கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் * Merry Christmas * நத்தார் வாழ்த்துக்கள்

தமிழ்த் தொண்டாற்றிய கிறிஸ்தவர்கள்

மதுரை இளங்கவின்
  1. என்றி என்றிக்கஸ்: புன்னைக் காயலில் பணிபுரிந்த அருள் பணியாளர் இவர். இவர் மன்னாரில் போர்த்துக்கீசிய மொழியில் தமிழ் இலக்கணநூலை 1555 ஆம் ஆண்டிற்கு முன் எழுதினார். இது லிஸ்பன் நூலகத்தில் உள்ளது. புன்னைக்காயலில் தந்தை ஜான் தெபாரிய நடத்திய அச்சகத்தில் என்றி என்றிக்கசின் தம்பிரான் வணக்கம், கிரிசித்தியானி வணக்கம், அடியார் வரலாறு ஆகியவை அச்சிடப் பெற்றுள்ளது. தம்பிரான் வணக்கம் அமெரிக்கா ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் உள்ளது. இதில் மந்திரங்கள் உள்ளன. "கிரித்தியானி வணக்கம்" ஆசான் சீடனுக்கிடையே உள்ள உரையாடலாய் உள்ளது. அவரின் 668 பக்க நூலொன்றை வத்திக்கான் நூலகத்தில் தனி நாயகம் அடிகள் கண்டு வியந்துள்ளார். முதன்முதலில் தமிழில் அச்சு நூலை 1555 இல் வெளியிட்ட பெருமை என்றி என்றிக்கசையே சேரும்
    .
  2. இராபர்ட் தே நோபிலி: நொபிலி 1605 இல் இந்தியாவிற்கு வந்தார். இவர் இராஜகுரு என்று தன்னை கூறிக் கொண்டு பிராமணர், சைவ வேளாளர், முதலியார் வாழ்ந்த பகுதியில் புலாலை மறுத்து வாழ்ந்தார். சைவ உணவு உண்டார். பிராமணர், வெள்ளாளர், முதலியார், செட்டியார், உடையார், வன்னியர், நாடர்களை ஞானஸ்தானம் அளித்து திருச்சபைக்குள் கொண்டு வந்தார். தன்னை உரோமைப் பிராமணன், உரோமைச் சத்திரியன் என்று கூறி அக்கிரகாரத்தில் ஆலயம் கட்டி வாழ்ந்தார். "ஆத்தம நிருணயம், அஞ்ஞான நிவராணம், புனர்ஜென்ம ஆட்சேபம்" ஆகிய நூல்களை எழுதினார். இவரே உரைநடையின் தந்தையாவார்
    .
  3. சீகன் பால்கு: சீகன் பால்கு 1607 இல் தரங்கம்பாடி வந்தார். இவர் 20000 சொற்கள் கொண்ட அகராதியைத் தொகுத்தார். அதன் பின் அதில் 40000 சொற்களைச் சேர்த்தார். செய்யுள் அகராதி 17000 சொற்களும் மரபுத் தொடர்களும் வெளியிட்டார். 1708 இல் புதிய ஏற்பாட்டைத் தமிழில் மொழி பெயர்த்தார். அதன்பின் அப்போஸ்தலர் பணியையும் பழைய ஏற்பாட்டையும் மொழி பெயர்த்தார். 1714 இல் இவற்றைப் பதிப்பித்து வெளியிட்டார். இவரது அச்சுப்பணியால் பைபிள் தமிழில் முதன் முதலில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
    .
  4. வீரமாமுனிவர்: வீரமாமுனிவர் 1713இல் திருநெல்வேலி வந்தார். வடக்கன்குளம் - கயத்தாறு பகுதியில் ஞானப் பணிபுரிந்தார். இவர் தேம்பாவணிக் காவியத்தை 1726இல் படைத்தார். 3615 பாடல்களை இது கொண்ட அரிய நூலாகும். 36 படலமும் 90 சந்தங்களையும் கொண்டது இது. இவர் திருக்குறளில் அறம், பொருளை லத்தீனில் மொழி பெயர்த்தார். பரமார்த்தகுரு கதை என்னும் நகைச்சுவைக் கதை நூலை எழுதினார். அடைக்கலமாலை, சதுரகராதி, தொன்னூல் விளக்கம் போன்றவற்றை சிற்றிலக்கியம், அகராதி, இலக்கண நூலெனப் படைத்தார். எழுத்துச் சீர்திருத்தமாய் எ இல் புள்ளி வைத்து எ என்பதை ஏ,ஓ,கே,கோ என்று புதிதாய் எழுதினார். இவர் நவகாண்டம், நசகாண்டம், சிந்தாமணி என்ற மருத்துவ நூல்களைப் படைத்தார்.
    .
  5. ஜேம்ஸ் தே ரோசி: இவர் 1732 இல் இந்தியா வந்தார். 38ஆண்டுகாலம் மதுரை மறைமாநிலத்தில் பணிபுரிந்துள்ளார். புனிதர்களின் சரித்திரம், கிழமைப் புதுமைகள் என்னும் நூல்களைப் படைத்துள்ளார். கிழமைப் புதுமைகளில் திங்கள் முதல் ஞாயிறு வரை ஒவ்வொரு நாளுக்குரிய புதுமைகளை அவர் கூறியுள்ளார். ஜேம்ஸ் தே ரோசி தனது புனிதர்களின் சரித்திரத்தில் புனிதர்களின் வாழ்க்கையையும் அறிவுரைகளையும் கூறுகின்றார். ஜேம்ஸ் தே ரோசியை மக்கள் சின்ன சவேரியார் என்று அழைத்துப் பெருமைப் படுத்தினர்.
    .
  6. அந்தோணிக்குட்டி அண்ணாவியார்: இவர் புலவராக அழைக்கப்பட்டார். தூத்துக்குடியிலும் மணப்பாட்டிலும் வாழ்ந்ததாய்க் கூறுவர். இவர் சேசு இரட்சகர் மீது படிய கிறிஸ்தவ சங்கீதம், பாலத்தியானம், பச்சாத்தாபம், தன்மேல் குற்றம் சுமத்தல், ஆசைப்பத்து, அருள்வாசகம், திருப்புகழ் பாடல்த் திரட்டுகள் அற்புதமானவை, பாடுவோர் மனம் முருகி வருந்திப் பாடி இறைவனருளை வேண்டுவதாக இவை எழுதப்பட்டுள்ளன. இயேசுவின் பாடுகளை துயரத்தோடு சிந்திக்க வைப்பவையாகும்.
    .
  7. வேத நாயக சாஸ்திரியார். இந்து சமயத்திலிருந்து கத்தோலிக்கராக மாறிய அருணாசலம் பிள்ளையின் மகனாகப் பிறந்தவர் வேதநாயகம் ஆவார். இவரை சுவார்ட்ஸ் பாதிரியார் தஞ்சைக்கு அழைத்துச் சென்று ஞானக்கல்வி அளித்து லுத்தரன் சபையில் சேர்த்தார். தரங்கம்பாடியில் இசையைக் கற்ற வேதநாயகம் தஞ்சை வந்து இறைஊழியம் செய்தார். இவர் பெத்லகேம் குறவஞ்சியைப் படைத்தார். இவர் ஞானக்கும்மி, ஞானப்பாட்டு, பராபரன் மாலை, ஆதியானந்தம், அறிவானந்தம் ஆகிய மனத்தை உருக்கும் பாடல்த் தொகுப்பினை எழுதியுள்ளார்.
    .
  8. கால்டுவெல்: திருநெல்வேலி இடையன்குடியில் இறைபணி புரிந்தார். இவர் பிராத்தனை நூலை திருத்தி அமைத்தார். கொற்கைத் துறைமுகத்தில் அகழ்வாராச்சியில் ஈடுபட்டார். இளையன்குடியில் 50 ஆண்டுகட்கு மேலாய்ப் பணிபுரிந்த இவர், தமிழினை பிற மொழிகளுடன் ஒப்பீடு செய்து, ஆய்வு மேற்கொண்டார். தமிழின் தொன்மை, வளம், இவற்றை அறிந்த கால்டுவெல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு, குடகு போன்றவை எவ்வாறு பிறந்தது என்பதை விளக்கினார். இவர் படைத்த ஒப்பிலக்கணம் தமிழின் பழமை, முதன்மை, பெருமையை உலகிற்கு விளக்குவதாய் அமைந்தது.

A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com