கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் * Merry Christmas * நத்தார் வாழ்த்துக்கள்

இயேசுவில் புதுப்பிறப்பு

ஜேம்ஸ், விருதை.

இன்றைய சூழலில் புதியதாக ஏதாவது கிடைக்குமா? என்று மனிதன் தேடி ஓடுகின்றான். பழையவற்றை விட நமக்கு புதியவைகளின் மீதே அதிக ஆர்வம் ஏற்படுகின்றது. ஏன் நம் ஊரில் போகிப் பண்டிகையின் இலக்கணமே "பழையன கழிதலும் புதிய புகுதலும்" என்பதே ஆகும். இப்படிப் புதியவைகளையே தேடி ஓடிக் கொண்டிருக்கும் நாம் இன்னும் பழையவர்கள் தானே. நாம் எப்பொழுது புதிதாய் மாறப் போகிறோம்? புதிய பொருட்களில் மகிழ்ச்சி காணும் நாம் நம்முடைய பழைய இயல்புகளில் தான் நிறைவு அடைகிறோம். நாம் புதிதாய் மாறத் தயங்குகிறோம். இத் தயக்கங்களை தூக்கி வீசி விட்டு பிறக்கப்போகும் பாலனோடு இணைந்து அவரில் புதுப்பிப்படைந்து புதிய மனிதர்களாவோம்.


merry christmasஉங்கள் மனதில் பல கேள்விகள் எழலாம். அதென்ன புதுப்பிறப்பு? அதுவும் இயேசுவில் புதுபிறப்பு என்று. இயேசுவில் புதுப்பிறப்பு என்பது அவரது குணநலன்களில் புதுபிறப்பு அடைதல் ஆகும். அதாவது அவரில் விளங்கிய குணநலன்களில் ஏதேனும் ஒன்றையாவது உள்வவாங்கி, அக்குணத்தில் நாம் புதிதாய்ப் பிறப்பபதே இயேசுவில் புதுபிறப்பு அடைவதாகும். இயேசுவின் குணநலன்களில் ஒன்றான, அதுவும் இன்று அதிகம் தேவைப்படுகின்ற "எளிமை" என்னும் புண்ணியத்தில் புதுப்பிறப்பு அடைவதே. இந்த கிறிஸ்து பிறப்பை பொருள்ளதாக மாற்றும் என நம்புகிறேன். இயேசுவின் பிறப்பும், அவர் பிறந்த இடமும் நமக்கு எளிமையையே சுட்டிக்காட்டுகின்றன. ஆனால் இன்றோ கிறிஸ்மஸ் குடில்கள் எளிமையிழந்து ஆடம்பரமாகத் தான் உள்ளன.


ஒரு முறை ஒரு வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒரு யூத ரபியை சந்திக்க அவருடைய இல்லத்திற்குச் சென்றார். பெரும் எதிர்பார்ப்புகளோடு சென்ற சுற்றுலாப் பயணிக்கு பெரிய அதிர்ச்சி! ஏனெனில் அந்த ரபியினுடைய வீட்டில் உட்கார்ந்து எழுத ஒரு மேசையும், இரு நாற்காலிகளும், ஒரு புத்தக அலமாரியும் அதோடு ஒரு கட்டில் மட்டுமே இருந்தது. அதிர்ச்சியில் உறைந்த பயணி ரபியிடம் உங்கள் வீட்டில் இருக்க வேண்டிய வீட்டு உபயோகப் பொருட்கள் எங்கே? என்றார். அதற்கு ரபி உன்னுடைய பொருட்கள் எங்கே? என்று கேட்டதும் அந்தப் பயணி என்னுடைய பொருட்கள் எல்லாம் என்னுடைய வீட்டில் உள்ளன. நான் ஒரு சுற்றுலாப் பயணி அல்லவா என்றாராம். ஆம் நாம் மகிழ்வாய் வாழ, இவ்வாழ்க்கை பயணத்தை மகிழ்வாய் செலவிட எளிமை தேவை.


உலகின் பத்து பணக்காரர்களில் ஒருவரான "வாரன் பப்பெட்" அவருடைய சிறிய பண்ணை வீட்டில்தான் இன்னும் வாழ்கிறார். அவரே அவருடைய வாகனத்தை ஒட்டுகிறார். தனி விமானத்தில் பயணம் செய்வது கிடையாது. தனக்கென்று கைப்பேசியோ, மடிக்கணிணியோ அவர் வைத்துக்கொள்வது கிடையாது. அவர் சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களுக்குக் கூறும் அறிவுரை "எளிமையாய் இருங்கள். தேவைக்கு அதிகமான பொருட்களை சேர்க்காதீர்கள்" என்பதே ஆகும்.


ஆனால் இயேசுவைப் பின்பற்றுகின்ற நாமோ பொருட்களுக்கு அடிமையாகி நுகர்வு வெறியால் போதும் என்ற மனமின்றி பொருட்களை வாங்கி குவிக்கின்றோம். எளிமை என்பது முழுவதும் பற்றற்று வாழ்கின்ற நிலை அல்ல. மாறாக தேவையானவைகளை மட்டும் வைத்துக் கொண்டு அதில் நிறைவு பெறுவதே ஆகும். இன்றைய நுகர்வு கலாச்சாரம் உலகில் அதிகம் தேவைப்படும் மாற்றுக் கலாச்சாரம் இயேசுவிடமிருந்த எளிமையே ஆகும். எளிமையை நம்முடையதாக்குவோம். இயேசுவில் புதுப்பிறப்பு அடைவோம். வாழ்க்கையை மகிழ்ச்சியாய் செலவிடுவோம்.

நன்றி "பிரான்சிஸ்கன் ஒலி" - டிசம்பர் 2014

A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com