெனக் காத்திருந்தார். ஆனால், இஸ்லாமியருக்கும் கிரிஸ்துவர்களுக்கு மிடையே பதட்டநிலை அதிகரித்திருந்ததால் புனித பூமிக்குத் திருப்பயணிகள் யாரும் வரவேண்டாமென ப்ரான்சிஸ்கன் சபையார் தடுத்திருந்தார்கள். வெனிஸ் நகரிலிருந்து அப்பகுதிநோக்கிக் கப்பல் எதுவும் போகமுடியாத நிலை. மாதங்கள் கடந்துவிட்டதால், தன் பக்திமுயற்சியை நிறைவேற்ற இஞ்ஞாசியார் மனதில் உதித்த ஒரே மாற்று வழி ரோம் நகரிலுள்ள குழந்தை இயேசு குடிலில் திருப்பலியை அர்ப்பணிப்பதுதான். இதை அவர் 1538 டிசம்பர் 25ஆம் தேதி நிறைவேற்றினார்.


இஞ்ஞாசியாருக்கும் குழந்தை இயேசுவுக்கும் எவ்வளவு நெருக்கம் இருந்திருக்க வேண்டும்!