விவிலியத்தில் கடவுள் இரண்டு இடங்களில் விழா வெறுப்பதாகக் கூறுகிறார். (1)எசாயா 1:14 உங்கள் திருவிழாக் கூட்டங்களையும் என் உள்ளம் வெறுக்கின்றது. (2) ஆமோஸ் 5:21 "உங்கள் திருவிழாக்களை நான் வெறுத்து அருவருக்கின்றேன்." கடவுளின் வெறுப்புக்குக் காரணம் என்ன? நம் விழாக்கள் எப்படி இருக்க வேண்டுமென்று எதிர்ப்பார்க்கிறார்.
இதோ அவரின் எதிர்பார்ப்புகளின்படி தாழ்ச்சி, பணிவு, அர்ப்பணிப்பு நிறைந்த விழாவாக இருக்கவேண்டும்.
அன்று இந்த குணங்களை தன்னிடத்தே வைத்து வாழ்ந்த இயேசுவின் பெற்றோர்களான யோசேப்பு மரியா இவர்களுடைய வாழ்க்கையைப் பார்ப்போம்.
தன் வாலிப வயதிலே கனவுகளோடு வாழ்ந்த அன்றைய பல யூத பெண்களுள் ஒருவராக வாழந்து கொண்டிருந்தவர் தான் மரியா. அவருக்கு யூத முறைப்படி யோசேப்புவை அவர் பெற்றோர் தேர்ந்தெடுத்து மண ஒப்பந்தம் செய்தனர். அன்றையிலிருந்து தன் திருமண நாளையும் கணவரையும் தன் எதிர்கால குடும்ப வாழ்க்கையையும் மரியா கனவு கண்டு இன்பத்தில் வாழ்ந்து கொண்டிருந்தார்.
இந்த சூழலில் வானத்தூதர் கபிரியேல் அவருக்கு தோன்றி “நீர் கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர்” என்று உரைத்தார். மரியாவோ "நான் கன்னியாயிற்றே இது எப்படி நடக்கும்" என்று கேட்டார். அதற்கு கபிரியேல் தூதர் "தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப் போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும்" என கூறினார். "நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்" என்றார்.
தாழ்ச்சி: இங்கே மரியா தன்னை ஓரு அடிமையாக ஆண்டவரின் அடிமையாக தன்னை தாழ்த்துகிறார். அந்த நாட்களில் அடிமையின் வாழ்க்கை என்பது எப்படி இருந்திருக்கும் என நமக்கு தெரியும். ஓரு அடிமைக்கு 1. சுயஉரிமை இல்லை 2. சுய விருப்பம் இல்லை 3. தன் ஆசைப்படி - சாப்பிட முடியாது. 4. தன் தேவைப்படி ஓய்வு எடுக்க முடியாது. 6. தன் இஷ்டப்படி எதையும் செய்ய முடியாது. இப்படியாக மரியா தன்னை தாழ்த்தி அடிமை கோலம் பூண்டதால் தாழ்ச்சியை ஏற்றுக் கொண்டார்.
பணிவு: ஒரு கன்னிப்பெண் திருமணத்திற்கு முன் கருவுற்றால் அவளை இந்த உலகம் என்ன என்ன விதத்தில் தூற்றும் என நமக்கு தெரியும். அதுமட்டுமல்ல அன்றைய சட்டம் கல்வெறிந்து கொல்ல வேண்டும் என்று இருந்தது. அப்படி இருந்தும் இந்த கடவுளின் திட்டத்திற்கு பணிந்து ஏற்றுக் கொண்டார். தன் வாழ்க்கை தடம் மாறி தன் விருப்பத்திற்கு எதிராக போகிறதே என நினைக்காமல் கடவுளின் திட்டத்தை நிறைவேற்ற இணங்கி பணிந்து வாழ்ந்தார்.
அர்ப்பணிப்பு: “ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்" என்றார். கபிரியேல் தூதர் வழியாக தனக்கு சொன்னவை கட்டாயம் நிறைவேறும் என்று மரியா நம்பினார். அவர் வார்த்தைக்கு கீழ்ப்படிந்து அதை தெய்வீக வார்த்தையாக எடுத்துக் கொண்டு அதை செயல்படுத்த அப்பொழுதே விரைவாக கர்ப்பணியான எலிசபேத் அம்மாளை காணவும், பணிவிடை புரியவும் சென்றார். அந்த வார்த்தையை நம்பி அதை செயல்படுத்த தன்னை முழுமையாக அர்ப்பணித்தார். அன்றிலிருந்து சிலுவையில் தன் மகனை அர்ப்பணிக்கும் வரை தன் வாழ்க்கையே ஓரு அர்ப்பண வாழ்வாக வாழ்ந்துக் காட்டினார் அன்னை மரியா.
நேர்மையாளரான இவரின் வாழ்க்கையிலும் எத்தனை குழப்பங்கள்! எத்தனை மாற்றங்கள!! எத்தனை ஓட்டங்கள்!!!
தாழ்ச்சி: இவருக்கும் மரியாவுக்கும் மண ஓப்பந்தம் ஆனது. ஆனால் திருமணத்திற்கு முன்பே மரியா கருவுற்ற செய்தி அறிகிறார். தான் ஒரு நேர்மையாளராக இருப்பதால் மரியாவை கேவலப்படுத்தாமல் மறைவாக விலக்கி விட திட்டமிட்டார். தூதர் மரியா கருவுற்றிருப்பது தூய ஆவியால் தான் என்று கூறியதை ஏற்றுக் கொண்டு தன் சுய விருப்பத்தை விட்டு அந்த வார்த்கைக்கு அடி பணிந்து ஏற்றுக்கொண்டார். இங்கே வெளிப்படுகிறது அவரின் தாழ்ச்சி!
பணிவு: யோசேப்பு ஆண்டவரால் மூன்று முறை கனவில் எச்சரிக்கப்பட்டு வழி நடத்தப்பட்ட பொழுதெல்லாம் அதற்கு பணிந்து ஏற்று நடந்தார். முற்றிலும் பணிவுடன் கீழ்ப்படிந்து நடந்தார்.
அர்ப்பணிப்பு: யோசேப்பு நேர்மையாளரும் நீதிமானாகவும் வாழ்ந்து கனவில் ஆண்டவர் சொன்னப்படி செயல்பட்டு கடவுளின் தெய்வீகத்திட்டத்தை நிறைவேற்ற தன்னையும் தன் வாழ்க்கையையும் முழுமையாக அர்ப்பணித்தார் என்பதில் எந்த அச்சமும் இல்லை.
கிறிஸ்து பிறப்ப பெருவிழாவின் பெரும் பாங்களிப்பவர்களாகிய யோசேப்பு மரியா இவர்களின் குணங்களாகிய தாழ்ச்சி பணிவு எளிமை அர்ப்பணிப்பு ஆகியவற்றை மனதில் ஆழப்பதித்து நம் கிறிஸ்து பிறப்பு விழா உண்மையானதும், ஆவியிலே வளர்ச்சியை கொடுக்கும் விதத்தில் பகிர்வு அன்பு மகிழ்ச்சி உள்ளதாக மாற ஆண்டவராகிய கிறிஸ்துவிடம் மன்றடுவோம்.
A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com