புனித வளனாரின் ஏழு மகிழ்ச்சிகள்!
கிருபாவளவன்
கிறிஸ்துபிறப்பு விழாவினை மகிழ்வுடன் எதிர்நோக்கியுள்ள நாம் “எங்கள் மகிழ்ச்சியின் காரணமே” எனப்புகழ்ப்படுகிற கன்னி மரியாவை நினைவு கூறாமல் இருக்க இயலாது. அவரது “ஆகட்டும்” என்ற சொல் தான் ஆண்டவர் அவனியில் உதிக்க ஆதாரமாய் அமைந்தது. ஆயினும் அந்த அன்னை மரியாவையும், ஆண்டவர் இயேசுவையும் கண்ணின் மணிபோலக் காத்த புனித வளனாரை நாம் ஏன் பலசமயங்களில் மறந்து போகிறோம் என்பது புரியவில்லை. மீட்பின் வரலாற்றிலும், மீட்பரின் பிறப்பிலும் புனித வளனாரின் பங்கும் அத்தியாவசியமான ஒன்றாய் அமைந்தது என்பதை நாம் முதலில் பதிவுசெய்ய வேண்டும்.
இறைத்திட்டத்தில் தவிர்க்க முடியாதவராய்த் திகழ்ந்த புனித வளனாரின் வாழ்விலும், மரியாவைப் போலவே ஏழு வியாகுலங்களும், ஏழு மகிழ்ச்சிகளும் இருந்தன என்பது கத்தோலிக்க மரபு நமக்குக் கற்பிக்கும் உண்மை. புனித வளனாரின் ஏழு மகிழ்ச்சிகளைக் குறித்துத் தியானிக்க முனையும் எவரும் “மகிழ்ச்சி” என்கிற சொல்லைத் தொல்லையில்லாத நிலை, கவலைகளற்ற களிப்பு, சிரமங்களில்லாத சந்தோஷம்” எனக் கருதிவிடக் கூடாது.
கிறிஸ்துவின் பார்வையிலும், கிறிஸ்தவக் கண்ணோட்டத்திலும் “மகிழ்வு” என்பது ஒரு மாண்பு பொருந்திய மனநிலை. “ஆண்டவரோடு இணைந்து என்றும் மகிழ்ங்கள். மீண்டும் கூறுகிறேன். மகிழுங்கள்” (பிலி. 4:4) என்றழைக்கும் புனித பவுலடியாரின் கூற்றுப்படி உண்மைானதும், நிலையானதுமான மகிழ்வுக்கு அடிப்படை ஆண்டவரோடு இணைந்த வாழ்வும் மனநிலையும் தான்.
எனவே தான், கிறிஸ்து பிறப்பு விழாவுக்காக நம்மைத் தயாரிக்கும் திருவருகைக் காலத்தில் கூட “மகிழ்ச்சியின் ஞாயிறு” என்று ஒன்று கொண்டாடப்படுகிறது. திருவருகைக்கான இளந்தளிர் வளையத்தில் இளஞ்சிவப்பு மெழுகுதிரியை ஏற்றும் திருவருகைக்கால மூன்றாம் ஞாயிறு நம்மை அகமகிழ அழைக்கின்றது. அந்த மகிழ்வுக்கான காரணத்தைத் திருப்பாடல் ஆசிரியர் அழகாகக் கூறுகிறார். “ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன். அவர் என் வலப்பக்கம் உள்ளார். எனவே நான் அசைவுறேன். என் இதயம் அக்களிக்கின்றது. என் உள்ளம் மகிழ்ந்து துள்ளுகின்றது.” (தி.பா 19: 8,9)
ஆக, கிறிஸ்துவில் மகிழ்வது என்பது துன்பமற்ற நிலையல்ல. தொல்லையற்ற வாழ்வல்ல. ஆண்டவர் அருகில் உள்ளார் என்பதால் ஏற்படும் அசைவுறா நம்பிக்கையும், எதிர் நோக்கும் நிறைந்த ஒரு மனநிலையும், அந்த மனநிலையால் விளைகிற மகிழ்ச்சியும் தான். இந்தப் புரிதல் இருந்தால் தான் புனித வளனாரின் ஏழு மகிழ்ச்சிகளும் நமக்கு அர்த்தப்படும். அவரது ஏழு மகிழ்ச்சிகளும், ஏழு வியாகுலங்களுக்குப் பின் கிடைத்த ஒளிக்கீற்றும், இறைதேடலில் கிடைத்த தெளிவுநிறை பார்வையும் மனநிலையுமே ஆகும்.
1.வானதூதரின் செய்தி
தனக்கு நிச்சயிக்கப்பட்ட கன்னி கருத்தாங்கி ஒரு மகனைப் பெறப்போகிறார் என்கிற செய்தி எந்த மனிதருக்கும் களிப்பைத் தராது. கலக்கத்தைத் தான் தரும். அதுவும், நேர்மையாளராகிய யோசேப்புவுக்கு அந்தச் செய்தி இடிவிழுந்தாற்போல் இருந்திருக்கும். அப்போது பெறப்பட்ட வானதூதரின் செய்திதான், யோசேப்புவின் முதல் மகிழ்ச்சி. ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி “யோசேப்பே, தாவீதின் மகனே, உம் மனைவி மரியாவை ஏற்றுக்காள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால் தான்” (மத்1:20) என்கிற செய்தி, யோசேப்பின் மகிழ்வுக்குக் காரணமாய் இருந்தது. செய்தியில் இருந்த தெளிவினாலும் புரிதலினாலும் அல்ல. மாறாக அந்தச் செய்தியை இறைவனின் தெளிவூட்டுதலாக யோசேப்பு தாழ்ச்சியுடனும் அமைந்த உள்ளத்துடனும் ஏற்றுக் கொண்டதால் தான்.
2. மீட்பரின் பிறப்பு
தூயஆவியால் கருவுற்று இறைமகனாய் அறிவிக்கப்பட்ட ஒரு மகனை மாடடைக் குடிலில், தரித்திரத்தின் பிடியில் பெற்றெடுக்க நேர்ந்தபோது, யோசேப்பின் உள்ளம் பதைபதைத்துப் போயிருக்கும். அப்போது கிடைத்ததுதான் மீட்பரின் பிறப்பாலும் இடையரின் தொழுகையாலும் கிடைத்த இரண்டாவது மகிழ்ச்சி. “அஞ்சாதீர்கள், இதோ எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அளிக்கிறேன். இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார்.” (லூக் 2:10) என்கிற செய்தியை இடையர்கள் எவ்வளவு தூரம் புரிந்திருப்பார்கள் என்பது தெரியவில்லை. ஆனால் யோசேப்பு அதைப் புரிந்து கொண்டு மகிழ்ந்தார், புறச்சூழுல் ஆடம்பரமாயும் ஆனந்தமாயும் அமைந்ததால் அல்ல, பிறந்திருப்பவர் எதிர்பார்க்கப்பட்ட மெசியா என்கிற அகப்புரிதலால்.
3 இயேசு என்னும் பெயர் சூட்டுதல்
பிறந்த குழந்தைக்கு யூதமரபுப்படி, விருத்தசேதனம் செய்து, பெயர் சூடியபோது தெறித்த இரத்தம் புனித யோசேப்புவுக்கு வேதனையைத் தந்திருக்கும். ஆனாலும் யோசேப்பு அம்மகனுக்கு இயேசு என்று பெயரிட்டபோது (மத். 1:25) மிகவே மகிழ்ந்தார். காரணம் அது தனது இரத்தபந்ததின் விளைவு என்பதால் அல்ல, இறைத்தந்தையின் திருவுளத்தின் கனி என்பதால். மரியா தம் மகனைப் பெற்றெடுக்கும் வரை யோசேப்பு அவரோடு கூடி வாழவில்லை (மத் 1:25) என்கிற மறையுண்மை காமக்களிப்பையும் தாண்டிய தூய மகிழ்வு சாத்தியம் என்பதை உரைத்துகிறது.
4. இயேசுவின் மீட்புப்பணியை முன்னறிதல்
ஒரு வசதிபடைத்த யூதனாய் இல்லாமல் இரண்டு மாடப்புறாக்களை மட்டுமே காணிக்கையாய் அளிக்கக்கூடிய தனது வறியநிலை வருத்ததை ஏற்படுத்தினாலும், யோசேப்பு இயேசுவைக் காணிக்கையாக ஒப்புக்கொடுத்தபோது மகிழ்ந்தார். சிமியோனின் வார்த்தைகள் அவரது உள்ளத்தைக் கிழித்தெடுத்த அதே வேளையில் அன்னாவின் அருள்மொழிகள் அவருக்கு ஆனந்தம் அளித்தன. இயேசுவின் மீட்புப்பணி விளைவிக்கப் போகும் விந்தையை அன்னா விவரித்தார். அவர் அங்கு வந்து கடவுளைப் புகழ்ந்து எருசலேமின் மீட்புக்காகக் காத்திருந்த எல்லாரிடமும் அக்குழந்தையைப் பற்றிப் பேசினார். (லூக். 2:38) அப்போது யோசேப்பு அகமகிழ்ந்தார். உண்மையான மகிழ்வு பெறுவதில் அல்ல, கொடுப்பதில் தான் என்பதை யோசேப்பு உணர்த்துகிறார் இயேசுவை மீட்புப்பணிக்காகக் கையளித்துபோது.
5. எகிப்திய சிலைகள் இயேசுவிவன் பாதத்தில் வீழ்தல்
பிறந்த குழந்தையையும், அதன் தாயையும் இரவோடு இரவாக எகிப்துக்கு அழைத்துச் சென்றபோது அங்கலாய்த்துப் போயிருப்பார் யோசேப்பு. ஆனால் அதிலும் ஒரு மகிழ்வு கண்டார். “விரைவாய்ச் செல்லும் மேகத்தின்மேல் ஏறி ஆண்டவர் எகிப்துக்கு வருகிறார். எகிப்தின் சிலைகள் அவர் திருமுன் அஞ்சி நடுங்கும். எகிப்தியரின் உள்மனமே உருக்குலையும்.” (எசா.19:1) என்கிற இறைவாக்கு நிறைவேறுவதை உணர்ந்து யோசேப்பு மகிழ்ந்திருப்பார். தன்னைச் சோர்வும், களைப்பும், அச்சமும் ஆட்கொண்டிருந்தாலும் தரணிக்கு நிகழப்போகும் நன்மை அவரை மகிழச் செய்திருக்கும். எகிப்தின் சிலைகள் எல்லாம் இம்மானுவேல் இயேசுவின் முன் வலுவிழந்து போவதை எண்ணி யோசேப்பு உள்ளத்தால் மகிழ்ந்து நின்றார்.
6.இயேசு-மரி-சூசை - திருக்குடும்ப வாழ்வு
ஏரோதுக்கு அஞ்சி எகிப்தில் தங்கிய நாட்களைக் கடந்து இஸ்ராயேலுக்குத் திரும்பிவர பணிக்கப்படுகிறார் யோசேப்பு. மீண்டும் களைப்பை ஏற்படுத்தும் கடினமான பயணம் யோசேப்புவை கலக்கம் அடையச் செய்தபோது தான் அவருக்கு ஆறாவது மகிழ்ச்சி ஏற்பட்டது. அந்தக் களைப்பு மிகு பயணத்தின் முடிவில்தான் இயேசுவோடும், மரியாவோடும் சூசை தொடங்கிய திருக்குடும்ப வாழ்வு சாத்தியமானது. ஆண்டவருடைய திருச்சட்டப்படி எல்லாவற்றையும் செய்து முடித்தபின் அவர்கள் கலிலேயாவில் உள்ள தங்கள் ஊராகிய நாசரேத்துக்குத் திரும்பிச் சென்றார்கள். குழந்தையும் வளர்ந்து வலிமை பெற்று ஞானத்தால் நிறைந்து கடவுளுக்கு உகந்ததாய் இருந்தது. (லூக் 2:39) கருத்தாய் கடமையாற்றுவதாலும், ஆண்டவருடைய திருச்சட்டப்படி வாழ்வதாலும் ஏற்படுகிற மகிழ்வுக்கு ஈடு இணையில்லை என்பதை இந்நிகழ்வு உணர்த்துகிறது.
7. இயேசுவைக் கண்டடைந்த மகிழ்ச்சி.
சங்கடங்கள் எல்லாம் ஒருவழியாய்த் தீர்ந்தன எனச் சற்றே நிம்மதியடைந்த யோசேப்புவுக்குக் காத்திருந்தது அடுத்த அதிர்ச்சி. எருசலேம் கோவிலுக்குச் சென்று திரும்புகிறபோது இயேசுவைத் தொலைத்ததால் ஏற்பட்ட அதிர்ச்சி அவரை வாட்டி வதைத்தபின்னர் கிடைத்தது தான் ஏழாவது மகிழ்ச்சி. “மூன்று நாட்களுக்குப் பின் அவரைக் கோவிலில் கண்டார்கள். அங்கே அவர் போதகர்கள் நடுவில் அமர்ந்து அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டும் அவர்களிடம் கேள்விகளை எழுப்பிக் கொண்டுமிருந்தார்”. (லூக்.2:46) நேர்மையான தேடலுக்குப் பின்னர் ஞானத்தையும், ஞானத்தின் ஊற்றாகிய இறைவனையும் கண்டடையும் மகிழ்ச்சியே உச்சபச்ச மகிழ்ச்சி என்பதனை யோசேப்புவின் ஏழு மகிழ்ச்சிகளும் நமக்கு உணர்த்துகின்றன.
ஆக, இறைவனிடமிருந்து பெறப்படுகிற தெளிவினால் ஏற்படும் மகிழ்ச்சி, காமக்களிப்பைத் தாண்டிய தூய மகிழ்வு, பெறுதலைக் காட்டிலும் கொடுத்தால் கிடைக்கும் மகிழ்ச்சி, தரணியின் எழுச்சியில் நமது பங்களிப்பால் ஏற்படும் மகிழ்ச்சி, கருத்தாய்க் கடமையாற்றித் திருச்சட்டத்தின்படி ஒழுகுதலால் உண்டாகும் மகிழ்ச்சி, ஞானத்தையும், ஞானத்தின் ஊற்றாகிய இறைவனையும் கண்டடையும் முழுமையில் எய்துகிற மகிழ்ச்சியென ஏழுநிலை மகிழ்ச்சிகளை அனுபவித்த நேர்மையாளரான புனித யோசேப்பு நமக்குச் சொல்லித்தரும் பாடம் இதுதான் இறைவன் தரும் மகிழ்வும், அமைதியும் உலகம் தரும் அமைதியைப் போன்றதோ, பணம், பதவி, பகட்டால் உண்டாகும் மகிழ்வைப் போன்றதோ அன்று.
இறையாட்சியை மண்ணில் விதைக்க வந்த இயேசுவின் வரலாற்று வருகையைக் கிறிஸ்து பிறப்பு விழாவாகக் கொண்டாடவும் இறையாட்சியின் முழுமையைத் தரவிருக்கும் இயேசுவின் இரண்டாம் வருகைக்குத் தயாரிக்கவும் தரப்பட்டிருக்கிற திருவருவைகாலத்தில், புனித வளனாரின் ஏழு மகிழ்ச்சிகளும், புனித பவுலடியாரின் வார்த்தைகளும் நமக்கு உணவாகட்டும். “இறையாட்சி என்பது நாம் உண்பதையும் குடிப்பதையும் அடிப்படையாகக் கொண்டதல்ல, மாறாகத் தூயஆவி அருளும் நீதி, அமைதி, மகிழ்ச்சி ஆகியவற்றையே அடிப்படையாகக் கொண்டது” (உரோ.14:17) அத்தகைய இறையாட்சி நம் உள்ளங்களிலும், இல்லங்களிலும் இவ்வுலகம் முழுமையிலும் இயேசுவின் பிறப்பால் நிகழட்டும். இனிய கிறிஸ்து பிறப்பு விழா நல்வாழ்த்துகள்
.