கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் * Merry Christmas * நத்தார் வாழ்த்துக்கள்

எளிய மனத்தோர் பேறு பெற்றோர்

திருமதி அமலி எட்வர்ட் -நாகமலை - மதுரை

“எக்ஸ்கியூஸ் மீ மேடம்;” என்ற சத்தம் கேட்டு நிமிர்ந்தேன். வெளியே விருமாண்டி நின்று கொண்டிருந்தான். ‘வாப்பா’ என்றேன். “மேடம் Sports shoes வாங்க நான் ஏற்கனவே ரூ.500 கொடுத்திருக்கேன். இந்த 50 ரூபாயவும் அதில் சேர்த்துக்கோங்க மேடம்” என்றான். “சரி தம்பி இதோட உன் காசு ரூ.550 இருக்குது. டிசம்பருக்குள்ள இன்னொரு 500 சேர்த்திடுவியா?” என்றேன். “நிச்சயமா மேடம் இன்னும் 5 மாதம் இருக்குல மேடம் கண்டிப்பா சேர்த்திடுவேன். இந்த முறை தீபாவளிக்கு புது உடைக்கான காசு, பட்டாசு காசு எல்லாம் சேர்த்து வாங்கிடுவேன் மேடம்” என்றான் மிக சந்தோமாக.


பல்லோட்டி பள்ளியானது கல்லுடைக்கும் தொழிலாளர் குழந்தைகளுக்காக சேவை மனப்பான்மையோடு அருட்தந்தையர்களால் நடத்தப் படுகிறது. சீருடை, உணவு, கல்வி அனைத்தும் இலவசமாகவே தான் அளிக்கப்படுகிறது. ஏழை மாணவர்களை நல்ல மனிதர்களாக உருவாக்குவதே பள்ளியின் விருதுவாக்கு. பல்லோட்டி பள்ளி ஆரம்பித்து பன்னிரண்டு வருடங்களாகி விட்டது. சென்ற ஆண்டு தான் முதல் முறையாக மாணவர்கள் பள்ளிகளுக்கிடையேயான விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டார்கள். மிக அருமையாக விளையாட்டு ஆசிரியரும், தாளாளர் தந்தை ஜெயபாலும் கடின பயிற்சி அளித்தார்கள். மாணவர்கள் திறமையாக விளையாடுவதை கண்டு மகிழ்ந்தேன். நிச்சயமாக கூடைப்பந்திலும், எறிபந்திலும், கபாடியிலும் வெற்றி பெறுவார்கள் என விளையாட்டு ஆசிரியரும், தாளாளர் தந்தையும் உறுதியளித்தனர்.


merry christam போட்டியன்று மாணவர்கள் மிக சந்தோசமாக காலையிலேயே வந்து விட வாழ்த்துகள் சொல்லி அனுப்பி வைத்தேன். பதின்ம பள்ளி(Matric school) யில் போட்டிகள் நடந்தன. பதின்மப்பள்ளி மாணவர்களின் உயரம், எடை பார்த்து எம் பள்ளி மாணவர்கள் முதலில் பயந்து போனதாக ஆசிரியர் கூறினார். ஆனால் அவர் அளித்த உற்சாகத்தில் மாணவர்கள் மிக சிறப்பாக ஆடினார்கள். வெற்றிப் புள்ளிகள் அதிகரிக்க மாணவர்கள் மிக உற்சாகமாக விளையாடினர்.அரைறுதி போட்டிக்கு எறிபந்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்காக தயார் ஆகி கொண்டிருந்தனர். கிராமத்து மாணவர்கள் சிலர் காலை உணவை சாப்பிடவில்லை. மேலும் சிலர் விரைவில் சோர்ந்து போகும் அளவிற்கு தான் அவர்களின் உடல் வலிமை இருந்தது. மூன்றாவதாக அவர்கள் ஒருவரின் காலிலும் Sports shoe இல்லை. அதனால் இறுதி ஆட்டங்களில் அவர்களால் வெற்றி பெற இயலவில்லை. இரண்டு புள்ளிகளில் தோல்வியைத் தழுவினர். விளையாட்டு ஆசிரியரின் மிகப் பெரிய வருத்தம் என்னவென்றால் “Sports shoes இல்லாமலே இறுதி ஆட்டத்திற்கு நம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள். Sports shoes இல்லாததால் அதிகப்படியான நநெசபல யை கொடுத்து ஆடவேண்டியிருந்தது. நம் மாணவர்கள் மட்டும் Sports shoes போட்டு போயிருந்தால் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றிருப்பார்கள்” என்றார் மிக ஆதங்கத்தோடு.


மாணவர்கள் Sports shoes வாங்கும் அளவிற்கு வசதி படைத்தவர்கள் அல்லர். எனவே மாணவர்களிடம் “தோல்விக்கான காரணம் காலணி மட்டும் தான் என்பதால் அதை வாங்க ஒரு திட்டம் சொல்கிறேன். அடுத்த ஆண்டு மாவட்ட அளவில் கண்டிப்பாக பங்கு பெற்று வெற்றி பெற வேண்டும். எனவே உங்களுக்கு கிடைக்கும் காசை சிறுக சிறுக என்னிடம் சேமியுங்கள். தீபாவளி, பிறந்த நாள், திருவிழாவிற்கு வாங்கும் புதிய ஆடைகளை இந்த ஆண்டு மட்டும் தியாகம் செய்யுங்கள். 10 மாதத்திற்குள் நீங்கள் விளையாட்டு காலணி வாங்கி விடலாம்” என்றேன். மாணவர்கள் வெகு உற்சாகமாக சம்மதம் தெரிவித்து பணம் சிறுக சிறுக சேர்க்க ஆரம்பித்தனர். மாணவர்கள் மட்டுமல்லாது மாணவிகளும் விரைவாக சேர்த்தனர். பூ பறிக்க போய் காசு சேர்த்தனர். மாணவர்கள் கிராமங்களில் தோட்ட வேலை பார்த்து காசு சேமித்தனர். டிசம்பரில் ஏறக்குறைய அனைத்து மாணவரும் சேர்த்து விட்டனர். மொத்தம் முப்பத்தைந்தாயிரம் சேர்த்தனர். குறைவாக இருந்த சில மாணவர்களுக்கு அருட்தந்தை பள்ளிப் பணத்தில் இருந்து போட்டுக் கொள்ளலாம் என்றார். எனவே மாணவர்களிடம் “கிறிஸ்மஸ் முடிந்து மறுநாள் நாம் எல்லோரும் சேர்ந்து டவுனுக்குப் போய் விளையாட்டு காலணி வாங்கி விடலாம்.” என கூறினேன். ஒரே சந்தோசத்தில் கூச்சலிட்டனர். “மேடம் கிறிஸ்மஸ் முடிந்து சோர்வாக இருக்குனு சொல்லி ஏமாத்திராதீங்க. நாங்க பள்ளியில் 9 மணிக்கு 26ம் தேதி காத்திருப்போம்" என்றார்கள். நானும் விளையாட்டு ஆசிரியரும் உறுதியளித்த பின் சந்தோசமாக வீட்டிற்கு சென்றனர்.


நடுச்சாம பூசை போனதால் கிறிஸ்மஸ் அன்று மதியம் சாப்பிட்டு விட்டு தூங்கி விட்டேன். 3.30 மணி போல் என் கைபேசி அழைத்தது. எடுத்தால் விருமாண்டி அழுது கொண்டே பேசினான். “என்னப்பா எனக்கு ஒன்னும் புரியல. அழுகையை நிப்பாட்டு. விசயத்த சொல்லு” என்றேன். “மேடம் நம்ம கல்யாணி வீடு தீப்பிடிச்சிருச்சு மேடம் . யாரோ போட்ட மத்தாப்புல அவங்க வீட்டு கூரைல பட்டு தீப்பிடிச்சிருச்சு” என்றான். “அய்யோ, கல்யாணி, அவன் அம்மா தம்பிக்கு என்னாச்சு? “நல்ல வேளை அப்ப அவங்க யாரும் வீட்டுக்குள்ள இல்ல. ஓலைக் குடிசை என்பதால் வீடே எரிந்து விட்டது. அவங்க தங்குறதுக்குக் கூட வீடு இல்ல. அவங்க சாமான்கள் எல்லாம் எரிஞ்சு போச்சு. அதனால அவங்க தெருவுல அழுதுகிட்டு இருக்காங்க மேடம்” என்றான் அழுது கொண்டே. “சரிப்பா நான் உடனே கிளம்பி வர்றேன் ” என்றேன். “மேடம், மேடம் போனை வச்சுராதீங்க நாங்க சேர்த்துக் கொடுத்த முப்பந்தைந்தாயிரம் பணத்தையும் எடுத்துட்டு வந்திருங்க மேடம்” என்றான். நான் அதிர்ந்து போனேன்.


“என்ன சொல்ற விருமாண்டி? ” “ஆமாம் மேடம் நாங்க எல்லாரும் கூடி பேசி முடிவு எடுத்துட்டோம். அந்த பணத்தை கல்யாணி வீட்டுக்கு கூரை வேய கொடுத்துடலாம்னு பேசிட்டோம் மேடம். Sports shoes அடுத்த வருடம் கூட வாங்கிக்கலாம் மேடம் “ என்றான். நான் பதில் சொல்லக் கூட தோன்றாமல் விக்கித்து நின்றேன்.


பணத்தை எடுத்துக் கொண்டு போனேன். குழந்தைகள், பெரியவர்கள் என கல்யாணி வீட்டு முன் நின்றிருந்தனர். கல்யாணி, அவன் அம்மா, தம்பி அழுது வீங்கிய கண்களோடு இருந்தனர். விருமாண்டி அருகில் வந்தான். ‘மேடம்’ என்றான். திரும்பினேன். அங்கு அந்த 30 குழந்தைகளும் நின்றிருந்தனர். “மேடம் பணத்தை கல்யாணி அம்மா கையில் கொடுங்க” என்றனர். உங்க அம்மா அப்பா கிட்ட சொல்லிட்டீங்களான்னு கேட்டேன். உடனே விருமாண்டி எல்லார் அம்மா அப்பாவும் சந்தோசமா சரினு சொல்லிட்டாங்க என்றான். உடனே 30 குழந்தைகளையும் அருகில் அழைத்தேன். கரம் கூப்பி வாழ்த்து சொல்லி "உங்கள் மனித நேயம் மிகப் பெரிய செயல். இந்த தியாகம் உங்களை நல்மக்களாய் உருவாக்கும்" என்று கூறி 4 மாணவர்களின் கையில் பணத்தைக் கொடுத்து கல்யாணி அம்மாவிடம் கொடுக்கச் சொன்னேன். உடனே அந்த அம்மா என் காலில் விழ வந்தார்கள். அவர்களை தடுத்து கரங்களை பிடித்து "இந்த பணம் முழுவதும் உங்கள் ஊர் குழந்தைகளின் தியாகமும் உழைப்பும். எனக்கு இதில் ஒரு பங்கும் இல்லை. நன்றியை குழந்தைகளுக்குச் சொல்லுங்கள்" என்றேன். அந்த அம்மா ஆனந்த கண்ணீரோடு கரம் கூப்பி நன்றி கூறினார்கள். குழந்தைகள் ஓ வென மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். கல்யாணி முகத்தில் சிரிப்பு லேசாக எட்டிப் பார்க்க விருமாண்டி கல்யாணியின் கரங்களை பிடித்து இழுத்து எல்லோரோடும் சேர்ந்து ஆட்டம் ஆடினான். அந்த விண்ணக மகிழ்ச்சியோடு வீடு திரும்பினேன். எத்தனை மனித நேயம் இந்த குழந்தைகளிடம். ஒரு வருடமாக ஆசை ஆசையாக சேர்த்த பணம் அனைத்தையும் ஒரு நிமிடத்தில் முடிவெடுத்து அளித்துவிட்டார்கள். குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பது இது தானோ! ஒவ்வொரு குழந்தையிலும் பிறந்த யேசு தெரிய ஆரம்பித்தார்.


என் மனம் தான் கனத்து போனது. இந்த குழந்தைகளுக்கு எப்படியாவது shoes வாங்கித் தந்து விட வேண்டும் என உறுதி எடுத்தேன். ஒவ்வொரு ஆசிரியருக்கும் கைபேசியில் அழைப்பு விடுத்து விசயம் கூறி இக்குழந்தைகளுக்கு shoes வாங்கி தர உங்களால் இயன்ற பணம் தாருங்கள் என்றேன். இரண்டே நாளில் நாற்பதாயிரம் என் கையில் வந்தது. 28 ம் தேதி மாசில்லா குழந்தைகள் தினத்தன்று வேன் ஏற்பாடு செய்து ஆசிரியர்களையும் வரவழைத்தேன். விருமாண்டிக்கு போன் செய்து shoes வாங்க வேண்டிய குழந்தைகள் அனைவரையும் கூட்டிக் கொண்டு பள்ளிக்கு வரச் சொன்னேன். மாணவர்கள் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர். “மேடம் எதுக்கு வரச் சொன்னீங்க” என்று ஒவ்வொருவரும் கேட்க எல்லோரும் வரட்டும் என காத்திருந்தோம். மாணவர்கள் வந்தவுடன் உங்கள் அனைவருக்கும் ஒரு பரிசு தரத்தான் ஆசிரியர்கள் அனைவரும் வந்துள்ளனர் என்றேன். என்ன பரிசு மேடம் என ஒட்டு மொத்தமாக கேட்க நாம் எல்லோரும் shoes வாங்க டவுனுக்கு இந்த வேன்ல போகப் போறோம் என்றேன். அத்தனை மாணவர்கள் முகத்திலும் ஆயிரம் வாட்ஸ் பல்பு எரிய ஓவென கூச்சல் போட்டனர். மகிழ்ச்சி ஆரவாரம் அடங்க பத்து நிமிடம் ஆனது. மாணவர்களை கூட்டிச் சென்று shoes வாங்கிக் கொடுத்து இனிப்பு, ஐஸ்கிரீம் என வாங்கிக் கொடுத்து மீண்டும் அவர்கள் வீட்டுக்கு கொண்டு விட்ட பின்பு தான் மனம் மிக லேசானதாக ஆனது. மகிழ்ச்சியில் திளைத்தது. அன்றைய தினம் தான் கிறிஸ்மஸ் பண்டிகையாக எனக்கு இருந்தது.


A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com