கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் * Merry Christmas * நத்தார் வாழ்த்துக்கள்

நல்மனம் கொண்டோருக்கு அமைதி

அருட்தந்தை ஜோசப்.சி.
good news

அது கிறிஸ்துமஸ் இரவு. அந்த சின்னக் கிராமத்தில் அந்த வருடம் தயாரிப்பு மிகவும் பிரமாணடமாக இருந்தது. ஆலய அலங்கரிப்பும், ஆடைகள் அலங்கரிப்பும் ஒன்றோடு ஒன்று போட்டிப்போட்டு கொண்டிருந்தது. தயாரிப்பு மிகவும் தடபுடலாக இருந்தது. திருப்பலிக்கு இன்னும் சிறுது நேரமே இருப்பதால் பங்கு தந்தை இறுதி மற்றும் உறுதி பார்வைக்காக கோவிலை வலம் வந்து கொண்டிருந்தார். பல வகையான வண்ண விளக்குகளும், அழகிய தோரணங்களும் பூரிப்பை தந்து கொண்டிருந்த சில நிமிடங்களிலேயே குடிலில் அவர் கண்களுக்கு ஆச்சரியம் காத்திருந்தது. குடிலில் குழந்தை இயேசு காணாமல் போயிருந்தார். அதிர்ச்சி, குருவானவருக்கு மட்டும் அல்ல. அலைஅலையாக பிறந்தநாள் விழாவிற்கு வந்து கொண்டிருந்த அன்றாட கிறிஸ்தவர்களுக்கும், திருவிழா கிறிஸ்தவர்களும்! தேடும் பணியும் தோய்வில்லமால் ஆரம்பித்தது. குருவானவரும் தன் பங்குக்கு சோர்ந்த முகத்துடன் தேடிப்போனர் தன்னுடைய வாகனத்தில்...


குறுகிய கிராமப்பாதையில் குருவானவரின் வாகனம் சென்று கொண்டிருக்க வாகனத்தின் முன் விளக்கு வெளிச்சத்தில் சுமார் 10 அடிக்கு முன்னால் சிறுவனின் சின்ன சைக்கிள் பின்னால் உள்ள இருக்கையில் ஒரு துணியில் பொதித்து குழந்தை இயேசு பிரயாணம் செய்து கொண்டிருந்தார். சிறுவனை மடக்கிய குருவானவர் அவனிடம் "குழந்தை இயேசுவை எங்கு எடுத்து செல்கிறாய்?" என தன் முகத்தில் காணப்பட்ட கோபத்தை சற்றும் மாற்றமல் கடுமையோடு கேட்க, சிறுவன் அமைதியோடு சிரித்தான். "எங்கே எடுத்து செல்கிறாய் குழந்தை இயேசுவை?" என்ற குருவானவரின் கேள்வி இன்னும் சிவக்க வைத்தது அவர் முகத்தை. சிறுவன் பதட்டப்படாமல் ஆலயத்தில் "குழந்தை இயேசு குளிரில் போர்த்திக்கொள்ள எதுவும் இல்லாமல் படுத்திருந்தார். நான் தான் அன்று இரவு எங்களுடைய வீட்டில் தங்க வைத்து காலையில் கொண்டு வரலாம் என்று அழைத்து செல்கிறேன்" என்றான். சிவந்து, கடுப்புடன் காணப்பட்ட குருவானவரின் முகம் பூரித்தது அமைதியில், அக்களிப்பில். அன்று அனைத்துப் பங்கு குடும்பம் அவரோடு அமைதியில் அக்களித்தது. அந்த அர்த்தமுள்ள விழாவில்.


நல்மனத்தோருக்கு அமைதி. இதுதான் கிறிஸ்து பிறப்பு விழா நமக்கு உணர்த்தும் உண்மையான பாடம். இதுதான் வரலாறு நமக்கு உணர்த்தும் உண்மையும் கூட. யூதா மக்கபேயுவின் இறப்பிற்கு பின் அவன் சகோதரர்கள் யோனத்தன், சிமியோன் தலைவர்களாளார்கள். அவர்களுடைய வழி தோன்றல்கள் கடவுள் முன் தீமையை செய்து வந்தாலும், பரிசேயரும் சதுசேயரும் மக்களை ஆட்டி வைதத்தாலும் தங்களுக்குள் பகையை வளர்த்துக் கொண்ட யூதர்கள் தங்களுக்குள் அமைதியை ஏற்படுத்த உரோமையர்களை அழைத்தனர். சண்டையை தீர்க்கக் களம் இறங்கிட உரோமை அரசு யூதேயா நாடு முழுவதையும் அபகரித்து தன்னுடைய கைபாவையான ஏரோதை அவர்களுக்கு அரசனாக்கியது. இவர் கொணர்ந்த அமைதி, யூதர்கள் எதிர்பார்த்த மகிழ்ச்சி நிறைந்த அமைதி அல்ல. மாறாக மக்களை இழந்து பரிதவித்து நின்ற யூதப் பெண்களின் ஒப்பாரியால் ஏற்பப்பட்ட மயான அமைதியே. இறுதியில் ஏரோதுக்கும் அமைதியில்லை. எனையோருக்கும் அமைதியில்லை.


ஆனால் அந்த ஏழை தச்சருக்கும் அவர் மனைவிக்கும் அவர்களை நல்மனம் கொண்டு வாழ்த்திய இடையர்களுக்கும், அரசர்களுக்கும் ஏற்பப்பட்டது நல் அமைதி. பலருக்கு வீழிச்சியாகவும், பலருக்கு எழுச்சிகாகவும் அமைந்த இயேசுவின் பிறப்பில் அறிவிக்கப்பட்ட அமைதியின் உள்ளடக்கம் இதுதான். பகட்டான ஆடை உடுத்தி திருப்பலி செல்வதும். பல ரூபாய் செலவு செய்து குடில்கள் அமைப்பதும், பலவிதமான உணவுபண்டங்களை உண்டு மகிழ்வதும் அல்ல. கிறிஸ்து பிறப்பு இதற்கும் மேலானது. கடினமானது. இவை எல்லாம் வெறும் அடையாளங்களே! வெறும் அடையாளங்களை மட்டும் நாம் தூக்கிப்பிடித்து அர்த்தங்களை தொலைத்து விடுகிறோம். அடையாளங்கள் நமக்கு தேவையில்லை. அடையாளங்களை ஆண்டவனே வெறுக்கிறார். இறைவாக்கினார்களான ஆமோஸ், இசையாஸ் முன் வைப்பதும் அர்த்தங்களைத் தானே தவிர அடையாளங்களை அல்ல. காரணம் இந்த அடையாளங்கள் இறைவனை மகிழ்ச்சியடைய வைப்பதில்லை. மாறாக அர்த்தங்களும், துன்பங்களும் தான் இறைவனை மகிழ்விக்கின்றது.


நாம் பேறுகால வேதனையுற வேண்டும். நம் சமுகத்திற்காகவும், நம்முடைய அயலாருக்காகவும் நம்மோடு வாழுகின்ற மக்களுக்காகவும் நாம் பேறுகால வேதனையுற வேண்டும். புனித பவுல் தனது மடலில் "நான் உங்களைக் குறித்து பேறுகால வேதனையுறுகின்றேன்." என்று கூறியுள்ளது போல் நாமும் நம் அயலாரைக் குறித்து, அடுத்தவரை குறித்து, பேறுகால வேதனையுறும் போது இயேசு பிறப்பார். அமைதி பிறக்கும். இறைஆசீர் என்றும் உங்களுக்கு உரித்தாகுக....


A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com