கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் * Merry Christmas * நத்தார் வாழ்த்துக்கள்

ஆண்டவரின் அன்பின் செய்தி

மேரி சித்ரா கணபதி

"பரலோக செல்வங்களின் மீது உன் இதயம் ஆவலாய் நிறையட்டும். இவ்வுலக காரியங்களிலிருந்து உன் நினைவை அகற்று. உன் ஆண்டவரும் உன் கடவுளுமான என்னிடம் உன் மனதை எழுப்பு. யாவற்றிலும் என்னைத் தேடு"


இந்த வாசகங்களில் நாம் காணும் அன்பின் செய்தி முடிவில்லா வாழ்வுக்கு அழைப்பு விடுப்பதாகும். ஆம்! முடிவில்லா வாழ்வு என்பது ஆவியிலும் உண்மையிலும் கடவுளைத் தேடும் போது தான் நமக்கு புலப்படும். கடவுள் தன்னுடைய குணநலன்களை, தான் படைத்த மனித இனத்திடம் எதிர்ப்பார்க்கிறார். அதற்காகத்தான் வீழ்ந்து போன மானிடத்தின் மனம் திரும்புதலை எதிர்ப்பார்த்து இறைவாக்கினர் வழியாக பேசினார். வானத்தூதர்கள் வழியாக பேசினார். தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள் வழியாக பேசினார். தலைமுறை தலைமுறையாக அவரது நற்செய்தி போதிக்கப்பட்டு வருகிறது.


இதோ ஆண்டவர் சொல்லும் வார்த்தை இசையாஸ் 7:14,9:16,30:19. ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கோர் அடையாளம் தருவார். இதோ கன்னிப்பெண் கருத்தாங்கி ஒரு மகனைப் பெறுவாள்.


juesemaryjoesphநமக்காக ஒரு குழந்தை பிறந்துள்ளது. நமக்கு ஒரு மகன் தரப்பட்டுள்ளான். அவரது ஆட்சியின் பொறுப்பு அவர் தோள்மேல் இருக்கும். இனி எப்பொழுதும் நீங்கள் அழ மாட்டீர்கள். முடிவில்லா அன்பினால் உங்களை ஆட்கொள்வோம்.


இந்த அன்புச் செய்தியை கூறக் காரணம் தலைமுறை தலைமுறையாக நமது கீழ்ப்படியாமையினால் அடைந்த சாபத்திலிருந்து விடுதலை பெறத்தான். பரம்பரை நோயிலிருந்து, துயரங்களிலிருந்தும், கட்டுகளிலிருந்தும், விடுதலை பெறவும் நமக்கு ஒரு மீட்பர் தேவைப்பட்டது.


அப்போது ஆண்டவர் தாமே நமக்கு ஆறுதல் தரும் இந்த அன்பு செய்தியை பழைய ஏற்பாட்டில் முன்னுரைத்தார். புதிய ஏற்பாட்டில் வெளிப்படுத்தினார்.


"ஈசாய் என்னும் அடிமரத்திலிருந்து தளிர் ஒன்று துளிர்விடும்; அதன் வேர்களிலிருந்து கிளை ஒன்று வளர்ந்து கனிதரும்"(இசையாஸ்11:1) என்றார். இயேசு தாவீதின் சந்ததியிலிருந்து பிறந்தார். சிறைபட்டவர்களை மீட்கக் காலம் தாழ்த்தாமல் விரைந்து வருகிறார். ஏனெனில் "விலையின்றி விற்கப்பட்டீர்கள்; பணமின்றி மீட்கப்படுவீர்கள்." (இசையாஸ் 52:3) புதிய ஏற்பாடு லூக்கா 1:68-78 சொல்லப்படுவது "இஸ்ராயேலின் கடவுளான ஆண்டவர் போற்றி ஏனெனில் தமது வாக்குறுதியை நினைவு கூர்ந்தார்."


ஆகவே கிறிஸ்துவின் பிறந்த நாளை உலகமே கொண்டாடும் வேளையில் அவரது அன்பின் செய்தி நமது இல்லங்களுக்கு வந்தடைந்து விட்டதா? இந்த அன்பின் செய்தி எவ்வளவு தூரம் நம்மிடம் பரவியிருக்கிறது என்பதை சற்று சிந்திப்போம்.


உங்கள் அனைவருக்கும் கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள்.


A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com