மறக்க இயலாத பூசை!
அருள்பணி தனராசு சே.ச.
சுவாமி அற்புதம் பல ஊர்களில் பல ஆலயங்களில் இயேசு பிறப்பை முன்னிட்டு நள்ளிரவுத் திருப்பலி நிகழ்த்தியவர்தான். ஆனால் கடந்த முப்பது ஆண்டளவாய் இயேசு பிறப்பு என்றாலே அவருக்குச் சவேரியார்பட்டியில் கொண்டாடிய இயேசு பிறப்பு நினைவில் துள்ளிக் கொண்டு வந்து நிற்கும்.
நாளையக் கவுண்டன்பட்டி ஒரு பெரிய பங்கு. அங்கே இருபத்து மூன்று கிளைப் பங்குகள் இருந்தன. கிளைப் பங்குகளில் ஒவ்வொன்றிலும் பதினைந்து முதல் இருபதைந்து குடும்பங்கள் வரை கிறிஸ்தவர்கள். அத்தனை கிளைப் பங்குகளுக்கும் போக மனம் இல்லாத குருக்கள் அங்கே பங்குக் குருவாக வர மாட்டார்கள். அதிலும் குறிப்பாக இளங் குருக்கள் நாளைய கவுண்டன்பட்டிப் பங்குக் குருவாவதைத் தண்டனை என்றே நினைத்துத் தவிர்த்தனர். முதிய குருக்கள் பங்குக் குருக்கள் ஆவார்கள். ஆனால் அவர்களால் எல்லாக் கிளைப் பங்குகளுக்கும் போய்க் கவனிக்க முடியாது. இப்போது அங்கே பங்குக் குருவாக இருப்பவர் தந்தை சவரிமுத்து. அறுபத்தைந்து வயதைக் கடந்தவர். அவர் தந்தை அற்புதத்தை இயேசு பிறப்பு விழாவிற்கு வந்து உதவும்படி கேட்டுக் கொண்டதற்கு இணங்கத் தந்தை அற்புதம் வந்திருந்தார். அவர் நடு வயதினர்.
டிசம்பர் திங்கள் 24ஆம் நாள். பிற்பகல் 3.00 மணி அளவில் தந்தை அற்புதம் நாளைய கவுண்டன் பட்டியை வந்தடைந்தார். சவேரியார்பட்டிக் கிளைப் பங்கில் நள்ளிரவுத் திருப்பலிக்குச் செல்ல வேண்டும் என்று பங்குத் தந்தை கேட்டுக் கொண்டார். அதன்படி இரவு 7.30க்குத் தந்தை அற்புதம் சைக்கிளில் கிளம்பினார். அவரை அழைத்துச் செல்லத் தாமஸ் என்ற இளைஞன் வேறொரு சைக்கிளில் கிளம்பினான். பூசைக்கு உரியவற்றை ஒரு சூட் கேசில் வைத்து அதைத் தனது சைக்கிளில் பின்புறம் வைத்துக் கட்டினான். எரிகிற மண்ணெண்ணெய் லாந்தரைத் தந்தை அற்புதம் வண்டியில் மாட்டினான். தாமஸ் வழிகாட்டியபடி முன்னே செல்லத் தந்தை அற்புதம் பின்தொடர்ந்தார். பங்குத் தந்தை சவேரியார்பட்டி எவ்வளவு தூரம் என்பதைச் சொல்லவில்லை. ஏதோ நாலைந்து கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் என்ற எண்ணத்தில் தந்தை அற்புதம் சைக்கிளில் கிளம்பினார்;. ஆனால் அது பதினெட்டுக் கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது. பல மேடு பள்ளங்கள், குக்கிராமங்கள், குளங்கள் ஆகியவற்றைக் கடந்து மேடும் பள்ளமுமான ஒற்றையடிப் பாதையில் சைக்கிள் இரண்டும் சென்றன. நன்றாக இருட்டி விட்டது. லாந்தர் விளக்கு சைக்கிளின் முன் சக்கரத்தைக் காட்டியதே அன்றி வழியைக் காட்டச் சங்கடப்பட்டது. ஆனால் தாமஸ் எந்தத் தயக்கமும் இன்றி முன்னே சென்றான். இப்படிப் பயணம் அவனுக்கு இயல்பு போலும். தந்தை அற்புதம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பின்னே சென்றார். .
இவ்வாறு நாலு மணி நேரம் சென்ற பின் இருவரும் சவேரியார்பட்டியை இரவு 11.30க்கு வந்து அடைந்தார்கள். அங்கே சுமாரான ஒரு கோயில் தெரிந்தது. நாற்பது அடி நீளமும் பதினெட்டு அடி அகலமும் உள்ள ஓட்டுக் கட்டிடம்தான் கோயில். அது புனிதர் சவேரியாருக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில். ஊருக்கும் சவேரியார் பட்டி என்று பெயர் இருப்பதால் அது கிறிஸ்தவர்கள் குடியேறியதால் ஏற்பட்ட ஒரு சிற்றூர் எனத் தந்தை அற்புதம் எண்ணிக் கொண்டார். கோயிலுக்கு முன்புறத்தில் பத்தடி நீள மண்டபம் இருந்தது. அதிலே உறங்கிக் கொண்டிருந்த ஒருவரைத் தாமஸ் எழுப்பினான். கோயில் சாவி யாரிடம் உள்ளது என்று கேட்டான். ''இன்னிக்குச் சாமி வருவாகன்னு சொன்னாக. அதுனால நான்தான் வச்சிருக்கேன்'' என்று சொல்லிக் கோயில் சாவியைக் கொடுத்தார். கோயிலைத் திறந்து பார்த்ததும் கோயில் மண்டபத்தைப் பயன்படுத்தும் அளவுக்குக் கோயிலை யாரும் பயன்படுத்துவது இல்லை என்று தெரிந்தது. உள்ளே தூசியும் நூலாம்படையும் எறும்புத் தெம்பிப்போட்ட மண் குவியலுமாக ஒரே குப்பையாக இருந்தது. தந்தை அற்புதம் இது ஆண்டவர் பிறந்த மாட்டுத் தொழுவம் போலத்தான் உள்ளது என்று எண்ணிக் கொண்டார். கோயிலுக்கு உள்ளே பீடப் பகுதியில் ஒரு விளக்கு மங்கலாக எரிந்து இங்கே மின்சாரம் இருக்கிறது என்று பறைசாற்றியது. கோயில் சுவர்களில் குழல் விளக்குப் பட்டிகள் இருந்தன. ஆனால் விளக்குகள் ஒன்றும் இல்லை. மண்டபத்தில் படுத்திருந்தவர் கோயில் பீரோச் சாவி வாங்கிவரச் சென்றுவிட்டார். தாமசும் சுவாமியாருமாகக் கோயிலை ஒட்டடை அடித்துக் கூட்டிக் குப்பையை அள்ளி வெளியே போட்டனர். சுவாமியாருக்கு வேர்த்துக் கொட்டியதால் வேர்வையில் குளித்தவர் போலக் காணப்பட்டார். இது அவருக்கு ஒரு புதிய அனுபவம்.
சுவாமியாரும் தாமசும் பீடத்தைச் சுத்தமாகத் துடைத்தார்கள். அதற்குள் மண்டபத்தில் உறங்கியவர் பீரோச் சாவி கொண்டுவந்தார். அதைத் திறந்து பார்த்தால் பல அட்டைப் பெட்டிகள் இருந்தன. ஒரு அட்டைப் பெட்டியில் வண்ணத் தாள் தோரணங்கள் இருந்தன. ஆனால் எல்லாம் துண்டு துண்டாகவும் தாள்கள் உதிர்ந்தும் கிடந்தன. இன்னொரு பெட்டியில் பீடத் துணிகள் இருந்தன. அவற்றை எடுத்தபோது மடிப்பெல்லாம் மங்கி மஞ்சளாகக் காணப்பட்டது. தொட்டால் கிழிந்துவிடுமோ என்று பயந்தபடி மெல்லப் பூப்போல எடுத்துப் பீடத்தின் மீது விரித்தார்கள். மெழுகுதிரி ஏற்றுவதற்கான மரத்தால் ஆன குச்சிகள் அழுக்காகக் கிடந்தன. அவற்றையும் துடைத்து மெழுகு திரிகளை அவற்றில் குத்தி வைத்தனர். இன்னொரு அட்டைப் பெட்டியைத் திறந்தனர். அவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அதிலே குடிலுக்கான சுருபங்கள் இருந்தன. ஒவ்வொன்றாக எடுத்துப் பீடத்தில் வைத்தார்கள். ஞானி ஒருவருடைய தலை தனியே கிடந்தது. அதை எடுத்து மெழுகு வடித்துத் தலையை ஒட்டினர்.
அங்கே கிடந்த ஒரு மேசையில் குச்சிகளைக் கட்டினர். கோயிலுக்கு வெளியே நின்ற மரத்தின் கிளைகளை வெட்டிக் கொண்டு வந்து குடிலாக அமைத்தனர். மண்டபத்தில் உறங்கியவர் எங்கேயோ போய் ஒரு கட்டு வைக்கோல் கொண்டு வந்தார். அந்த வைக்கோலைக் குடிலில் பரப்பினார்கள். சுருபங்களை முறைப்படி வைத்தார்கள். ஆடு மாடு கழுதை ஒட்டகம் உள்பட அழகான குடில் வந்து விட்டது.
நள்ளிரவுப் பூசை என்றுதான் தந்தை அற்புதம் வந்தார். ஆனால் இப்போது காலை மணி நாலே கால் ஆயிற்று. கோயிலில் இருந்த தட்டு மணியை அடித்தார்கள். சிறிது நேரத்தில் செபமாலை சொல்லும் சத்தம் கேட்டது. மக்கள் வரிசையாகச் செபமாலை சொன்னபடி வந்து கொண்டிருந்தார்கள். பெண்கள் பலருடைய கைகளில் அழகான குத்து விளக்கு எரிந்து கொண்டிருந்தது.
ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு குத்து விளக்கு என்று பின்னர் தந்தை அற்புதம் தெரிந்து கொண்டார். அந்தக் குத்து விளக்குகள் எல்லாமே ஒரே அளவாக இருந்ததைக் கண்டு அவர் பெரிதும் வியந்தார். அவற்றைப் பக்தியோடு கொண்டுவந்து குடிலின் முன்னர் வைத்தனர். ஞானிகள் கொண்டு வந்த காணிக்கை போல அந்தக் குத்து விளக்குகள் சிரித்தபடி எரிந்தன. குடிலின் முன்னர் சுமார் இருபது குத்து விளக்குகள் எரிந்து ஒளி வீசின. அப்போது ஒரு பெண் ''சாமி ஆயத்தம்'' என்றாள். தாமஸ் ஓடிச் சென்று எங்கிருந்தோ ஒரு நாற்காலியைக் கொண்டு வந்தான். அது கையுள்ள நாற்காலி. ஆனால் ஒரு கை ஒடிந்து போயிருந்தது. அதைத் துடைத்துவிட்டுத் தந்தை அற்புதம் ஆயத்தம் கேட்கத் தயார் ஆனார். ஆயத்தம் பண்ண வேண்டும் என்று தெரிந்த அளவுக்கு அந்தப் பெண்ணுக்கு எப்படி ஆயத்தம் பண்ண வேண்டும் என்று தெரியவில்லை. பாவ சங்கீர்த்தனம் பண்ணி எவ்வளவு நாளாச்சு என்று சுவாமியார் கேட்டார். செத்த காலம் ஆச்சு சாமி என்றாள். பல ஆண்டுகள் ஆயிற்று என்று சுவாமியார் யூகித்துக் கொண்டார். பிறகு அவள் ஒன்றுமே சொல்லவில்லை. சுவாமியார் சிறிது நேரம் கழித்துத் திருடினாயா? பொய் சொன்னாயா? கணவனுக்குப் பிரமாணிக்கமாக இருந்தாயா என்று கேள்விகள் கேட்டார். அவள் பதில் சொன்னாள். சுவாமியார் அவளுக்குப் பாவ மன்னிப்பு ஆசிர்வாதம் கொடுத்து அனுப்பினார். சுமார் முப்பது பேர் ஆயத்தம் பண்ணினார்கள். அவர்களிலே நாலைந்து பேருக்கு மட்டுமே ஆயத்தம் செய்யத் தெரிந்திருந்தது.
நள்ளிரவுத் திருப்பலி காலையில் ஐந்தே காலுக்குத் தொடங்கியது. தாமஸ் மட்டுமே செபத்திற்குப் பதில் சொன்னான். மற்றவர்களுக்கு என்ன பதில் சொல்ல வேண்டும் என்று தெரியவில்லை என்று சுவாமியார் எண்ணிக் கொண்டார். உன்னதங்களிலே கடவுளுக்கு மாட்சிமை உண்டாகுக என்று சுவாமியார் பாடத் தொடங்கினார். உடனே பெண்கள் எல்லாரும் குலவையிடத் தொடங்கினர். சுவாமியார் பொறுத்திருந்தார். குலவை முடிந்ததும் சுவாமியார் தன்னந் தனியே ''உன்னதங்களிலே'' பாடி முடித்தார். சபை மன்றாட்டைச் சொல்லி முடித்ததும் எல்லாரும் ஆமென் என்றார்கள். அதைக் கேட்ட சுவாமியாருக்கு உடலெல்லாம் புல்லரித்துப் போயிற்று. பூசையில் அந்த ஒரு செபம்தான் அவர்களுக்குத் தெரியும் போலும்!
தாமஸ் முதல் வாசகத்தை வாசித்தான். தொடர்ந்து தியானப் பாடலுக்கான பதிலுரையை மக்கள் சொல்ல வேண்டும் என்று தெரிவித்தான். மக்கள் முறையாகப் பதிலுரை சொன்னார்கள். சுவாமியார் நற்செய்தி வாசித்து முடித்ததும் பிரசங்கம் வைத்தார்.
அன்பார்ந்த சகோதர சகோதரிகளே என்று தொடங்கிச் சுவாமியார் பிரசங்கம் வைத்தார். நம் ஆண்டவர் நமக்காக ஏழையிலும் ஏழையாக பிறந்தார். குடிசை கூட இல்லை. மாட்டுத் தொழுவில் பிறந்தார். அரசரின் கட்டளைப்படி இயேசுவின் பெற்றோர் நூறு மைல் தூரம் நடந்து வந்தார்கள். அதிலும் மாதா நிறைமாதக் கர்ப்பினி. நாம் படும் கஷ்டம் எல்லாம் தெரிந்தவராக நம்மை ரட்சிக்க ஆண்டவர் பிறந்தார்… இப்படி அவர் எளிமையாகச் சொல்லிக் கொண்டு வரும்போதே பலருடைய கண்களில் கண்ணீர் வழிவதைச் சுவாமியார் பார்த்தார். சுவாமியாருடைய கண்களும் கசிந்தன. திருப்பலி முடிந்ததும் திருப் பாலனை அனைவரும் முத்தி செய்வதற்காகச் சுவாமியார் குழந்தை இயேசுவின் சுருபத்தைக் கையில் தாங்கியபடி பீடத்திற்கு முன் வந்தார். ஒவ்வொருவராக வந்து சுவாமியாரின் காலடியில் நெற்றி தரையில்படிய விழுந்து வணங்கிச் சுவாமியாரின் கால்களைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொண்டார்;கள். பிறகு பாலன் இயேசுவைத் தொட்டு வணங்கினார்கள். குழந்தை இயேசுவை முத்தமிட வந்த பெண்களில் சிலர் கையில் குழந்தைகளுடன் வந்தனர். பாலன் இயேசுவை முத்தமிடக் குனிந்த குழந்தைகளில் ஒன்று பாலன் சுருபத்தைப் பொம்மை என்று அதை எடுக்க முயன்றது. சுவாமியார் சுருபத்தை வலுவாகப் பிடித்துக் கொண்டு குழந்தையை நோக்கிச் சிரித்தபடி அதன் நெற்றியில் சிலுவை வரைந்தார். அந்தக் குழந்தையும் தந்தையைக் கண்டு சிரித்தது. அது குழந்தை இயேசுவே தம்மைப் பார்த்துப் புன்னகை பூத்ததாகச் சுவாமியார் எண்ணிக்கொண்டார். அவருடைய கண்கள் கசிந்தன.
ஒவ்வொருவரும் கால் ரூபாய் காணிக்கையும் போட்டார்கள். பாலன் இயேசுவை முத்தமிட வந்த கூட்டத்தில் பல சிறுவர்களும் சிறுமிகளும் இருந்தனர். பாதிப் பொத்தான்களை இழந்த அழுக்கான சட்டையை மாட்டிக் கொண்டு சிரித்த முகத்துடன் வந்தனர் சிறுவர்கள். கிழிந்த பாவாடை, பல மாதங்களாக எண்ணெய் அறியாத பறட்டைத் தலை, மனத்தைச் சுண்டி இழுக்கும் சிரிப்புடன் சிறுமிகள். அவர்களுடைய மனத்தில் மகிழ்ச்சி பொங்கி வழிந்தது.
அதன் பிறகு சுவாமியார் பூசை உடுப்புக்களை எல்லாம் களைந்து விட்டு வந்தார். ஊர் இளைஞர்கள் பறை அடித்துக் கொண்டு ஆடினார்கள். அரை மணி நேரம் அவர்களுடைய ஆட்டம் நிகழ்ந்தது. அதன் பின்னர் ஒரு கூடையைக் கவிழ்த்து அதன் மேல் வைக்கோலைப் போட்டார்கள். குழந்தை இயேசுவின் சுருபத்தைக் கொண்டுவந்து அதன் மீது வைக்கும்படி சுவாமியாரைக் கேட்டுக் கொண்டார்கள். சுவாமியார் குழந்தை இயேசுவின் சுருபத்தை அந்தக் கூடையின் மேல் வைத்தார். அப்போது பெண்கள் குழந்தை இயேசுவைச் சுற்றி நின்று கொண்டு கும்மியடிக்கத் தொடங்கினார்கள். அப்போது அவர்கள் பாடிக் கொண்டே கும்மி அடித்தார்கள்.
வந்தாரு வந்தாரு ஏசு நாதர் வந்தாரு எம்மைக் காக்க வந்தாரு ஏழயாக வந்தாரு ஆட்ட மேய்க்கும் இடையர்க்கு காட்டில் காட்சி வந்துச்சாம் சம்மனசுக் கூட்டம் எல்லாம் சந்தோசச் சேதி சொல்லுச்சாம் வந்தாரு வந்தாரு ஏசு நாதர் வந்தாரு எம்மைக் காக்க வந்தாரு ஏழயாக வந்தாரு வானத்தில நட்சேத்திரம் வாலை நீட்டித் தோனுச்சாம் வந்தாங்க ராசாக்க பரிசு ஏந்தி வந்தாங்க வந்தாரு வந்தாரு ஏசு நாதர் வந்தாரு எம்மைக் காக்க வந்தாரு ஏழயாக வந்தாரு
இலக்கியத்தில் இல்லாத பாட்டை அவர்கள் பாடினார்கள். மாதாவைப்பற்றி, சூசையப்பரைப் பற்றியெல்லாம் பாடினார்கள். இதயத்தில் இருந்து எழுந்த எளிய பாட்டு. பாட்டுடன் சேர்ந்து ஆட்டம். நகரத்தில் ரொட்டிக் கடையில் வேலை பார்க்கும் அந்தோணி இந்த இயேசு பிறப்பு சாதாரணமானது அல்ல என்று எல்லாருக்கும் கேக் கொண்டு வந்திருந்தான். அதைச் சுவாமியாரே வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தான். சிரித்த முகத்தோடு எல்லாருக்கும் சுவாமியார் கேக் தந்தார். அந்தோணி சுவாமியாருக்குக் கையில் ஒரு கேக் கொடுத்துவிட்டு முழந்தாளிட்டுச் சிலுவை வாங்கிக் கொண்டான்.
ஏதோ தன் வாழ்நாளில் அனுபவித்திராத ஒரு பெரு மகிழ்ச்சி சுவாமியாருடைய உள்ளத்தை நிரப்பியது. பெத்லகேமுக்கே சென்று அந்த மாட்டுத் தொழுவத்திலே இயேசு பிறந்த நிகழ்ச்சியைக் கண்டவர் போலத் தந்தை அற்புதம் பெரு மகிழ்ச்சி அடைந்தார்.