தேவதை
அமலி எட்வர்ட்
கைபேசி ஒலிகேட்டு நாற்காலியிலிருந்து எழப் போனேன். அதற்குள் ரோசம்மா வந்து “அம்மா இருங்க இருங்க அவசரப்படாதீங்க நான் எடுத்துத்தாரேன்” என்று கூறி ஓடிவந்து எடுத்துக் கொடுத்தாள். மகன் லியோ தான் அழைக்கிறான். லியோ என்னப்பா, எல்லோரும் நல்லா இருக்கீங்களா?
"நாங்க நல்லா இருக்கோம். நீங்க எப்படிம்மா இருக்கீங்க? கால் வலி பரவா இல்லையா?
"தம்பி நடக்கும் போது ஆப்பரேசன் பண்ண காலில் வலி இருக்குது. ஆனா டாக்டர் தினமும் நடக்கணும்னு சொல்லிருக்கார்ல. அதனால் வலி இருந்தாலும் தினமும் நடக்கிறேன்பா”
"பிசியோ தெரபிஸ்ட் ஒழுங்கா வர்ராங்களா அம்மா?
"ஆமாம்பா வர்ராங்க. அந்த பயிற்சி செய்யும்போது வலி இருக்கு. போகப்போக சரியாயிரும்னு சொலிஇருக்காங்கப்பா."
"ஆமாம்மா வலி இருந்தாலும் பயிற்சி செய்றத மட்டும் தவறாம பண்ணுங்கம்மா. ரோசம்மா எப்படி இருக்காங்க?"
"நல்லா இருக்காப்பா அவ நம்ம குடும்பத்துக்குக் கிடைத்த ஆசிர்வாதம்ப்பா"
"ஆமாம்மா நான் இங்க நிம்மதியா இருக்கென்னா அவர்களால்தான். சரிம்மா நீங்க எங்க வீட்டுக்கு வர்றதப் பத்தி என்ன முடிவு செய்தீங்க? ரோசம்மா கிட்ட எப்படி சொல்லப்போறீங்க?
"அதுதான் தம்பி உன்கிட்ட பேசணும்னு நினைச்சேன். ஒரு ஐந்து நிமிடம் கழித்து உன்னை கூப்பிடவா? இல்ல சாயுங்காலமா கூப்பிடவா?"
"இல்லம்மா வீட்லயிருந்துதானே வேலை பார்க்கிறேன். நீங்க எப்ப வேணும்னாலும் கூப்பிடுங்கம்மா" என்று கூறி போனை வைத்தான்.
"ரோசம்மா கொஞ்சம் இங்க வாயேன்"என்றேன்
"அம்மா என்னம்மா படுக்கனும்மா”? என்று கேட்டுக்கொண்டே வந்தாள்.
"இல்லம்மா இன்னிக்கு சாயுங்காலம் என் தம்பி நாதன் வர்றேனு சொன்னான். அவன் பிள்ளைகளுக்கு பேக்கரியில் போய் கொஞ்சம் கேக் பிஸ்கட் சாக்லேட் வாங்கிட்டு வர்றியா?” என்றேன்..
"சரிங்கம்மா"என்றாள்.
"வேலையெல்லாம் முடிச்சிட்டியா?"
"எல்லாம் முடிஞ்சதும்மா. துணிகளை வாசிங்மெஷினில் போட்டிருக்கேன். நான் வாங்கிட்டு வர்ற வரைக்கும் அது சுத்திட்டுதான் இருக்கும்" என்றாள்.
"டேபிள்ள பர்ஸ் இருக்குது பாரு. அதை எடுத்துப்போய் வாங்கிட்டு வந்துரு" என்றேன்.
"சரிங்கம்மா இந்த சூப்பை குடிங்கம்மா. உள்ளே படுக்க வச்சிட்டு போகட்டுமா? என்று கேட்டவளை "இல்ல நீ போயிட்டுவா. நான் காத்தாட இங்கேயே இருக்கேன். வெளிக்கதவை மட்டும் பூட்டி சாவி எடுத்துட்டுப் போயிடு” என்றேன்.
"சரிங்கம்மா" என்று கூறி அவள் வெளியே போனவுடன் மகன் லியோவை போனில் அழைத்தேன்.
"அம்மா சொல்லுங்கம்மா" என்றான்.
"தம்பி ரோசம்மாவை கடைக்கு அனுப்பிட்டேன்.
அவள வச்சிக்கிட்டு அவள பத்தி பேசமுடியாதுல்ல அதனாலதான் இப்ப கூப்பிட்டேன்"
"சொல்லுங்கம்மா என்ன முடிவு எடுத்தீங்க?"
"தம்பி நாம பேசின மாதிரி அவள ஒரு முதியோர் இல்லத்துல கொண்டுவிட மனசில்லப்பா" என்று கூறி முடிப்பதற்குள் மகன் டென்சனாகி
"என்னம்மா காசுகட்டிநல்ல முதியோர் இல்லத்திலதானே சேர்க்க போறோம். நீங்க நான் ஸ்டெல்லா சேர்ந்து எடுத்த முடிவுதானே?" என்றான்.
"தம்பி இரு இரு. நான் சொல்றத முழுசா கேட்டுட்டு பேசு. டென்ஷன் ஆகாத. இருபது வருசமா நம்ம குடும்பத்தில ஒருத்தியாவே இருந்துட்டா. அவளுக்கு நாம ஒரு கைம்மாறு செய்யாம அவள கொண்டுபோய் இல்லத்துல விட மனசில்லப்பா?"
"அப்ப என்ன செய்யனும்னு நினைக்கிறீங்க? சொல்லுங்கம்மா? எதுவானாலும் செய்துரலாம்."அவங்க எனக்கும் விஜிலாவுக்கும் இன்னொறு அம்மா மாதிரிதான் "
"உண்மைதாம்பா. நான் எப்படி உன் வீட்டுல மகன் வீடுன்னு பாதுகாப்பா வந்து இருக்கப்போற மாதிரி, அவளோட ஒரே மகள் அனிதாவை சேர்த்து வைக்கணும்னு ஆசைப்படுறேன் லியோ" என்றேன்
"அம்மா ஐந்து வருசத்துக்கு முன்னாடி ஒடி போனவளை எங்க போய் தேடுறது? இதுவரைக்கும் அனிதாவிடமிருந்து எந்த தகவலும் இல்லையேம்மா”? என்றான்.
"அதுசரிதான் தம்பி நாமும் எந்த முயற்சியும் பண்ணாமவிட்டு விட்டோமோன்னு எனக்கு மனசுல குற்ற உணர்வு இருக்குப்பா?"
"அம்மா ஓடிப் போன நேரத்துல அப்பா எவ்வளவு முயற்சி பண்ணுனாங்க. ரோசம்மா தான் போலீஸ்ல தகவல் கொடுத்தால் மானம் போயிடும் வேண்டாம்முனு கெஞ்சினாங்க. அதனால்தான் நாமும் அப்படியே விட்டுட்டோம்" என்றான்.
"உண்மை தாம்பா. ஆனா மனசுல ஏதோ அந்த பொண்ணு கஷ்டப்படுற மாதிரி ஓர் உள்ளுணர்வு தோணுது. அவள எப்படியாவது கண்டுபிடிக்க கடைசியா ஒரு முயற்சி செய்யலாம்."என்றேன்.
"எங்கிருந்து ஆரம்பிக்கிறதுன்னு தெரியலையே அம்மா "என்றான்.
"சமூக சேவை நிறுவனங்களோடு இணைந்து தானே உன் மனைவி ஸ்டெல்லா வேலை பார்க்குறா ?அந்த நிறுவனங்கள் சில நேரங்களில் தவறான பாதையில் போன பிள்ளைகளை கண்டுபிடித்து மறுவாழ்வு கொடுக்குறாங்கள்ள. அது வழியா முயற்சி செய்யலாமா? இது வரைக்கும் அனிதா ரோசம்மாவை தொடர்பே கொள்ளாததுனாலதான் என் மனசு சலனப்படுது. அவள் நல்லா இருந்திருந்தா இந்நேரம் அம்மாவை தேடி வந்திருப்பா. ஆனா ஒரு போன்கால் கூட இல்ல. ரோசம்மாவும் அம்மாவே வேணாம்னு விட்டுட்டு போயிட்டா.
அவ எனக்கு மகளே இல்லையின்னு அவவாய் சொன்னாலும் மனசுல நினைக்காம இருக்க முடியுமா? நானும் ஒரு தாயா அவள் உணர்வை உணர்கிறேன் தம்பி"
"சரிம்மா நீங்க இவ்வளவு வருத்தப் படுறீங்கன்னா கண்டிப்பா உங்க ஆசையை நிறைவேத்துறேன் அம்மா. ஸ்டெல்லா கிட்ட பேசுறேன்மா" என்றான்
"சரிப்பா ஸ்டெல்லாகிட்ட சொல்லு. அனிதா படம் கூட உன் கல்யாண ஆல்பத்துல இருக்கு" என்றேன்
"கண்டிப்பா அம்மா முயற்சி செய்வோம். நீங்க நல்லா அனிதாவுக்காக செபம் செய்யுங்க" என்று கூறி போனை வைத்தான்.
ரோசம்மா கடைக்கு போய் விட்டு வந்தாள்.
அம்மா ரொம்ப நேரம்மா உட்க்கார்ந்துட்டிங்களே படுக்கி ரீங்களா ம்மா? என்றாள்.
எனக்கும் சோர்வாக இருக்க "சரி ரோசம்மா " என்றேன்.
"வாக்கரை பிடித்துக் கொண்டு நான் நடக்க, ரோசம்மா என் அருகிலேயே நடந்து வந்து கட்டிலில் படுக்க உதவி செய்து விட்டு அறைக்கதவை சாத்திவிட்டு சென்றாள். எனக்கு தூக்கம் வரவில்லை. ரோசம்மாவிற்கு இப்போது ஐம்பது வயதாகிறது. இருபது வருடமா எங்களோடு ஒருவளாக இருந்து விட்டாள். அவள் எங்கள் வீட்டிற்கு வந்தது இன்னும் நினைவில் உள்ளது .
நானும் லியோஅப்பா ஜோசப்பும் தலைமையாசிரியர்களாக பணி புரிந்தோம். லியோவுக்கு பன்னிரண்டு வயது. மகள் விஜிலாவிற்கு ஏழு வயது. ஜோசப் அம்மாவும் அப்பாவும் எங்களோடு இருந்ததால் எங்களுக்கு அதிக பொறுப்புகள் இல்லை. காலையில் நானும் அத்தையும் சமையல் வேலை சேர்ந்து பார்க்க, பிள்ளைகளை ஜோசப்பும், மாமாவும் பள்ளிக் கிளப்ப உதவி செய்வார்கள். பிள்ளைகள் படித்தது ஆங்கிலப்பள்ளி. பள்ளியும் நடந்து போற தூரம் என்பதால் இருவரையும் மாமா கொண்டு போய் விட்டு விடுவார்கள். மாலையில் நாங்கள் வர தாமதமாகும் என்பதால் மாமாவும் அத்தையும் பிள்ளைகளுக்கு சாப்பாடு கொடுத்து ஹோம்ஒர்க் செய்ய வைத்து படிக்க இருவரும் உதவி செய்வார்கள். கவலையே இல்லாமல் இருந்தோம். ஒரு நாள் உறவினர் திருமணத்திற்கு மாமாவும் அத்தையும் காரில் நாகர்கோவில் போனார்கள். அந்த கார் விபத்துக்குள்ளாகி இருவரும் அதே இடத்தில் இறந்து போனார்கள். எங்கள் வாழ்கை ஸ்தம்பித்து போனது. அவர்களது இழப்பை தாங்கவே முடியவில்லை. எங்களால் அந்த அதிர்ச்சிலிருந்து மீள முடியாமல் கஷ்டப்பட்ட மாதிரி, பிள்ளைகள் இருவரும் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானார்கள். அதிலிருந்து அவர்களை மீட்டுக் கொண்டு வர படாதபாடு பட்டோம். ஒரு மாத காலம் விடுமுறை போட்டு ஆக வேண்டிய காரியங்களை பார்த்தோம். பிள்ளைகள் கூடவே இருந்தோம். அப்போதுதான் வீட்டோடு வேலைக்கு ஆள் வைக்கலாம் என்று முடிவு எடுத்தோம். என் உறவினர் மூலமா ரோஸி வந்தாள். அவளது கணவன் தொழிற்சாலை விபத்தில் இறந்து விட ரோஸி தன் ஐந்து வயது பெண் குழந்தை அனிதாவை கூட்டிக் கொண்டு அவள் அம்மா வீட்டிற்கு வந்து விட்டாள். அந்த நேரம் என் உறவினர், எங்கள் வீட்டு வேலைக்கு ரோஸியை கேட்க, அவள் உடனே சம்மதித்து எங்கள் வீட்டிற்கு வந்து விட்டாள். அவள் குழந்தையை பிரிந்து இருப்பது எங்களுக்கு மனம் கேட்காமல் எங்கள் வீட்டிற்க்கு பின்னால் அவளுக்கு ஒரு வீடு சின்னதாக கட்டிக் கொடுத்தோம். அவள் அம்மா குழந்தை ரோஸி என அந்த வீட்டில் வாழ ஆரம்பித்தார்கள். பிள்ளைகள் இருவரும் ரோஸியை ரோசம்மா ரோசம்மா என்றழைக்க அவளுக்கு அதுவே பெயரானது. பள்ளியில் இருந்து கூட்டி வந்து சாப்பாடும் கொடுத்து விடுவாள். நாங்கள் இருவரும் மாலைநேரங்களில் மாறி மாறி விரைவாக வந்து குழந்தைகளின் படிப்பை பார்த்துக் கொண்டோம். எங்கள் பிள்ளைகளோடு அனிதாவும் வளர்ந்தாள். லியோவும் விஜிலாவும் வெளியூரில் பொறியியல் கல்லுரியில் ஹாஸ்டலில் இருந்து படித்தார்கள். அதை பார்த்து அனிதாவும் தானும் ஹாஸ்டலில் வெளியூர் சென்று படிக்க விரும்பினாள். மதிப்பெண் குறைவு என்பதால் ஒரு ஆர்ட்ஸ் கல்லூரியில் இதே ஊரிலேயே படி என்று அறிவுரை கூறினோம். அதனால் அவள் விருப்பப்படி அருட் சகோதரிகள் நடத்தும் கல்லூரியில் சேர்த்து விட்டோம். இதில் இரு ஆண்டுகள் எந்த பிரச்னையும் இல்லை. நடனம் மிக அழகாக ஆடுவாள். அதுவே அவள் வாழ்வை நாசமாக்கியது. நடனப் போட்டிக்கு கல்லுரியில் இருந்து போகும் போது ஒரு வட இந்திய பையனோடு தொடர்பு ஏற்பட்டுள்ளது அதை அருட் சகோதரிகள் கண்டித்து எங்களுக்கு தகவல் சொல்ல, அவளை வரவழைத்து இறுதியாண்டில் ஆறு மாத காலம் நல்லபடியாக முடித்துவர புத்திமதி கூறி மீண்டும் அவளை கல்லூரியில் கொண்டு விட்டோம். இறுதி ஆண்டு தேர்வு முடிந்த கையோடு அவள் திட்டம் போட்டு அந்த பையனோடு ஓடிவிட்டாள். அந்த பையன் யார் என்று அந்த கல்லூரியில் விசாரித்தால் அவன் அங்கு படிக்கவே இல்லை. அந்த கல்லுரியில் எலக்ட்ரிக் வேலை செய்பவன் என தெரிந்தது. பார்க்க அழகாக இருப்பான். பல பெண்களோடு அவனுக்கு தொடர்பு உண்டு என விசாரிக்கும் போது தெரிந்தது. ரோசம்மா உடைந்து போய் விட்டாள். அந்த பையன் கல்லுரியில் கொடுத்த முகவரியும் தவறு என்பது விசாரிக்கும் போது தெரிய வந்தது. அவனை கண்டு பிடிக்க முடியவில்லை.
போலீசில் தகவல் கொடுக்கலாம் என ரோஸம்மாவிடம் கேட்ட போது வேண்டவே வேண்டாம் என மறுத்து விட்டாள். "போட்டோ போட்டு ரொம்ப கேவலப்பட வேண்டியிருக்கும் அம்மா என்னையும் உங்கள் குடும்பதையும் அவமானப்படுத்தி போய்விட்டாளே" வேண்டாம் அம்மா தேடவே வேண்டாம் என உறுதியாக மறுத்துவிட்டாள்.
அதன் பிறகு விஜிலா திருமணம், லியோ திருமணம் என மூன்று ஆண்டுகள் ரோஸம்மாவும் நாங்களும் ரொம்ப பிசியாகி விட்டதால் அனிதாவின் நினைப்பு அவளுக்கு அதிகம் வரவில்லை. நானும் ஜோசப்பும் ஒரே நேரத்தில் ஒய்வு பெற்றோம். கவுன்சிலிங் படிப்பு இருவரும் படித்திருந்ததால் பேமிலி கவுன்சிலிங், இளையோர் பயிற்சி முகாம் என எங்கள் ஒய்வு காலத்தை பயனுள்ள வகையில் ஆரம்பித்தோம். ஆரம்பித்த ஒரு சில மாதங்களிலையே ஜோசப்பிற்கு மாரடைப்பு வந்து இறந்துவிட லியோ "அம்மா நீங்கள் எங்களோடு வந்து விடுங்கள்" என்றான்.
அப்போது தான் ரோசம்மாவை என்ன செய்வது என்ற கேள்வி எழும்ப யோசிக்க ஆரம்பித்தோம். அவளுக்கென்று சம்பளம் அவள் கையில் மாதா மாதம் கொடுத்தாலும் அவளது மகள் பேரில் அவளுக்கே தெரியாமல் வங்கிக் கணக்கில் மாதா மாதம் கொடுத்தாலும் அவளது மகள் பேரில் அவளுக்கே தெரியாமல் வங்கிக்கணக்கில் ஒரு தொகையை அவள் வேளைக்கு சேர்ந்த சில மாதங்களிலேயே ஜோசப் போட்டு வந்தார். இதை அவளிடம் கூட நாங்கள் சொன்னதில்லை. அனிதா திருமணத்தோடு அவளுக்கு வேண்டிய செலவுக்காக அதை கொடுக்க நினைத்தோம். எனவே அந்த காசும் இருப்பதால் கட்டணம் கட்டி நல்ல முதியோர் இல்லத்தில் சேர்த்து விட முடிவு செய்தோம். இதற்கிடையில் நான் குளிக்கும் போது வழுக்கி விழுந்து இடுப்பு எலும்பு ஒடிந்து விட மகன் லியோவும் ஸ்டெல்லாவும் ஒரு மாத காலம் என்னோடு இருந்து கவனித்துக் கொண்டார்கள். அந்த நேரத்தில் மீண்டும் மகனும் மருமகளும் அவர்கள் வீட்டோடு வந்து விட கட்டாயப் படுத்த ஆரம்பித்தார்கள். நானும் கீழே விழுந்ததில் மகனோடு போய் விட முடிவு செய்தேன். ஆனால் ரோசம்மாவை நினைத்து ஏனோ மனம் கலங்கியது. எங்களோடு இருபது ஆண்டுகாலம் வாழ்ந்தவளை ஒரு முதியோர் இல்லத்தில் தள்ளி விட்டு போக மனம் வரவில்லை. மகள் நினைவு ரோசம்மாவிற்கு இல்லாமல் இருக்குமா? வெளிக்காட்டமால் இருக்கிறாள். அனிதாவிடம் இருந்து இதுவரை எந்த தகவலும் இல்லாததால் நிச்சியமாக ஒன்று அவள் இறந்திருக்க வேண்டும். அல்லது அவள் தவறான வழியில் போய் மாட்டிக் கொண்டாளோ எனத் தோன்றியது. உயிரோடு இருக்கும் பட்சத்தில் எப்படியாவது அவளைப் பற்றிய தகவல் அறிந்து அவளை ரோசம்மாவோடு சேர்த்து விட்டு செல்லவேண்டும் என தோன்றியது. மகன் லியோவும் செய்வதாக உறுதி கூறியதால் மனம் லேசானது. எப்போது தூங்கினேன் என்று தெரியவில்லை. ரோசம்மா வந்து "அம்மா சாப்பிடலாம் வாங்க " என்று எழுப்பினாள். நானும் அவளுமாக டேபிளில் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தோம்.
"அம்மா இந்த கிறிஸ்மஸ்க்கு விஜிலா பாப்பா அமெரிக்காவுல இருந்து வருமாம்மா " என்றாள். நான் சிரித்துக் கொண்டே" என்ன ரோசம்மா விஜிலாவுக்கு பாப்பாவே பொறந்தாச்சு. இன்னும் விஜிலா பாப்பானு சொல்லிட்டு இருக்கிற” என்றேன். ரோசம்மாவும் சிரித்துக் கொண்டே விஜிலா பாப்பானு கூப்பிட்டு பழக்கமாயிடுசிச்சி. விஜிலா பாப்பாவும் என்னை திட்டும். பாப்பானு கூப்பீடாதிங்கன்னு சொல்லும். என்ன செய்றது விஜிலானு கூப்பிட வரமாட்டேங்குதும்மா" என்றாள்.
"இந்த வருசம் கண்டிப்பா வருவா ரோசம்மா. நானும் கீழ விழுந்த பின் அவள் என்னை பார்க்க துடிச்சிக்கிட்டு இருக்காள்" என்றேன்.
"வெளிநாட்டுல இருந்தா இது ஒரு கஷ்டம் தானம்மா. நினைச்ச நேரம் வர முடியாதுல அம்மா. பாவம் விஜிலா பாப்பா ஏங்கி போயிருக்கும். பாசமான பாப்பா அது” என கூறியது போது அனிதாவை எப்படியாவது இவளோடு சேர்த்து வைத்துவிட வேண்டும் என்ற உறுதி எழுந்தது.
வீடே கிறிஸ்துமஸ் அலங்காரங்களால் அழகாக மாறிக் கொண்டிருந்தது. லியோ மட்டும் பத்து நாட்கள் முன்னரே வந்து விட்டான்.
தங்கை விஜிலா குடும்பத்தோடு வருவதால் அதற்கு ஏற்றவாறு வசதிகளை பார்த்து பார்த்து செய்து கொண்டிருந்தான். குடில் செய்வதும் அலங்கார தோரணங்கள் கட்டுவதுமாக இருந்தான். ரோஸம்மாவையும் உதவிக்கு அழைத்து மிக அழகாக செய்து முடித்தான், ரோசம்மா ரொம்ப உற்சாகமாக ஓடி ஓடி வேலை செய்தாள். கிறிஸ்துமஸ் பலகாரங்கள் அதிரசம், முறுக்கு, லட்டு, மிச்சர் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றாக செய்து அசத்திக் கொண்டிருந்தாள். 22ஆம் தேதி ஸ்டெல்லா பிள்ளைகளோடு வந்து விட, மறுநாள் விஜிலா குடும்பத்தினர் வந்து சேர்ந்தனர். ஜோசப் இறப்பிற்குப்பின் பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் அனைவரும் இணைந்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்தது.
24 ஆம் தேதி இரவு பூசைக்கு அனைவரும் சென்றோம். வீட்டிற்கு வந்தவுடன் ரோசம்மா அனைவருக்கும் கேக், பிரட், கறிக்குழம்பு கொடுத்தாள். சாப்பிட்டு முடித்தவுடன் எப்போதும் பரிசு பொருட்கள் அனைவருக்கும் கொடுப்பது என் வழக்கம். பேரப்பிள்ளைகள் ஆவலோடு காத்திருந்தனர். ஒவ்வொருவருக்கும் உள்ள பரிசை கொடுத்துக் கொண்டே வந்தேன். ரோசம்மாவிற்கு இம்முறை ஒரு கவரை கொடுத்தேன். பரிசு பொருள் இல்லாமல் ஒரு கவர் என்பது போல் பார்த்தாள். "பிரி ரோசம்மா இதில் உனக்கு மிகவும் பிடித்தமான பரிசு உள்ளது" என்றேன்.
வேகமாக பிரித்தாள். உள்ளே ஒரு கடிதம் இருந்தது. "என்னம்மா கடிதம் எழுதி தந்திருக்கிங்க எனக்கு எழுத்துக் கூட்டி வாசிக்க கஷ்டம்மா. நீங்களே வாசிச்சு காட்டுங்கம்மா" என்றாள் சரி கொடு " என்றேன். மருமகன் பேரப்பிள்ளைகளிடம்" வாங்க வாங்க நாம வெளியில போய் பட்டாசு போடலாம்" என்று கூறி பிள்ளைகளை வெளியே கூட்டிச்சென்றார். மகள் மகன் மருமகள் ரோசம்மா அனைவரையும் உட்கார சொல்லிவிட்டு கடிதத்தை வாசிக்க ஆரம்பித்தேன்.
மிகவும் பிரியமுள்ள அம்மாவிற்கு அன்புடன் அனிதா எழுதுவது. என்று வாசித்துவிட்டு ரோசம்மாவை பார்த்தேன். ரோசம்மா அதிர்ச்சி கலந்த பார்வையில் என்னை பார்த்தாள். நான் தொடர்ந்தேன். அஞ்சு வருசமா என்னைத் தேடாத நீ இப்ப என்ன கடிதம் எழுத்திருக்கிறாய் என உங்கள் உள்ளத்தில் தோன்றும் அம்மா . ஆனால் உண்மை அதுவல்ல அம்மா உங்களை ஒவ்வொரு நொடியும் நினைக்காத நாளே இல்லையம்மா. அப்பா இறந்த பிறகு என்னை வளப்பதற்க்காக நீ கஷ்டப்பட்ட நேரங்களை நினைத்து நினைத்து அழாத நாளே இல்லையம்மா. உனக்கு தெரியாமல் சொல்லாமல் ஓடிப்போன எனக்கு கடவுள் நல்ல தண்டனையை கொடுத்து விட்டார் அம்மா. வெளிப்புற தோற்றதையும் இனிக்க பேசிய பேச்சுக்களையும் நம்பி நான் ஏமாந்து விட்டேன் அம்மா. வட இந்தி மொழி தெரியாத ஊரில் அந்த பாதகன் கூட்டிச் சென்றான். மூன்று மாத காலம் அவன் நல்லவன் என்றே நம்பினேன். அந்த அளவுக்கு என்னை பேச்சில் கவர்ந்து விட்டான். அதன் பிறகு அவனது நடவடிக்கைகளில் சில சந்தேகங்கள் எனக்கு வர கேள்வி கேட்க ஆரம்பித்தேன். அது அவனுக்கு கோபத்தை ஏற்படுத்த நாள் தவறாது சண்டைகள். சுற்றி இருப்பவர்களிடம் பேச விடவில்லை. ஒரு நாள் இருவருக்கும் ஏற்பட்ட சண்டையில் என்னை அடித்து விட்டான். வெளியே தப்பி உங்களிடம் திரும்பிவர நினைத்தபோது அவனிடமே திரும்ப மாட்டிக் கொண்டேன். எனக்கு மயக்க மருந்து கொடுத்து விட்டான் அம்மா. மறுநாள் நான் முழித்த இடம் அம்மா, நான் சொன்னால் தாங்க மாட்டாய் அம்மா. அது ஒரு விபச்சார விடுதியம்மா என்று கூறி முடிப்பதற்குள் ரோசம்மா காதை பொத்திக் கொண்டு வேண்டாம்மா. இதுக்கு மேல் வாசிக்காதிங்க அம்மா என்றாள். விஜிலா ரோசம்மா அருகில் போய் தண்ணீர் குடிக்க வைத்தாள். "பதட்ட படாதீங்க ரோசம்மா இப்ப அனிதா நல்லா இருக்கிறாள். கடந்து வந்த பாதையைத்தான் உங்ககிட்ட சொல்ல நினைக்கிறாள். தயவு செய்து பொறுமையா கேளுங்க " என்றாள். கண்ணீரை துடைத்துக் கொண்டு ரோசம்மா என்னை பார்த்தாள். நான் தொடர்ந்தேன். இரண்டு வருட காலம் அந்த விபச்சார விடுதியில் நான் பட்ட வேதனை நரக வேதனையம்மா. தற்கொலை செய்ய பல முறை முயற்சி செய்து தோற்றும் போனேன். அடியும் உதையும் தான் கிடைத்தது. ஒருநாள் பெண்களுக்கான ஒரு அமைப்பில் இருந்து அந்த வீட்டிற்கு வந்தனர். வெளிய வர விரும்பும் பெண்களை அழைத்தனர். முதல் ஆளாக நான் வெளியேறி விட்டேன் " அவர்கள் கூட்டி வந்த பின் என் முகவரி கேட்டார்கள் அம்மா. உன்னை சந்திக்கும் தைரியம் என்னிடம் இல்லை. பல முறை கேட்டும் நான் மறுத்து விட்டேன் அம்மா .என்னையே நினைத்து எனக்கு அருவருப்பாக இருந்ததும்மா. அப்போதும் இரு முறை தற்கொலை முயற்சி செய்தேன். அந்த அமைப்பில் இருந்த மனநல மருத்துவர் எனக்குத் தொடர்ந்து சிகிச்சை அளித்தார். கொஞ்சம் கொஞ்சமாக நான் மீண்டு வந்தேன். எனக்கு கம்ப்யூட்டர் பயிற்சி அளித்தனர். அங்கேயே வேலையும் கொடுத்தனர். அதன் பிறகு எனக்குள் ஒரு துளி நம்பிக்கை வந்தது. உன்னை பார்க்க ஆசைப்பட்டேன். ஆனால் எந்த முகத்துடன் உன்னை நான் பார்க்க முடியும். ஜோசப் ஐயாவையும் ரீட்டா அம்மாவையும் சந்திக்கும் மனத்துணிவு என்னிடம் இல்லை. அவுங்க பிள்ளைகள் போலவே என்னை கவனித்தனர். அவர்களுக்கும் நான் அவமானத்தை தேடி தந்து விட்டேன் என்ற மனப் போராட்டம் என்னை வாட்டி வதைக்கும். அந்த நேரத்தில் ஒரு அருட் சகோதரியை சந்திக்க நேர்ந்தது. அவர்கள் பெண்களுக்கான சமூக அமைப்பு நடத்தி வருவதாகவும் அலுவலக வேலை தருவதாக கூறி என்னை தமிழ் நாட்டிற்க்கு கூட்டி வந்தார்கள் . ஒரு ஆசையில் வந்து விட்டாலும் உங்கள் அனைவரையும் சந்திக்கும் துணிச்சல் வரவில்லை அம்மா. அப்போது தான் ஸ்டெல்லா அக்கா ஒரு நாள் என்னை பார்க்க வந்தார்கள். பார்த்தவுடன் அதிர்ச்சியில் உறைந்து போனேன். அழுதேன் என் கடந்த கால வாழ்வு பற்றி கூறினேன். கதறி அழுதேன். அக்கா ஆறுதல் கூறினார்கள். நீ செய்த தவறு ஒன்றே ஒன்று தான். அந்த பையனோடு நீ சென்றது தான். அதன் பின் நடந்ததெல்லாம் நீ விரும்பி செய்த தப்பில்லை. அதற்காக நீ ஐந்து ஆண்டுகள் மனம் நொந்தது போதும். கடவுள் உன் பாவங்களை மன்னித்து விட்டார். உன் அம்மாவும் உன்னை மன்னிப்பார்கள். அனிதா. வாஅம்மாவை பார்க்க நான் கூட்டிச் செல்வதாக கூறினார்கள். என்னை மன்னிப்பியா அம்மா? ரீட்டா அம்மா என்னை மன்னிப்பாங்களாம்மா? உன்னோடு வாழ ஆசைப்படுகிறேன் அம்மா. உன் மடியில் படுத்து என் கண்ணீரால் உன் மடியை நனைக்க வேண்டும்மா. உன் வயதான காலத்தில் உன்னை நான் அருகிலிருந்து கவனிக்க ஆசைப்படுகிறேன் அம்மா. ஏற்றுக் கொள்வாயா அம்மா. என்னை நீ மன்னித்து விட்டால் ரீட்டா அம்மா வீட்டு வாசலில் தான் நிற்கிறேன் அம்மா. நீ வரவில்லை என்றால் நான் திரும்பி போய் விடுகிறேன் அம்மா. என்று கூறி முடிப்பதற்குள் ரோசம்மா "அனிதா " என்று அழுது கொண்டே ஓடினாள். எங்கள் கண்களிலும் கண்ணீர் பெருகியது. ஸ்டெல்லா அவளை முதலிலேயே கூட்டி வந்து விட்டாள். வெளியே ரோஸம்மாவும் அனிதாவும் கதறி அழுத சத்தம் கேட்டது. உணர்வுகளை வெளிப்படுத்திக் கொள்ளட்டும் என நாங்கள் சற்று நேரம் அமைதியாக இருந்தோம். லியோ மன நிறைவாய் என்னை பார்த்தான்.
விஜிலா எழுந்து சென்று இருவரையும் கூட்டி வந்தாள். அனிதா ஓடி வந்து என் காலில் விழப் போனாள். அவளை அப்படியே அரவணைத்துக் கொண்டேன். என் முகத்தை பார்க்க முடியாது தவித்தாள். அனிதா என்னை பார் இப்போது நீ மிகவும் தூய்மையானவள். தைரியமாய் என்னைப் பார்." என்றேன். “மன்னித்து விடுங்கள் அம்மா" என்றாள். “மன்னித்ததால்தான் ஸ்டெல்லா மூலம் இங்கு வந்திருக்கிறாய். இங்கு வந்திருப்பது அனிதா இல்லை. புதிதாய் பிறப்பு எடுத்த புனித நீ. " என்றேன். லேசாக சிரித்தாள். அருகில் கண்ணீரோடு நின்ற ரோசம்மாவை அணைத்துக்கொண்டேன். ரோசம்மா உனக்கு இவ்வருட கிறிஸ்துமஸ் பரிசு என்று கூறி அனிதாவின் கைகளை அவளிடம் கொடுத்தேன். இருவரும் அணைத்துக்கொண்டனர். "அனிதாவை மீண்டும் பார்ப்பேன் என்று நினைக்கவில்லை அம்மா. நன்றி அம்மா" என்றாள். "நன்றியை நீ ஸ்டெல்லா லியோவிற்கு தான் சொல்லணும்" என்றேன்.
உடனே அவர்கள் இருவரையும் பார்த்து கண்ணீரோடு கரம் குவித்தாள். உடனே லியோ "ரோசம்மா உங்களை உங்கள் மகளிடம் ஒப்படைத்து விட்டோம். எங்க அம்மாவை நீங்க எங்கக்கிட்ட ஒப்படைக்கணும்" என்று கூறியவுடன் திரும்பி என்னை அதிர்ச்சியாய் பார்த்தாள். "ஆமாம் ரோசம்மா எனக்கும் வயதாகுதுல்ல அதனால லியோவோடு போய் இருக்க முடிவு செய்து விட்டேன்." என்றேன். ரோசம்மாவின் முகத்தில் கவலை ரேகை படர, விஜிலா "ரோசம்மா இந்த வீடு ஒரு கோவில் மாதிரி ஆச்சி, தாத்தா, அம்மா, அப்பா நாங்கள் என வாழ்ந்த வீடு. இதை பூட்டி போட மனம் வரவில்லை. அதனால் இந்த வீட்டிலேயே நீங்களும் அனிதாவும் இருங்கள். அனிதா கம்ப்யூட்டர் சம்பந்தமா ஒரு வேலையை இந்த வீட்டிலேயே ஆரம்பிக்கட்டும். அனிதா திருமணத்துக்காக அப்பா, அம்மா சேமிச்ச காசு இருக்குது தேவைப்பட்டால் நானும் அண்ணனும் உதவி செய்றோம். வருடா வருடம் கிறுஸ்துமஸ்க்கு கூடுவோம் சரியா ரோசம்மா " என்றாள்.
"எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல விஜிலா பாப்பா " என்றாள் ரோசம்மா. மருமகன் உடனே "என்னது விஜிலா பாப்பாவா? பீப்பான்னு சொன்னா பொருத்தமா இருக்கும்ல " என்று கூறியவுடன் அங்கு இறுக்கம் குறைந்து அனைவரும் கொல்லென்று சிரிக்க வீடே மகிழ்ச்சி வெள்ளமாக மாறியது. இருபது ஆண்டுகளாக எங்களோடு வாழ்ந்த ரோசி என்ற ரோசம்மா இறைவன் எங்களுக்கு அனுப்பிய தேவதை.