கிறிஸ்துமஸ் உணர்த்தும் உண்மைகள்
அருள் சகோதரி ஜோவிட்டா, தூயசிலுவைமடம், திருச்சி
பரம தந்தையின் அன்பைப் பெற்று பாவ நிலையில் இருந்த நாம் உரிமை உறவில் வளர அவர் நம்மை இயேசு கிறிஸ்துவின் மூலம் தமக்குச் சொந்தமான பிள்ளைகளாக்கிக் கொள்ள அன்பினால் முன் குறித்து வைத்தார். இதுவே அவரது விருப்பம். இதுவே அவரது திருவளம். கடவுனின் இத்திட்டம் நிறைவேற்றப்பட தூய ஆவியாரும், அன்னை மரியாவும் முக்கியபங்கேற்றனர். அழகான பெண்களை ஆண்டவர் தேர்ந்தெடுக்கவில்லை, மாறாக தனித்து செபத்தில் ஈடுபட்டிருந்த அன்னை மரியாவைத் தேர்ந்தெடுத்தார். "நீங்கள் என்னைத் தேர்ந்துகொள்ளவில்லை. நான் தான் உங்களைத் தேர்ந்து கொண்டேன்" (போவா 15:6) என்று இயேசு தம் சீடர்களிடம் கூறியதுபோல் அமைதியில் செபித்துக் கொண்டிருந்த மரியாவை கடவுள் நேர்ந்தெடுத்தார். இது இறைக் திட்டம் என்பதை அறிந்த மரியா நான் ஆண்டவரின் அடிமை, உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்" என்றார். எனவே, பிறர் வாழத் தன்னையே தாழ்த்தும்போது நம் வாழ்வு அர்த்தமுள்ளதாகிறது. இறைமகனும் இயேசுவும் அன்னை மரியும் இறை திட்டத்திற்குத் தங்களை முழுமையாக ஒப்புக்கொடுத்து எளிமை, கீழ்ப்படிதல், அர்ப்பணிப்பு ஆகிய பண்புகளால் நாம் மீட்படைய வழிகாட்டிக் கிறிஸ்து பிறப்பின் அர்த்தத்தை நமக்கு உணர்த்தினார். இவ்வாறு நாம் வாழ்வதே இயேசுவின் விருப்பம்.
இயேசு பிறப்பின் மாண்பு
அன்பை அகிலத்திற்கு அளித்து நல்மனமுடையோருக்கு அமைதியை நல்கிட வானதூதர் இயேசு பிறப்பினை உலகிற்கு அறிவித்தார், அந்த இரவில் கிடையைக் காத்துக் கொண்டிருந்த இடையர்கள் உறங்கிக் கொண்டிருக்க, தூதர்கள் அவர்கள் முன்வந்து நின்றபோது ஆண்டவரின் மாட்சி அவர்களைச் சுற்றி ஒளிர்ந்தது..... அவர்களிடம் "அஞ்சாதீர்கள். இதோ எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார்" என்றார். எனவே, கிறிஸ்து பிறப்பு எளியோர், வறியோர், படிப்பறிவில்லா பாமரமக்கள், உயர்ந்தோர், பணம் உடையோர், பதவியில் உள்ளோர், அன்பு மக்கள் எல்லாரும் கூடிக் கொண்டாடும் உன்னதமான பண்டிகையாகும். ஆனால் பண வெறியர், பதவியே பெரிது என்று ஆணவத்தில் செயல்படுவோருக்கு சவால் விடுத்துக் கலக்கத்தை ஏற்படுத்தும் பிறப்புதான் இயேசுவின் பிறப்பு.
மூன்று அரசர்கள் இயேசு பாலன் மண்ணில் மனிதனாகப் பிறந்த செய்தி கேட்டு அவரைக் கண்டு வணங்க வந்தனர். இச்செய்தி கேட்டு ஏரோது, தனது மன்னன் பதவி பறிபோய்விடும் என்று கலங்கினான். மூன்று அரசர்களை வழிநடத்திச் சென்ற விண்மீனும், அரசர்கள் கூறிய செய்தியும் ஏரோது மன்னனுக்குக் கலக்கத்தையும், அச்சத்தையும் தருவனவாக இருந்தன. ஆயினும் விண்மீன் மன்னர்களை வழிநடத்திச் சென்று இயேசு பாலனைக் காண வழிகாட்டியது. வீட்டிற்குள் அவர்கள் போய்க் குழந்தையை, அதன் தாய் மரியா வைத்திருப்பதைக் கண்டு நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து வணங்கினார்கள். தங்கள் பேழைகளைத் திறந்து பொன்னும், சாம்பிராணியும், வெள்ளைப்போளமும் காணிக்கையாகக் கொடுத்தார்கள். பின் கபடு உள்ளம் கொண்ட ஏரோதின் குழச்சியில் சிக்காது புதிய பாதையில் சென்றிட விண்மீன் அவர்கைளை வழிநடத்தியது. எனவே பயம், அச்சம், ஐயம், இருள் என்ற துன்பங்களில் இருந்து அரசர்களைப் பிரித்து வேறு பாதையில் விண்மீன் வழிநடத்தியது. எனவே கிறிஸ்து பிறப்பு ஓளியின் திருவிழா என்றும் கூறலாம்.
இயேசு பிறப்பு புனித உறவை வளர்க்கிறது
கணவன்-மனைவியை இறைவன் படைத்தது மனிதஇனம் பல்கிப்பெருகிடவே. ஆனாய் இன்று இல்லறத்தில் பாலுணர்ச்சிக்கு இடம் கொடுத்து குடும்ப உறனவக் கொச்சைப்படுத்திக் கணவன் மனைவியிடையே சண்டை சச்சரவுகள ஏற்படுத்தி இல்லற உறவு முறிபடுகிறது. சூசை மரியாவை சந்தேகப்பட்டார். அப்போது ஆண்டவரின் தூதர் தோன்றி "யோசேப்பே, தாவீதின் மகனே, உம் மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள நீர் அஞ்சவேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால் தான். அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார், அவருக்கு இயேசு என்று பெயரிடுவீர்“ என்றதும் தூதரின் வாக்கை ஏற்று மனம் மாறிய போசேப்பு மரியாவைப் புரிந்து ஏற்றுக்கெண்டார்.
நம் குடும்பங்களில் உறவு மலர்ந்திட ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு விட்டுக்கொடுத்து சந்தேகப் பேயைத் தூரத்திட இறைவார்த்தையை வாசித்து அதன்படி வாழ வேண்டும். வாக்குமாறா தேவன் மனிதராகப் பிறந்தது நாம் வார்த்தையான தேவன் வாழ்ந்த கீழ்ப்படிதல், பொறுமை ஆகிய பண்புகளில் வாழ்ந்து, இயேசுவின் பிறப்பால் பெற்ற மகிழ்ச்சி, சமாதானம் நம் குடும்பங்களில் நிலவிட சூசை-மரி-இயேசு வாழ்ந்த அன்பு உறவில் நாம் வளர வேண்டும். அன்பு உள்ள குடும்பத்தில் பெரியவர், பெற்றோர் சொல் கேட்டுப் பிள்ளைகள் இயேசுவைப்போல் ஞானத்திலும், உடல்வளர்ச்சியிலும் மிகுந்து கடவுளுக்கும், மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்து வளர்வர்.
குடும்ப உறவு நாளும் சிறந்து வளர எபேசியர் 5.31-24 இல் கூறப்பட்டுள்ள அறிவுரையைக் கடைப்பிடித்தால் குடும்பமும் இயேசு-மரி-குசை குடும்பம் போன்ற அன்புமிக்க குடும்பமாய் திருக்குடும்பமாய், பரிசுத்த குடும்பமாய் வாழ முடியும். இயேசு பிறப்பால் பூமியில் நன்மனத்தோர்க்கு அமைதி என்று தூதர் அறிவித்த அன்பும் சமாதானமும் நம் குடும்பங்களில் அப்போதுதான் தங்கும். இந்த அன்பு மகிழ்வு சமாதானம் நம் குடும்பங்களில் இருப்பின் குதூகலம் கொண்டாட்டமே.
கிறிஸ்துமஸ் மகிழ்வு பெற நம்மில் தயார்நிலை தேவை
திருச்சபை நான்கு வாரங்களின் வழியாக நம் உள்ளத்தைத் தூய்மையாக்கிட வழிகாட்டுகிறது. அதுதான் திருவருகைக் காலம் Advent Wreath என்ற மலர் வளையம் செய்து அதில் நான்கு மெழுகுவர்த்திகள் பொருத்தப்பட்டு, ஒவ்வொரு ஞாயிறு அன்றும் அந்த மெழுகுவர்த்தி கொளுத்தி அதற்கான செபம் சொல்லப்படும். இவ்வாறு ஒவ்வொரு ஞாயிறும் ஒரு மையக்கருத்தின் அடிப்படையில் நான்கு வித்தியாசமான வெவ்வேறு திருவண்ணங்களில் மெழுகுவர்த்திகள் ஏற்றப்படுகின்றன. மெழுகு கரைந்து ஒளி தருவதுபோது நாம் பாவத்தை விட்டு விலகிப் பரிசுத்தமாய் வாழ, நம் உள்ளம் தூய்மையாய் இருக்கத் திருவருகைக் காலம் அழைப்பு விடுக்கிறது "நீங்கள் கடவுளுடைய கோவிலென்றும், கடவுளின் ஆவியார் உங்களுள் குடியிருக்கிறார்" என்றும் பவுலடியார் கூறுவது போல் நம் உள்ளத்தைத் தூய்மையாக்கிக் கொள்ள ஒப்புரவு அருள்சாதனத்தைப் பெற்று, பாவத்தை விட்டு விலகி, பகைவரை மன்னித்து, ஏழை எளியவருக்கு உதவி செய்று, பகிர்ந்து வாழ்வதே உண்மையான தயார் நிலை. கிறிஸ்துமஸ் அப்போது எல்லாரும் எல்லாமும் பெற்றுக் குடும்ப உறவுடன், மகிழ்வுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட முடியும்.
"மனம் மாறிய ஒரு பாவி குறித்து விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும்." என்பதற்கேற்ப விண்ணும் மண்ணும் இணைந்து “உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக" என்று மகிமைக்கீதம் பாடி இயேசுவின் பிறப்பால் மீட்கப்பட்ட அன்புப்பிள்கைள் என்ற உரிமையோடும் கிறிஸ்துமஸ் பெருவிழா கொண்டாடி மகிழ்வோம்.